பொது --- 1076. கருவாய் வயிற்றில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கருவாய் வயிற்றில் (பொது)


முருகா! 

உபதேசம் அருள்வாய்.


தனனா தனத்த தனனா தனத்த

     தனனா தனத்த ...... தனதான


கருவாய் வயிற்றி லுருவா யுதித்து

     முருகாய் மனக்க ...... வலையோடே


கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த

     தலைபோய் வெளுத்து ...... மரியாதே


இருபோது மற்றை யொருபோது மிட்ட

     கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி


இறவாத சுத்த மறையோர் துதிக்கு

     மியல்போத கத்தை ...... மொழிவாயே


அருமாத பத்தஅமரா பதிக்கு

     வழிமூடி விட்ட ...... தனைமீள


அயிரா வதத்து விழியா யிரத்த

     னுடனே பிடித்து ...... முடியாதே


திருவான கற்ப தருநா டழித்து

     விபுதேசர் சுற்ற ...... மவைகோலித்


திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


                   பதம் பிரித்தல்


கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து,

     முருகு ஆய், மனக்க ...... வலையோடே


கலைநூல் பிதற்றி, நடுவே கறுத்த

     தலைபோய் வெளுத்து ...... மரியாதே,


இருபோதும் மற்றை ஒருபோதும் இட்ட

     கனல்மூழ்கி, மிக்க ...... புனல்மூழ்கி,


இறவாத சுத்த மறையோர் துதிக்கும்

     இயல் போதகத்தை ...... மொழிவாயே.


அரும் ஆதபத்த அமரா பதிக்கு

     வழிமூடி விட்டு, ...... அதனை மீள


அயிராவதத்து விழி ஆயிரத்தன்

     உடனே பிடித்து ...... முடியாதே


திருவான கற்ப தரு நாடு அழித்து,

     விபுதேசர் சுற்றம் ...... அவைகோலித்


திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


பதவுரை

அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு --- அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை மூடிவிட்டு, 

அதனை மீள --- அதனை மீளவும் தாக்கி,

அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே ---ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனும், ஆயிரம் கண்களை உடையவனும் ஆன இந்திரனை உடனே பிடிக்க முயன்று, முடியாமல் போன காரணத்தால், 

திருவான கற்பதரு நாடு அழித்து --- செல்வம் நிறைந்ததும், கற்பக மரத்தைக் கொண்டதும் ஆன தேவர் உலகை அழித்து,

விபுதேசர் சுற்றம் அவை கோலி --- தேவர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, 

திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே --- வலிமையுடன் அசுரர்களைக் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் தேவர்களை மீட்ட பெருமையில் மிக்கவரே!

கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து --- தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகி வந்து பிறந்து,

முருகு ஆய் --- இளமைப் பருவத்தை அடைந்து, 

மனக் கவலையோடே --- மனக் கவலையோடே,

கலைநூல் பிதற்றி --- கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து 

நடுவே --- வாழ்நாளின் இடையிலே

கறுத்த தலை போய் வெளுத்து --- கருமையாக இருந்த தலைமயிரானது நரைத்து,

மரியாதே --- இறந்து போகாமல், 

இருபோதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி --- காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் யோகப் பயிற்சியால் வளர்த்த மூலாக்கினியில் முழுகி, சிறந்த மதி மண்டலத்தில் ஊறும் அமுத நீரில் முழுகி இருக்கின்ற, 

இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே --- மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைந்த மறையவர்கள் போற்றுகின்ற தகுதி வாய்ந்த அறிவுப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.

பொழிப்புரை

அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை மூடிவிட்டு, அதனை மீளவும் தாக்கி, அயிராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனும், ஆயிரம் கண்களை உடையவனும் ஆன இந்திரனை உடனே பிடிக்க முயன்று, முடியாமல் போன நிலையில் செல்வம் நிறைந்ததும், கற்பக மரத்தைக் கொண்டதும் ஆன தேவர் உலகை அழித்து, தேவர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, வலிமையுடன் அசுரர்களைக் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் தேவர்களை மீட்ட பெருமையில் மிக்கவரே!

தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகி வந்து பிறந்து, இளமைப் பருவத்தை அடைந்து,  மனக் கவலையோடே கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து, வாழ்நாளின் இடையிலே கருமையாக இருந்த தலைமயிரானது நரைத்து, இறுதியில் இறந்து போகாமல், காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் யோகப் பயிற்சியால் வளர்த்த மூலாக்கினியில் முழுகி, சிறந்த மதி மண்டலத்தில் ஊறும் அமுத நீரில் முழுகி இருக்கின்ற, மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைந்த மறையவர்கள் போற்றுகின்ற தகுதி வாய்ந்த அறிவுப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.


விரிவுரை

முருகு ஆய் --- 

முருகு - இளமை. 

கலைநூல் பிதற்றி --- 

கலைநூல் - அறிவு நூல்கள்.

பிதற்றுதல் - அறிவின்றிக் குழறுதல், 

கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து அறிவு விளங்காத நிலையை அடிகளார் குறிக்கின்றார்.

நடுவே --- 

வாழ்நாளின் இடையிலே

கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே --- 

எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களில் எந்த உயிர்க்கும் நரை கிடையாது. பன்றி, யானை, காக்கை முதலியவைகட்கு உரோமம் நரைப்பதில்லை.

உயர்ந்த பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரையுண்டு. நரைப்பதின் காரணத்தை ஆராய்ந்தால்,  இது இறைவன் நமக்குத் தரும் அறிவிக்கை என்பது விளங்கும். மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வந்தவை. மனிதன் பிறவாமையைப் பெற வந்தவன். ஏன் பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன் செய்யும் எச்சரிக்கை நரை என்று கொள்ளவேண்டும். நரை உண்டானவுடனே ஆசாபாசங்களை அகற்றி தவநெறியில் நாட்டம் உண்டாக வேண்டும். காதின் அருகில் ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தசரதர் தவம் மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். 

நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முதன்மையான காரணம், முடிக்கு கருநிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைந்து வருவதுதான். இந்த மெலனின் முதுமையில்தான் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். முதுமை நெருங்க நெருங்க, மனக் கவலை மிகுவதால், முடி நரைத்தலும், தோல் திரைதலும் உண்டாகும். மனக் கவலையை மாற்றுகின்றவன் தனக்கு உவமை இல்லாத இறைவன் வருவனே. அவனை அடைந்தால், கவலைகள் மிகுவதில்லை.

இயல்பாகவே முதுமையில் தலைமயிரானது கொக்குக்கு ஒக்க நரைத்துப் போகும். முதுமை வந்துவிட்ட பின்னராவது, நல்வினைகளைச் செய்து, போகும் நெடுவழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். சிலர் நரைத்து வெளுத்த முடியைக்  கறுப்பாக்குவதில் கருத்தைச் செலுத்துவார்கள். நல்வினைகளைச் செய்யத் தலைப்பட மாட்டார்கள். அறிவு உடையவர்கள், எப்படியும் தமக்கு முதுமை வரும் என்றும், அதன் அறிகுறியாக முடி நரைத்துப் போகும் என்பதை உணர்ந்து, இளமைக் காலத்திலேயே நற்செயல்களைச் செய்து ஆக்கத்தைத் தேடிக் கொள்வார்கள்.

"நரைவரும் என்று எண்ணி, நல்அறிவாளர்

குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்".              --- நாலடியார்.

இதன் பொருள் ---

பழுதற்ற அறிவினை உடையோர், தமக்கு மூப்பு வரும், அதற்கு அறிகுறியாக தலைமுடி நரைத்துப் போகும் என்பதை அறிந்து, இளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில் பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம் நீங்குதல் இல்லாததும், நிலையில்லாததும் ஆகிய இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல், இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி, உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள், முதுமை வந்து,  தலைமுடியும் நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

இளமைப் பருவத்தை அறவழியில் பயன் படுத்தாமல் மனம் போன போக்கில் நுகர்ந்து அறிவு மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து. இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" என்ற பெயரை உடையவன் ஆயினான். 

மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். காரணம், அவைகள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளில் முழுகி இருப்பது இல்லை. 

எல்லாம் இருந்தாலும், இன்னமும் வேண்டும் என்று ஆசைக்கடலில் அகப்பட்டு அலைபவன் மனிதன் மட்டும்தான். ஆசைக்கடலில் அகப்பட்டுக் கொண்டதால், அருள் அற்ற அந்தகன் ஆகிய இயமனின் கையில் உள்ள கயிற்றினால் பிணிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படுகின்றான். முதுமை வந்துவிட்டது என்பதை உணர்ந்த பிறகாவது, ஆசைகளை விட்டு, அருள் வழியில் முயலுதல் வேண்டும்.

திருக்காளத்தி மலையை இருப்பிடமாகக் கொண்டு, நாகன் என்னும் மலையரசன் வேடர்களுக்குத் தலைவனாய் ஆட்சி புரிந்து வந்த காலத்தில், மூப்பு வந்து சேரவும், வேட்டைத் தொழிலில் முயற்சி குன்றியவன் ஆனான். அந்நிலையில், அங்குள்ள மலைகளின் பரந்த பக்கங்களிலும், பயிர் விளையும் காடுகளிலுமாக எங்கும் கொடிய பன்றி, புலி, கரடி. காட்டுப்பசு, காட்டெருது,  கலைமான் ஆகிய இவை முதலாக உள்ள விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்திட, அது கண்டு, முறையான வேட்டையின் தொழில் இம்முறை தாழ்ந்து போனதால் இந்த நிலை நேர்ந்தது என்று அங்குள்ள வில்லேந்திய வேடர்கள் அனைவரும் திரண்டு, தங்கள் குலத்தின் தலைவனாக உள்ள நல்ல நாகன்பால் சென்று, நேர்ந்த அழிவு பற்றிச் சொன்னார்கள்.

வேடர்கள் சொன்னதைக் கேட்டதுமே, நாகன் என்பான், தன்னைப் பற்றி வரும் தனது மூப்பின் தொடர்ச்சியை நோக்கி, தனது மக்களைப் பார்த்து, "என் மக்களே! மூப்பினால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலவில்லை. ஆதலின், என் மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக ஆக்குகின்றேன். ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

சிலர், முதுமை வந்தாலும், தனது நிலையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் காணலாம். வீட்டில்தான் அப்படி என்றால், சில பதவிகள் கிடைத்து விட்டால் போதும். எதையும் சாதிக்க முயலாமல், இறுதிக் காலம் வரை பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டு இருப்பவர்களை இன்றும் காணலாம். எதையும் சாதிக்கவில்லை என்றாலும், முதுமை வந்த பிறகாவது, பொறுப்புக்களை இளையவர்களிடம் விட்டு, அவர்களை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.

நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். நரைத்த முடியை மாற்றுவதில் கருத்து வைத்தல் கூடாது. மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்து, சன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "நரை வந்து விட்டதே? இனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே? கூற்றுவன் பாசக் கயிறும் வருமே? இதுவரையிலும் எனது ஆவி ஈடேற்றத்திற்கு உரிய சிந்தனையை அறிவில்லாத நான் கொள்ளவில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

வள்ளியம்மையார் வாழ்ந்திருந்த "குறவர் கூட்டதில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று, குருவி ஓட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர" விரும்பி, கிழவேடம் தாங்கி வந்த முருகப் பெருமானைப் பார்த்து, "நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வு சற்றும் இலீர்!" என்று சாடினார். (நத்துப் புரை முடி --- சங்குபோல் நரைத்த முடி) முடி நரைத்த பிறகாவது நல்லுணர்வு வரவேண்டும்.


இருபோதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி --- 

இருபோதும் - காளை மாலை ஆகிய இருவேளைகளிலும்,

மற்றை ஒரு போதும் - அவை திவர்ந்த உச்சப் போதிலும்,

கனல் - மூலாக்கினி,

புனல் - அமுத ஊற்று.

இதன் விளக்கத்தை, "மூளும்வினை சேர" எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழ், "சூலம் என ஓடு சர்ப்ப" எனத் தொடங்கும் திருக்கடவூர்த் திருப்புகழ், "இந்துகதிர் சேர் அருண" எனத் தொடங்கும் கும்பகோணத் திருப்புகழ் முதலான பாடல்களில் கண்டு கொள்க.


இறவாத சுத்த மறையோர் ---

இறவாத பெருநிலையை அடைந்த சீவன்முத்தர்கள். 


அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு --- 

ஆதபம் - சூரியன். இங்கே ஒளியைக் குறித்து வந்தது.

அயிராவதத்து விழி ஆயிரத்தன் ---

அயிராவதம் என்பது நான்கு தந்தங்களை உடைய வெள்ளை யானை. தேவலோக அதிபதியாகிய இந்திரனுக்கு வாகனமாக உள்ளது. ஆயிரம் கண்களை உடையவன் இந்திரன். இதன் விளக்கத்தை "கொள்ளை ஆசைக்காரிகள்" எனத் தொடங்கும் திருப்புகழில் காணலாம்.

திருவான கற்பதரு நாடு அழித்து --- 

கற்ப தரு - கற்பக மரம். இது தோவலோகத்தில் உள்ளது. நினைத்ததை அளிப்பது. 

விபுதேசர் சுற்றம் அவை கோலி திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே --- 

விபுதர் - தேவர். 

கோலுதல் - வளைத்தல்.

சூரபதுமன் திக்கு விஜயம் செய்தபோது விண்ணுலகுக்குச் சென்றான். அப்போது இந்திரன் அவனுக்குப் பயந்து தன் மனைவியுடன் குயில் உருவம் கொண்டு ஒடி ஒளிந்துக் கொண்டான். அதனால் இந்திரனைப் பிடிக்க முடியவில்லை. தேவர்கள் எல்லாம் சூரபதுமனால் துன்புறுத்தப் பட்டனர். தேவர்கள் சூரனது ஏவல்களைச் செய்யும் பணியில் அமர்ந்தனர். அதனால் அமராபதி வழி மூடிக் கிடந்தது.  தேவர்களைச் சிறைமீட்டு அருளினார் முருகப் பெருமான்.

கருத்துரை

முருகா! உபதேசம் அருள்வாய்.


No comments:

Post a Comment

எமனுக்கு எச்சரிக்கை

  எமனுக்கு எச்சரிக்கை ---- வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமை...