நல்லதைச் செய்ய நாள் பார்க்கவேண்டாம்.
-----
அறச் செயலைச் செய்ய ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் சற்றும் சிந்திக்காமல் உடனே செய்ய முனைய வேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்று எண்ணினால், நாளைக்கு நாம் இருப்போமா என்பது உறுதியில்லை. இன்றைய பொழுதுதான் நம்முடையது. இயமன் இன்று வருவானா, நாளைக்கே வருவானா தெரியாது. இந்த உடம்பும் உலகப் பொருள்களும் நிலையாமையை உடையன. எனவே, நிலையற்ற உடம்பு உள்ளபோதே, நிலையான அறத்தை ஒருவன் செய்துகொள்வதே அறிவுடைமை ஆகும்.
"கபிலர் அகவல்" கூறும் அறிவுரையைக் காண்போம்.
"நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்,
ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ?
நாள் முதிதோ? கோள் முதிதோ?
நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?
செல்வம் சிறப்போ? கல்வி சிறப்போ?
அல்லது, உலகில் அறிவு சிறப்போ?
தொல்லை மாஞாலம் தோற்றமோ? படைப்போ?
எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால் சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?
நஞ்சுஉறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
துஞ்சும்போது, அந்தப் பஞ்சேந்திரியம்
என் செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?
ஆற்றல் உடையீர்! அருந்தவம் புரிந்தால்
வேற்று உடம்பு ஆகுமோ? தமது உடம்பு ஆகுமோ?
உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?
கண்டு இன்புறுவது கண்ணோ? கருத்தோ?"
இதன் பொருள் ---
நான்கு திருமுகங்களை உடைய பிரமதேவனால் படைக்கப்பட்ட பல வகையான உலங்களில், நிறைந்த சிறப்பினை உடைய அருமையான பொருளை ஆராய்ந்து அறிந்து சொல்லப் புகுந்தால், ஆண் பிறப்பு உயர்ந்ததோ? பெண் பிறப்பு உயர்ந்ததோ? ஆணும் பெண்ணும் அல்லாத பேடிப் பிறப்பு உயர்ந்ததோ? பிறந்த நாள் உயர்ந்ததோ? கிரகங்கள் உயர்ந்தனவோ,? செய்த புண்ணியச் செயல்கள் உயர்ந்தனவோ? செய்த பாவச்செயல்கள் உயர்ந்தனவோ? ஈட்டிய செல்வம் உயர்ந்ததோ? கற்ற கல்வியால் பெற்ற அறிவு உயர்ந்ததோ? அல்லது இந்த உலகில் பெற்ற அனுபவ அறிவு உயர்ந்ததோ? பழமையான இந்த உலகமானது இயற்கையாகத் தோன்றியதா? அல்லது நான்முகனால் படைக்கப்பட்டதா? உலகத்தில் தோன்றும் எல்லாமும் இயற்கையாகவே உண்டாயினவா? அல்லது செயற்கையாக உண்டாக்கப்பட்டனவா? மனிதர்கள் அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் அழிந்து போவார்களோ? அல்லது உடல் மட்டும் அழிவதான பொய்யான சாவினை அடைவார்களோ?விடத்தைப் போன்ற கொடுமை வாய்ந்த தீவினைகளானவை, நல்வினைகளைச் செய்வதனால் ஒழியுமோ? ஒழியாமல் நிற்குமோ? தூங்குகின்ற போது அந்த ஐந்து ஞானேந்திரியங்களுக்கு இடமான கன்மேந்திரியங்கள் ஐந்தும் என்ன செய்யுமோ? எந்த இடத்தில் செல்லுமோ? தவத்தைப் புரிதலில் ஆற்றல் மிகுந்தவர்களே! செய்வதற்கு அருமையான தவத்தைப் புரிந்தால், இந்த மனித உடம்பு போய் வேறு உடம்பு ஆகுமோ? அல்லது இந்த மனித உடம்பே நிலைக்குமோ? உணவை உண்பது இந்த உடலா? அல்லது உடம்பிலே உறையும் உயிரா? பொருள்களைக் கண்டு இன்பத்தை அடைவது உடம்பில் பொருந்தி உள்ள கண்ணா? அல்லது மனமா?
"உலகத்திரே! உலகத்தீரே!
நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;
எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;"
இதன் பொருள் ---
இந்த உலகில் வாழ்பவர்களே! நாவில் தழும்பு உண்டாகும்படி, வாயால் பறையை முழக்குவது போல, நான் சொல்தைச் செவி மடுப்பீர்களாக. பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும். பொருந்தி வந்த இளமைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும், வாலிபப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும். ஆக, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே,
"அவற்றுள்
இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு நாளும் சிலவே, ஆதலால்
பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று
இடிகரை ஒத்தது இளமை,
இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்
இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில், நாளை
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,
அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான், பொருள்தரப் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குரவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான் ஒருகணம் தறுகணாளன்,
உயிர்கொடு போவான், உடல்கொடு போகான்,
ஏதுக்கு அழுவீர்? ஏழை மாந்தர்காள்!
உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்
உயிரினை அன்றும் காணீர்! இன்றும் காணீர்!
உடலினை அன்றும் கண்டீர்! இன்றும் கண்டீர்!"
இதன் பொருள் ---
அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும், மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே. அதுவும் அல்லாமல், துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே. தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும். நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை. செல்வத்தோடு இருந்து நீங்கள் வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும். ஆகையினாலே, நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலும் நன்மையைத் தரும் அறச் செயலாகவே செய்ய வேண்டும், அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும். அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும். அந்தப் பொழுதையும் நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால், நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள்தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. நாளை என்கின்ற அந்த நாள், நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது,
எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான சொற்களைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் அவன் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது, ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான். தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான்.
ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான். அவன் அஞ்சாநெஞ்சம் படைத்தவன். உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது அவனுக்குத் தேவேயற்றது)
(மேற்சொன்னவாறு அறத்தைச் செய்யாது இருந்து வாழ்நாளை வீணாக்கிவிட்டு, நீங்கள் நிலைத்திருக்கும் என்ற கருதி இருந்த உடலை விட்டு விட்டு, உயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி)
அறிவுற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்? உயிரை இழந்தது கருதி அழுவீர்களா? உடம்பை இழந்தது கருதி அழுவீர்களா? உயிரை இழந்து விட்டது கருதி அழுகின்றோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உயிர் எப்படி இருக்கிறது என்பதை அன்றும் நீங்கள் கண்டீர்கள் இல்லை, இன்றும் நீங்கள் காணவில்லை. அழியாது எப்போதும் நிலைத்து இருக்கும் என்று கருதிப் போற்றிய உடம்பானது உயிர் நீங்கின உடனே அழிந்து போகின்றது. அதனை முன்னரும் பார்த்தீர்கள். இப்போதும் பார்க்கின்றீர்கள்.
"உயிரினை இழந்த உடல் அதுதன்னைக்
களவு கொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்
கூறை களைந்து கோவணம் கொளுவி
ஈமத் தீயை எரி எழமூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனல் இடைமூழ்கிப்
போய், தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப்படுமோ? சதுர் எனப்படுமோ?"
இதன் பொருள் ---
உயிர் நீங்கிய உடம்பினைத் திருட்டுத் தொழிலை மேற்கொண்ட திருடனைக் கட்டுவது போல, இருகால்களையும் இரு கைகளையும் சேர்த்துக் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, கோவணத்தையும் நீக்கி, சுடுகாட்டு நெருப்பை மூட்டி, உடம்பு சாம்பல் ஆகும்படி சுட்டுப் பொசுக்கி, நீரிலே முழுகி எழுந்து போய், சுற்றத்தார்களோடும் கூடி, அறிவு கலங்கி அழுவது, அறியாமை என்று சொல்லப்படுமோ? அறிவுடைமை என்று சொல்லப்படுமோ?
"மணிமேகலை" என்னும் காப்பியம் அறிவுறுத்துவதைக் காண்போம்....
"தவத்துறை மாக்கள், மிகப் பெரும் செல்வர்,
ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்,
முதியோர் என்னான், இளையோர் என்னான்,
கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப, இவ்
அழல்வாய் சுடலை தின்னக் கண்டும்,
கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களில் சிறந்த மடவார் உண்டோ?
இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா,
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா,
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்,
மிக்க நல்லறமே விழுத்துணை ஆவது"
இதன் பொருள் ---
தவநெறியில் செல்லும் துறவியர், மிக்க பெருஞ் செல்வம் உடையோர், ஈன்ற அணிமையைய உடைய இளமகளிர், ஆற்றாத இளஞ்சிறார் என்று வேறுபாடு கருதாமலுப், ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும், இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலை உடைய காலன் கொன்று குவிப்ப, அழல் வாயினையுடைய சுடலையானது இந்த உடலைத் தின்னக் கண்டும், மிக்க பெருஞ்செல்வம் என்னும் கள்ளை உண்டு களித்து விளையாடுதலைச் செய்து, மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற மக்களிலும் சிறந்த அறிவிலிகள் உளரோ? இளமையும் நிலை பெறாது. உடம்பும் நிலைபெறாது. வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது. தேவர் உலகத்தைப் புதல்வராலும் பெற இயலாது. எவற்றினும் மேம்பட்ட அறமே சிறந்த துணை ஆகுவது.
ஆகவே, உடம்புடன் வாழும் காலத்திலேயே அறச் செயல்களைச் செய்து உயிருக்கு உறுதியைத் தேடிக் கொள்ள வேண்டும்.
உயிர் விடும் காலத்தில் ஒருவன் தன்னோடு கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினால் அது அவன் செய்த புண்ணியம் மட்டுமே. உறவினர் யாரும் கூட வரமாட்டார்கள். தேடிய செல்வமும் உடன் வராது. ஆகவே, உடன் வருகின்ற அறத்தைச் செய்தாக வேண்டும். "தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க" என்று "நான்மணிக் கடிகை" என்னும் நூல் வலியுறுத்துகிறது.
"ஈட்டிய ஒண்பொருளும் இல்ஒழியும், சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர், -- மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
குளிர்ந்த மலைநாட்டுக்கு அரசே! தேடிய சிறந்த செல்வமும் மனையிலேயே நின்றுவிடும். உறவினர் சுடுகாட்டு வரை கூடவே அழுதுகொண்டு வந்து நீங்குவர். மூட்டப்படுகின்ற நெருப்பால் உடல் அழியும். ஆராயின், ஒருவனுக்கு துணையாவது அறமே ஆகும்.
"பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்ற அற்றால்,
இற்செய் குறைவினை நீக்கி, அறவினை
மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு." --- நாலடியார்.
இதன் பொருள் ---
குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து, பின்னர் அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கி இருப்பாரது இழிதகைமை, பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கிய பின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.
வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அறத்தினை இயற்றலாம் என்பது நடவாது. நடவாதது ஒன்றை நினைவது பேதைமையின் இயல்பு.
"மற்று அறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது,
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்;
முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு." --- நாலடியார்.
இதன் பொருள் ---
நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம். இப்போது நாம் இளமைப் பருவத்தைக் கொண்டு இருக்கிறோம் என்று கருதாமல், கையில் பொருள் உண்டான பொழுதே, ஒளியாமல் அறம் செய்யுங்கள். ஏனென்றால், பழுத்திருந்த பழங்களே அல்லாமல், கோடைக் காற்றினால், வலிய காய்களும் மரங்களிலிருந்து உதிர்ந்து விழுதல் உண்டு.
மூத்தோரே அல்லாமல் இளையோரும் திடும் என இறந்துபோதல் உண்டு. இளமை இன்பங்களை நுகர்தற்கு, இப்போது பொருள் தேவை. முதுமை வந்தபோது, அறம் செய்யலாம் என்று இருத்தல் கூடாது. கையில் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.
"ஆள் பார்த்து உழலும் அருள்இல் கூற்று உண்மையால்,
தோட்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின், - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. --- நாலடியார்.
இதன் பொருள் ---
தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, அதே வேலையாகத் திரிகின்ற இரக்கம் இல்லாத கூற்றுவன் ஒருவன் இருக்கின்றான். ஆதலால், மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை இளமையாகிய தக்க காலத்திலேயே உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள். முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, தாய் அலறி அழும்படி குழந்தையின் உயிரைக் கொள்ளுதலால், அக்கூற்றுவனது கடுமையை நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.
இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் இருக்கின்றான் என்னும் உண்மையால், இளமை நிலையாமை விளங்கும். இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை உடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.
"காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்து
சாலச் செய்தவரே தலைப்படுவார், --- மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால், மற்று என்கொல்,
அறம் காலைச் செய்யாதவாறு." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
அறச் செயல்களை இளமைப் பருவத்திலேயே செய்வோம் என்று உறுதியாகக் கருதி, நிரம்பச் செய்பவரே உயர்ந்தோர் ஆவர். இரவில் படுத்தவன் மறுநாள் காலையில் எழுந்திருப்பது உலகத்தில் அருமையாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து இருந்தும், இளமைப் பருவத்திலேயே அறத்தினைச் செய்யாது இருப்பது. இது, அறிவுடைமை ஆகாது, அறியாமையே ஆகும்.
"சென்றநாள் எல்லாம் சிறுவிரல் வைத்து எண்ணலாம்
நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது -- என்றுஒருவன்
நன்மை புரியாது நாள்உலப்ப விட்டுஇருக்கும்
புன்மை பெரிது புறம்." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
வாழ்நாளில் சென்ற நாள்கள் எல்லாவற்றையும் சிறிய விரல்களைக் கொண்டே, இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கின்றோம் என்று கணக்கிட்டு விடலாம். ஆனால், இனி வாழ உள்ள நாள்களை, இவ்வளவு என எண்ணி அறிய யாராலும் இயலாது. இதனை நன்கு அறிந்து இருந்தும், ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், வாழ்நாள் வீணே கெடும்படி விட்டிருப்பதால் வரும் துன்பம், பின்னர் மிகுதியாகும்.
"மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை அறிவென் என்றல் பேதைமை, - தன்னைத்
துணித்தானும் தூங்காது அறஞ்செய்க, கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
இளமைப் பருவம் மின்னலைப் போன்றது. அது, நிலைத்து இருக்கக் கூடியது என்று எண்ணி மகிழ்ந்து, வயதான பின்னர் அறத்தினைச் செய்வேன் என்று இருப்பது அறிவின்மையே ஆகும். எமன் இளமைப் பருவத்திலேயே உயிரைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு. ஆதலால், உடலை வருத்தி உழைத்தாவது, கால தாமதம் செய்யாமல், உயிரோடு உள்ள காலத்திலேயே அறத்தினை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.
"பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின் கண் நில்லாது அறம் செய்க -- மறறு அது
பொன்றாப் புகழ்நிறுத்தி, போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்." --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
மனமே! நீ நற்குணம் மிக்க நல்ல செயல்களைத் தவறாமல் செய்யக் கருதினால், ஆசையை விடுத்து, அறத்தினைச் செய்வாயாக. அந்த அறமானது, இந்தப் பிறப்பில் அழியாத புகழை நிலைபெறச் செய்து, மறுபிறப்பில் நீ சென்று, பிறந்த ஊரைத் தேடி, தாய்ப் பசு, தன் கன்றைத் தேடி அடைந்து பாலைக் கொடுக்க வருவது போல, தன் பயனாகிய இன்பத்தைச் சேர்க்க, உன்னிடம் விரைந்து வரும்.
"நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே
கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்,
இது என வரைந்து வாழும் நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை." --- சிலப்பதிகாரம்.
இதன் பொருள் ---
அடுத்த நாளில் அறம் செய்வோம் என்று நாம் கருதினால்,, இன்றைப் பொழுதிலேயே கேள்வி அளவே ஆன நல்ல உயிரானது விலகினும் விலகும், தம் வாழ்நாள் இத்துணைத்து என வரையறை செய்து அறிந்தவர் கடல்சூழ்ந்த உலகத்தின்கண் எங்கும் இல்லை.
மேற்குறித்த பாடல்களின் கருத்தை எல்லாம் உள் வைத்து, இத்தினச் சுருக்கமாகத் திருவள்ளுவ நாயனார்,
"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, மற்று அது
பொன்றுங்கால், பொன்றாத் துணை".
என்னும் திருக்குறளை அருளிச் செய்து, "மற்றொரு நாள் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தைச் செய்க. மற்றபடி, அவ்வாறு செய்யப்படும் அந்த அறமானது, இறக்கும் போது அழியாத துணையாக விளங்கும்" என்றார்.
No comments:
Post a Comment