தீயவர் பெறும் ஆக்கம் அழியும்
-----
திருக்குறளில் "கள்ளாமை" என்னும் ஓர் அதிகாரம். கள்ளாமையாவது, பிறர் உடைமையாய் உள்ள யாதொரு பொருளையும், அவரை வஞ்சித்துக் கொள்ள நினையாமை. நினைத்தலும் செய்ததற்குச் சமானம். ஆதலால், அவ்வாறு கூறினார்.
இல்லறத்தில் உள்ளவர்கள் சுற்றத்தார் முதலியோரிடத்து, விளையாட்டு வகையாலாவது, அவரை வஞ்சனை செய்து கொள்ளுதற்குத் தக்க பொருள்களை அவ்வாறு கொள்ளலும் பொருந்தும். துறவறத்தார்க்கு அது பெரியதொரு குற்றம் ஆகும். எனவே, கள்ளாமை, துறவறத்தில் கூறப்பட்டது. கூறப்படவே, இல்லறத்தார் பிறர் பொருளைக் கவர எண்ணலாம் போலும் என்று கொள்ளக் கூடாது. விளையாட்டு வகையால் என்று கூறப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும். துறவறத்தில் நின்றாருக்கு, மனமானது பொறிகளின் வழியில் புறத்தில் சென்று மடங்காமல், ஒரு முகப்பட்டு உயிரையே நோக்கி நிற்கவேண்டும். புறத்தில் செல்லுவது என்பது உடம்பின் பொருட்டாகவே அமையும். உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்கி, அதனை வஞ்சித்துக் கொள்ள நினைத்தல் பெரும் குற்றம் ஆகும்.
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "களவு செய்தலினால் உண்டாகிய பொருளானது, அளவுக்கு மீறிப் பெருகுவது போலத் தோன்றி, முன் இருந்த செல்வத்தோடும் அழிந்து விடும்" என்கின்றார் நாயனார்.
முன் இருந்த செல்வத்தோடும் போதலாவது, தான் போகும் காலத்தில் பழியையும் பாவத்தையும் நிலைபெறச் செய்து, அவன் முன் செய்த தருமத்தையும் உடன்கொண்டு போதல். களவு செய்வதால் உண்டாகிய செல்வம் பெருகுவது போலத் தோன்றி, பாவத்தையும் பழியையும் நிறுத்தி, விரைவில் அழிந்து விடும். ஆற்றில் வெள்ளம் வந்தபோது, வந்த புதுப் புனலோடு, முன்பே இருந்த புனலும் அடித்துச் செல்லப்படுவது போல, உள்ள செல்வமும், இல்லாமல் போகும்.
"களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து
ஆவது போலக் கெடும்." --- திருக்குறள்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
"வில்லவன் வாதாவி கபடு ஏதாயது, மலயச்
செல்வமுனி நோக்கால், சிவசிவா! - சொல்லில்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்."
வாதாவி தன் தம்பியைக் கொன்று அகத்தியர்க்குப் படைத்து அவரால் தானும் மாண்டான். அகத்திய முனிவர் பொதியமலைக்குப் போகும் வழியில், தொண்டை நாட்டில் வாதாவி வல்லவன் என்னும் இராக்கத சகோதரர் இருவர், முனிவரை வஞ்சித்துக் கொல்லும் தங்கள் வழக்கம்போல், அவரையும் கொல்ல எண்ணினார்கள். ஆகையால், வாதாவி ஆடாய் மேய்ந்துகொண்டு இருந்தான். வில்லவன் முனிவரை எதிர்கொண்டு அழைத்து, இருக்க வேண்டினான். அதற்கு அவர் சம்மதித்ததனால், அக் காலத்திய வழக்கம்போல் அவன் வாதாவியாகிய ஆட்டை அறுத்துக் கறி சமைத்துப் படைத்தான். அகத்தியர் அகத்தில் வஞ்சனையின்றி ஆட்டுக் கறியைக் கொஞ்சமேனும் விடாமல் புசித்துப் பிராமணார்த்தத்தை நிறைவேற்றினார். உடனே, வில்லவன், தன் வழக்கம் போலச் சஞ்சீவி மந்திர உச்சாடனத்தால், அவர் வயிற்றில் இருந்த ஆட்டுக் கறியாகிய வாதாவியை உயிர்ப்பித்து, வயிற்றைக் கீறிக்கொண்டு வெளியில் வரவழைத்தான். அவர் வயிற்றில் வாதாவி உயிர் பெற்றதனால் கொட கொட என்று இரைந்தான். அந்த அரவத்தால், மோசத்தை உணர்ந்த அகத்திய முனிவர், வாதாவியின் நாசத்தை எண்ணி, "வாதாவி ஜீர்ணாஹா, சுவாஹா" என்று தம் வயிற்றைத் தடவினார். அவன் அவர் வயிற்றிலேயே ஜீரணமாகி மாண்டு போனான். வில்லவனையும் அவர் கோபாக்கினியினாலே சாம்பாராக்கிச் சென்றார். இதனால் ஆற்றுவாராகிய அகத்தியர்க்கு, ஆற்றாதாராகிய வில்லவ வாதாவியர் வலிய அழைத்து, இன்னா செய்ததனால், கூற்றத்தைக் கையால் விளித்ததுபோல், அவரால் உயிர் துறந்து அழிந்தமை காண்க.
தீயதொழில்களைச் செய்வதானல் ஒருவருக்கு உண்டாகும் செல்வத்தை, நல்ல செயல்களைச் செய்து ஒழுகும் நல்லோர் சிறிதும் விரும்பமாட்டார். காரணம், அது எப்படியாயினும் கெட்டுப் போவதற்கு உரிய பொருள் ஆகும். ஒருவரை வஞ்சித்துத் தேடிய பொருள், வளர்வது போல் தோன்றினாலும் அதிவிரைவில் அழிந்துவிடும் என்கிறார் குமரகுருபர அடிகளார்.
"இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்
உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம் --- மடநல்லார்
பொம்மல் முலைபோல் பருத்திடினும் மற்றுஅவர்
நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்." --- நீதிநெறி விளக்கம்.
இதன் பதவுரை ---
இடை தெரிந்து - காலத்தின் வாய்ப்பினை அறிந்து, அச்சுறுத்து - பயமுறுத்தி, வஞ்சித்து - ஏமாற்றி, எளியார் உடமை கொண்டு - எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து, ஏமாப்பார் செல்வம் - இறுமாப்புக் கொள்பவர்களுடைய செல்வமானது, மடம் நல்லார் பொம்மல் முலைபோல் பருத்திடினும் - பேதைமை உடைய பெண்களின் பூரித்த முலைபோல் ஒருக்கால் மிகுந்திட்டாலும், (அவை அதிவிரைவில்), அவர் நுண்ணிடை போல் தேய்ந்து விடும் - அப்பெண்களுடைய சிறுத்த இடை போலக் குறைந்து போகும்.
"அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல் ஒலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
ஆவதே போன்று கெடும்." --- பழமொழி நானூறு.
இதன் பதவுரை ---
ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ! கேள் - ஒல் என்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடல் துறையை உடையவனே! கேட்பாயாக, தீயன ஆவதே போன்று கெடும் - தீச் செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன் எல்லையைக் கடந்து கெட்டுப் போகும் (ஆதலால்), அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை - தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை, நல்லது செய்வார் நயப்பவோ - நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்பமாட்டார்)
தீயன செய்வார் பெற்ற செல்வம், போகும்காலம் வரும்போது, பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தை உடன்கொண்டு போகும். எனவே, நல்லது செய்வார் அந்தச் செல்வத்தை விரும்பமாட்டார். புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போவது போல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி, வந்த அளவினும் மிகுந்து போகக் கூடியது.
தீய வழியில் செல்வம் வந்து சேரும்போது, ஆனந்தமாகத்தான் இருக்கும். எவ்வளவு பெருகினாலும் தீய வழியில் வந்த செல்வம் தீயதுதான். எவ்விதத்திலும் அது நல்லது ஆகாது. முடிவில் அது துன்பத்தையே தந்து செல்லும்.
"தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறு அல்ல, - தீயன
நல்லன ஆகாவாம், நா இன்புற நக்கிக்
கொல்லும் கவயமாப் போல்."
என்பது "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளிய பாடல்.
இதன் பதவுரை ---
தீய செயல் செய்வார் - தீயன ஆகிய செயல்களைச் செய்வோரின், ஆக்கம் பெருகினும் - செல்வமானது முதலில் பெருகி வளர்ந்தாலும், தீயன தேயனவே - தீய தொழில்களால் திரட்டப் பட்ட அப்பொருள்கள் பின்னர் தீமை பயப்பனவே, வேறு அல்ல - (அல்லாமல்) நன்மை பயப்பன ஆகா. (காரணம்) தீயன நல்லன ஆகாவாம் - தீய தொழில்களால் வரும் பொருள்கள், எக்காலத்திலும் நன்மை பயப்பன ஆக மாட்டாவாம், (ஆதலின் இது) நா இன்புற நக்கி - நாவால் முதலில் இன்பம் உண்டாகுமாறு நக்கிக் கொடுத்து, கொல்லும் கவயமாப் போல் - (பின்னர்க்) கொன்று விடும் காட்டுப் பசுவினைப் போல்வதாகும்.
நல்ல வழிகளில் ஈட்டப்படாத செல்வமானது முதலில் ஆவது போன்று தோன்றி, பின்னர் இல்லாது கெட்டு ஒழியும் என்பது கருத்து.
காட்டுப்பசுவானது, தான் கொல்ல விரும்பும் ஒரு விலங்கை முதலிலேயே கொல்லாமல், முதலில் நாவினல், அப்பிராணிக்குச் சுகம் தோன்றுமாறு நக்கிக் கொண்டே இருந்து, அச்சத்தில் இருந்து விடுபட்ட அந்த விலங்கு அசையாமல் இருக்கும்போது, திடீர் எனப் பாய்ந்து அதன் உயிரை வாங்கும். அதுபோல, தீய வழியில் திரட்டிய பொருளானது முதலில் சுகம் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் தீமையையே தரும் என்பதால், "தீயன தீயனவே, வேறு அல்ல, தீயன நல்லன ஆகாவாம்" என்றார் அடிகளார்.
"பவமும் பாவமும் பாதகமும் தீவினை." --- பிங்கலந்தை.
"தானமும், அறமும், தருமமும், சீலமும்,
அருளும், மங்கலமும், சுபமும், சுகிர்தமும்,
புண்ணியமும், பாக்கியமும் நல்வினை ஆகும்". --- பிங்கலந்தை.
தீயானது எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த உடம்பில் பட்டதோ, அந்த நேரத்தில், அந்த இடத்தில், அந்த உடம்பினை மட்டுமே சுடும். வேறு உடம்பில், வேறு நேரத்தில், வேறு இடத்தில் சென்று சுடுவது இல்லை. ஆனால், தீவினையானது, எந்தக் காலத்தில், எந்த இடத்தில் செய்யப்பட்டதோ, அந்த உடம்பில் உள்ள உயிரை வருத்துவது மட்டும் அல்லாமல், அந்த உயிரை விடாது பற்றிச் சென்று, மற்றொரு காலத்திலும், மற்றொரு இடத்திலும், மற்றோர் உடம்பிலும் வருத்தும்.
எனவே, தீவினையானது, தீயினை விடவும் மிகவும் அஞ்சத் தக்கது என்றார் திருவள்ளுவ நாயனார்.
"தீயவை தீய பயத்தலான், தீயவை
தீயினும் அஞ்சப் படும்." --- திருக்குறள்.
"தனக்கு இன்பம் தருதலைக் குறித்து ஒருவன் செய்யும் தீவினைகள், தொடக்கத்தில் இன்பத்தைத் தருவன போல் தோன்றி, பின்பு இன்பத்தை அழித்து, துன்பத்தையே தருதலால், தீய செயல்களைத் தீயினை விடவும் அதிகமாக அஞ்ச வேண்டும்" என்கின்றார் நாயனார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
"காளமுனி பாண்டவர்மேல் ஏவும் கடி விழுங்க
ஏளிதம் ஆனான், இரங்கேசா! - நாளுந்தான்
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்."
இதன் பதவுரை ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! காளமுனி - (துரியோதனன் வார்த்தையைக் கேட்ட) காளமுனிவன், பாண்டவர் மேல் - பஞ்ச பாண்டவரைக் கொல்லும்படி அவர்கள் மேல், ஏவும் கடி - அனுப்பின பூதமானது திரும்பி வந்து, விழுங்க - (தன்னையே எடுத்து) விழுங்கி விட, ஏளிதம் ஆனான் - இகழ்ச்சிக்கு இடமானான், (ஆகையால், இது) நாளும் - எப்போதும், தீயவை - தீவினைகள், தீய - துன்பங்களை, பயத்தலால் - கொடுப்பதனால், தீயவை - அந்தத் தீவினைகள், தீயினும் - நெருப்பைக் காட்டிலும் (அதிகமாய்ச் சுடுவதாக), அஞ்சப்படும் - (பெரியோரால்) பயந்து நீக்கப்படும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- பாவகாரியங்களைப் பயந்து நீக்கவேண்டும்.
விளக்கவுரை --- வனத்தில் இருந்த பாண்டவரைக் கொல்ல எண்ணின துரியோதனன் காளமா முனியைக் கொண்டு வாரணயாகம் செய்து, அதிலிருந்து ஒரு பூதத்தை உண்டாக்கி, அவர்களைக் கொல்ல ஏவினான். அதை, முன்னரே உணர்ந்த தரும தேவதை பாண்டவர் ஐவரையும் காக்கும் பொருட்டு, வனத்தில் ஒரு நச்சுப்பொய்கையை உண்டாக்கி, அவர்களை நெடுந்தூரம் அழைத்துக் கொண்டுபோய், அதன் நீரைக் குடிப்பித்து அவர்களுக்கு மரண மூர்ச்சை உண்டாக்கி இருந்தது. அவர்களைத் தேடி வந்த பூதம், அவர்கள் செத்துக் கிடந்ததைக் கண்டு, பிணங்களைத் தின்னவா காளமுனி நம்மை ஏவினான் என்று பெருங்கோபம் கொண்டு, திரும்பிச் சென்று அம் முனிவனையே எடுத்து விழுங்கிவிட்டுச் சென்றது. பிறகு தருமதேவதை ஐவரையும் எழுப்பிவிட்டதனால், பாண்டவர்கள் சுகமாய் வனத்தில் வாழ்ந்தார்கள். கேடு செய்த காளமாமுனி, தானே கெட்டுப் போனான்.
No comments:
Post a Comment