பொது --- 1073. பணிகள் பணமும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பணிகள் பணமும் (பொது)

முருகா! 

உடலை விட்டு உயிர் பிரியும்முன்பாக, 

உனது திருவடியை வழிபட்டு உய்ய அருள்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


பணிகள் பணமு மணிகொள் துகில்கள்

     பழைய அடிமை ...... யொடுமாதும்


பகரி லொருவர் வருக அரிய

     பயண மதனி ...... லுயிர்போகக்


குணமு மனமு முடைய கிளைஞர்

     குறுகி விறகி ...... லுடல்போடாக்


கொடுமை யிடுமு னடிமை யடிகள்

     குளிர மொழிவ ...... தருள்வாயே


இணையி லருணை பழநி கிழவ

     இளைய இறைவ ...... முருகோனே


எயினர் வயினின் முயலு மயிலை

     யிருகை தொழுது ...... புணர்மார்பா


அணியொ டமரர் பணிய அசுரர்

     அடைய மடிய ...... விடும்வேலா


அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


பணிகள், பணமும், அணிகொள் துகில்கள்,

     பழைய அடிமை ...... யொடு, மாதும்,


பகரில் ஒருவர் வருக அரிய

     பயணம் அதனில் ...... உயிர்போக,


குணமும் மனமும் உடைய கிளைஞர்

     குறுகி விறகில் ...... உடல்போடா,


கொடுமை இடுமுன் அடிமை அடிகள்

     குளிர மொழிவது ...... அருள்வாயே.


இணை இல் அருணை, பழநி, கிழவ!

     இளைய! இறைவ! ...... முருகோனே!


எயினர் வயினின் முயலும் மயிலை

     இருகை தொழுது ...... புணர்மார்பா!


அணியொடு அமரர் பணிய, அசுரர்

     அடைய மடிய ...... விடும்வேலா!


அறிவும், உரமும், அறமும், நிறமும்,

     அழகும் உடைய ...... பெருமாளே.

பதவுரை

இணை இல் அருணை பழநி கிழவ --- ஒப்பற்ற திருவண்ணாமலை, திருப்பழனி ஆகிய திருத்தலங்களை உரிமை உடையவர் ஆகியவரே!

இளைய இறைவ --- இளம்பூரணரே!

முருகோனே --- முருகப் பெருமானே!

எயினர் வயினின் முயலு(ம்) மயிலை இருகை தொழுது புணர் மார்பா --- வேடர்கள் இடத்தே தினைப்புனத்தைக காக்கும் தொழிலில் முயன்று இருந்த மயில் போன்ற வள்ளிநாயகியை இரு கைகளையும் கூப்பித் தொழுது, தழுவிய திருமார்பரே!

அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா --- வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே --- மெய்யறிவு, சர்வ வல்லமை,  அறநெறி,  புகழ், அழகு ஆகியவற்றை உடைய பெருமையில் மிக்கவரே!

பணிகள் பணமும் அணிகொள் துகில்கள் --- அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள்,

பழைய அடிமையொடு மாதும் பகரில் --- பழைய வேலை ஆட்கள் ஆகிய இவைக ளோடு மனைவியும் என்று சொல்லப்போனால்,

ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக ---இவர்களில் ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான இறுதிப் பயணத்தில் அடியேனது உயிர் பிரிய,

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி --- நற்குணங்களும், நல்ல மனமும் உடைய உறவினர் கூடி,

விறகில் உடல் போடாக் கொடுமை இடுமுன் --- விறகின் இடையே இந்த உடலைப் போடும் கொடுமையான செயலைச் செய்வதற்கு முன்பாக,

அடிமை --- அடியேன் 

அடிகள் குளிர மொழிவது அருள்வாயே --- தேவரீரது திருவடிகளை உள்ளம் குளிர வழிபட்டுத் துதிக்கும் அருளைத் தருவிராக.


பொழிப்புரை


ஒப்பற்ற திருவண்ணாமலை, திருப்பழனி ஆகிய திருத்தலங்களை உரிமை உடையவரே!

இளம்பூரணரே!

முருகப் பெருமானே!

வேடர்கள் இடத்தே தினைப்புனத்தைக காக்கும் தொழிலில் முயன்று இருந்த மயில் போன்ற வள்ளிநாயகியை இரு கைகளையும் கூப்பித் தொழுது, தழுவிய திருமார்பரே!

வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

மெய்யறிவு, சர்வ வல்லமை,  அறநெறி,  புகழ், அழகு ஆகியவற்றை உடைய பெருமையில் மிக்கவரே!

அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள், பழைய வேலை ஆட்கள் ஆகிய இவைகளோடு மனைவியும் என்று சொல்லப்படுகின்ற இவர்களில் ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான இறுதிப் பயணத்தில் அடியேனது உயிர் பிரிய, நற்குணங்களும், நல்ல மனமும் உடைய உறவினர் கூடி விறகின் இடையே இந்த உடலைப் போடும் கொடுமையான செயலைச் செய்வதற்கு முன்பாக, அடியேன் தேவரீரது திருவடிகளை உள்ளம் குளிர வழிபட்டுத் துதிக்கும் அருளைத் தருவிராக.

விரிவுரை

பணிகள் பணமும் அணிகொள் துகில்கள்..... ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக ---

மனித வாழ்வில் பாடுபட்டுத் தேடி வைத்த பொன்னும் பொருளும், மாடமாளிகைகளும், மனைவி மக்களும் ஆகிய எவையும், உயிர் உடலில் இருந்து பிரிந்து, தொலையாத வழிக்கு நெடும்பயணத்தை மேற்கொள்ளும் போது கூட வருவது இல்லை. இந்தப் பயணத்தை அடிகளார், பிறிதொரு திருப்புகழில் "மறலி ஊர்ப்புகும் மரண யாத்திரை" என்றார். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே, இறைவன் திருவடிகளை வழிபட்டு மெய்நிலையைப் பெறவேண்டும் என்கின்றார் அடிகளார்.


"நாளாய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம், மடநெஞ்சே! அரன்நாமம்

கேளாய், நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே."


"நீ நாளும், நன்னெஞ்சே! நினைகண்டாய், யார் அறிவார்

சா நாளும் வாழ்நாளும், சாய்க்காட்டு எம்பெருமாற்கே 

பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே."


என வரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருட்பாடல்களையும்,


"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழி அம்பு ஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு

கைத் தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே!

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"


என வரும் பட்டினத்து அடிகளார் பாடலையும்,


"நாடு நகர் மாடுவீடு நற்பொருள் எல்லாம்

நமன் வரும்போது நாடி வருமோ?

கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ?

கூத்தன்பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே."


என வரும் பாம்பாட்டிச் சித்தர் பாடலையும் கருத்தில் கொள்க.


மற்றபடி, இப் பாடலின் பொருள் வெளிப்படையானதுதான்.

கருத்துரை

முருகா! உடலை விட்டு உயிர் பிரியும்முன்பாக, உனது திருவடியை வழிபட்டு உய்ய அருள்.









No comments:

Post a Comment

எமனுக்கு எச்சரிக்கை

  எமனுக்கு எச்சரிக்கை ---- வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமை...