அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மைந்தர் இனிய (பொது)
முருகா!
திருவடியைத் தந்து அருள்.
தந்த தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி ...... மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி ...... லுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய ...... உயிர்போமுன்
தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை ...... புரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு ...... மணவாளா
மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ ...... மலைவோனே
இந்து நுதலு மந்த முகமு
மென்று மினிய ...... மடவார்தம்
இன்பம் விளைய அன்பி னணையு
மென்று மிளைய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மைந்தர், இனிய தந்தை, மனைவி,
மண்டி அலறி, ...... மதிமாய,
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி,
வன் கை அதனில் ...... உறு பாசம்
தந்து வளைய, புந்தி அறிவு
தங்கை குலைய ...... உயிர் போமுன்,
தம்பம் உனது செம்பொன் அடிகள்
தந்து, கருணை ...... புரிவாயே.
மந்தி குதிகொள் அம்தண் வரையில்
மங்கை மருவு ...... மணவாளா!
மண்டும் அசுரர் தண்டம் உடைய,
அண்டர் பரவ ...... மலைவோனே!
இந்து நுதலும் அந்த முகமும்
என்றும் இனிய ...... மடவார்தம்
இன்பம் விளைய, அன்பின் அணையும்,
என்றும் இளைய ...... பெருமாளே.
பதவுரை
மந்தி குதிகொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா --- குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த வள்ளிமலையில் இருந்த வள்ளிநாயகியை அணைந்த மணவாளரே!
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே --- நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போர் புரிந்தவரே!
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் இன்பம் விளைய --- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவரும், தேவரீருக்கு என்றும் இனியவராய் உள்ள தேவயானை, வள்ளிநாயகி ஆகிய இரண்டு மாதர்களுக்கும் இன்பம் உண்டாக,
அன்பின் அணையும் என்றும் இளைய பெருமாளே --- அன்புடன் அணைகின்ற, என்றும் இளம்பூரணராக விளங்கும் பெருமையில் மிக்கவரே!
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய --- பிள்ளைகள், இனிய தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி,
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன்கை அதனில் உறு பாசம் தந்து வளைய --- வஞ்சத்தைக் காட்டும் கண்களையும் விஞ்சும்படியாக விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை அடியேனை வளைக்க வீச, (அந்த வேளையில்)
புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போமுன் --- எனது புத்தியும், அறிவும் ஒருவழிப்பட்டுத் தங்காமல் நடுங்கி எனது உயிர் உடலை விட்டு நீங்கும் முன்பாக,
தம்ப(ம்) உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே --- பற்றுக்கோடாகத் தேவரீரது அழகிய திருவடிகளைத் தந்து கருணை புரியவேண்டும்.
பொழிப்புரை
குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த வள்ளிமலையில் இருந்த வள்ளிநாயகியை அணைந்த மணவாளரே!
நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போர் புரிந்தவரே!
பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவரும், தேவரீருக்கு என்றும் இனியவராய் உள்ள தேவயானை, வள்ளிநாயகி ஆகிய இரண்டு மாதர்களுக்கும் இன்பம் உண்டாக அன்புடன் அணைகின்ற, என்றும் இளம்பூரணராக விளங்கும் பெருமையில் மிக்கவரே!
பிள்ளைகள், இனிய தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி, வஞ்சத்தைக் காட்டும் கண்களையும் விஞ்சும்படியாக விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை அடியேனை வளைக்க வீச, அந்த வேளையில் எனது புத்தியும், அறிவும் ஒருவழிப்பட்டுத் தங்காமல் நடுங்கி எனது உயிர் உடலை விட்டு நீங்கும் முன்பாக, பற்றுக்கோடாகத் தேவரீரது அழகிய திருவடிகளைத் தந்து கருணை புரியவேண்டும்.
விரிவுரை
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய...... செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே ---
உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வாழ்நாள் முழுவதும் இரவு பகலாக உழைத்தும், அறநெறி நீங்கியும் தேடிச் செல்வத்தைச் சேமித்து வைக்கின்றார்கள்.
அதி அற்புதமாக மாளிகையைப் புதுக்குகின்றார்கள். மனைவி மக்கள் பொருட்டே உழைக்கின்றார்கள். அப்படிப் பாடுபட்ட ஒருவன் ஒரு கணத்தில் மாள்கின்றான். மாண்டவன் எதிர் வீட்டில் ஒரு வண்டி இழுக்கின்றவனுக்கு மகனாகப் பிறக்கின்றான். பிறந்த அவனுக்குத் தான் தேடிய பொன்னும் புதுக்கிய மாளிகையும், அருமையாகத் தொகுத்து வைத்த பொருள்களும் சொந்தம் என்று சொல்ல முடியாது. இது என் வீடு, இவள் என் மனைவி, இவன் என் மகன் என்று கூறினால் அவனுக்கு உதைதான் கிடைக்கும். ஒரு விநாடியில் அத்தனையும் அயலாகி விடுகின்றன. இதனை அறியாது, மாந்தர் மதியிழந்து கதியிழந்து உழல்கின்றார்கள்.
வாழ்நாள் முடிவில் உயிரைப் பறித்துச் செல்லக் காத்து இருக்கும் இயமன் வந்து தனது வலிய கையில் உள்ள பாசத்தை வீசி எறிந்து நிற்பான். புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்து நிற்கின்ற அந்த வேளையில், இறைவன் திருக்காட்சி கொடுத்து அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார்.
தமமரும் அமரும் மனையும் இனிய
தனமும் அரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய எறியாதே” --- திருப்புகழ்.
இல்லும் பொருளும் இருந்த மனை அளவே,
சொல்லும் அயலார் துடிப்பு அளவே - நல்ல
கிளை குளத்து நீர் அளவே, கிற்றியே, நெஞ்சே!
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. --- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
தம்பம் ---
பற்றுக்கோடு.
கருத்துரை
முருகா! திருவடியைத் தந்து அருள்.
No comments:
Post a Comment