விஜயவாடா --- 0998. திருகு செறிந்த

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

திருகு செறிந்த (விசுவை)

 

முருகா! 

திருவடியில் அணுக வரம் அருள்வாய்.

 

 

தனதன தந்த தனதன தந்த

     தனதன தந்த ...... தனதான

 

 

திருகுசெ றிந்த குழலைவ கிர்ந்து

     முடிமலர் கொண்டொ ...... ரழகாகச்

 

செயவரு துங்க முகமும்வி ளங்க

     முலைகள்கு லுங்க ...... வருமோக

 

அரிவையர் தங்கள் வலையில்வி ழுந்து

     அறிவுமெ லிந்து ...... தளராதே

 

அமரர்ம கிழ்ந்து தொழுதுவ ணங்கு

     னடியிணை யன்பொ ...... டருள்வாயே

 

வரையைமு னிந்து விழவெக டிந்து

     வடிவெலெ றிந்த ...... திறலோனே

 

மதுரித செஞ்சொல் குறமட மங்கை

     நகிலது பொங்க ...... வரும்வேலா

 

விரைசெறி கொன்றை யறுகுபு னைந்த

     விடையரர் தந்த ...... முருகோனே

 

விரைமிகு சந்து பொழில்கள்து லங்கு

     விசுவைவி ளங்கு ...... பெருமாளே.

 

                  பதம் பிரித்தல் 

 

திருகு செறிந்த குழலை வகிர்ந்து,

     முடிமலர் கொண்டுஒர் ...... அழகாகச்

 

செய,வரு துங்க முகமும் விளங்க,

     முலைகள் குலுங்க ...... வரும்மோக

 

அரிவையர் தங்கள் வலையில் விழுந்து,

     அறிவு மெலிந்து ...... தளராதே,

 

அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு,

     உன் அடிஇணை அன்பொடு ......அருள்வாயே.

 

வரையை முனிந்து விழவெ கடிந்து

     வடிவெல் எறிந்த ...... திறலோனே!

 

மதுரித செஞ்சொல் குறமட மங்கை

     நகில் அது பொங்க ...... வரும்வேலா!

 

விரைசெறி கொன்றை அறுகு புனைந்த

     விடை அரர் தந்த ...... முருகோனே!

 

விரைமிகு சந்து பொழில்கள் துலங்கு

     விசுவை விளங்கு ...... பெருமாளே. 

 

பதவுரை

 

            வரையை முனிந்து விழவெ கடிந்து--- கிரவுஞ்ச மலையைச் சினந்துஅதை அழித்துப் போக்கிட

 

            வடிவெல் எறிந்த திறலோனே --- கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய திறமை வாய்ந்தவரே!

 

            மதுரித செம்சொல் குற மடமங்கை--- இனிமை பொருந்திய செம்மையான சொற்களை உடைய இளைய குறமங்கையாகிய வள்ளிநாயகியின்,

 

            நகில் அது பொங்க வரும் வேலா --- தனங்கள் விம்மிதம் அடையும்படியாக வருகின்ற வேலவரே!

 

            விரைசெறி கொன்றை --- நறுமணம் மிக்க கொன்றைமலரையும்,

 

            அறுகு புனைந்த--- அறுகம் புல்லையும் திருமுடியில் சூடியுள்ள,

 

            விடை அரர் தந்த முருகோனே--- இடப (நந்தி) வாகனத்தை உடைய சிவபெருமான் ஈன்றருளிய முருகப் பெருமானே!

 

            விரைமிகு --- நறுமணம் மிக்க,

 

            சந்து பொழில்கள் துலங்கு--- சந்தன மரச் சோலைகள் விளங்கியுள்ள,

 

            விசுவை விளங்கு பெருமாளே--- விசுவை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            திருகு செறிந்த குழலை வகிர்ந்து--- திருகு சடை வில்லையை அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரி

 

            முடிய மலர் கொண்டு --- மலர்களைக் கொண்டு முடித்து,

 

     ஒர் அழகாகச் செ(ய்)ய வரு(ம்) துங்க முகமும் விளங்க---  அழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம் ஒளிவிளங்,

 

            முலைகள் குலுங்க வரும்--- முலைகள் குலுங்கும்படியாக நடந்து வருகின்,

 

            மோக அரிவையர் தங்கள் வலையில் விழுந்து--- காம மயக்கத்தை உண்டுபண்ணுகின்ற விலைமாதர்களின் வலையிலே விழுந்து

 

அறிவு மெலிந்து தளராதே --- அறிவு மெலிந்து அடியேன் தளராமல்,

 

அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு(ம்) உன் அடிஇணை அன்பொடு அருள்வாயே --- தேவர்கள் மகிழ்ந்து தொழுது வணங்குகின்ற தேவரீரது திருவடியிணைகளை அன்புடன் தந்து அருள்வாயாக. 

 

பொழிப்புரை

 

     கிரவுஞ்ச மலையைச் சினந்துஅதை அழித்துப் போக்கிட கூரிய வேலாயுதத்தை விடுத்து அருளிய திறமை வாய்ந்தவரே!

 

     இனிமை பொருந்திய செம்மையான சொற்களை உடைய இளைய குறமங்கையாகிய வள்ளிநாயகியின்தனங்கள் விம்மிதம் அடையும்படியாக வருகின்ற வேலவரே!

 

            நறுமணம் மிக்க கொன்றைமலரையும்அறுகம் புல்லையும் திருமுடியில் சூடியுள்ள இடப வாகனத்தை உடைய சிவபெருமான் ஈன்றருளிய முருகப் பெருமானே!

 

            நறுமணம் மிக்க சந்தன மரச் சோலைகள் விளங்கியுள்ளவிசுவை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            திருகு சடை வில்லையை அணிந்துள்ள கூந்தலை வகிர்ந்து வாரிமலர்களைக் கொண்டு முடித்துஅழகு விளங்கும்படிச் செய்வதால் வரும் சிறப்பான முகம் ஒளிவிளங்,முலைகள் குலுங்கும்படியாக நடந்து வருகின்,காம மயக்கத்தை உண்டுபண்ணுகின்ற விலைமாதர்களின் வலையிலே விழுந்துஅறிவு மெலிந்து அடியேன் தளராமல்தேவர்கள் மகிழ்ந்து தொழுது வணங்குகின்ற தேவரீரது திருவடியிணைகளை அன்புடன் தந்து அருள்வாயாக.

 

விரிவுரை

 

     இத் திருப்புகழப் பாடலில்விலைமாதரின் அழகில் மயங்கி உள்ளம் மெலிந்து தளராமல்படிக்கு,முருகப் பெருமான் தனது திருவடிகளைத் தந்து அருளவேண்டுகின்றார் அடிகளார்.

 

வரையை முனிந்து விழவெ கடிந்து வடிவெல் எறிந்த  திறலோனே--- 

 

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கிகிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்துகிரவுஞ்ச மலையைப் பிளந்துஅதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.


"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்" 

 

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.


     "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.


     கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. அது பொன்மலை. பொன் யாரையும் மயக்கும். கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம்கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்துஅவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும். 


"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட 

தனி வேலை வாங்கத் தகும்." 


என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.


     "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடியநீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடிநமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அனுபூதியில்.


     வேல் --- வெல்லும் தன்மை உடையது. அது ஞானசத்தி என்னும் பதிஞானத்தைக் குறிக்கும். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல். "வினை ஓட விடும் கதிர்வேல்" என்றார் அநுபூதியில். ஞானம் வெளிப்படமாயையும் ஆணவமும் அடங்கிப் போயின.


     அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும்வெற்றியைத் தருவதும்ஆணவமலத்தையும்வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம்குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், "போர்வேல்" எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவேவேல், "நெடுவேல்" எனப்பட்டது.


     சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்க்ளையும் அறுத்தார்.


மதுரித செம்சொல் குற மடமங்கை --- 


மதுரிதம் --- இனிமை.  

 

செஞ்சொல் --- செம்மையான சொற்கள். கேட்போரைச் செம்மைப்படுத்தும் சொற்கள்.


"மதுரித இந்தள அம்ருத வசனமும்" --- இனிமை வாய்ந்த யாழ் போலவும்அமிர்தம் போலவும் தித்திக்கின்ற வசனத்தையும் உடையவர் வள்ளிநாயகி என்றார் அடிகளார் திருத்தணிகைத் திருப்புகழில். "ரஞ்சித அம்ருத  வசனமும்" --- இனிமை உடையதும்அமிர்தத்தை ஒத்ததுமாகியஇன்மொழி உடையவர் வள்ளிநாயகி என்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில். "பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்" --- பண் இசைகள் தங்கி நெருங்கியுள்ள இனிய மொழிகளையுடைய வள்ளிநாயகி என்றார் பிறிதொரு திருச்செந்தூர்த் திருப்புகழில். "நல்லகொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை" --- நல்ல கொல்லிப் பண்ணைப் போன்ற சொற்களை உடையவர் என்றார் கந்தர் அலங்காரத்தில்.

 

கில் அது பொங்க வரும் வேலா --- 

 

நகில் --- தனங்கள்மார்பகங்கள்.

 

சந்து பொழில்கள்  --- 

 

சந்தன மரச் சோலைகள்.

 

விசுவை விளங்கு பெருமாளே--- 

 

அருணகிரிநாதப் பெருமான் வடநாட்டில் உள்ள காசி முதலான திருத்தலங்களைப் பாடி உள்ளார். விசுவை என்பது விஜயவாடா என்று இக்காலத்தில் வழங்கப்படுவதாக இருக்கலாம். இங்கே மலையடிவாரத்தில் முருகன் திருக்கோயில் ஒன்று உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. 

 

கருத்துரை

 

முருகா! திருவடியில் அணுக வரம் அருள்வாய்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...