040. கல்வி --- 10. கேடில் விழுச்செல்வம்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது கல்வியே ஆகும். அது அல்லாமல்மணியும் பொன்னும் முதலானவை எல்லாம் செல்வம் அல்ல" என்கின்றார் நாயனார்.

 

     கல்விச் செல்வத்திற்கு அழிவு இல்லைமையாவதுபங்காளிகள்கள்வர்வலியவர்அரசர் முதலியவர்களால் கொள்ளப்படாமையும்தன்னை நாடி வந்தோர்க்குக் கொடுப்பதால் குறைவு படாமையும் ஆகும்.

 

     சிறப்பு என்பது தக்கோரிடத்திலே நிற்றல்.

 

     இவை இரண்டும் மணிபொன் முதலாகிய பொருட்செல்வத்திற்கு இல்லாமையால்அவற்றைச் சிறப்புடையவையாகக் கொள்ளவில்லை.

 

திருக்குறளைக் காண்போம்...

 

கேடுஇல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு,

மாடு அல்ல மற்றை அவை.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி--- ஒருவனுக்கு இழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி

 

     மற்றையவை மாடு அல்ல--- அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.

 

            (அழிவின்மையாவது : தாயத்தார்கள்வர்வலியர்அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின்அவற்றை 'மாடு அல்லஎன்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...

 

மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே;

தானம் அழியாமைத் தான் அடங்கி வாழ்வு இனிதே;

ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை

மானிடவர்க்கு எல்லாம் இனிது.   ---  இனியவை நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது --- பெருமை கெட்ட பின்(உயிர்) வாழாமைமிக இனிதுதானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிது --- (தானிருந்து வாழும்) இருப்புச் சிதையாதபடி,தான் அடங்கி வாழ்தல்இனிதுஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை மானிடவர்க்கு எல்லாம் இனிது --- குறைவு சிறிதுமில்லாதுமிக்க பொருள் உடையராதல் எல்லா மக்கட்கும்இனிது.

 

மானம் அழிதல் - நிலையினின்றும் தாழ்தல்.

 

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை"                      

 

எனவும்

 

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் "        

 

எனத் திருவள்ளுவ நாயனார் கூறுதலின் ‘மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே என்றார். ஒருவன் தானடங்கி வாழானாயின் அவன் குடியிருப்புச் சிதைதல் ஒருதலை எனல் குறித்தனர். ஊனம் ஒன்றின்றி உயர்ந்த பொருளாவது கல்வி ஆகும்.

 

"கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை "         

 

எனவும்,

 

"தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது"    

 

எனவும் நாயனார் பணித்தமையின் என்க. 

 

 

வைப்புழிக் கோட்படாவாய்த்தீயிற் கேடில்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;

எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற;               --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வைப்புழிக் கோள் படா --- வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவில் கொள்ளப்படாதுவாய்த்து ஈயின் கேடு இல்லை ---நன் மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்க நேருமானால் அதனால் அழிதல் இல்லைமிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் --- தம்மினும் மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும் கவர இயலாதவராவர்எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்ல பிற --- ஆதலால்;வைப்பு என ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவை கல்வியேபிற அல்ல.

 

            கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.

 

 

மால்படு புந்தியின் மறு இல் சேதனம்,

பால்படும் உயிர்க்கு எலாம் பவத்தின் மாண் பயன்,

நூல்படு கல்வியின் நுவல் வளத்தினின்

மேல்படுகின்றது இல் விழுமிது இல்லையே.     ---  கந்த புராணம்.

                               

திருமை கொள் வளனொடு தீது இல் கல்வியாம்,

இருமையின் ஒன்றினை எய்திடாது எனின்

அருமை கொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும்

பெருமையது உடையது பேயின் தோற்றமே.    ---  கந்த புராணம். 

                               

 

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.     --- கொன்றை வேந்தன்.

 

இதன் பொருள் ---

 

     கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும்மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவதுகல்வி - கல்வியேயாம்.

 

 

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல்இசையும் நாட்டும் - உறுங்கவல்ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை.       --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும் --- ஒழுக்கமும் செல்வமும் இன்பமும் என்னும் மூன்றையும் வீடுபேற்றையும் கொடுக்கும்புறங்கடை நல்இசையும் நாட்டும் --- உலகத்தில் குற்றமற்ற புகழையும் நிலைநிறுத்தும்உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் --- நேரக் கூடிய வருத்தமொன்று நேர்ந்த பொழுதும் கைகொடுத்து உதவி செய்யும்சிறு உயிர்க்கு உற்றதுணை கல்வியின் ஊங்கு இல்லை --- ஆதலால் சிறிய உயிர்களாகிய மக்கட்குத் தக்க துணை கல்வியை விடப் பிறிதில்லை.

 

குஞ்சி அழகும்,கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும்,அழகு அல்ல,- நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.                   ---  நாலடியார்

 

இதன் பொருள் ---

 

     குஞ்சி அழகும் கொடு தானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல --- மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும் மக்கட்கு முடிந்த அழகுகள் அல்லநெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு --- நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

 

            நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

 

 

இம்மை பயக்குமால்,ஈயக் குறைவு இன்றால்,

தம்மை விளக்குமால்,தாம் உளராக் கேடு இன்றால்,

எம்மை உலகத்தும் யாம் காணேம்,கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.         ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     இம்மை பயக்கும் --- நல்வாழ்க்கையாகிய இம்மைப் பயனை விளைவிக்கும்ஈயக் குறைவு இன்று --- பிறர்க்குக் கற்பித்தலால் குறைவுபடுதல் இல்லைதம்மை விளக்கும் --- தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்தாம் உளராக் கேடு இன்று ஆல் --- தாம் இருக்க அது கெடுதல் இல்லை ஆதலால்எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து --- எப்பிறவியின் உலகத்திலும் கல்வி போல் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம் காண்கின்றிலேம்.

 

            கல்வியேஎல்லா வாழ்க்கை இன்னல்கட்கும் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்க்கும்.

 

     பொருட்செல்வமானால் இன்பம் தராதுதுன்பம் தரும் என்பதற்குப் பிரமாணம்...

 

 

இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே

பின்னதனைப் பேணுதலும் துன்பமே - அன்னது

அழித்தலும் துன்பமே அந்தோ பிறர்பால்

இழத்தலே துன்பமேயாம்.               ---  நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

     துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம். அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே. அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோஅதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.

 

ஈட்டலும் துன்பம்,மற்று ஈட்டிய ஒண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்,--- காத்தல்

குறைபடில் துன்பம்,கெடில்துன்பம்,துன்பக்கு

உறைபதி மற்றைப் பொருள்.      ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஈட்டலும் துன்பம் --- பொருள் திரட்டுதலுந் துன்பம்ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் --- திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்காத்தல் குறை படின் துன்பம் --- அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள் தன் அளவிற் குறைந்து போகுமாயின் துன்பமேகெடின் துன்பம் --- இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம்துன்பக்கு உறைபதி பொருள் --- ஆதலால்பொருள் துன்பங்கள் எல்லாவற்றிற்குந் தங்குமிடம் என்க.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...