பொருளால் அறமும் இன்பமும் தழைக்கும்

 


பொருளால் அறமும்இன்பமும் கூடும்

-----

 

     அறத்துப்பாலில்இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்துள், "அன்பும் அறனும் உடைத்து ஆயின்,இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது" என்னும் திருக்குறளின் வழிஅன்பு செலுத்துவதையே பண்பாகவும், அறச்செயலைச் செய்வதையே பயனாகவும் கொண்டு விளங்குவதே இல்வாழ்க்கை ஆகும் என்று அருளினார்.

 

     இல்வாழ்க்கையில் அறம் செழிக்கப் பொருள் வேண்டும். அந்தப் பொருளும் அறவழியில் வந்ததாக இருத்தல் வேண்டும். "பழி அஞ்சிப் பாத்தூண் உடைத்து ஆயின்" என்று இல்லறம் சிறக்க வழியும் கூறினார். பாவத்தால் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்டால்அறத்தின் பயன் பொருளுடையார் மேலும்பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சிஎன்று இதற்குப் பொருள் பகர்ந்தார் பரிமேலழகர். பாவ வழியில் வந்த பொருளைக் கொண்டு அறம் செய்தாலும்பாவமே மிகும் என்றார்.

 

     இதனை உறுதி செய்யும் வகையில்பொருட்பாலில் "பொருள்செயல் வகை" என்னும் அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பொருள் செயும் வகையினை அறிந்து,தீமை இல்லாமல்நல்ல வழியில் வந்த பொருளானது,அறத்தையும் கொடுக்கும்,இன்பத்தையும் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

 

     அறநெறியில் வந்த பொருள் ஒருவனுக்கு இம்மையில் புகழைத் தரும். அவ்விதம் தேடிய பொருளை கடவுள் பூசைக்கும்தானங்களைச் செய்வதற்கும் செலவழிப்பானானால்அதனால் உண்டாகிய இம்மை மறுமை வீடு என்கின்ற மூன்று வகையான இன்பங்களையும் தரும். அதனால் அவனிடத்தில் பொருள் மேன்மேலும் உண்டாகும் என்பதும் பெறப்படும். "செப்பம் உடையவன் ஆக்கம்சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து" என்று நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்ததைஇதனோடு வைத்து எண்ணுதல் நலம்.

 

அறன் ஈனும்இன்பமும் ஈனும்திறன் அறிந்து,

தீது இன்றி வந்த பொருள்.                        

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள். 

 

     தீய வழியில் அல்லாமல்நல்வழியில் ஈட்டிய பொருளானது,அறத்தையும்அதன் பயனாகிய இன்பத்தையும் கொடுக்கும் என்றார்.

 

     காஞ்சிப் புராணம் பாடிய மாதவச் சிவஞான யோகிகள்தொண்டை நாட்டின் பெருமையைக் கூறுமிடத்துஇத் திருக்குறளின் கருத்தை வைத்துபாலி நதியின் பெருமையைக் காட்டுகின்றார். பாலி நதியின் நீரானதுசிறிதும் மடையை உடைத்து வெளியேறாமல்முழுவதுமாகக் கால்வாயில் சென்று பாய்ந்துவளம் செழிக்கும் வயல்களில் பாய்ந்ததுஇது எதைக் காட்டுகின்றது என்றால்,மேலோர் விலக்கியவற்றை ஒழித்துவிதித்தவற்றைச் செய்துநல்வழியில் ஈட்டிய பொருளானதுசிறிதும் வீண்போகாமல்அற வழியில் பயன்படுவதைப் போன்று இருந்ததைக் காட்டுகின்றது என்கின்றார்.

 

"பழியில் நீங்கி நன்கு ஈட்டிய பசும்பொருள் சிறிதும்

கழி படாது நல் வழிப்பயன் படுவது கடுப்பக்

கொழி திரைச்சுவைப் பாலியின் குளிர்புனல் முழுதும்

வழுவு உறாதுகால் வழிச்சென்று வளவயல் நிறைக்கும்".    --- காஞ்சிப் புராணம்.  

                                    

     பசும்பொருள் --- சிந்தையில் இரக்கம் வைத்துத் தேடிய பொருள்.

 

     "பொருள்செயல் வகை" என்னும் அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "நல்வழியால் வரும் பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்குமற்றைய அறமும் இன்பமும் ஒருசேர அடையும் எளிய பொருள்கள் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     பொருளைத் தேடும் காலத்தில் பழி அஞ்சித் தேடவேண்டும். அவ்வாற பழிக்கு அஞ்சி ஈட்டிய பொருள் மிகுதியாக ஒருனுக்கு உண்டாயிருக்குமானால்அப் பொருளால் அறத்தையும்இன்பத்தையும்அவன் வருந்தாமே மிக எளிதாக அடைந்து விட முடியும். பொருளை உடைய ஒருவனுக்கு அறம் இன்பம் என்னும் இரண்டையும் அடைதல் எளிதாகவேஅவன் உலகத்து மக்களால் புகழப்படுவான்.

 

ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்குஎண் பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.                       

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

ஒண் பொருள் --- ஒள்ளிய பொருள்,நீதியினால் தேடும் பொருள்,முறையினால் வருகின்ற பொருள்,நெறியால் வரும் பொருள். அன்போடும் அறிவோடும் சிறந்த வழியில் தீதின்றி இயற்றப் பெற்ற பொருள்சிறப்பைத் தரும் பொருள். ஆதலால் அது "ஒண்பொருள்" எனப்பட்டது. மிகுந்த பொருளை நல்ல முறையில் ஈட்டுக.பொருள் மிகுதியாக இருந்தால் அறத்தை விரும்பியவாறு நன்றாகச் செய்யலாம்இன்பமும் எளிதாகத் துய்க்கலாம்.

 

     "காழ்ப்பஎன்றதற்கு முற்றமுதிரமிகுதியாகமிக அதிகமாகத் தேடிமிகுதியும் தேடிதிரளாகநிரம்பமிகவும் அதிகமாகசெறிவாக என்றனர் உரையாசிரியர்கள். காரணம்அறவழியில் வந்த பொருள் மிகுதியாகச் சேரும். அள்ள அள்ளக் குறையாது. தீயவழியில் வந்த பொருள்அது வந்த வழியிலேயே போகும் என்பதைக் காட்ட, "அழக்கொண்ட எல்லாம் அழப் போம்" என்றார் நாயனார்.

 

     பொருளால் அறத்தைச் செய்யலாம். அறத்தைச் செய்வதால் வருவதே இன்பம். அறச் செயல்களைச் செய்வதால் உண்டாதே இன்பும் ஆகும். மற்றவை எல்லாம் துன்பம் தரும் இயல்பினை உடையவை என்பதோடு புகழும் இல்லாதவை. "அறத்தால் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்தபுகழும் இல" என்னும் திருக்குறள் காண்க.

 

     தக்கவரிடத்தில் சேர்ந்த பொருள் ஏனைய அறங்களையும்அவற்றின் பயனான இம்மை,மறுமைவீடு என்னும் மூவகை இன்பத்தையும்நல்கும் என்பதை நாலடியார் வலியுறுத்துமாறு காண்க.

 

"வடுஇலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவணது எய்த இருதலையும் எய்தும்,

நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து

அடுவது போலும் துயர்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     குற்றமில்லாத நிறைமொழி மாந்தர் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்றியமையாதனவாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற அறம்,பொருள்,இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள்,  நடுவில் நின்றதான ‘பொருள்என்பது வாய்க்கப் பெற்றவர்கள்அது காரணமாக அதன் இருபக்கத்தனவான ‘அறம்' ‘இன்பம்என்னும் இரண்டையும் அடைவர். அறத்திற்கும் இன்பத்திற்கும் நடுவிலே உள்ள பொருள் இல்லாதவர்கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவர்.

 

     திருமங்கை ஆழ்வார் இக் கருத்தை வலியுறுத்திப் பாடியதொரு பாடல் காணலாம்.

 

காரார் வரைக் கொங்கைகண்ணார் கடல் உடுக்கை,

சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப் பேராற்று,

பாரார மார்வின் பெருமா மழைக் கூந்தல்,

நீரார வேலி நிலமங்கை என்னும் இப்,

 

பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றேஅம்மூன்றும்

ஆராயில் தானே அறம்பொருள் இன்பம்என்று

ஆரார் இவற்றின் இடை அதனை எய்துவார்

சீர்ஆர் இருதலையும் எய்துவர்.                 --- திருமங்கை ஆழ்வார்சிறிய திருமடல்.

 

இதன் பொருள் ---

 

     (தோழி தலைவியிடம் கூறுவது) மேகங்கள் படிந்த மலைகளைத் தனங்களாகவும்விரிந்த கடலை உடையாகவும்,சிறப்பு உடைய ஒளிமயமான சூரியனைத் திலகமாகவும்சிவந்து கலங்கி உள்ள பெரிய ஆறுகளை ஆரங்களாகவும் அணிந்த மார்பினை உடையபெரிய மேகமாகிய கூந்தலை உடையவளாய்நிறைந்த நீராகிய கடலை ஆடையாக உடையவளான பூமிப் பிராட்டியை அபிமான தேவதையாக உடைய உலகில் உள்ளவர் சொல்லும் புருஷார்த்தங்கள் மூன்றே. நூற்பயன் என்று சொல்லப்பட்ட அறம்பொருள்இன்பம் என்னும் மூன்றனுள்பொருளைப் பெறுவோர்,சிறப்புள்ள அதன் பகுதிகளான அறம் இன்பம் என்னும் இரண்டையும் பெறுவர்.

 

     மணிவாசகப் பெருமான் பாடி அருளிய "திருக்கோவையார்" என்னும் அற்புதமான அருள்நூலில் வரும் ஓர் அருமையான காட்சியைக் காணலாம்.

 

     பிறந்தநாள் தொட்டுஇல்லறத்தை மேற்கொள்ளும் காலம் வரையில்,முன்னோர் தேடி வைத்த பொருளால் பயன் கொள்ளுவது அன்றிஅதன் பின்னரும் அவர் தேடி வைத்த பொருளைக் கொண்டுதென்புலத்தார்தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்னும் ஐம்புலத்து ஆறு ஓம்பி ஒருவன் வாழ்வானாயின்அவற்றின் பயன் பெரும்பான்மையும்அப் பொருளைத் தேடி வைத்தவர்க்கே ஆகும். தனக்கு ஆகாது. எனவேதான் தேடி வைத்த பொருளால்தனக்கு மட்டும் அல்லாமல்தனது முன்னோருக்கும் பயன் விளையும் என்பதாலும்அறச் செயலைப் புரிவது மெய்யறிவைப் பெறுவதற்கு ஏதுவாகும் என்பதாலும்,பொருள் தேடத் தலைமகன் தலைப்படுவான். தலைவியோடு கூடி இல்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் தலைவன்இல்லறத்திற்கு உரிய பொருளை ஈட்டுவதற்குப் பிரிகின்ற பிரிவு, "பொருள்வயின் பிரிவு" ஆகும். 

 

     திருக்கோவையாரின் தலைவனான ஆன்மாசிவமாகிய தலைவியை அடைந்த பிறகு,பொருள் தேடப் பிரிய எண்ணுகின்றது. தலைவனது பிரிவைக் கேட்ட தலைவியின் வாட்டம் நீங்குவதற்குத் தலைவன் தோழியிடம் சொல்லியதாக "பொருள்வயின் பிரிவு" என்னும் தலைப்பில் ஓர் அருமையான பாடலை வடித்துக் காட்டி உள்ளார் மணிவாசகப் பெருமான்.

 

முனிவரும் மன்னரும் முன்னுவ

            பொன்னால் முடியும் என,

பனிவரும் கண்பரமன் திருச்

            சிற்றம்பலம் அனையாய்!

துனிவரும் நீர்மை இது என் என்று

            தூநீர் தெளித்து அளிப்ப,

நனிவரும் நாள் இதுவோ என்று

            வந்திக்கும் நல்நுதலே.       --- திருக்கோவையார்.

 

இதன் பொருள் ---

 

     துறவிகள் கருதும் மறுமை இன்பமும்மன்னர்கள் கருதும் இம்மை இன்பமும் பொருளால்தான் முடியும் என்று நான் பொதுவாகப் பொருளின் தேவையைத் தலைவியிடம் கூறஉடன் அவளுடைய கணகளில் நீர் தேங்கியது. சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தில்லைச் சிற்றம்பலத்தினை ஒத்த தோழியே! தலைவியின் வருத்தம் எக்காரணத்தால் வந்ததுநான் பிரியேன் என்று கண்ணீரைத் துடைத்தவுடன் அவள் தெளிவு பெற்றாள். வருந்திக் கண்ணீர் வடித்த நேரத்தை நான் பிரிந்த காலமாகவே எண்ணிஎன்னை வணங்கினாள். ஆதலால்நீ அவள் வருந்தாவண்ணம் என் பிரிவைக் கூறிஅவளைத் தேற்றுவாயாக என்று தலைவன் கூறினான். 

 

     துறவிகள் மறுமை இன்பத்தை வேண்டி வேள்விகள் முதலானவற்றைச் செய்வார்கள். அவருக்குப் பொருள் வேண்டும். மன்னர்கள்தம்மைச் சார்ந்து உயிர்களைக் காத்தல் ஆகிய அறத்தைச் செய்வார்கள். அதற்கும் பொருள் வேண்டும் என்பது, "முனிவரும் மன்னரும் முன்னுவ பொருளால் முடியும்" என்றார். 

 

     "மெல்லென்றஅருளில் பிறக்கும் அறநெறி,எல்லாம் பொருளில் பிறந்து விடும்" என்பது "நான்மணிக்கடிகை".அறநெறியானது அருள் உணர்வு உள்ள இடத்திலே தழைக்கும். அந்த அறத்தை இயற்றுவதற்கும்அதனால் உண்டாகும் இன்பத்தைத் துய்ப்பதற்கும் பொருள் இன்றியமையாதது.

 

     செல்வமானது,அறத்தையும் அதனால் விளையும் இன்பங்களையும் தோன்றுவிக்கும். ஆதலால் செல்வத்தைத் தேட வேண்டியது மக்கள் கடமை ஆகும்.செல்வத்தினால் அறம் செய்துஇன்பத்தையும் நுகர்ந்து பின் முத்தியை யடையலாம் என்ற உண்மையை அறியாதவர் செல்வத்தைச் சிறப்பாக மதிக்கமாட்டார். அது மயக்கத்தைத் தருவது என்று வெறுப்பார். 

 

     மக்கள் வாழ்வின் பயன் அறம் செய்தலும் இன்பம் துய்த்தலுமே. ஆதலின்,அவை இரண்டும் இரு விழிகளாகக் கொள்ளப்பட வேண்டியவை. 

 

     இந்த மெய்ம்மொழிகளைச் சற்றும் எண்ணாமல்பொருள் இருந்தால் தான் எல்லாம் ஆகும் என்று கருதி,பொருளை ஈட்டுவதிலேயே கருத்தாக இருத்தல் பயனற்றது. பொருளானது நல்வழியில் வந்தால் நன்மையைத் தரும். அல்லாத வழியில் வந்தால்அல்லலையே தரும். "அழகொண்ட எல்லாம் அழப் போம்" என்று நாயனார் காட்டியபடிபிறர் வருந்துமாறு ஈட்டிய பொருள் எல்லாம்அவ்வாறு ஈட்டியவன் வருந்துமாறு அவனை விட்டுப் போகும் என்பதை மறத்தல் ஆகாது.

 

     இன்னொரு உண்மையும்மணிவாசகப் பெருமான் பாடியருளிய பாடலால் உணரப்படும். சிவமாகிய தலைவியை அடைய விரும்பிய ஆன்மாசிவத்தின் அருளால் தலைவியை அடைந்து விடுகின்றது. கிடைத்தற்கரிய பெரும்பேறு கிடைத்த பின்னரும்பொருளாசை கொண்டு உழல்வது கூடாது. (நம்மில் சிலரும் அருளைப் பெறக்கூடிய அடியார் கூட்டம் என்னும் அமைப்புக் கிடைத்த பின்னரும்இடம் கிடைத்த பின்னர் அருளை மறந்து,பொருள் கருதி இருப்பதைக் காணலாம்). பொருளைத் தேடிச் சென்று துன்பத்தை அடையப் போகின்றதே தனது தலைவன் ஆகிய ஆன்மாஅது தன்னை விட்டுப் பிரியக் கூடாதே என்னும் கருணை காரணாமகசிவமாகிய தலை வருந்துகின்றது. இந்த உண்மையை உணராமல்தலைவியாகிய சிவத்திற்குதனது பிரிவிற்கான காரணத்தைக் கூறுகின்றது தலைவனாகிய ஆன்மா. அறிவுரை சொல்லும்போதுஉடனடியாக யாருக்கும் ஏற்றுக் கொள்ள மனம் வராது. பட்டால்தான் பட்டறிவு விளங்கும். அதுபோலபொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவனாகிய ஆன்மாஇறுதியில் தான் பொருள் தேடச் சென்று தான் பட்ட துன்பங்களை எல்லாம் சொல்லி வருந்தியதாக ஒரு பாடலை மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி இருப்பார்.

 

     தலைவியாகிய சிவத்தின் அருமை அறியாமல்தனது அறிவையே பெரிதாக எண்ணிப் பிரிந்து சென்ற ஆன்மா,சிவத்தின் அருள்நோக்கம் பெற்று மகிழ்ந்து பாடியதாக வரும் பாடலைக் காண்போம்...

 

மயில்மன்னு சாயல் இம் மானைப்

    பிரிந்து,பொருள் வளர்ப்பான்

வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதுல்

    எல்லாம்விடையோன் புலியூர்க்

குயின்மன்னு சொல்லிமென் கொங்கை என்

    அங்கத்திடைக் குளிப்பத்

துயின்மன்னு பூவணை மேல் அணை

    யாமுன் துவளுற்றதே.                            --- திருக்கோவையார்.

 

இதன் பொருள் ---

 

     மயில்போலும் சாயலை உடைய மான் போன்ற இந்த தலைவியைப் பிரிந்துபொருள் தேடுவதற்காக வெயில் எரிக்கும் வெம்மையான வழிகளில் நான் சென்று பட்ட துன்பம் எல்லாம்காளை வாகனத்தை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ள தில்லையில் உள்ள குயில் போன்ற இனிய சொல்லைக் கொண்ட தலைவியின் மெல்லிய கொங்கைகள் எனது மார்புக்குள் மூழ்கும் நிலையில் துயில்வதற்கு உரிய படுக்கையில் அணையும் முன்னே மறைந்து போயின.

 

     உலக வாழ்விற்குப் பொருளை ஈட்டத்தான் வேண்டும். பொருள் அறவழியில் வந்து சேர வேண்டும். அறவழியில் வந்த பொருளைக் கொண்டு அறத்தைச் செய்துஇவ்வுலக வாழ்க்கையில் இன்பத்தைத் துய்த்துமறுமைக்கான இன்பத்தையும் எளிதாக அடையலாம். அல்லாத வழிகளில் பொருளை ஈட்டிஅறத்தைச் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ளலாம் என்று எண்ணுவது அறியாமை ஆகும். இந்த எண்ணம் அடியார்களாகத் தம்மைக் கருதிக் கொண்டு இருப்பவர்க்கு இன்றியமையாதது என்பதால்திருக்கோவையாரிலும்இந்தக் கருத்தை உட்புகுத்தி வைத்தார் மணிவாசகப் பெருமான்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...