039. இறைமாட்சி --- 09. செவி கைப்ப

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 039 --- இறைமாட்சி

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தனது செவியானது கசக்குமாறு பிறர் பேசும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் குணம் உடைய அரசனின் வெண்கொற்றக் குடையின் கீழ்இந்த உலகம் நிலைத்து வாழும்" என்கின்றார் நாயனார்.

 

     செவி கைப்ப --- காது வருந்த. அரசனுக்குக் காது கண் போன்றது என்பர்.  

 

     கவிகை --- குடைவெண்கொற்றக் குடை. குடையில் வெண்மை என்றது நீதி வழுவாமையைக் குறிக்கும். வெயிலின் வெம்மை உடம்பின் மேல் விழாமல்,நிழலைத் தந்து,குடையானது இனிமையைத் தருவதுபோல்மக்களுக்கு எந்த ஒரு துன்பமும் அணுகாதவண்ணம் பாதுகாத்தலை வெண்கொற்றக் குடை குறிக்கும்.

 

     "இடிப்பாரை இல்லா எமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்றதால்தக்க நேரத்தில் அமைச்சர் முதலாயினோர் இடித்துக் கூறும் அறிவுரைகளைக் கேட்பதற்கு இனிமையாக இல்லாவிட்டாலும்அதனைப் பொறுமையோடு கேட்டுதெளிந்த அறிவோடு ஆட்சியை நடத்தி வரல் வேண்டும்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்பு உடை வேந்தன்

கவிகைக் கீழ் தங்கும் உலகு.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     சொல் செவி கைப்பப் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்--- இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும். விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது

 

     கவிகைக் கீழ்த் தங்கும் உலகு--- குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்.

 

            ('செவி கைப்பஎன்றதற்கு ஏற்பஇடிக்குந் துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக் 'கைப்பஎன்றார். பண்பு உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின்மண் முழுதும் தானே ஆளும் என்பதாம்.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பார்சீதை சீலம் பழித்து உரைத்தும் காகுத்தன்

சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரில்

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ் தங்கும் உலகு.

 

இதன் பொருள்---

 

            சோமேசா! தேரில் --- ஆராயில்,  சொல் செவி கைப்ப --- இடிக்கும் துணை ஆயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும்பொறுக்கும் --- விளைவு நோக்கிப் பொறுக்கும்பண்புடை வேந்தன் --- பண்புடைய அரசனதுகவிகைக் கீழ் தங்கும் உலகு --- குடைநிழற் கண்ணே தங்கும் உலகம்,

 

            பார் --- உலகத்தார்,   சீதை சீலம் பழித்து உரைத்தும் --- சீதையினது ஒழுக்கத்தை இகழ்ந்து பேசியும்காகுத்தன் --- சீராமன்சோர்வு உற --- தளர்ச்சி அடையும்படிமுன் --- முன்பு. சீறிலன் --- வெகுண்டானிலன் ஆகலான் என்றவாறு.

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானும் கெடும்.            --- திருக்குறள்.

 

            இராமன் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்த இராவணனைக் கொன்று,அவளை மீட்டு அயோத்தி வந்துபட்டாபிடேகம் செய்துகொண்டு வாழ்க்கையில், "இராமன் பிறன்பால் பத்து மாதம் இருந்த ஒருத்தியை மீட்டு வந்து பட்டமங்கை ஆக்கிக் கொண்டான்" என்று யாவரும் கூறியும்இராமன் அவள் எதிரில் கடும்சொல் ஒன்றும் கூறாது அவளை வனத்தில் விடும்படி செய்தார்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...