திரு உத்தரகோசமங்கை --- 0989. கற்பக ஞான


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

கற்பக ஞானக் (உத்தரகோசமங்கை)

 

முருகா! 

சிவஞான அமுதைப் பருகி இன்புற்று இருக்க அருள்வாய்.

 

 

தத்தன தானத் தனதன தந்தத்

     தத்தன தானத் தனதன தந்தத்

          தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான

 

 

கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்

     திற்புத சேனைக் கதிபதி யின்பக்

          கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் ...... கரைபால்தேன்

 

கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்

     றொப்பையி னேறிட் டருளிய தந்திக்

          கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் ...... பரியாய

 

பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்

     பொற்சரி நாதப் பரிபுர என்றுப்

          பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் ...... தினிதேயான்

 

பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்

     றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்

          றுப்புக லாகத் தமுதையு முண்டிட் ......டிடுவேனோ

 

தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்

     குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்

          கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் ...... செவையாகித்

 

திக்கய மாடச் சிலசில பம்பைத்

     தத்தன தானத் தடுடுடு வென்கச்

          செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி

 

உற்பன மாகத் தடிபடு சம்பத்

     தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்

          றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா

 

உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்

     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்

          றுத்தர கோசத் தலமுறை கந்தப் ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

கற்பக ஞானக் கடவுள்,முன் அண்டத்-

     தில் புத சேனைக்கு அதிபதி,இன்பக்

          கள்கழை,பாகு அப்பம் அமுது வெண் சர்க்- ...... கரை,பால்,தேன்,

 

கட்டு இளநீர்முக்கனிபயறும்பொன்

     தொப்பையின் ஏறிட்டு அருளிய தந்திக்

          கட்டுளையாய்! பொன்பதம் அது இறைஞ்சிப் ......பரியாய

 

பொன் சிகியாய்! கொத்து உருள்மணி தண்டைப்

     பொன் சரி நாதப் பரிபுர! என்று,

          பொற்பு உற ஓதி,கசிவொடு சிந்தித்து ......இனிதே,யான்

 

பொன்புகழ் பாடி,சிவபதமும் பெற்று,

     பொருள் ஞானப் பெருவெளியும் பெற்று,

         புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு ......இடுவேனோ?

 

தெற்பம் உள் ஆகத் திரள் பரி உம்பல்

     குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம்திக்கு

          எட்டையும் மூடி,குருதிகள் மங்குல் ...... செவையாகித்

 

திக் கயம் ஆட,சிலசில பம்பைத்

     தத்தன தானத் தடுடுடு என்க,

          செப்பறை தாளத் தகுதொகு என்க,...... சிலபேரி

 

உற்பனமாகத் தடி படு சம்பத்து,

     அற்புத மாகத்து அமரர் புரம்பெற்று,

          உள் செல்வ மேவிக் கனமலர் சிந்தத் .....தொடுவேலா!

 

உட்பொருள் ஞானக் குறமகள்,உம்பல்

     சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்று,

          உத்தரகோசத் தலம் உறை கந்தப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

            தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல்--- போர்ச்செருக்குள்ள கொழுத்த உடலை உடைய கூட்டமான குதிரைகளும்,யானைகளும்

 

            குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம்--- குவியலாக உள்ள அசுரர்களின் பிணங்களும் 

 

            திக்கு எட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் செவை ஆகி--- எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க

 

            திக்(கு) கயம் ஆட--- எட்டுத் திக்கு யானைகள் அசைந்து ஆடவும்,

 

            சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு என்க --- சிலசில பம்பை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்ற தாளவொத்துடன் முழங்கவும்,

 

            செப்பு அறை தாளம் தகு தொகு என்க--- தாளங்கள் தகு தொகு என்று ஒலிக்கவும்,

 

            சில பேரி தடி படு சம்பத்து உற்பனமாக--- சில முரசுகள் மின்னல் மின்னுவது போலவும்இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்கவும்,

 

            அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று--- அழகிய விண்ணுலகத் தேவர்கள் தமது இருப்பிடத்தைத் திரும்பப் பெற்று,

 

            உள் செல்வம் மேவி --- அங்குள்ள செல்வங்கள் அனைத்தையும் பெறும்பொருட்டு,

 

            கனமலர் சிந்தத் தொடு வேலா --- பொன் மலர்களைத் தூவி வழிபட,வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே!

 

            உள் பொருள் ஞானக் குறமகள்--- உண்மைப் பொருளாகிய ஞான வடிவாக உள்ள குறமகளாகிய வள்ளிநாயகியுடனும்,,

 

            உம்பல் சித்திரை --- ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானை அம்மையுடனும்,

 

            நீடு அப்பரிமயில் முன் பெற்று---  மேம்பட்ட அந்த வாகனமாகிய மயில் மீது விளங்கப் பெற்று

 

            உத்தரகோசத் தலம் உறை கந்தப் பெருமாளே---உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            கற்பக ஞானக் கடவுள்--- வேண்டுவார் வேண்டியதை அளிக்கும் ஞானமூர்த்தியே!

 

            முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி--- முன்பு விண்ணுலகத்தில் இருந்த தேவர்கள் சேனைக்கு அதிபதியே!

 

            இன்பக் கள் கழை--- இனிய தேன்என இனிக்கும் கரும்பு,

 

            பாகு --- வெல்லப் பாகு,

 

            அப்பம்--- அப்பம்,

 

            அமுது--- சோறு,

 

            வெண் சர்க்கரை--- வெண்மையான சருக்கரை,

 

            பால் --- பால்,

 

            தேன்--- தேன்,

 

            கட்டு இளநீர்--- இளநீர்க் கட்டு,

 

            முக்கனி--- மாபலாவாழை என்னும் முக்கனிகள்

 

            பயறு--- பயறு ஆகிய இவைகளை,

 

            அம் பொன் தொப்பையின் ஏறிட்டு அருளிய--- அழகிய வயிற்றில் ஏற்று அருளி,

 

            தந்திக் கட்டு இளையாய்--- தந்தி முகத்தோன் ஆன மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

 

            பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய பொன் சிகியாய்--- தேவரீரது அழகிய திருவடியை (முற்பிறப்பில்) வணங்கப் பெற்றதால்வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவரே!

 

            கொத்து உருண் மணித் தண்டை --- திரண்டு உருண்டு உள்ள இரத்தினத் தண்டைகள்

 

            பொன் சரி---  பொன்னால் ஆன வளைகள்,

 

            நாதப் பரிபுர--- ஒலிக்கின்ற சிம்புகளை அணிந்தவரே!

 

            என்று --- என்று,

 

            பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து--- அழகாக ஓதிஉள்ளம் கசிந்து தியானித்து,

 

           இனிதே யான் --- அடியேன் இனிமையாக,

 

            பொன் புகழ் பாடி--- உமது அழகிய திருப்புகழைப் பாடி,

 

            சிவபதமும் பெற்று--- சிவபதத்தைப் பெற்று,

 

            பொருள் ஞானப்பெரு வெளியும் பெற்று--- மெய்ஞ்ஞானப் பெருவெளியை அடையப் பெற்று,

 

            புகல் ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ --- அப்போது உண்டாகிஎனதுஉடலில் ஊறும் ஞான அமுதை அடியேன் பருகி இன்புறுவேனோ?

 

 

பொழிப்புரை

 

            போர்ச்செருக்குள்ள கொழுத்த உடலை உடைய கூட்டமான குதிரைகளும்யானைகளும்குவியலாக உள்ள அசுரர்களின் பிணங்களும் எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்கஎட்டுத் திக்கு யானைகள் அசைந்து ஆடவும்சிலசில பம்பை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்ற தாளவொத்துடன் முழங்கவும்தாளங்கள் தகு தொகு என்று ஒலிக்கவும்சில முரசுகள் மின்னல் மின்னுவது போலவும்இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்கவும்,அழகிய விண்ணுலகத் தேவர்கள் தமது இருப்பிடத்தைத் திரும்பப் பெற்று,அங்குள்ள செல்வங்கள் அனைத்தையும் பெறும்பொருட்டு,பொன் மலர்களைத் தூவி வழிபட,வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே!

 

            உண்மைப் பொருளாகிய ஞான வடிவாக உள்ள குறமகளாகிய வள்ளிநாயகியுடனும்ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானை அம்மையுடனும்,மேம்பட்ட அந்த வாகனமாகிய மயில் மீது விளங்கப் பெற்றுஉத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

            வேண்டுவார் வேண்டியதை அளிக்கும் ஞானமூர்த்தியே!

 

            முன்பு விண்ணுலகத்தில் இருந்த தேவர்கள் சேனைக்கு அதிபதியே!

 

            இனிய தேன்என இனிக்கும் கரும்புவெல்லப் பாகுஅப்பம்சோறுவெண்மையான சருக்கரைபால்தேன்இளநீர்க் கட்டுமாபலாவாழை என்னும் முக்கனிகளபயறு ஆகிய இவைகளைஅழகிய வயிற்றில் ஏற்று அருளி,தந்தி முகத்தோன் ஆன மூத்த பிள்ளையாருக்கு இளையவரே!

 

            தேவரீரது அழகிய திருவடியை (முற்பிறப்பில்) வணங்கப் பெற்றதால்வாகனமாக (இப்பிறவியில்) அமைந்த அழகிய மயிலை உடையவரே!

 

            திரண்டு உருண்டு உள்ள இரத்தினத் தண்டைகள்பொன்னால் ஆன வளைகள்ஒலிக்கின்ற சிம்புகளை அணிந்தவரே!என்றுஅழகாக ஓதிஉள்ளம் கசிந்து தியானித்து,அடியேன் இனிமையாக,உமது அழகிய திருப்புகழைப் பாடிசிவபதத்தைப் பெற்றுமெய்ஞ்ஞானப் பெருவெளியை அடையப் பெற்று,அப்போது உண்டாகிஎனதுஉடலில் ஊறும் ஞான அமுதை அடியேன் பருகி இன்புறுவேனோ?

 

விரிவுரை

 

கற்பக ஞானக் கடவுள்--- 

 

கற்பகம் வேண்டுவார் வேண்டியதை அளிக்கும் தேவலோகத் தரு. வேண்டுவார் வேண்டியதை அளிக்கும் கற்பகத் துரவாக விளங்குபவர் ஞானமூர்த்தி ஆகிய முருகப் பெருமான்.

 

முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி--- 

 

அண்டம் என்பது விண்ணுலகைக் குறிக்கும்.

 

புதன் --- தேவன். புத சேனை --- தேவர்கள் சேனை.

 

பொன் பதம் அது இறைஞ்சிப் பரியாய பொன் சிகியாய்--- 

 

   பொற்பதம் இறைஞ்சித் சூரன் முருகவேளுக்கு மயில் வாகனமானது.

 

     சூரன்பதுமன்சிங்கமுகன்தாரகன் என்னும் நான்கு பூதர்கள் முருகவேளின் சேவல்மயிலுடன் சேர்ந்து திருக்கயிலை வாயிலில் கருடனாதிய ஊர்திகளை வதைத்தார்கள். தேவர்கள் முறையீட்டால் இதை அறிந்த முருகவேள் இந் நான்கு பூதர்களையும் அசுரர்களாகுமாறு சபித்தார். அப்பொழுது சூரனும் பதுமனும் "அண்ணலே! நாங்கள் மயிலும் சேவலுமாகித் தங்களுக்குப் பணி செய நெடுங்காலமாகத் தவம் புரிகின்றோமே என விண்ணப்பிக்கநீங்கள் இருவரும் ஒரு வடிவாகி சூரபத்மா என்னும் அசுரனாய் எம்முடன் போர் புரியும்போது எமது ஆணையால் மயிலும் சேவலும் ஆவீர்கள்என முருகவேள் அருள் புரிந்தார்.

 

தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டும் மெய்பகிர் இரண்டு கூறுஞ்

சேவலும் மயிலும் ஆகிச் சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.

 

மணிகிளர் வரையது ஒன்றும் மரகதப் பிறங்கல் ஒன்றுந்

துணையடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்

திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவ லோடு

பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்.

 

ஆட்படு நெறியிற் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்

தாட்படை மயூர மாகித் தன்னிகர் இல்லாச் சூரன்

 காட்படை யுளத்த னாகிக் கடவுளர் இரியல் போக

 ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம்.

 

மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை

அருள்கெழு நாட்டஞ் சேர்த்த ஆங்கவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன்,சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கையே போல்.

 

தீயவை புரிந்தார் ஏனும்,குமரவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி,மேலைத் தொல்கதி அடைவர் என்கை,

ஆயவும் வேண்டுங் கொல்லோ?அடுசமர் இந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற்று உய்ந்தான்.

 

அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற

குக்குட உருவை நோக்கி,"கடிதில் நீ கொடியே ஆகி

மிக்குஉயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி" என்னத்

தக்கதே பணியிது என்னா எழுந்தது தமித்து விண்மேல்.

 

செந்நிறங் கெழீஇய சூட்டுச் சேவலங் கொடி ஒன்றாகி

முன்னுறு மனத்தில் செல்லும் முரண்தகு தடந்தேர் மீப்போய்

இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உரும் ஏறு உட்க

வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே.

 

சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை

ஊர்தியின் இருக்கை நீங்கி,உணர்வுகொண்டு ஒழுகி நின்ற

சூர்திகழ் மஞ்ஞை ஏறிச் "சுமக்குதி எம்மை" என்னாப்

பார்திசை வானம் முற்றும் பரிஎன நடாத்தல் உற்றான். 

 

பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள் மாயன்

கார் என வந்து முக்கண் கடவுளைப் பரித்ததே போல்,

வீரருள் வீரனாகும் வேல் உடைக் குமரன் தன்னைச்

சூர் உருவாகி நின்ற தோகைமேல் கொண்டது அம்மா.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

 

பொற்பு உற ஓதிக் கசிவொடு சிந்தித்து--- 

 

பொற்பு --- அழகு.

 

உள்ளத்தில் உண்மை அழகு மிளிஇறைவன் திருவடிப் புகழையும்,திருநாமத்தையும்அன்போடு ஓதிகசிந்து உருகவேண்டும்.

 

ஆகத்து அமுதையும் உண்டிட்டு இடுவேனோ --- 

 

அமுது --- சிவஞான அமுது. சிவஞானம் ஆகிய அமுது.

 

சிவம் --- நன்மைஅன்பு என்பவை. 

 

சிவசுடர் அதனைப் பாவை மணம் என மருவி....   --- (திருநில) திருப்புகழ்.

                                                                                               

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் கலவி

சுகபோக மன்பருக அறியாதே....         ---   திருப்புகழ்.

 

உலகை அறிவது --- பாசஞானம்.

தன்னை அறிவது --- பசுஞானம்

இறைவனை அறிவது --- பதிஞானம்.

 

பதிஞானம் சிறந்தது. இதனைச் சிவஞானம் என்பர். இந்தச் சிவஞானமாகிய அமுதத்தை உண்ணுதல் வேண்டும். அதனால் பசியாறி பரகதி சித்திக்கும்.

 

குகனெ குருபர னெஎன நெஞ்சில்

புகழ அருள்கொடு நாவினில்இன்பக்

குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் பசியாறி....  ---  திருப்புகழ்.

 

தெற்பம் உள ஆகத் திரள் பரி உம்பல்--- 

 

தெற்பம் --- போர்ச்செருக்கு.

 

உம்பல் --- யானை. 

     

திக்கு எட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் செவை ஆகி--- 

 

செவை --- சிவப்பு. குருதியால் சிவந்த நிலை.

 

சில பேரி தடி படு சம்பத்து உற்பனமாக--- 

 

பேரிகைகள் தடிக் கொம்பால் அடித்து முழக்கப் படுகின்றன.

 

சம்பம் --- இடி.

 

உற்பனம் --- தோற்றம்தோன்றுதல்.

 

அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று--- 

 

மாகம் --- ஆகாயம். விண்ணுலகம்.

 

ஞானக் குறமகள்--- 

 

"சுந்தரஞான மென் குறமாது" என்று திருச்செந்தூர்த் திருப்புகழிலும், "வன மீதுசெறி ஞான குறமாதைதினகாவில் மணம் மேவு புகழ் மயில்வீரா!" என்று இராமேச்சுரம் திருப்புகழிலும்அடிகளார் வள்ளியம்மையாரைப் போற்றிப் பாடியுள்ளது காண்க.

 

உம்பல் சித்திரை ---

 

உம்பல் --- யானை. இங்கே தேவலோகத்து யானையாகிய ஐராவதம் சொல்லப்பட்டது.

 

உம்பல் சித்திரை --- தேவயானை.

 

உத்தரகோசத் தலம் உறை கந்தப் பெருமாளே---

 

உத்தரகோசமங்கை என்னும் திருத்தலம் பாண்டி நாட்டில் உள்ளது. 

 

இறைவர்   : மங்களேசுவரர்மங்களநாதர்,

இறைவியார்  : மங்களேசுவரிமங்களாம்பிகை,                                            

தலமரம்      : இலந்தை.

தீர்த்தம்       : அக்கினி தீர்த்தம்.

 

          மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும்,இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும்சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும்இக்கோயிலின் பழைமை புலனாகிறது.

 

            உத்தரம் - உபதேசம்கோசம் - ரகசியம்மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

 

            இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    

            சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்துஇங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கிபின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    

            இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. 

    

            மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று,அழகிய திருவுருக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசிதன்னை மறந்துபரவசமாகிகண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி 'யார் பெற்றதோ இதுஎன்று வினவினான். வண்டோதரி, "யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்" என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்துஅதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்துஇறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்துஅத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.

    

            மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999பேர்களுக்கும்மூழ்காது இருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடை மீது அமர்ந்து திருக்காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் "காட்சி கொடுத்த நாயகர்" என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.

 

கருத்துரை

 

முருகா! சிவஞான அமுதைப் பருகி இன்புற்று இருக்க அருள்வாய்.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...