040. கல்வி --- 05. உடையார்முன் இல்லார்போல்

 



திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வழிபடுதலை வெறுக்காது கற்றல் நல்லது. ஆகையால்செல்வர் முன்னேவறியவர் நிற்கும் விதம் போல,தாமும் ஆசிரியர் முன் இருந்து படிக்கவேண்டும் என்னும் ஆசையினால் தாழ்ந்து நின்று கற்றவர் உயர்ந்தவர் ஆவர். அவ்வாறு வழிபட்டு நிற்றலுக்கு வெட்கம் உற்றுக் கல்லாதவர்,எப்போதும் இழிந்தவரே ஆவர்" என்கின்றார் நாயனார்.

 

     பொய்யாகிய பெருமையை நோக்கிமெய்யாகிய கல்வியை இழந்தவர்பின் ஒருநாளும் அறிவுடையவர் ஆகாமையால், "கடையர்" என்றார். இதனால்கற்றாரது உயர்வும்,கல்லாதவரது இழிவும் சொல்லப்பட்டன.

 

திருக்குறளைக் காண்போம்....

 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்,

கடையரே கல்லா தவர்.

 

இதற்குப் பரிமேலகர் உரை ---

 

     உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்--- 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான்செல்வர் முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர் முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். 

 

     கல்லாதவர் கடையரே--- அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.

 

       (உடையார்இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான்,அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரேஎன்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

கற்றவர் சங்கத்து இருந்தார் கண்ணுதலோடுஏனையவர்

சற்றும் இரார்என்று தலையாயார் ---  முற்றும்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

 

       கற்றவர் --- சங்கப் புலவர்கள். கண்ணுதலோடு ---  சங்கப்புலவருள் ஒருவராக உடன் வீற்றிருந்த திருவாலவாய் அண்ணலோடு. ஏனையவர் --- கல்வி அறிவு இல்லாதவர்கள்.  என்று --- என்று நினைத்து. முற்றும் கற்றார் தலையாயார்.

 

     திருவாலவாய் எனும் மதுரைபயம்பதியிலே இருந்த தமிழ்ச்சங்கத்தில் தலைமைப் புலவராக வீற்றிருந்து தமிழை ஆய்ந்த சொக்கநாதப் பெருமானுடன்,சங்கத்தில் புலவர்களாக இருந்து கற்றவர்கள் முற்றும் கற்று உணர்ந்தவர்கள் ஆனார்கள். கல்வி அறிவு இல்லாதவர்கள் கடையானவர்கள்.

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.

 

களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;

கடைநிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத்

தலைநிலத்து வைக்கப் படும்.          ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் --- உவர் நிலத்தில் தோன்றிய உப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும் நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்கடை நிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் --- ஆதலால்கீழ்க்குடியில் பிறந்தோராயினும் கற்றறிந்தோரை மேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல் உண்டாகும்.

 

            கல்விமாந்தரை உயர் வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.

 

 

கல்வி உடைமை,பொருள் உடைமை,என்றுஇரண்டு

செல்வமும் செல்வம் எனப்படும்;--- இல்லார்

குறைஇரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்

தலைவணங்கித் தாழப் பெறின்.   --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     இல்லார் --- கல்வியும் செல்வமும் இல்லாதவர்கள்குறையிரந்து தம்முன்னர் நிற்ப போல் --- அவ்விரண்டையும் வேண்டி அவ்விரண்டுடைய தமக்கு முன்னால் நிற்பதுபோலதாமும் தலைவணங்கித் தாழப் பெறின் --- தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்கப் பெற்றால்கல்வியுடைமை பொருளுடைமை என்று இரண்டு செல்வமும் செல்வம் எனப்படும் --- தாங்கள் பெற்ற கல்விச்செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டு செல்வங்களும் உண்மைச் செல்வங்களென்று உயர்ந்தோரால் பாராட்டப்படும்.

            

     பொருளுடைமையால் விளையும் செருக்கு எழுச்சியைக் கல்வியுடைமை தாழச் செய்யுமாதலின், `தாழப்பெறின்’ என்றார். பொருட்செல்வத்தை உண்மைப் பொருட் செல்வமாக்குவது கல்வியுடைமை. ஆதலால் அதனை முற்கூறினார். அன்றியும்இல்லை என்று வருவாரை இன்சொன் மொழிந்து தாழ்ந்து எதிரழைப்பது முன்னும்பொருள் தருவது பின்னுமால் நிகழ்தலாய்அம்முறையே தாழ்மை பயக்குங் கல்வியுடைமைஈகை பயக்குஞ் செல்வமுடைமைக்கு முன்னின்றது என்றலுமாம். கீழோர் ஆயினும் தாழ உரை” என்னும் முதுமொழி இங்குக் கருதுதற்குரியது.

 

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்பு ஓரன்ன உடன் வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்,

ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும்

மூத்தோன் வருக என்னாதுவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. --- புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

    உற்றுழி உதவியும் --- தன் ஆசிரியருக்கு ஓர் ஊறுபாடுஉற்றவிடத்து அது தீர்த்தற்குவேண்டிய உதவிகளைச் செய்தும்உறு பொருள்கொடுத்தும் --- மிக்க பொருளைக் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று --- வழிபாட்டு நிலைமையை வெறுக்காது கற்றல் ஒருவருக்கு அழகுபிறப்பு ஓரன்ன உடன் வயிற்றுள்ளும் --- (அதற்கு என்ன காரணம் என்றால்,)   பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு தாயின் வயிற்றுப் பிறந்தவர்களுள்சிறப்பின் பாலால் - கல்வியின் சிறப்பால்தாயும் மனம் திரியும் --- தாயும் மனம் வேறுபடும்ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் --- ஒரு குடியில் பிறந்த பலருள்ளேமூத்தோன் வருகஎன்னாது --- மூத்த பிள்ளையை வரவழைத்துச் சிறப்புச் செய்யாது;   அவருள் அறிவுடையோன் ஆறு --- அவருள் அறிவுடையோன் சென்ற நெறியேஅரசும் செல்லும் --- அரசனும் விரும்புவான்வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் --- வேறுபாடுதெரியப்பட்ட நாற்குலத்து உள்ளும்கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ---கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்மேற்பால் ஒருவனும் அவன்கண்படும் --- மேற்குலத்துப் பிறந்த ஒருவனும் இவன் கீழ்க்குலத்தான் என்று பாராது கல்விப் பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவான். (எனவேஇத்தகு சிறப்பு வாய்ந்த கல்வியை ஒருவன் கற்றுத் தெளிதல் அவசியம்)

 

 

திரியழல் காணில் தொழுப விறகின்

எரியழல் காணின் இகழ்ப --- ஒருகுடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமை பாராட்டும் உலகு.        --- நான்மணிக் கடிகை.

 

இதன் பொருள் ---

 

 

     திரி அழல் காணின் தொழுப --- திரியின் எரியுஞ் சுடரைக் கண்டால்--- அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் கைகூப்பி வணங்குவர்விறகின் எரி அழல்காணின் இகழ்ப --- விறகிலேஎரியும் சுடரைக் கண்டால்அது பெரிதாயிருப்பினும் உலகத்தார் மதியாது இகழ்வர், (அது போல)ஒரு குடியில் --- ஒரே குடும்பத்தில்,கல்லாது முத்தானை கைவிட்டு --- கல்வி அறிவு இல்லாமல் ஒயதில் மட்டும் முதிர்ந்தவனைமதியாமல் விடுத்துகற்றான் இளமை உலகு பாராட்டும் --- கல்வி அறிவு பெற்றவனது இளமைப் பருவத்தையேஉலகத்தார் பாராட்டுவர்.

 

            திரியில் எரியும் சுடரைக் கண்டால் அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் தொழுவர் விறகில் எரியுஞ் சுடரை,அது பெரிதாயிருப்பினும் தொழாது இகழ்வர்ஒரு குடும்பத்திலேயே படியாதவன் மூத்தவனாயினும் மதியார் ;படித்தவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டுவர்.

 

 

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.  ---  நறுந்தொகை.

 

இதன் பொருள் ---

 

     கற்கை நன்று கற்கை நன்று --- (நூல்களைக்) கற்றல் நல்லதுகற்றல் நல்லது. பிச்சை புகினும் --- பிச்சைக்குப் போனாலும்கற்கை நன்று --- கற்றல் நல்லது. 

 

     பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது நல்லது.

 

     கல்வி கற்கப் புகும் மாணவன் எப்படிப்பட்டவனாய் இருத்தல் வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த நன்னூல் சூத்திரம் காண்க.

 

 

கோடல் மரபே கூறுங் காலைப்

பொழுதொடு சென்று வழிபடல் முனியான்,

குணத்தொடு பழகி,அவன் குறிப்பில் சார்ந்து,

இரு என இருந்து,சொல் எனச் சொல்லி,

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி,

சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி,

செவி வாயாக,நெஞ்சு களன் ஆகக்

கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்

போ எனப் போதல் என்மனார் புலவர்.   --- நன்னூல்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...