பழமண்ணிப்படிக்கரை - 0798. அருக்கி மெத்தெனச் சிரித்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அருக்கி மெத்தென சிரித்து (திருப்படிக்கரை)

முருகா!
உன்னைப் பாடி வழிபட அருள்.

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
     தனத்த தத்தனத் ...... தனதான


அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
     டழைத்தி தப்தடச் ...... சிலகூறி

அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
     தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்

துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
     குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா

துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
     துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ

தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
     றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்

சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
     றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
     செயித்த வுத்தமத் ...... திருமாமன்

திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
     திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அருக்கி, மெத்து எனச் சிரித்து, மைக்கண்இட்டு
     அழைத்து, இதப்படச் ...... சிலகூறி,

அரைப் பணத்தை விற்று, உடுத்த பட்டு அவிழ்த்து,
     அணைத்து இதழ்க் கொடுத்து, ...... அநுராகத்து

உருக்கி, மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு
     உளக் கருத்தினில் ...... ப்ரமை கூராது,

உரைத்து, செய்ப்பதித் தலத்தினைத் துதித்து,
     உனைத் திருப்புகழ்ப் ...... பகர்வேனோ?

தருக்கும் மற்கடப் படைப் பலத்தினில்
     தடப் பொருப்பு எடுத்து, ...... அணையாகச்

சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து அதில்
     தரித்த அரக்கர் பொட்டு ...... எழவே, போர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச்
     செயித்த உத்தமத் ...... திருமாமன்,

திருத் தகப்பன் மெச்சு ஒருத்த! முத்தமிழ்த்
     திருப்படிக் கரைப் ...... பெருமாளே.


பதவுரை

      தருக்கும் மற்கடப் படைப் பலத்தினில் --- ஊக்கம் மிகுதி உள்ள குரங்குப் படையின் பலத்தைக் கொண்டு,

     தடப் பொருப்பு எடுத்து --- பெரிய மலைகளைப் பெயர்த்துப் போட்டு,

     அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து --- அணையாகக் கடலின் குறுக்கில் அடைத்துக் கட்டி,

      அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே --- அந்தக் கடலுக்கு அப்பால் வாழ்ந்திருந்த அரக்கர்கள் போடியா,

     போர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திருமாமன் --- பெருமிதத்தோடு போர் புரிந்து, ஆற்றல் வாய்ந்த அம்பினைச் செலுத்தி வெற்றி கொண்ட மாமன் ஆகிய திருமாலும்,

     திருத் தகப்பன் மெச்சு ஒருத்த --- சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவரே!

      முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே --- முத்தமிழ் விளங்கும் திருப் பழமண்ணிப்படிக்கரை என்னும் திருப்படிக்கரையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      அருக்கி மெத்தெனச் சிரித்து --- அருமையாகவும் அமைதியாகவும் புன்முறுவல் பூத்து,

     மைக் கண் இட்டு அழைத்து --- மை தீட்டிய கண்களால் அழைத்து,

     இதப் படச் சில கூறி --- இனிமை பொங்கச் சில சொற்ககளைப் பேசி,

       அரைப் பணம் அத்தை விற்று --- அரையில் உள்ள பாம்புப் படம் போன்ற பெண்குறிச் சுகத்துக்காக விலைபேசி,

     உடுத்த பட்டு அவிழ்த்து --- உடுத்துள்ள பட்டாடையை அவிழ்த்து வெறுமையாகி,

     அணைத்து --- உடலோடு உடல் பொருந்த அணைத்து,

     இதழ் கொடுத்து --- அதரபானத்தைப் பருகத் தந்து,

     அநுராகத்து உருக்கி --- இன்ப விளையாட்டில் உள்ளம் உருகுமாறு செய்து,

     மட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு --- ஒன்றும் குறையாமல் உள்ள பொருளை எல்லாம் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்க்கு,

      உளக் கருத்தினில் ப்ரமை கூராது --- எனது உள்ளத்தில் மயக்கம் கொள்ளாது,

     உரைத்து --- உமது பெருமைகளை வாயாரப் பேசி,

     செய்ப் பதித் தலத்தினைத் துதித்து --- வயலூர் என்னும் திருத்தலத்தினைத் துதித்து,

     உனைத் திருப்புகழ் பகர்வேனோ --- உமது அருட்புகழைப் பாடுகின்ற நிலை அடியனுக்கு வாய்க்குமோ?

பொழிப்புரை

         ஊக்கம் மிகுதி உள்ள குரங்குப் படையின் பலத்தைக் கொண்டு, பெரிய மலைகளைப் பெயர்த்து கடலின் குறுக்கில் போட்டு அடைத்து, அணையாகக் கட்டி, அந்தக் கடலுக்கு அப்பால் வாழ்ந்திருந்த அரக்கர்கள் போடியா, பெருமிதத்தோடு போர் புரிந்து, ஆற்றல் வாய்ந்த அம்பினைச் செலுத்தி வெற்றி கொண்ட மாமன் ஆகிய திருமாலும், சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவரே!

         முத்தமிழ் விளங்கும் திருப் பழமண்ணிப்படிக்கரை என்னும் திருப்படிக்கரையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         அருமையாகவும் அமைதியாகவும் புன்முறுவல் பூத்து, மை தீட்டிய கண்களால் அழைத்து, இனிமை பொங்கச் சில சொற்ககளைப் பேசி, அரையில் உள்ள பாம்புப் படம் போன்ற பெண்குறிச் சுகத்துக்காக விலைபேசி, உடுத்துள்ள பட்டாடையை அவிழ்த்து வெறுமையாகி, உடலோடு உடல் பொருந்த அணைத்து, அதரபானத்தைப் பருகத் தந்து, இன்ப விளையாட்டில் உள்ளம் உருகுமாறு செய்து, ஒன்று குறைவில்லாமல் உள்ள பொருளை எல்லாம் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்க்கு, எனது உள்ளத்தில் மயக்கம் கொள்ளாது, உமது பெருமைகளை வாயாரப் பேசி, வயலூர் என்னும் திருத்தலத்தினைத் துதித்து, உமது அருட்புகழைப் பாடுகின்ற நிலை அடியனுக்கு வாய்க்குமோ?


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் தன்மையைப் பேசி, அவரிடத்தில் மயங்கி, அரிதில் முயன்று தேடிய பொருளை எல்லாம் இழந்து அவதிப் படாமல், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய முருகப் பெருமானை, அவர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் மயலூர் என்னும் திருத்தலத்தை வழிபட்டு, பாமாலைகளால் துதித்து வழிபட்டு, உயிருக்கு இயல்பாகவே உள்ள பற்றுக்களைப் பற்று அற இழந்து இன்பமுறும் நிலையை அடைய வேண்டுமென்று நமக்கு நல்வழி காட்டுகின்றார்.
  
செய்ப் பதித் தலத்தினைத் துதித்து, உரைத்து ---

செய் - வயல்.

செய்ப்பதி - வயலூர்.

வயலூர் என்பது மிகப் புனிதமான திருத்தலம். அருணகிரிநாதப் பெருமானுக்கு முருகப் பெருமான் இரண்டாவது அநுக்கிரகம் செய்த திருத்தலம். "கைத்தலம் நிறைகனி" என்ற திருப்புகழைப் பாடத் தொடங்கியது இத் தலத்திலே தான். இயற்கை வளம் செறிந்த திருத்தலம். அருணகிரிநாதருக்கு இத் திருத்தலத்தின் மீது அளவிறந்த காதல் உண்டு. எங்கு சென்றாலும் "வயலூரா", "வயலூரா" என்று மறவாமல் கூறுவார். இத் திருத்தலம் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது.

வயலூர் என்னும் திருத்தலத்தினைத் துதித்து என்று அடிகளார் காட்டி உள்ள அருமை சிந்திக்கத்தக்கது. "உனது பழநிமலை என்னும் ஊரைச் சேவித்து அறியேனே" எனப் பிறிதொரு திருப்புகழில் காட்டியபடி, திருத்தலத்தைத் தரிசித்தாலே முத்தி வாய்க்கும்.

காரைக்கால் அம்மையார் திருத்தலையால் நடந்த படி என்பதால், அத் திருத்தலத்தை மிதிக்க அஞ்சி, திருஞானசம்பந்தப் பெருமான் அத் தலத்தினை ஊர்ப் புறத்தில் இருந்தே வழிபட்டார்,

அப்பர் பெருமான் திருப்பணி புரிந்த அருட்பதி என்பதால், திருவதிகைத் தலத்தை மிதிக்க அஞ்சி, ஊர்ப்புறத்தில் இருந்தே வழிபட்டு, சித்தவடமடத்தில் சுந்தரர் எழுந்தருளி இருந்தார்.

திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த திருப்பதி என்பதால் சீகாழித் தலத்தினை மிதிக்காமல் வலமாக வந்து சுந்தரர் வழிபட்டார்.

இதனால் திருத்தலங்களின் சிறப்பு விளங்கும்.


தருக்கும் மற்கடப் படைப் பலத்தினில் தடப் பொருப்பு எடுத்து, அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து, அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் செருக்கு விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திருமாமன் ---

குரங்குப் படைகளைக் கொண்டு சேதுபந்தனம் செய்து, கடலைத் தாண்டி இலங்கையில் உள்ள இராவணாதியர் அழியுமாறு ஒப்பற்ற கணையினை விடுத்து அருளியவர் இராமபிரான்.

இராமச்சந்திரமூர்த்தி, நானாவிதமான மனோவியாபாரமாகிய எண்ண அலைகள் ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய கடலினைக் குறுக்கி,  வைராக்கியமாகிய அணைகட்டி, காமக்ரோதாதிகளாகிய அசுரர்களை அழித்தனர் என்பது இதன் தாத்பரியம்.
  
ஆழியில் அணை கட்டிய வரலாறு

இராம்பிரான் கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்தில் இருந்த அவரது திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான சமுத்திர ராஜன் இராமருக்கு முன் வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன். மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டு வா. திவ்விய அஸ்திரங்களையும் எடுத்து வா. சமுத்திரத்தை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினி போல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. எரி கொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்கள் இன்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டது என்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பம் அடைந்த மனத்துடன் வருண பகவான் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, காலகாலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான்.

இராமர் “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது. இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துரும குல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரண கூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரங்கொடுத்தார்.

பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன். விசுவகர்மாவினுடைய புதல்வன். தந்தைக்குச் சமானமானவன். தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என் மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே. விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணையைக் கட்டுகிறேன். வீரனுக்குத் தண்ட உபாயமே சிறந்தது. அயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இச் சமுத்திரராஜன் தண்ட உயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானர வீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டியவற்றைக் கொணரட்டும்” என்றான்.

இராமர் அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக் கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ் சத்தமுண்டாயிற்று. மனந்தளராத அவ்வானர வீரர்கள் முதல் நாள் 14 யோசனை தூரம் அணை கட்டினார்கள். பயங்கரமான சரீரமும் பலமும் பொருந்திய வானர வீரர்கள் இரண்டாம் நாள் விரைவாக 20 யோசனை தூரம் அணை கட்டினார்கள். மிகுந்த பரபரப்பும் தொழில் செய்வதில் ஊக்கமும் உள்ள அந்த வானர சிரேட்டர்கள் மூன்றாவது நாள் 21 யோசனை தூரம் கட்டினார்கள். நான்காவது நாள் 22 யோசனை தூரம் கட்டினார்கள். எல்லாத் தொழிலையும் விரைவில் முடிக்கவல்ல அவ்வானரங்கள் ஐந்தாவது நாள் 23 யோசனை தூரம் சுவேல மலை வரையும் அணை கட்டினார்கள். இவ்வாறு வெகுவிரைவில் 100 யோசனை தூரம் அணைகட்டி முடித்தார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச் சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூது உற்றன.

முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே ---

முத்தமிழ் விளங்கும் திருப் பழமண்ணிப்படிக்கரை என்னும் திருப்படிக்கரையில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

இது ஒரு சோழ நாட்டு வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "இலுப்பைப்பட்டு" என்று வழங்குகிறது.

வைத்தீசுவரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வாளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைத் தாண்டி, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர் : நீலகண்டேசுவரர், முத்தீசுவரர், பரமேசுவரர், மகதீசுவரர், படிக்கரைநாதர்.
இறைவியார் : அமிர்தகரவல்லி, மங்களநாயகி.
தல மரம் : இலுப்பை
தீர்த்தம்  : பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம்.

சுந்தரமூர்த்தி நாயனார் வழிபட்டுத் திருப்பதிகம் அருளிய திருத்தலம்.
         
இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப் படிக்கரை' என்று ஆயிற்று.

 இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் - இலுப்பை; பட்டு - ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.

பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

தருமர் வழிபட்டது நீலகண்டேசுவரர். வீமன் வழிபட்டது மகதீஸ்வரர். அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர். நகுலன் வழிபட்டது பரமேசர். சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது. திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது. திருச்சுற்றில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.

கருத்துரை

முருகா! உன்னைப் பாடி வழிபட அருள்.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...