அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சூலம்என ஓடுசர்ப்ப
(திருக்கடவூர்)
முருகா!
சிவயோக நெறியைத்
தந்து
அடியேனை ஆட்கொண்டு
அருளுவீர்.
தானதன
தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூயவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள்
பாவ கத்தை வீழவழ லூடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி
யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில்
வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர
ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற
மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு
மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல்
வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சூலம்
என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி,
தூய ஒளி காண, முத்தி ...... விதம்ஆக,
சூழும்
இருள் பாவகத்தை வீழ, அழல் ஊடு எரித்து,
சோதிமணி பீடம் இட்ட ...... மடம் மேவி,
மேலை
வெளி ஆயிரத்து நால் இரு பரா பரத்தின்
மேவி,
அருணாசலத்தின் ...... உடன்மூழ்கி,
வேலுமயில்
வாகன ப்ரகாசம் அதிலே தரித்து,
வீடும் அதுவே சிறக்க ...... அருள்தாராய்.
ஓல
சுரர், ஆழி எட்டு வாளகிரி மாய, வெற்பும்
ஊடுருவ வேல் தொடுத்த ...... மயில்வீரா!
ஓது
குறமான் வனத்தில் மேவி, அவள் கால் பிடித்து,
உள் ஓம் என் உபதேச வித்தொடு ...... அணைவோனே!
காலனொடு
மேதி மட்க, ஊழி புவி மேல் கிடத்து
காலன் இடம் மேவு சத்தி ...... அருள்பாலா!
காலமுதல்
வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள்
கானமயில் மேல் தரித்த ...... பெருமாளே.
பதவுரை
ஓல் அசுரர் --- ஓலமிட்டு அழுகின்ற அசுரர்களும்,
ஆழி --- கடலும்,
எட்டு வாளகிரி மாய --- நெருங்கி உள்ள
சக்ரவாளகிரியும் அழியவும்,
வெற்பும் ஊடுருவ --- கிரவுஞ்ச மலை தொளை பட்டு உருவவும்
வேல் தொடுத்த --- வேலாயுதத்தை
விடுத்து அருளிய,
மயில் வீரா --- மயிலை வாகனமாக
உடையவரே!
ஓது குறமான் வனத்தில்
மேவி
--- சிறந்தவள் என்று ஆன்றோர்கள் ஓதுகின்ற குறவர் குடியில் அவதரித்த மான்போன்ற
வள்ளிநாயகி இருக்கும் வனத்தில் சென்று,
அவள் கால் பிடித்து --- அவளுடைய
பிராணவாயுவை அவமே செல்லாத வண்ணம் அடக்குமாறு செய்து
உள் ஓம் எனும் உபதேச
வித்தொடு அணைவோனே --- உள்ளுணர்வினால் மட்டுமே உணர்தற்கு உரிய "ஓம்" என்னும்
பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து தழுவுபவரே!
காலனொடு மேதி மட்க --- காலனோடு அவன்
வாகனமான எருமைக் கடாவும் வலி குன்றி,
ஊழி புவிமேல் கிடத்து --- ஊழி காலம்
வரை மண்மேல் மாண்டு கிடக்குமாறு செய்த,
காலன் இடம் மேவு
சத்தி அருள் பாலா --- காலவடிவாக உள்ள சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும்
உமையம்மையார் பெற்றருளிய திருக்குமாரரே!
காலமுதல் வாழ் புவிக்கு
அதார நகர் கோபுரத்துள் --- காலத்துக்குக் கர்த்தாவாகிய
சிவமூர்த்தி எழுந்தருளி இருப்பதும்,
பூவுலகிற்கு
ஆதாரமாக விளங்குவதும் ஆகிய திருக்கடவூரில் உள்ள திருக்கோபுரத்தின்கண்
கான மயில் மேல்
தரித்த பெருமாளே --- கானகத்தில் உலாவும் மயில்மீது ஊர்ந்த திருக்கோலத்துடன்
எழுந்தருளி இருக்கும் பெருமையின் மிக்கவரே!
சூலம் என ஓடும்
சர்ப்ப வாயுவை விடாது அடக்கி --- சூலம் போல வேகமாக ஓடுகின்றதும், பாம்பு சீறுவது போல்
சீறுகின்றதும் ஆகிய பிராணவாயுவை அதன் போக்கில் போக விடாது அசபா நலத்துடன்
அடங்குமாறு செய்து,
தூய ஒளி காண முத்தி
விதம் ஆக
--- தூய்மையான அருட்ஜோதி தரிசனம் காணவும், முத்தி நிலை
உண்டாகவும்,
சூழும் இருள் பாவகத்தை
வீழ
--- ஆன்மாவை அநாதியே சூழ்ந்துள்ள ஆணவ இருளின் சொரூபத்தில் கெடும்படி,
அழல் ஊடு எரித்து --- சிவஞானத்
தீயினால் எரித்து,
சோதி மணி பீடம் இட்ட
மடம் மேவி ---
ஒளிவீசும் நவமணிகளால் ஆகிய ஆதனம் அமைந்த பட்டி மண்டபத்தை அடைந்து,
மேலைவெளி --- அந்த மேலைப் பெரு
வெளியில் உள்ள,
ஆயிரத்து நால்இரு பராபரத்தின் மேவி --- ஆயிரத்தெட்டு இதழ்க்
கமலத்தினை உடைய துவாதசாந்தமாகிய பராபரவெளியைப் பொருந்தி,
அருணாசலத்தின் உடன் மூழ்கி --- ஒளிப்
பிழம்பாகிய சிவத்துடன் கலந்து,
வேலுமயில் வாகன
ப்ரகாசம் அதிலே தரித்து --- வேற்படையை ஒத்த வஜ்ர ஒளியையும், மயில் வாகனத்தை ஒத்த மரகத ஒளியையும்
பொருந்தி,
வீடும் அதுவே சிறக்க
அருள் தாராய்
--- முத்தி நலமும் அதுவாகவே சிறந்து விளங்கும்படி திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
ஓலமிட்டு அழுகின்ற அசுரர்களும், கடலும், நெருங்கி உள்ள சக்ரவாளகிரியும் அழியவும், கிரவுஞ்ச மலை தொளைபட்டு உருவவும் வேலாயுதத்தை விடுத்து அருளிய, மயிலை வாகனமாக உடையவரே!
சிறந்தவள் என்று ஆன்றோர்கள் ஓதுகின்ற
குறவர் குடியில் அவதரித்த மான்போன்ற வள்ளிநாயகி இருக்கும் வனத்தில் சென்று, அவளுடைய பிராணவாயுவை அவமே செல்லாத
வண்ணம் அடக்குமாறு செய்து, உள்ளுணர்வினால்
உணர்தற்கு உரிய "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து
தழுவுபவரே!
காலனோடு அவன் வாகனமான எருமைக் கடாவும் வலி
குன்றி, ஊழி காலம் வரை
மண்மேல் மாண்டு கிடக்குமாறு செய்த,
கால
வடிவினனாகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில்
உறையும் உமையம்மையார் பெற்றருளிய திருக்குமாரரே!
காலத்துக்குக் கர்த்தாவாகிய சிவமூர்த்தி
எழுந்தருளி இருப்பதும், பூவுலகிற்கு ஆதாரமாக
விளங்குவதும் ஆகிய திருக்கடவூரில் உள்ள திருக்கோபுரத்தின்கண் கானகத்தில் உலாவும்
மயில்மீது ஊர்ந்த திருக்கோலத்துடன் எழுந்தருளி இருக்கும் பெருமையின் மிக்கவரே!
சூலம் போல வேகமாக ஓடுகின்றதும், பாம்பு சீறுவது போல்
சீறுகின்றதும் ஆகிய பிராணவாயுவை அதன்
போக்கில் போக விடாது அஜபா நலத்துடன் அடங்குமாறு செய்து, தூய்மையான அருட்ஜோதி தரிசனம் காணவும், முத்தி நிலை
உண்டாகவும்,
ஆன்மாவை அநாதியே சூழ்ந்துள்ள ஆணவ இருளின் சொரூபத்தில் கெடும்படி, சிவஞானத் தீயினால் எரித்து, ஒளிவீசும் நவமணிகளால் ஆகிய ஆதனம் அமைந்த பட்டி மண்டபத்தை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியில் உள்ள, ஆயிரத்தெட்டு இதழ்க் கமலத்தினை உடைய துவாதசாந்தமாகிய பராபர வெளியைப் பொருந்தி, ஒளிப் பிழம்பாகிய சிவத்துடன் கலந்து, வேற்படையை ஒத்த வஜ்ர ஒளியையும், மயில் வாகனத்தை ஒத்த மரகத ஒளியையும் பொருந்தி, முத்தி நலமும் அதுவாகவே சிறந்து விளங்கும்படி திருவருள் புரிவீர்.
ஆன்மாவை அநாதியே சூழ்ந்துள்ள ஆணவ இருளின் சொரூபத்தில் கெடும்படி, சிவஞானத் தீயினால் எரித்து, ஒளிவீசும் நவமணிகளால் ஆகிய ஆதனம் அமைந்த பட்டி மண்டபத்தை அடைந்து, அந்த மேலைப் பெரு வெளியில் உள்ள, ஆயிரத்தெட்டு இதழ்க் கமலத்தினை உடைய துவாதசாந்தமாகிய பராபர வெளியைப் பொருந்தி, ஒளிப் பிழம்பாகிய சிவத்துடன் கலந்து, வேற்படையை ஒத்த வஜ்ர ஒளியையும், மயில் வாகனத்தை ஒத்த மரகத ஒளியையும் பொருந்தி, முத்தி நலமும் அதுவாகவே சிறந்து விளங்கும்படி திருவருள் புரிவீர்.
விரிவுரை
சூலம்
என ஓடு சர்ப்ப வாயு ---
சூலம்
மூன்று பிரிவினை உடையது. பிராணவாயு இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளின்
வழியே செல்லும் இயல்பு உடையது.
மூலம்
கிளர் ஓர்உருவாய் நடு
நால் அங்குல மேல்நடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொடு ஆடிய ......
முதல்வேர்கள்
மூணும்
பிரகாசம் அதாய் ஒரு
சூலம்பெற ஒடிய வாயுவை
மூலம் திகழ் தூண்வழியே அள ...... விட ஓடி... --- திருப்புகழ்.
வாயுவை
விடாது அடக்கி ---
பிராணவாயு
உள்ளே எட்டு அங்குலம் வந்து, வேளியே பன்னிரண்டு
அங்குலம் கழிகின்றது. அவ்வண்ணம் கழிய விடாது, அஜபா நலத்துடன் அடக்குதல் வேண்டும்.
பன்னிரு
பட்சியும் பறவா வண்ணம்
என்னுளே
நிறுத்தும் இயற்கையும் விண்டான்... --- சிற்றம்பல நாடிகள்.
ஏற்றி
இறக்கி, இருகாலும் பூரிக்கும்
காற்றைப்
பிடிக்கும் கணக்குஅறிவார் இல்லை
காற்றைப்
பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றைப்
பிடிக்கும் குறி அது ஆமே. --- திருமந்திரம்.
தூய
ஒளி காண ---
பிராணவாயுவை, இடை பிங்கலை என்ற சூரிய சந்திர
நாடிகளின் வழியே செல்லவிடாது அடக்கி, முதுகுத்
தண்டின் இடையே உள்ள சுழுமுனை என்ற நடுநாடியின் வழியே செலுத்துதல் வேண்டும். அந்த
சுழுமுனை நாடி ஆறு ஆதாரங்களின் வழியே வளைந்து பாம்பின் நடைபோல செல்லுகின்றது. அதன்
வழியே வாயுவை சிவயோக சாதனையால் செலுத்த வல்லார்க்குப் புருவ நடுவே உள்ள இரு
கதவுகள் திறக்கப்படும். அங்கே ஜோதிமலை தோன்றும்.
கையறவு
இலாதுநடுக் கண்புருவப் பூட்டு,
கண்டுகளி கொண்டு திறந்து உண்டுநடு நாட்டு,
ஐயர்மிக
உய்யும்வகை அப்பர் விளையாட்டு,
ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு.
சிற்சபையும்
பொற்சபையும் சொந்தம் எனது ஆச்சு,
தேவர்களும்
மூவர்களும் பேசுவது என் பேச்சு?
இல்சயம
வாழ்வில்எனக்கு என்னைஇனி ஏச்சு?
என்பிறப்புத் துன்பம் எலாம் இன்றோடே
போச்சு.
ஐயர்அருட்
சோதி அரசாட்சி எனது ஆச்சு,
ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு?
எய்
உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு?
என்பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.
ஈசன்
அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம்,
ஏறிக்கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம்,
தேசு
உறும் அம் மாடநடுத் தெய்வமணி பீடம்,
தீபஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம்.
துரியமலை
மேல்உளதோர் சோதிவள நாடு,
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு,
தெரியும்அது
கண்டவர்கள் காணில், உயிரோடு
செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு.
சொல்லால்
அளப்பு அரிய சோதிவரை மீது,
தூய துரியப் பதியில் நேயமறை ஓது,
எல்லாம்செய்
வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார் எழுவார்என்று புறம் தாரை ஊது.
சிற்பொதுவும்
பொற்பொதுவும் நான்அறியல் ஆச்சு,
சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என்
பேச்சு?
இல்பகரும்
இவ்வுலகில் என்னை இனி ஏச்சு?
என்பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.
ஜோதிமலை
ஒன்று தோன்றிற்று, அதில்ஒரு
வீதி
உண்டாச்சுதடி அம்மா
வீதி
உண்டாச்சுதடி. --- திருவருட்பா.
காவிரி
கொள்ளிடம் என்ற இரண்டு ஆற்றின் இடையில் ஆதிசேடன் மீது பிரணவ வடிவாகிய
திருக்கோயிலில் திருமால் பள்ளிகொண்டு இருக்கின்றனர் என்பதன் தத்துவமும் இதுவே
என்று ஓர்க.
காவிரி
கொள்ளிடம் என்ற இருநதிகள் பிங்கலை இடை என்ற இரு நாடிகளாகும். ஆதிசேடன் என்ற
வெள்ளைப் பாம்பு சுழுமுனை என்ற வெள்ளை நரம்பு ஆகும். வளைந்து செல்லும் அந்த
நாடியின்மீது பிரணவாகாரமாகப் பெருமான் சிவயோக நித்திரையில் அமர்ந்து இருக்கின்றனர்
திருமால் என்று நுனித்து உணர்க.
சூழும்
இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து ---
அயாதியாக
உள்ள பொருள்கள் ஆறு. அவை ஒன்றாகிய இறைவன், பல ஆகிய உயிர்கள், ஆணவமலம், கன்ம மலம், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும்
இரண்டு மாயைகள்,
"ஏகன்
அனேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக
இவை ஆறு ஆதி இல்".
என்பது
திருவருட்பயன் என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவது.
இதன்
சொற்பொருள்
:
ஏகன்
- ஒருவனாகிய இறைவனும்
அனேகன்
- பலவாகிய உயிரும்
இருள்
- ஆணவமும்
கருமம்
- கன்மமும்
மாயை
இரண்டு - சுத்த மாயை, அசுத்த மாயை என்னும்
இரு மாயையும்
ஆக
இவை ஆறு - ஆகிய இந்த ஆறு பொருள்கள்
ஆதி
இல் - தோற்றம் இல்லாதன.
இவைகளின்
விளக்கம் :
இந்த
ஆறு பொருள்கள் தோன்றியன அல்ல என்று கூறவே, அவை அழிவன அல்ல என்பதும் பெறப்படும். தோற்றமும்
அழிவும் இல்லாதவை. ஆதலின் அவை என்றும் உள்ள பொருள்கள் என்று கொள்ளப்படும். தோற்றம்
இல்லாதவற்றை அநாதி என்ற சொல்லால் குறிப்பர் பெரியோர். எனவே இந்த ஆறும் அநாதி
நித்தப் பொருள்கள் எனப்படும். சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையைக்
கொள்ளும்.
அம்
மூன்றினையே இங்கு ஆறாக விரித்துக் கூறியுள்ளார். பதியை ஏகன் எனவும், பசுவை அனேகன் எனவும் குறிப்பிட்டவர்
பாசத்தை இருள் கருமம் மாயை இரண்டு என அமைத்துக் கொண்டுள்ளார். பாசத்தை ஆணவம் கன்மம்
மாயை என மூன்றாகக் கூறுவதே வழக்கு. இங்கு மாயையை இரண்டாக வைத்து, பாசத்தை நான்காகக் கூறியுள்ளதைக்
காணலாம்.
மாயை
இரண்டு :
மாயை
இரண்டு எனக் கூறியது பற்றி, சுத்த மாயையும்
அசுத்த மாயையும் வேறு வேறான இரு தனிப்பொருள்கள் என்று கொள்வாரும் உளர். அவ்வாறு
கொள்வது பொருந்தாது. ஏனெனில், சடமாயும் பலவாயும்
இருப்பன எல்லாம் தோன்றி அழிவு எய்தும். ஆடை சடமாய் இருப்பது. அது பருத்தியாடை, பட்டாடை, தோலாடை எனப் பல வகையாய் உள்ளது. குடம்
சடமாய் இருப்பதோடு மண்குடம், பொன்குடம், செப்புக்குடம் எனப் பலவகைப் படுவதாயும்
உள்ளது. இவ்வாறு சடமாயும் பலவாயும் இருப்பதனாலே ஆடை, குடம் முதலியவை தோன்றி அழியக் கூடிய
காரியப் பொருள்கள் என்பது விளங்கும். இவை போலச் சுத்தமாயையும், அசுத்த மாயையும் ஆகிய இரண்டும் சடமாய்
இருப்பவை. அவை தனித்தனிப் பொருள்கள் எனக் கொண்டால் பல எனப்பட்டு, பலவாயும் சடமாயும் இருப்பதனால் அவை
தோன்றி அழிவெய்தும் என்று கூறும்படி ஆகும். இது, மாயை இரண்டு உள்ளிட்ட ஆறும் நிலையான
பொருள்கள் என்று ஆசிரியர் கூறியதற்கு மாறாகும். மாயை இரண்டு என்று கூறினாலும், அது பொருளால் இரண்டு என்பது கருத்து அல்ல.
இரண்டு என்று கருதியிருப்பாரானால்,
தமது
மற்றொரு நூலான சிவப்பிரகாசத்திலும் அவ்வாறே கூறியிருப்பார். அங்ஙனம் கூறாமல், "பகர் மாயை ஒன்று; படர் கன்மம் ஒன்று"
என்றே
தெளிவாகக் கூறியுள்ளார். இதனால் மாயை ஒன்று என்பதே அவர்தம் கருத்தாதல் விளங்கும்.
அவ்வாறாயின், திருவருட்பயனில் மாயை
இரண்டு எனக் கூறியது எக் காரணம் பற்றி என வினா எழலாம். இதற்கு விடை காண்போம். மாயை
ஒன்றே தன்னில் சுத்தப் பகுதியும்,
அசுத்தப்
பகுதியும் என இரு பகுதியாய் நிற்கும். ஆணவ மலத்தோடு கலவாதது சுத்தப்பகுதி. ஆணவ
மலத்தோடு கலந்தது அசுத்தப்பகுதி. குன்றிமணி ஒன்றே ஒரு பகுதி செம்மையாகவும், மற்றொரு பகுதி கரியதாயும் காணப்படுவது
போல மாயை ஒன்றே இவ்வாறு இரு பகுதியாய் நின்று செயற்படும். மாயை உயிர்களுக்குத் தனு
கரண புவன போகங்களைத் தோற்றுவித்து உதவும் என்பது நாம் அறிந்தது.
சுத்த
மாயையும் அசுத்த மாயையும் ஆகிய இவ்விரு பகுதியும் வெவ்வேறு முறையில்
இக்காரியங்களைத் தோற்றுவிக்கும்.
சுத்த
மாயை விருத்தி அடைந்து காரியங்களைத் தோற்றுவிக்கும், அசுத்தமாயை பரிணாமம் அடைந்து காரியங்களை
உண்டாக்கும். சிறியதாய் நின்றது பெரியதாய் விரிவதே விருத்தியாகும். மடக்கி
வைக்கப்பட்டிருந்த துணியை விரித்துக் கூடாரமாக அமைப்பர். இவ்வாறு விரிவடைவது
விருத்தி எனப்படும். இங்ஙனம் விருத்திப்படுவது சுத்தமாயை.
இனி, ஒரு பொருள் மற்றொரு பொருளாய்த் திரிந்து
வேறுபடுவது பரிணாமமாகும். பால் தயிராதல் இதற்கு எடுத்துக்காட்டு. இவ்வாறு பரிணாமம்
அடைவது அசுத்தமாயை. இங்ஙனம் மாயை சுத்தப் பகுதியும் அசுத்தப் பகுதியம் என இரு
பகுதியாய் நின்று, முன்னது
விருத்தியாயும், பின்னது பரிணாமமாயும்
இரு தன்மைப்பட்ட காரியங்களைத் தோற்றுவித்து உதவுகிறது. இவ்வேறுபாடு கருதியே
ஆசிரியர் உமாபதி சிவம் இங்கு மாயையை இரண்டாக வைத்து ஓதினார் என்பது அறியத்தகும்.
கருமம்
:
மனம்
மொழி மெய்களினால் விருப்பு வெறுப்போடு செய்யும் முயற்சிகளே வினை அல்லது கன்மம்
ஆகின்றன. இவ்வினைகள் நல்வினை, தீவினை என இரு
வகையாய் அமைந்து, யாவருக்கும்
புலப்படுவனவாய் உள்ளன. இவ்விரு வகை வினைகளும் ஆகாமியம் என்ற பெயரைப் பெறும்.
புலப்படுவனவாய் இருத்தலால் தூல கன்மம் எனப்படும். இவ்வாறு நல்லதும் தீயதுமாய்ச்
செய்யப்படும் வினைகள் அச்செயல் முடிந்தபின் புலப்படும் நிலையின் நீங்கிப்
புலப்படாத நிலையை அடைந்து நிற்கும். அந்நிலையில் அவை புண்ணியம், பாவம் எனப்படும். இவ்விரண்டும் சஞ்சிதம்
என்ற பெயரைப் பெறும். புலப்படாமல் சஞ்சிதமாய் நிற்கும் வினைகள் தம் பயனைக்
கொடுத்தற்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய பயன்களைத் தம்மைச் செய்த
ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். இவ்வாறு காலத்தில் வந்து பயனைக் கொடுத்து நீங்கும்
வினைகள் பிராரத்தம் என்ற பெயரைப் பெறும். இதனால், வினைக்கு மூன்று நிலைகள் உண்டு என்பது
விளங்கும். தோற்ற நிலையில் அது ஆகாமியமாய் நிகழும். நிலை பேற்று நிலையில் அது
சஞ்சிதமாய் நிற்கும். பின் அழிவு நிலையில் பிராரத்தமாய்க் கழியும் என அறியலாம்.
இங்கு மாணவர்க்கு ஓர் ஐயம் எழலாம். வினைதோன்றி நின்று அழியும் என்று கூறுவது, இச்செய்யுளில் கன்மம் பற்றிக் கூறிய
கருத்திற்கு மாறாக அல்லவா உள்ளது. தோற்றம் என்பது இல்லாத, என்றும் உள்ள பொருள்களில் ஒன்றாக
கன்மத்தை ஆசிரியர் கூறியிருக்கும்போது அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்று
கூறுவது எப்படிப் பொருந்தும் எனக் கேட்கலாம். இதற்கு விடை கூறுவோம்.
கன்மத்திற்கு
இரு நிலைகள் உண்டு. ஒன்று காரண நிலை. மற்றொன்று காரியநிலை.
கன்மம் தனித்து நில்லாது. அது மாயையாகிய பொருளைப் பற்றியே நிற்கும். எனவே
கன்மத்திற்குப் பற்றுக்கோடு மாயை என அறியலாம். மாயையிடத்தில் கன்மம், நிகழ்ச்சியின்றி இருந்தபடி இருக்கும்
நிலையே அதன் காரண நிலையாகும். இந்நிலையில் அது மூல கன்மம் எனப்படும். இனி உயிர்கள்
மாயையின் காரியங்களாகிய தனு, கரண, புவன, போகங்களைப் பெற்ற காலத்தில் அம்மாயா
காரியங்களின் வழியே மூலகன்மம் ஆகாமிய, சஞ்சித, பிராரத்தங்களாய்க் காரியப்படும். மனம், மொழி, மெய் முதலியனவெல்லாம் மாயையின்
காரியங்களே. அவற்றின் வழியாக வினைகள் தோன்றி நிலை பெறுவதையும் பின் அழிவு அடையும்.
இதுவே கன்மத்தின் காரிய நிலையாகும். இதனால் காரண நிலையில் செயலின்றி உள்ளது மூல
கன்மம் என்பதும். செயல் நிலையில் உள்ளது காரிய கன்மம் என்பதும் விளங்கும்.
இவற்றுள், காரிய கன்மமே
உயிர்களைப் பிணித்து நின்று மயக்குவது எனவும், மூலகன்மம் அவ்வாறு ஆகாது எனவும் அறிதல்
வேண்டும். மேலும், காரிய கன்மத்திற்கே
தோற்ற அழிவுகள் உண்டு என்பதும் மூலகன்மம் அவ்வாறின்றி அநாதியாய் நிற்பது என்பதும்
அறியத்தகும். மூலகன்மம், காரிய கன்மங்களைப்
பின்வருமாறு வேறுபடுத்தி அமைத்துக் காணலாம்.
மூலகன்மம் தோற்றம் இல்லது.
காரியகன்மம் தோன்றி அழிவது.
மூலகன்மம் நன்மை தீமை என்ற
பாகுபாடு இல்லாதது. காரியகன்மம் நல்வினை, தீவினை என்ற பாகுபாடு உடையது.
மூலகன்மம் உயிர்களுக்கு நேரே
பந்தம் ஆகாது.
காரியகன்மம் உயிர்களுக்கு நேரே
பந்தம் ஆவது.
உயிருக்கு
அநாதியே இயல்பாக உள்ள ஆணவமலத்தை அகற்றுதல் பொருட்டே இடையில் கன்மமலம், மாயா மலம் என்ற இரண்டும் ஆகந்துகமாகச்
சேர்ந்தன.
செம்பில்
களிம்பு போலும், அரிசிக்குத் தவிடு போலும், ஆன்மாவுக்கு ஆணவமல இருள் இயல்பாக
உண்டென்று அறிக. உலக்கையினால் அரிசியில்
உள்ள தவிட்டை நீக்குவது போலும்,
பரிசவேதியினால்
தாம்பிரத்தில் உள்ள களிம்பை நீக்கித் தங்கமாக்குவது போலும், சிவஞானத்தால் ஆணவமலத்தை அகற்றுதல்
வேண்டும் என்று அறிக.
கருமருவு
குகையனைய காயத்தின் நடுவுள்
களிம்புதோய் செம்பு அனைய யான்
காண்தக இருக்க, நீ ஞானஅனல் மூட்டியே
கனிவுபெற உள் உருக்கிப்
பருவம்
அது அறிந்து, நின் அருளான
குளிகைகொடு
பரிசித்து வேதிசெய்து,
பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட
பட்சத்தை என்சொல்லுகேன்... ---
தாயுமானார்.
செம்புக்குள்ளே
களிம்புபோல் ஆணவமலமும்,
செம்பில்
நாற்றம்போல் கன்மமலமும்,
செம்பில்
செம்மை நிறம்போல் மாயாமலமும் பொருந்தி நிற்கும்.
செம்பு
எனும் சீவற்குஉள்ள திரிமல விவரம் கூறில்,
செம்பினில்
காளிமம்போல் ஆணவம் செறிந்து நிற்கும்,
செம்பினில்
நாற்றம்போலச் செனிக்கிற கன்மம் நிற்கும்,
செம்பினில்
செம்மை போல்மா யாமலம் சிறந்துநிற்கும்.
---
பாம்பன்
சுவாமிகள்.
இருள்
புறப்பொருளைக் காட்டாது நிற்கும். ஆனால், தன்னைக்
காட்டி நிற்கும். அதனினும் பன்மடங்கு வலியுடைய ஆணவ இருள் பிறபொருள்களைக் காட்டாது
மறைப்பதுடன், தன்னையும் காட்டாது
நிற்கும்.
சோதிமணி
பீடம் இட்ட மடம் மேவி ---
மிகுந்த
ஒளியுடன் கூடிய இரத்தினமணி மயமான தவிசு (இருக்கை) உள்ள பட்டி மண்டபத்தை அடைந்து, சிவயோக சாதனையால் இளைப்புற்ற ஆன்மா
இளைப்பாறும். அது பிரமரந்திரம் கடந்த பின்
தோன்றுவது.
கட்டு
அறுத்து, எனை ஆண்டு, கண்ஆர நீறு
இட்ட
அன்பரொடு யாவரும் காணவே
பட்டி
மண்டபம் ஏற்றினை, ஏற்றினை
எட்டினோடு
இரண்டும் அறியேனையே. --- மணிவாசகம்.
கற்பகந்
தெருவில் வீதிகொண்டு சுடர்
பட்டிமண்டபமொடு
ஆடி.... --- (கட்டிமுண்டக) திருப்புகழ்.
மேலை
வெளி ஆயிரத்து நால்இரு பராபரத்தின் மேவி ---
பிரமரந்திரம்
கடந்து பட்டிமண்டபத்தினின்றும் கடந்த பின், ஆயிரத்தெட்டு இதழ்க் கமலத்துடன் கூடிய
மேலைப் பெருவெளியை அடைதல் வேண்டும். அங்கே ஐயனுடைய அருட்பெருஞ்சோதி தரிசனம்
உண்டாகும்.
இலங்கும்
ஆயிரத்துஎட்டு இதழ்த் தாமரைபோல்
துலங்கிடு
நடன சோதியும் காட்டி... --- சிற்றம்பல
நாடிகள்.
அருணாசலத்தினுடன்
மூழ்கி ---
அருணாசலம்
- சிவஒளிப் பழம்பு. மேலைப் பெருவெளியில் விளங்கும் சிவஜோதியுடன் இரண்டறக் கலந்து
நிற்றல்.
மூலபர
யோக மேல்கொண்டிடா நின்றது உளதாகி
நாளும்
அதிவேக கால்கொண்டு தீமண்ட
வாசி அனல் ஊடு போய் ஒன்றி வானின்கண்
நாம மதி மீதில் ஊறும் கலாஇன்ப..... அமுதூறல்
நாடி, அதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி ஏறி, நீயனறி நான்இன்றி
நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ஒருநாளே
…
---
(மூளும்வினை)
திருப்புகழ்.
பூதமும்
கரணம் பொறிகள் ஐம்புலனும்
பொருந்திய
குணங்கள் ஓர் மூன்றும்
நாதமும்
கடந்த வெளியே நீயும்
நானுமாய்
நிற்கும்நாள் உளதோ... --- பட்டினத்தார்.
வேலுமயில்
வாகன ப்ரகாசம் அதிலே தரித்து ---
வேலின்
ஒளி - மஜ்ரமணியின் ஒளி. அது சிவஒளி ஆகும்.
மயிலின் ஒளி - மரகதமணியின் ஒளி. அது சத்தியின் ஒளி ஆகும். ஆன்மா
சிவசத்தியைச் சார்ந்தவுடன் தன் வண்ணம் தவிர்ந்து, சிவசத்தி வண்ணமாகும்.
பொன்வண்ணம்
எவ்வண்ணம்
அவ்வண்ணம் மேனிபொலிந்து இலங்கும்,
மின்வண்ணம்
எவ்வண்ணம்
அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம்
எவ்வண்ணம்
அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கண்ட
என்வண்ணம்
எவ்வண்ணம்
அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. --- பொன்வண்ணத்து அந்தாதி.
வீடும்
அதுவே சிறக்க அருள்வாயே ---
வீடு
- விடு என்ற முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
பந்தத்தினின்றும்
விடுபடுவதே வீடு ஆகும். அதனைச் சிவயோக சாதனை மூலம் பெறவேண்டும் என்று அடிகள் தன்
குருமூர்த்தியாகிய குமரவேளிடம் வேண்டுகின்றனர்.
ஓல
சுரர்
---
துன்பம்
மிகுந்த போது 'ஓ' என்று ஒலம் இடுவது இயல்பு. அரக்கர்
ஓலமிட்டு மாய, வேதநாயகன் வேற்படையை
விடுத்தனர்.
ஓது
குற மான் ---
ஓதுதல்
- ஆன்றோர்கள் புகழ்ந்து உரைத்தல்.
வேதமுதல்
விண்ணோரும் மண்ணோரும் துதித்தாலும்
ஓதஉலவா
ஒருதோழன் தொண்டர்உளன்.
என்ற
மணிவாசகத்தால், ஓத என்ற சொல், புகழ்தல் என்ற பொருளில் வருதல் காண்க.
குறவர்
மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல்
வள்ளி.... --- நக்கீரர்.
நம்செந்தில்
மேய வள்ளி மணாளனுக்கு... --- அப்பமூர்த்திகள்.
ஏடார்
குழல்சொருபி, ஞானாதனத்தி, மிகும்
ஏராள்
குறத்தி... --- நாடாபிறப்பு திருப்புகழ்.
அவள்
கால் பிடித்து ---
கால்
என்ற சொல் இங்கே, பிராணவாயுவைக்
குறிக்கின்றது. பாதத்தைக் குறிக்காது. வள்ளியம்மையாருக்கு
ஞான பண்டிதன் உபதேசிக்கின்ற இடம் ஆதலின் என்க. உபதேசிக்கின்ற போது, வள்ளியம்மையின் பிராணவாயு அடங்குமாறு
செய்தனன் என்பது அதன் கருத்து.
மூலாதாரத்தின்
மூண்டுஎழு கனலைக்
காலால்
எழுப்பும் கருத்து அறிவித்து.. ---
ஔவையார்.
கால்பிடித்து
மூலக்கனலை மதிமண்டலத்தின்
மேலெழுப்பின்
தேகம் விழுமோ பராபரமே. --- தாயுமானார்.
காற்றைப்
பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றைப்
பிடிக்கும் குறி அது ஆமே. --- திருமந்திரம்.
பாகு
கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா! --- சுவாமிமலைத்
திருப்புகழ்.
தச்சா
மயில் சேவல் ஆக்கிப் பிளந்த
சித்தா! "குறப்பாவை தாட்குள் படிந்து,
சக்காகி அப் பேடையாட்குப் புகுந்து ......
மணமாகி",
தப்பாமல்
இப் பூர்வ மேற்கு உத்தரங்கள்
தெற்கு ஆகும் இப்பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த
...... பெருமாளே.
--- தச்சூர் திருப்புகழ்.
கனத்த
மருப்பு இனக் கரி, நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக்
குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ......
பெருமாளே.
--- பொதுத்
திருப்புகழ்.
ஓம்
எனும் உபதேச வித்தொடு அணைவோனே ---
வள்ளநாயகிக்கு
முருகவேள் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளினர்.
காலனொடு
மேதி மட்க........ காலன் ---
காலன்
- இயமன்.
காலன்
- காலனுக்கும் காலனான சிவபெருமான்.
மார்க்கண்டேயருக்காக
மறலியை உதைத்த சிவபெருமான்.
அநாமயம்
என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ
முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு
சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம்
வருந்தி, காசித் திருத்தலத்தை
அடைந்து, மணிகர்ணிகையில்
நீராடி, விசுவேசரை நோக்கி
ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.
வேண்டுவார்
வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றனர்.
முனிவர்
பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டும் என்றனர்.
அதுகேட்ட
ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து,
“தீங்குறு குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு
வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது
சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும்
எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர்.
"தீங்கு
உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும்
வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய
ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு
ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",
"கோலமெய்
வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல்
உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம்
எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல
பாலனைத்
தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான். ---
கந்த புரைணம்.
முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்”
என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.
மாண்
தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு
அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி,
யாக்கைக்கு
ஈண்டு
ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது
ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான். ---
கந்த புராணம்.
ஆதியும்
அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும
பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து
மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர்.
பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாதாண்டில் சகல கலையும்
கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு
உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது
தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக்
கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள்
வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும்
எய்துமோ? சிவபெருமான் உனக்குத்
தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென
எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.
மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு
மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சன்மின்” என்று
கூறி விடைபெற்று, காசி க்ஷேத்திரத்தில்
மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி
வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவமியற்றும்
மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள்
செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல்
வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும்
ஆகிய
மெய்யனே!
பரமனே! விமலனே! அழல்
கையனே!
கையனேன் காலன் கைஉறாது
உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’ --- கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா!
காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்!
அஞ்சேல், அந்தகனுக்கு நீ
அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர்
காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து
சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக்
கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத
ஈசனோ?” என்று தனது கணக்கராம்
சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர்
“இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர்
உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய
சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று
கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து
வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின்
தகைமையையும் புலனாகுமாறு தோன்றி,
முனிகுமாரரை
வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர்
பார்த்துளன்; உம்மை எதிர்கொண்டு
வணங்கி இந்திர பதவி நல்குவன்; வருவீர்” என்றனன்.
அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை
விரும்பார்.”
“நாதனார் தமது அடியவர்க்கு
அடியவன் நானும்,
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்
போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”
அது
கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம்
நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார்
உறைவிடம்ஏகி, ஊழிகாலத்து எழும்
கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன்
தோன்றினன்.
அந்தகனைக்
கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த
வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து
உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்;
எனது
ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு
இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர்
ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.
மார்க்கண்டேயர்
“அந்தக! அரன் அடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு
முடிவில்லை; முடிவு நேர்கினும்
சிவபதம் அடைவரே அன்றி நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக்
கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய
அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார்
குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும்
முடிவு போலும்.
“தீது ஆகின்ற வாசகம் என்தன்
செவிகேட்க
ஓதா
நின்றாய்,மேல் வரும் ஊற்றம்
உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய்
போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். --- கந்தபுராணம்
“இவ்விடம் விட்டு
விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள்
சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர்
சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி
ஈர்த்திடலுற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு
“குழந்தாய் ! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க
உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன்
பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா
ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி
அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார
மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.
மதத்தான்
மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான்
என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்
சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது
உந்தி
உதைத்தான், கூற்றன் விண் முகில் போல்
மண் உறவீழ்ந்தான். --- கந்தபுராணம்
நலமலி
தருமறை மொழியொடு
நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,
மலர்அவை
கொடுவழி படுதிறல்
மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி
தரு மறலி தன்உயிர்
கெட உதை செய்தவன் உறைபதி
திலகம்
இது என உலகுகள் புகழ்
தருபொழில் அணிதிரு மிழலையே. --- திருஞானசம்பந்தர்.
நன்றுநகு
நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு
ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றிவரு
காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று
அளித்தான்
கொன்றைமலர்
பொன்திகழும் கோளிலி எம் பெருமானே. --- திருஞானசம்பந்தர்.
நீற்றினை
நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர்
பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,
சாற்றுநாள்
அற்றது என்று, தருமராசற்காய் வந்த
கூற்றினைக்
குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே. ---
அப்பர்.
மருள்துயர்
தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்
இருட்டிய
மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்
சுருட்டிய
நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து,
உங்ஙனே
உருட்டிய
சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.
அந்தணாளன்உன்
அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்தகாலன்
தன்ஆருயிர் அதனை
வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்
எந்தை!நீ
எனை நமன் தமர் நலியில்
இவன்
மற்றுஎன் அடியான் என விலக்கும்
சிந்தையால்
வந்து, உன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.
தூமொழி
நகைத்துக் கூற்றை மாளிட
உதைத்துக்கோத்த தோள்உடை
என்அப்பர்க்கு ஏற்றி திரிவோனே ----(வார்குழல்)
திருப்புகழ்
காலமுதல் ---
காலம்
என்ற ஒன்றுக்கு எல்லா உயிர்களும்,
எல்லா
தேவர்களும், மூவர்களும் அடங்கியவர்களே.
சிவமூர்த்தி ஒருவரே காலத்திற்குக் கட்டுப்படாமல் கடந்து விளங்குபவர்.
காலமூன்றும்
கடந்து ஒளிரா நின்ற
சீலமே!
நின் திருவருளால் இந்த்ர
சாலமாம்
இச்சுகம் என எண்ணிநின்
கோலம்
நாடுதல் என்று கொடியனே.
கருத்துரை
முருகா!
சிவயோக நெறியைத் தந்து அடியேனை ஆட்கொண்டு அருளுவீர்.
No comments:
Post a Comment