அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அனல்அப்பு அரி
(திருவிடைக்கழி)
முருகா!
அடியேனது பெண்மயலை அகற்றி
அருள்வாய்.
தனனத்
தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அனலப்
பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா
அவலக்
கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் ...... றறியாதே
குனகித்
தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் ...... கொடியார்தங்
கொடுமைக்
கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் ...... கடவேனோ
தினைவித்
தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் ...... புயவீரா
தெளியத்
தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே
கனகச்
சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா
கழியைக்
கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அனல்
அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து,
அடர் பொய்க் குருதிக் ...... குடில்பேணா,
அவல, கவலை, சவலைக் கலைகற்று
அதனில் பொருள் சற்று ...... அறியாதே,
குனகித்
தனகிக் கனல் ஒத்து உருகிக்
குலவிக் கலவிக் ...... கொடியார் தம்
கொடுமைக்
கடுமைக் குவளைக் கடையில்
குலைபட்டு அலையக் ...... கடவேனோ?
தினை
வித்தின நல் புனம் உற்ற குறத்
திருவைப் புணர் பொன் ...... புயவீரா!
தெளியத்
தெளியப் பவளச் சடிலச்
சிவனுக்கு ஒருசொல் ...... பகர்வோனே!
கனகச்
சிகரக் குலவெற்பு உருவக்
கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா!
கழியைக்
கிழியக் கயல்தத்தும் இடைக்
கழியில் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
தினை வித்தின நல்
புனம் உற்ற
--- தினை விதைக்கப்பட்ட நல்ல கொல்லையில் காவல் காத்து இருந்த,
குறத் திருவைப் புணர் பொற் புய வீரா ---
குறவர் குலப் பெண் ஆகிய வள்ளிநாயகியை அணைந்த அழகிய திருத்தோள்களை உடைய வீரரே!
தெளியத் தெளியப்
பவளச் சடிலச் சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே --- தெளிவாகத்
தெரிந்துகொள்ளும்படி, செந்நிறமான
திருச்சடையை உடைய சிவபெருமானுக்கு ஒப்பற்ற மூலமந்திரத்தின் பொருளை உபதேசித்தவரே!
கனகச் சிகரக் குல
வெற்பு உருவ
--- பொன்மயமான சிகரங்களை உடைய கிரவுஞ்ச மலையை ஊடுருவுமாறு,
கறுவிப் பொரு கைக் கதிர் வேலா --- சினந்து
போர் புரிந்த வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்தியவரே!
கழியைக் கிழியக் கயல்
தத்தும் இடைக்கழியில் குமர --- கடலை அடுத்த உவர்நீர்ப் பரப்பு
கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!
அனல் அப்பு அரி புக்க --- நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்சபூதங்களின்
சேர்க்கையால் ஆனதும்,
குண த்ரயம் வைத்து --- சத்துவம், ரசதம், தாமதம் என்னும் முக்குணங்கள் பொருந்தியதும்,
அடர் பொய் --- பொய் நிரம்பியதும்,
குருதிக் குடில் பேணா --- குருதி
நிறைந்ததும் ஆன குடிசையாகிய இந்த உடலை விரும்பி,
அவலக் கவலைச் சவலைக்
கலை கற்று
--- பயனற்றதும், கவலைக்கு இடமானதும், மனக் குழப்பம் விளைவிப்பதும் ஆன பல
நூல்களைக் கற்று,
அதனில் பொருள் சற்று
அறியாதே
--- அந்நூல்களின் உண்மைப் பொருளைச் சிறிதும் அறியாமல்,
குனகி --- கொஞ்சிப் பேசி,
தனகி --- மனம் மகிழச் செய்து,
கனல் ஒத்து உருகி --- நெருப்பில் பட்ட
மெழுகு என உள்ளம் உருகி,
குலவி --- நெருங்கி உறவாடி,
கலவி --- கலவித் தொழில் புரிகின்ற,
கொடியார் தம் --- கொடியவர்களாகிய
விலைமாதர்களின்,
கொடுமை --- கொடுமை நிறைந்ததும்,
கடுமை --- வன்மை மிக்கதும் ஆகிய,
குவளைக் கடையில் குலைபட்டு --- குவளை மலர் போன்ற கண்களின் ஓரப் பார்வையில்
எனது நிலைகெட்டு
அலையக் கடவேனோ --- நான் துன்பப்
படுவேனோ?
பொழிப்புரை
தினை விதைக்கப்பட்ட நல்ல கொல்லையில்
காவல் காத்து இருந்த,
குறவர்
குலப் பெண் ஆகிய வள்ளிநாயகியை அணைந்த அழகிய திருத்தோள்களை உடைய வீரரே!
தெளிவாகத் தெரிந்துகொள்ளும்படி, செந்நிறமான திருச்சடையை உடைய
சிவபெருமானுக்கு ஒப்பற்ற மூலமந்திரத்தின் பொருளை உபதேசித்தவரே!
பொன்மயமான சிகரங்களை உடைய கிரவுஞ்ச
மலையை ஊடுருவுமாறு, சினந்து போர்
புரிந்த வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்தியவரே!
கடலை அடுத்த உவர்நீர்ப் பரப்பு
கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும் திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!
பெருமையில் மிக்கவரே!
நெருப்பு, நீர், காற்று முதலிய பஞ்சபூதங்களின்
சேர்க்கையால் ஆனதும், சத்துவம், ரசதம், தாமதம் என்னும் முக்குணங்கள் பொருந்தியதும், பொய் நிரம்பியதும், குருதி நிறைந்ததும் ஆன குடிசையாகிய இந்த
உடலை விரும்பி, பயனற்றதும், கவலைக்கு இடமானதும், மனக் குழப்பம் விளைவிப்பதும் ஆன பல
நூல்களைக் கற்று, அந்நூல்களின் உண்மைப் பொருளைச்
சிறிதும் அறியாமல், கொஞ்சிப் பேசி, மனம் மகிழச் செய்து, நெருப்பில் பட்ட மெழுகு என உள்ளம் உருகி, நெருங்கி உறவாடி, கலவித் தொழில் புரிகின்ற, கொடியவர்களாகிய விலைமாதர்களின், கொடுமை
நிறைந்ததும், வன்மை மிக்கதும் ஆகிய, குவளை மலர் போன்ற கண்களின் ஓரப் பார்வையில்
எனது நிலைகெட்டு நான் துன்பப் படுவேனோ?
விரிவுரை
அனல்
அப்பு அரி புக்க ---
அனல்
--- நெருப்பு,
அப்பு
--- நீர்,
அரி
--- காற்று.
பஞ்சபூதங்களில்
அடங்கிய நெருப்பு, தண்ணீர், காற்று என்ற
மூன்றையும் அடிகளார் இங்குக் குறித்தமையால், உபலக்கணமாக, வானம், மண்
ஆகியவற்றையும் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும்.
பஞ்சபூதங்களின்
சேர்க்கையால் ஆனது இந்த உடம்பு.
ஓசை என்னும் சத்தம், ஊறு என்னும் பரிசம், ஒளி என்னும் ரூபம், இரசம் என்னும் சுவை, மணம் என்னும் கந்தம் ஆகியவை தன்மாத்திரைகள். இவற்றை வடமொழியில் சத்த, பரிச, ரூப, ரச, கந்தம் என்றும், தமிழில் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்றும் சொல்லுவர். திருவள்ளுவ நாயனார், இந்த வரிசை முறையை மாற்றி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றார். அதிரும் ஒர் உண்மை உள்ளது.
ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு
பரிணமித்த பொழுது இந்த ஓசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின்
குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி
முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும்
குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும்
அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும்.
தன்மாத்திரைகள், பூதங்களும்
முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள்
எனப்படும்.
தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள்
ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும்.
பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும்.
ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.
தோன்றிய முறையிலேயே அவை ஓடுங்கும் என்பதைப் பின்வரும் தேவாரப் பாடலால்
அறியலாம்.
இருநிலன் அது புனல் இடை மடி
தர, எரி
புக, எரி
அதுமிகு
பெருவெளியினில் அவி தர, வளி
கெட, வியன்
இடை முழுவதுகெட,
இருவர்கள் உடல்பொறை யொடுதிரி
எழில்உரு உடையவன், இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
மறைவனம் அமர்தரு பரமனே. ---
திருஞானசம்பந்தர்.
காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத்
தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ, அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும்.
இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும். ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும். சுவை நீரின் குணமாய் நிற்கும். நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய
மற்றொரு செய்தி உண்டு.
அதாவது, சத்த
தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும்.
பரிச தன்மாத்திரை சத்தமும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும்.
உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய்
நிற்கும்.
இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம்
ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும்.
கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய்
நிற்கும்.
காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து
ஆகிய குணங்களை உடையனவாய் இருக்கும்.
அதாவது, ஆகாயம்
ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும்.
காற்று, ஓசை
ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும்.
நெருப்பு ஓசை, ஊறு
ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும்.
நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும்.
நிலம், ஓசை
ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும்.
இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம்
எனவும், ஏனையவை
பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.
மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்குஎரியில் மூன்றைமா ருதத்துஇ ரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிக திரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்
எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
மின்உருவை விண்அகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்அகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்உருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத்து அஞ்சுஆகி எஞ்சாத் தஞ்ச
மன்உருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளர்ஒளியை வயிரத்தை மாசுஒன்று இல்லாப்
பொன்உருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
என வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்களில் ஐம்பூதங்களின் குணங்கள்
கூறப்பட்டுள்ளமை காணலாம்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி --- திருவாசகம்.
பூதங்கள் இக்குணங்களையே அன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு தொழிலையும் உடையது. பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும்
உலகமும், உலகத்திற்
காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப்
பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி
அகங்காரம். அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும்.
இந்த பூதங்களால் ஆனதுதான் உயிர்களின் உடல் ஆகும்.
ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்
அறியாத காலம் எல்லாம்
புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே
போந்த நெறி என்று இருந்தேன்,
பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை
போனவழி தெரியவில்லை.. --- தாயுமானார்.
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால், உடல்
ஒன்று எனல் ஆமே?
நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாம் பருப்
பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.
இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.
சுத்திய நரப்புடன், எலுப்பு, உறு தசைக் குடலொடு,
அப்புடன், நிணச் சளி, வலிப்புடன் இரத்த குகை,
சுக்கிலம், விளைப் புழுவொடு அக்கையும், அழுக்கு, மயிர்,......
சங்குமூளை,
துக்கம் விளைவித்த பிணையல், கறை முனைப் பெருகு
குட்டமொடு, விப்புருதி, புற்று எழுதல், முட்டுவலி,
துச்சி பிளவைப் பொருமல்
பித்தமொடு உறக்கமிக ...... அங்கம் ஊடே
எத்தனை நினைப்பையும், விளைப்பையும், மயக்கம் உறல்
எத்தனை சலிப்பொடு கலிப்பையும், மிடல்பெருமை
எத்தனை கசத்தையும், மலத்தையும் அடைத்த குடில், ......பஞ்சபூதம்
எத்தனை குலுக்கையும், மினுக்கையும், மனக்கவலை,
எத்தனை கவட்டையும், நடக்கையும், உயிர்க் குழுமல்
எத்தனை பிறப்பையும், இறப்பையும் எடுத்து உலகில் ...... மங்குவேனோ?
--- சுவாமிமலைத் திருப்புகழ்.
குண
த்ரயம் வைத்து
---
த்ரயம்
- மூன்று. சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களைக் குறிக்கும்.
மாயை
கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். மாயையிலிருந்து தான்
எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக
இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாயையிலிருந்து படிமுறையில் தோன்றும்
காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும்
காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும்.
இத்தகைய
மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும்,
அசுத்தமாய்
உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவ மலத்தோடு
கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும்
அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும்
இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு
பகுதிப்பட்டதாய் விளங்குதலை இதற்கு உவமை கூறுவர் இன்னொரு உவமையும் கூறலாம்.
பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு
கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது.
இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து
விளங்க, மாசு படிந்த பகுதி
அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும்.
சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில்
வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம்
என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.
மாமாயை
குடிலை விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள். மோகினி என்பது
அசுத்த மாயையின் மறுபெயர். ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது.
அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி
எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அது அசுத்த மாயையைத்தான்
குறிக்கும்.
இவ்விரண்டு
மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மும் மாயைகள் என வழங்குவர்.
பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயை அல்ல. அது அசுத்த மாயையினின்றும் தோன்றிய
காரியமேயாகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும். அம் மயக்கம் சிறிதே ஆகும்.
ஆயின் அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும்.
அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது. அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த
மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும். எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே
மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது.
அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த உலகம் தோன்றுவது
பிரகிருதி மாயையில் இருந்துதான்.
பிரகிருதி
மாயை முக்குண வடிவாய் இருக்கும். சத்துவம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள்.
மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்பு நிலை போலப் பிரகிருதி
மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும்
வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை. பிரகிருதி என்ற
சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல்
பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.
சத்துவம் --- நற்குணங்களில்
மனம் பற்றுதல்
இராஜதம் --- ஆசை
மிகுந்திருத்தல்; மிகுந்த
பொருளுக்கு ஆசை வைத்தல்; எதிர்ப்பட்டதைப் பற்றி நிற்றல்.
தாமதம் --- எதிர்ப்பட்ட காரியத்தைச்
செய்யாதிருத்தல்; சோம்பல்; மயக்கம்.
கருவில் உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும, அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி
உடல் ......வினைதானே
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு, நிஜம்
என உழலும் மாயம், செனித்த குகையே உறுதி
கருது அசுழமாம் இந்த மட்டை தனை
ஆள, உனது ......அருள்தாராய்.
--- திருப்புகழ்.
அடர் பொய் ---
பொய்
என்பது இல்லாமையைக் குறிக்கும். நிலையாமையை உடையது இந்த உடம்பும், உலகமும்.
குருதிக்
குடில் பேணா
---
குடில்
- குடிசை. எப்போது விழும் என்று தெரியாது. விழுந்தே தீரும். என்பதால் குடிசை
என்றார்.
இந்த உடம்பு, எலும்பு
சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம்
முதலிய பல அசுத்தப் பொருள்களால் ஆனது. தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.
மூன்று உலகங்கள் உண்டு. ஒன்று ஒளியுலகம், அது சுவர்க்காதி புவனங்கள். ஒன்று இருள் உலகம், அது நரக உலகம், ஒன்று ஒளியும் இருளும் கலந்தவுலகம், அது இந்த மண்ணுலகம்.
ஒளியுலகத்தில் வாழ்கின்ற உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூத சாரதநு.
இருள் உலகத்தில் வாழ்கின்ற உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூதமாதநு. இம்
மண்ணுலகில் வாழ்கின்ற உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூத பரிணாம தநு.
இருள் உலகில் உள்ள பூத மா தநு துன்பத்தை மட்டும் நுகர்வதற்கு உரியது.
ஒளியுலகில் உள்ள பூதசார தநு இன்பத்தை மட்டும் நுகர்வதற்கு உரியது.
இந்த மண்ணுலகில் உள்ள இப் பூத பரிணாம சரீரம் இன்பத்தையும் துன்பத்தையும
நுகர்வதற்கு ஏற்றது.
இந்த உடம்பு தனியே துன்பத்தையும் நுகராது தனியே இன்பத்தையும் நுகராது.
இந்த உலகில் நமக்கு மிகுந்த பிரியமானது அல்வா. அதைச் சிறிதுதான் உண்ணலாம்.
ஒரு பரங்கிப் பழம் அளவு உண்ண இயலுமா?
மனைவியுடன் சிறிது நேரம் தான் இன்புறலாம். தூங்கினால் சுகம். ஆனால் ஓயாது
தூங்கிக் கொண்டிருக்க முடியுமா?
இப்படி எதனை எதனை இன்பமாக நாம் கருதி நுகர்கின்றோமோ அந்த இன்பங்களை இந்த
உடம்பால் தொடர்ந்து நுகர இயலாது. வெயிலும் மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி
நுகர்வது இந்த உடம்பு.
இந்த உடம்பு ஒரு மண் பாண்டத்தைப் போன்றது. இது மிகவும் அருமையாகக்
கிடைத்தது.
ஒரு ஊரில் ஒரு பிள்ளையார் கோயில். அதன் அருகில் ஒரு சிறிய நந்தவனம். அங்கு
ஒரு ஆண்டி வந்து சேர்ந்தான். ஏதாவது தொண்டு செய்தால்தான் அங்கே வீடுகள் தோறும்
அன்னம் கறி முதலியவைகள் கிடைக்கும்.
அப்படியானால் நந்தவனத்தில் செடிகளை வளர்த்து அம்மலர்களை எடுத்துத் தொடுத்து
பிள்ளையாரப்பனுக்குக் கொடுத்தால் இனிய தொண்டு ஆகும். அதற்கு ஒரு தோண்டி
வேண்டியதாயிற்று. அந்த ஊரின் கோடியில் ஒரு குயவனார் இருந்தார். சட்டி, பானை, மடக்கு முதலியன செய்து அவர் விற்பார். அந்த ஆண்டி அக் குயவனாரிடம் போய் ஒரு
தோண்டியை வேண்டினான். ஆண்டி தோண்டி வேண்டி நிற்க, குயவனார் நாளை வாரும் என்றார். இனாமாகத் தருகின்றது. அதனால் தவணை போட்டார்.
நாளை நாளையென்று பல தவணை. ஆண்டியும் பாவம், பொறுமையுடன் நாளும் நடந்து நடந்து தொடர்ந்தான். முன்னூறு நாட்களுக்குப்பின்
குயவனார் மனம் இரங்கி ஒரு தோண்டியைத் தந்தார்.
அத்தோண்டியைப் பெற்ற ஆண்டிக்குப் பெருமகிழ்ச்சி! உடனே தோண்டியை எடுத்துக்
கொண்டு நேரே ஆற்றுக்குச் சென்றான். தோண்டியில் தண்ணீரை முகர்ந்து தலைமீது
வைத்தான். அங்கிருந்து நந்தவனத்தை நோக்கிப் புறப்பட்டான்.
அப்போது அந்த ஆண்டிக்கு இளமையில் தன் ஊரில் நடந்த ஒரு பிடாரி விழாவில் தான்
கரக ஆட்டம் ஆடியது நினைவுக்கு வந்தது. பத்து மாதம் வேண்டிப் பெற்ற அத்தோண்டியைத்
தலைமீது வைத்து வரும் ஆண்டி கரக ஆட்டம் ஆடுபவனைப் போல் தத்தீம் தகதீம் தகஜணு
தளாம்கு என்ற ஜதியிட்டு ஆடினான். பாவம், உடனே தோண்டி கீழே விழுந்து உடைந்து விட்டது. முந்நூறு நாட்கள் நடந்து
நடந்து கால் தேய்ந்து தொடர்ந்து சென்று வேண்டிப் பெற்ற தோண்டி. அது ஒரு விநாடியில்
உடைந்து ஒழிந்தது.
அந்த ஆண்டி-ஆன்மா. நந்தவனம்-இந்த உலகம். குயவனார்-பிரமதேவர்.
தோண்டி-இந்தவுடம்பு. இதனைச் சிந்தித்த ஒரு சித்தர் பாடுகின்றார்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நால்ஆறு மாதமாய்க் குயவனை
வேண்டி
கொண்டு வந்தான் ஒரு
தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுஉடைத் தாண்டி
இன்னொரு சித்தர் பாடினார்.
“காயமே இது பொய்யடா -- வெறும்
காற்று அடைத்த பையடா”
இந்த உடம்புக்குள் பிராணவாயு தங்கியுள்ளது. அது எந்த விநாடி இந்த உடம்பை
விட்டு நீங்குமோ தெரியாது. ஆணவம், கன்மம், மாயை
என்ற மும்மலங்களும், மாயாகாரியமான
பொருள்களும் உடையது இந்த உடம்பு.
இந்த
உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும்
சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும்
என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகட்கு அடிகள் அறிவுறுத்துகின்றனர்.
இவ்வுடம்பு
வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.
இரும்பு
வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல.
தோல்
எலும்பு உதிரம் முதலியவைகளால் ஆனது என்பார்.
இத்துடன்
வாழவே கருதி அவாவி அலைகின்றீர்களே, இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன்
கூடியது என்பார்.
தோல்
எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும் என்பதனையும்
குறிப்பில் உணர்த்துகின்றனர். அவ்வண்ணம்
அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.
குரம்பை
மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு
அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த
செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்
என்பார்
பழநித் திருப்புகழில்.
பின்வரும்
பிரமாணங்களையும் ஓதி உணர்ந்து தெளிக.
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம்,
புன்புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு,
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையில் மூழ்கிடாதே,
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே."
--- திருஞானசம்பந்தர்.
தோல், எலும்பு, சீ, நரம்பு, பீளை, துன்று கோழை, பொங்கு
சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,
தூல
பங்க காயம் வம்பிலே சுமந்து, நான் மெலிந்து
சோரும், இந்த நோய் அகன்று, ...... துயர்ஆற.. --- திருப்புகழ்.
தொக்கு
அறாக் குடில் அசுத்த ஏற்ற, சுக
துக்கமால் கடம், ...... மும் மல மாயை
துற்ற
கால் பதலை, சொல் படாக் குதலை,
துப்பு இலாப் பல ...... சமய நூலைக்
கைக்
கொளா, கதறுகை கொள் ஆக்கை, அவல
புலால் தசை, ...... குருதியாலே,
கட்டு
கூட்டு, அருவருப்பு வேட்டு உழல்
அசட்ட வாக்கு அழிவது ...... ஒருநாளே? --- திருப்புகழ்.
குடல்இடை
தீது உற்று, இடை இடை பீறிக்
குலவிய தோல் அத் ...... தியின் ஊடே
குருதியிலே
சுக்கிலம் அது கூடிக்
குவலயம் வான் அப்பு ...... ஒருகாலாய்
உடல்
எழு மாயப் பிறவியில் ஆவித்து,
உறுபிணி நோய் உற்று ...... உழலாதே,
உரை
அடியேனுக்கு ஒளிமிகு நீபத்து
உனது இரு தாளைத் ...... தரவேணும். ---
திருப்புகழ்.
தோலால்
சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால்
எழுப்பி வளைமுதுகு ஓட்டி கைநாற்றி நரம்-
பால்
ஆர்க்கை இட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலால்
கிரிதொளைத்தோன் இருதாள் அன்றி வேறு இல்லையே.
--- கந்தர் அலங்காரம்.
எம்பெருமான்
நின் திருவிளையாட்டு என் சொல்கேன் நான்,
ஏதும் அறியாச் சிறியேன் எனைத்தான், இங்கே
செம்புனலால்
குழைத்த புலால் சுவர்சூழ் பொத்தைச்
சிறுவீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து, அந்தோ
கம்பம் உறப் பசித்தழலும்
கொளுந்த, அந்தக்
கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பு
இயற்ற, காமாதி அரட்டர் எல்லாம்
மடிபிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய். --- திருவருட்பா.
அவலக்
கவலைச் சவலைக் கலை கற்று,
அதனில் பொருள் சற்று அறியாதே ---
அவலம்
- துன்பம், வறுமை, கேடு, குற்றம், பயன்படாது
ஒழிவது.
சவலை
- மனக்குழப்பம், வருத்தம்.
பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும். ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.
உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே
கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன
பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம்
திரிபு மயக்கங்களை அகற்றி, சிவப் பேற்றை அளிக்கும்.
நூல்களை ஓதுவதன் பயன் வீடுபேற்றை அடைவதே ஆகும். எனவே தான், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல்
பயனே" என்றது நன்னூல்.
அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள்,"மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப்
படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.
ஆதலின், அட்டைப்
பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல.
அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில.
ஆதலின், அறநெறியைத்
தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.
திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு
சிந்திக்கவும். "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்
உணர்த்துவன அன்றி, பிற
பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.
"கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.
பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம்
என்னும் நூல் உணர்த்துவது காண்க.
மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.
பாவத்தினை வளர்க்கும் நூல்களும், ஆசையினை
வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை
வளர்க்கும் நூல்களும், கலந்து
நிறைந்த உலகில், அறத்தினை
வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு
ஏற்ற, வீட்டுலகினை
உடையவராவர்.
அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..
நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.
பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து
வாங்குதல்போல, அறநூல்களையும்
பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை
அடையலாம். கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மை எனக் கற்பின் உண்மை நூலை அடைய
இயலாது.
பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...
தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.
தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று
தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.
மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம்
கூறுமாறு....
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,
மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை.
கற்றதனால் ஆய பயன்
கடவுளைக் கருதுவதே. கற்றதும் கேட்டதும் கொண்டு கற்பனை கடந்த காரணனைக் கசிந்து
உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது சிறிது
படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்கு உற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து
வறிதே கெடும் வம்பரை இடித்துரைக்கின்றனர்.
கற்றதும் கேட்டதும் தானே
ஏதுக்காக?
கடபடம் என்று
உருட்டுதற்கோ?
கல்லால் எம்மான்
குற்றம்அறக் கைகாட்டும்
கருத்தைக் கண்டு
குணம் குறி அற்று
இன்பநிலைகூட அன்றோ. --- தாயுமானார்.
அலகுசால் கற்பின்
அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணையல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல். --- நாலடியார்.
ஆய்ந்து அறிந்து நல்ல
அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத்
தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக்
கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த
நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.
உயிருக்கு அறிவு
பிறப்பினால் அமைவது அல்ல. உயிர் பிறந்து வளரும்பொழுது கற்றல், கேட்டல் மூலமும், பட்டறிவினாலும்
அறிவு பெறுகிறது. "கற்றல் கேட்டல் உடையார் பெரியார்" என்னும்
திருஞானசம்பந்தப் பெருமானின் அருள்வாக்கை உன்னுக.
அறிவு உடையவராக ஒருவர் ஆவது
முயற்சியின் பயன். எனவே, "கற்றனைத்து ஊறும்
அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். அறிவு பெறுதற்கான வாயில்களில் ஒன்றுதான்
கற்றல். கசடு அற, கற்பவை கற்றால் அறிவு பெறலாம். கற்பதனால் மட்டும் அறிவு விளங்குவது இல்லை.
கற்ற கருத்துக்கள் வாழ்க்கையில் இடம் பெறுதல் வேண்டும்.
பலப்பல நூல்களைக் கற்று
இருந்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலைக்
கல்லாதவர் அறிவு இல்லாதவர் என்கின்றார் நாயனார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார், அறிவு இலாதார்.
"கற்றிலன் ஆயினும்
கேட்க" என்றும், "எனைத்தானும் நல்லவை
கேட்க" என்றும் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகின்றார். எனவே, கேட்பவை எல்லாம் அறிவைத் தரமாட்டா என்பதையும் தெளிதல் வேண்டும்.
அறிவு உயிருக்குத்
துன்பம் வராமல் காக்கின்றது. அறிவு என்னும் கருவி பெற்று, வினைப் பகையை வென்று விளங்க வேண்டுமாயின், உயிர்க்கு உயிர் ஒழக்கமாகிய அன்பு தேவை. உயிர், அன்பு
நலம் செறி்ந்தால் நல்லறிவினை நாடும். நல்லறிவு பெற்றால் உயிர் தீய செயல்களைச்
செய்யாது. தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால் துன்பம் இல்லை.
குனகி ---
குனகுதல்
- கொஞ்சிப் பேசுதல்.
தனகி ---
தனகுதல்
- மனம் மகிழச் செய்தல்.
கொடியார்
தம் கொடுமை கடுமை குவளைக் கடையில் குலைபட்டு அலையக் கடவேனோ ---
குவளை
- பெண்களின் கண்ணுக்கு உவமை.
கொடியவர்களாகிய
விலைமாதர்களின் கொடுமை நிறைந்ததும்,
வன்மை
மிக்கதும் ஆகிய, குவளை மலர் போன்ற கண்களின் ஓரப் பார்வையால்
நிலைகெட்ட காமுகர் துன்பப்படுவர்.
தெளியத்
தெளியப் பவளச் சடிலச் சிவனுக்கு ஒரு சொல் பகர்வவோனே ---
ஒரு
சொல் - ஒப்பற்றதாகிய பிரணவ மந்திரத்தின் பொருள். பிரண மந்திரம் மூலமந்திரம் ஆகும்.
எதையும்
தெள்ளத் தெளியத் தெரிந்துகொண்டால் பயன் உண்டு.
திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான்
முதலியோருக்கு அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப்
பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப்
பெருமான்.
சிவபெருமான்
முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் "தணிகைப் புராணம்" கூறுமாறு
காண்க.
திருக்
கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளி இருந்தார். அவர்கட்கு நடுவில்
முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்குச் சந்திரகாசன் என்பவன்
வந்தான். அவன் சிவகணங்களுக்குள் சிறந்தவன். அவன் சிவபெருமானைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்.
தனக்குப் பிரணவப் பொருளை உரைத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான்
திருவருள் செய்து சந்திரகாசனுக்குப் பிரணவப் பொருளை உரைத்து அருள் புரிந்தார். முருகக்
கடவுள் சிவபெருமான் சந்திரகாசனுக்கு உரைத்தருளிய பிரணவப் பொருளுரையைத் தெரிந்துகொண்டார்.
ஆனால், தாம் அதனைக் கேட்டுணர்ந்து
கொண்ட தன்மையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் பல சென்றன.
பிறகு
முருகக்கடவுள் இறைவனையும் இறைவியையும் விட்டுத் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே
எழுந்தருளி இருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும்
வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை
வழிபடற் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற
தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் 'இம் முருகன் சிறுவன் தானே இவனை எதற்காக வணங்கவேண்டும்' என்னும் எண்ணம் உடையவனாய்
வணங்காது ஒதுங்கிச் சென்றான்.
இறைவனை
வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து
கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.
"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக"
என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டு அருளினார். வீரவாகு தேவரும்
அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து முருகன் திருமுன் நிறுத்தினார்.
இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப்போயினர்.
முருகக்கடவுள்
நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால் எந்தையாகிய
சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்
என் தம்பியால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்கமாட்டாய். எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று
கூறுவாயாகில்
உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு
கூறவும், நான்முகன் அப்பொழுது கூட
வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றனன். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில்
பலமாகக் குட்டி, கடிய சிறையில் அடைத்தருளினர்.
பிறகு தாம் திருவேங்கடமலையை அடைந்து திருக்கோயில் கொண்டருளியதோடு படைப்புத் தொழிலையும்
தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது.
திருமால்
முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப்
பார்த்துச், "செம்மையான ஞான சத்தியின்
திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன்
அல்லன். யாமும் அவனில் இருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய
அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோராவர். பிழை செய்தவர்கள் நம்மிடத்தில் பிழை செய்தவர்கள்
ஆவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதி உடையதே
ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள்
நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
சிவபெருமான்
நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று
வணங்கி, நான்முகனைச் சிறையில்
இருந்து வெளிவிடுமாறு யாம் கூறியதாகக் கூறி விடச்செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு
வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம்
சென்று வணங்கி, சிவபெருமான் கூறிய செய்தியைத்
தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத்
தாமும் திருக் கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மை
உடையவர்களாகிய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளை மனதறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு
உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு
பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். ஒறுக்க வேண்டிய காலத்தும் கடிது ஓச்சி மெல்ல எறிவர்.
தன்னிடத்தில் சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது நம் பக்கல் அடைந்தனன்.
நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டஞ்செய்து வருத்திவிட்டாய்.
தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறியற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.
முருகக்கடவுள்
சிவபிரானைப் பார்த்து "எந்தையே நான்முகனைச் சிறந்த அறிவு அற்றவன் என்றாய். சிறந்த
அறிவு இல்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணர மாட்டான். இத்தகைய நிலையில்
உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார்.
சிவபிரான்
முருகக் கடவுளைப் பார்த்து,
"நீ
பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார்.
அதற்கு
முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி
கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ ?" என்றார்.
சிவபிரான்
முருகக் கடவுளைப் பார்த்து,
"நீ
விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம்.
மாசி மகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச்
சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகாசல முருகனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய
முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய
சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.
தனக்குத்தானே
மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக்
கேட்ட அளவில் பெரு முழக்கம் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெரு
முழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று
பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்தநகர்"
என்னும் பெயரையும் பெற்றது. இத் தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச்
செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.
எதிர்
உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி,
அங்கு
அதிர்கழல்
வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட
வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள்
செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன். --- தணிகைப் புராணம்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே” --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று
அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
--- (கொடியனைய) திருப்புகழ்.
மறிமான்
உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த
மதியாளா.... --- (விறல்மாரன்)
திருப்புகழ்.
சிவனார்
மனம் குளிர, உபதேச மந்த்ரம்
இரு
செவி
மீதிலும் பகர்செய் குருநாதா... ---
திருப்புகழ்.
பிரணவப்
பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால்
சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக்
காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச்
சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி
உபதேசித்தருளினார்.
அரவு
புனிதரும் வழிபட
மழலை
மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை
அறிவது பொருளென அருளிய பெருமாளே.
---
(குமரகுருபரகுணதர)
திருப்புகழ்.
தேவதேவன்
அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு
அருள் நாடகம் இது.
உண்மையிலே
சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.
தனக்குத்
தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத்
தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத்
தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத்
தான் நிகரினான், தழங்கி நின்று ஆடினான். --- தணிகைப் புராணம்.
மின்
இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை
ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக்
கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப்
பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!
என்னும்
திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும்
முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு
நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது
சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன
போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான்
மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில்
சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள்
தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால்
தகப்பன் என்றும், சிவமும் சத்தியும்
சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார்.
இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
மணிவாசகப்
பெருமான் அருளிய திருக்கோவையாரிலும்,
"தவளத்த
நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள்
அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த
யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு
ஆர்குழல் தூமொழியே".
என
வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம்
தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்,
சத்தி
தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
வாயும்
மனமும் கடந்த மனோன்மனி
பேயும்
கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும்
அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.
கனகம்
ஆர் கவின்செய் மன்றில்
அனக
நாடகற்கு எம் அன்னை
மனைவி
தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.
பூத்தவளே
புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
---
அபிராமி அந்தாதி.
தவளே
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே
அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே
கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன்
இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
---
அபிராமி அந்தாதி.
சிவம்சத்தி
தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை
ஈன்றும்,
உவந்து
இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன்
பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம்
தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
--- சிவஞான
சித்தியார்.
கனகச்
சிகரக் குல வெற்பு உருவ,
கறுவிப் பொரு கைக் கதிர் வேலா ---
கனகச்
சிகரம் - கிரவுஞ்ச மலையைக் குறிக்கும். கிரவுஞ்ச மலை பொன் மயமானது.
கறுவுதல்
- சினத்தல்.
"கவளக் கரடக் கரி எட்டு அலறக்
கனகக் கிரியைப் ...... பொரும்வேலா!"
என்றார் திருத்தணிகைத் திருப்புகழில்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய
மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது
திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன
வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"
என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும்
வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல்
வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில்
சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை
...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது
உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய
வேலாயுதம், கிரவுஞ்ச
மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில்
அடிகளார் காட்டியபடி, நமது
வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு
என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும்
உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
பின்வரும் பிரமாணங்களால் கிரவுஞ்ச மலையானது பொன்மயமானது என்பதை அறியலாம்.
"சொன்ன
கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தை உற்று,
நின்னை
உணர்ந்து உணர்ந்து, எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை
மறந்து இருந்தேன், இறந்தேவிட்டது
இவ்வுடம்பே".
--- கந்தர்
அலங்காரம்.
இதன்
பொருள் ---
பொன்னிறமான
கிரவுஞ் சமலையை ஊடுருவித் தொளை செய்த கூர்மையான வேலினைத் தாங்கிய மன்னரே! நறுமணம் மிக்க கடப்பமலர் மாலையைச்
சூடிக்கொண்டு உள்ள திருமார்பினை உடையவரே! ஞானத்திற்கெல்லாம்
வரம்பாக விளங்கும் மௌன நிலையை அடைந்து,
தேவரீரை மெய்யறிவால் அறிந்து அறிந்து, எல்லா
கரணங்களும் முக்குணங்களும் நீங்கப்பெற்ற நிர்க்குண நிலையை அடைந்து ஜீவனாகிய
அடியேனையும் மறந்து உம்மை நினைந்து நிலைத்து இருந்தேன். இந்த உடம்பு முற்றிலும் அழிந்தே
போய்விட்டது.
"பங்கேருகன்
எனைப் பட்டுஓலையில் இட, பண்டு தளை
தம்
காலில் இட்டது அறிந்திலனோ? தனிவேல் எடுத்துப்
பொங்குஓதம்
வாய்விட, பொன்னஞ் சிலம்பு
புலம்பவரும்
எம்கோன்
அறியின், இனி நான்முகனுக்கு இருவிலங்கே".
--- கந்தர் அலங்காரம்.
இதன்
பொருள் ---
தாமரை
மலரில் வாழும் பிரம்மதேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது
காலில் விலங்கு பூட்டியதை அறியானோ?
ஒப்பற்ற
வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும் பொன் உருவான
கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின்
இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்மதேவனுக்கு இரண்டு விலங்குகள் பூட்டப்படும்!
கழியைக்
கிழியக் கயல் தத்தும் இடைக்கழியில் குமர ---
கழி
- கடலை அடுத்த உவர்நீர்ப் பரப்பு.
கடலை
அடுத்த உவர்நீர்ப் பரப்பு கிழியும்படி கயல் மீன்கள் தாவிக் குதிக்கும்
திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் குமாரக் கடவுள் முருகப்
பெருமான்.
மயிலாடுதுறையிலிருந்து
தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி"
திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள
திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.
இறைவர்
: காமேசுவரர்.
இறைவியார்
: காமேசுவரி.
தல
மரம் : குரா, மகிழம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.
தெய்வயானை
அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி
கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
அம்பாள்
தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
மூலத்தானத்தில்
பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க
மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி
விமானங்களில், முருகனுடைய விமானம்
சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம்
சற்று தாழவும் உள்ளது.
சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம்
முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின்
துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய்
இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
முருகப்
பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
சேந்தனார்
முத்தி பெற்ற தலம். திருமுறைகளில்
இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
இத்தலத்தில்
இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள்
குரா மரம் முருகப் பெருமானுக்கும்,
மகிழ
மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். திருத்தல மரமாகிய
"குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று
கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில்
நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அமர்ந்து பலரும் தியானம்
செய்கின்றனர்.
முருகப்
பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து
தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
சண்டேசுவர
மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும்
முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.
கருத்துரை
முருகா! அடியேனது பெண்மயலை
அகற்றி அருள்வாய்.
No comments:
Post a Comment