திருவிடைக்கழி - 0802. பகரும் முத்தமிழ்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பகரும் முத்தமிழ் (திருவிடைக்கழி)

முருகா!  
தமிழ்ப்பொருள், தவப்பயன், மேலுலக இன்பம்,
முத்தி வீடு, சுவர்க்க வாழ்வு, அரச வாழ்வு
என்னும் இந்த ஆறினையும் தந்து,
உம்மைப் புகழும் அன்பையும் ஆற்றலையும் அருள்வீர்.


தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...... தனதான


பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
     சரவ ணத்தினிற் ...... பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
     தழுவு பொற்புயத் ...... திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல யிற்சுடர்க் ...... குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
     றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

பகரும் முத்தமிழ்ப் பொருளும், மெய்த்தவப்
     பயனும் எப்படிப் ...... பலவாழ்வும்,

பழைய முத்தியில் பதமும் நட்பு உறப்
     பரவு கற்பகத் ...... தருவாழ்வும்,

புகர்இல் புத்தி உற்று அரசு பெற்று உறப்
     பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்,

புலன் அகற்றிடப் பல விதத்தினைப்
     புகழ் பலத்தினைத் ...... தரவேணும்.

தகரில் அற்ற கைத்தலம் விடப் பிணைச்
     சரவணத்தினில் ...... பயில்வோனே!

தனி வனத்தினில் புன மறத்தியைத்
     தழுவு பொன்புயத் ...... திருமார்பா!

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
     திறல் அயில் சுடர்க் ...... குமரஈசா!

செழுமலர்ப் பொழில் குரவம் உற்றபொன்
     திரு இடைக்கழிப் ...... பெருமாளே.


பதவுரை

      தகரில் அற்ற கைத் தலம் விட --- ஆட்டுமுகம் படைத்த தக்கன் காரணமாக, அறுபட்ட கரங்களை உடைய அக்கினி தேவன் கொண்டுபோய் விட,

      பிணைச் சரவணத்தினில் பயில்வோனே --- தருப்பைப் புல் அடர்ந்த சரவணப் பொய்கையில் இனிது உலாவியவரே!

       தனி வனத்தினில் புன மறத்தியைத் தழுவு --- தனியான வள்ளிமலைக்காட்டில் தினைப்புனத்தைக் காவல் புரிந்த மறக்குலத்து வள்ளியம்மையாரைத் தழுவிய

      பொற்புயத் திருமார்பா --- அழகிய புயங்களுடன் கூடிய  திருமார்பினை உடையவரே!

     சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல் அயில் சுடர்க் குமர ஈசா --- சிகரங்களைக் கொண்ட உயர்ந்த கிரெளஞ்ச மலையைப் பிளந்ததும், பகிர்ந்த ஞானமே ஆனதும், வலிமை பொருந்தியதும், கூர்மை பொருந்தியதும் ஆன வேலைத் தாங்கிய ஒளி பொருந்திய குமாரக் கடவுளே!

     செழுமலர்ப் பொழில் குரவம் உற்ற --- செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் நிறைந்து உள்ள

      பொன் திருவிடைக்கழிப் பெருமாளே --- அழகிய திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய  பெருமையின் மிக்கவரே!

      பகரும் முத்தமிழ்ப் பொருளும் --- ஆன்றோர்களால் புகழப்படுகின்ற இயல் இசை கூத்து என்னும் முத்தமிழ் நூல்களின் செம்பொருளையும்,

       மெய்த்தவப் பயனும் --- உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும்,

      எப்படிப் பல வாழ்வும் --- எந்த எந்த உலகங்கள் உளவோ அந்த அந்த உலகங்களின் பயனைத் தரும் வாழ்வையும்,

      பழைய முத்தியிற் பதமும் --- பழமையான முத்தி நலமாகிய மெய்ப்பதமும், செல்வ

      நட்பு உறப் பரவு கற்பகத் தரு வாழ்வும் --- கேண்மை பொருந்தப் புகழப் பெறும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும்,

      புகரில் புத்தி உற்று --- குற்றமில்லாத அறிவை அடைந்து

     அரசு பெற்று உறப் பொலியும்  --- இராஜயோகத்தைப் பெற்று விளங்கும்

      அற்புதப் பெருவாழ்வும் --- அதிசயிக்கத்தக்க பெரிய வாழ்வையும்,

      புலன் அகற்றிட --- பொறிகளில் செல்லும் ஐம்புலன்களை ஒழித்திட,

     பலவிதத்தினைப் புகழ் பலத்தினைத் தரவேணும் --- தேவரீருடைய பலதிறப்பட்ட பெருமைகளைப் புகழும் ஆற்றலையும் தந்து அருள வேணும்.


பொழிப்புரை

         ஆட்டுமுகம் படைத்த தக்கன் காரணமாக, அறுபட்ட கரங்களை உடைய அக்கினி தேவன் கொண்டுபோய் விட, தருப்பைப் புல் அடர்ந்த சரவணப் பொய்கையில் இனிது உலாவியவரே!

         தனியான வள்ளிமலைக்காட்டில் தினைப்புனத்தைக் காவல் புரிந்த மறக்குலத்து வள்ளியம்மையாரைத் தழுவிய அழகிய புயங்களுடன் கூடிய திருமார்பினை உடையவரே!

         சிகரங்களைக் கொண்ட உயர்ந்த கிரெளஞ்ச மலையைப் பிளந்ததும், பகிர்ந்த ஞானமே ஆனதும், வலிமை பொருந்தியதும், கூர்மை பொருந்தியதும் ஆன வேலைத் தாங்கிய ஒளி பொருந்திய குமாரக் கடவுளே!

         செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் நிறைந்து உள்ள அழகிய திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய  பெருமையின் மிக்கவரே!

         ஆன்றோர்களால் புகழப்படுகின்ற இயல் இசை கூத்து என்னும்முத்தமிழ் நூல்களின் செம்பொருளையும், உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், எந்த எந்த உலகங்கள் உளவோ, அந்த அந்த உலகங்களின் பயனைத் தரும் வாழ்வையும், பழமையான முத்தி நலமாகிய மெய்ப்பதமும், கேண்மை பொருந்தப் புகழப் பெறும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், குற்றமில்லாத அறிவை அடைந்து ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் அதிசயிக்கத்தக்க பெரிய வாழ்வையும், பொறிகளில் செல்லும் ஐம்புலன்களை ஒழித்திட, தேவரீருடைய பலதிறப்பட்ட பெருமைகளைப் புகழும் ஆற்றலையும் தந்து அருள வேணும்.

விரிவுரை 

பகரும் முத்தமிழ்ப் பொருளும் ---

தமிழ் - இனிமையானது. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என்பது பிங்கல நிகண்டு சூத்திரம்.

தனித்து இயங்குவது தமிழ். தமி என்ற பகுதியடியாகப் பிறந்தது. அது இயல், இசை, நாடகம் என மூவகைப்படும். இவ்வாறு முத்திறப்பட்டு மூவாமல் என்றும் இளமையாகவே விளங்குவது தமிழ். பல புலவர்கள் கூடி ஆராய்ந்தது.  அதனால் சங்கத்தமிழ் எனப்படும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.                --- ஔவையார்.

தமிழ் எல்லாராலும் புகழப் பெறுவது ஆதலின் "பகரும் முத்தமிழ்" என்றார்.

தமிழின் பொருள் இன்ப அன்பு. அதனைத் தருமாறு வேண்டுகின்றனர். இதனையே, காரைக்கால் அம்மையாரும் இறவாத இன்ப அன்பு தருக என்று இறைவனை இரந்தனர்.

மெய்த் தவப்பயனும் ---

தவமே உயிர்க்கு உறுதி பயப்பது. ஒவ்வொருவரும் சிறிது நேரமாயினும் தவம் புரிய வேண்டும். அத் தவமும் வீடுபேற்றைக் குறித்துச் செய்தல் வேண்டும். அதுவே மெய்த்தவம். பொருள் வேண்டும். ஆயுள் வேண்டும். அழியாத யாக்கை வேண்டும், மாற்றார் அழிய வேண்டும் என்றெல்லாம் பயன் குறித்துச் செய்கின்ற தவம் அப் பயனைத் தருமாயினும் அது மெய்த்தவம் ஆகாது. 

இனி, தவப்பயனாக விளங்குவது அன்பு. அன்பினால் வருவது அருள். "அருளென்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவ நாயனார்.

எப்படிப் பலவாழ்வும் ---

எல்லா உலகங்களின் இனிய வாழ்வும் வேண்டும் என்றார்.  ஏனெனில், முருகன் அருள் பெற்றார் எல்லா உலகங்களிலும் தடையறச் சென்று அவனது புகழை ஓதுதல் பொருட்டு.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதுஅருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஓங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ! நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.     --- திருவருட்பா.

பழைய முத்தியில் பதமும் ---

பந்தத்தினின்றும் விடுபடுவதே முத்தி எனப்படும். அது தொன்மையானது. ஆதலின் அவ்வரிய முத்திப்பதம் தருக என்பார்.

முத்தன் ஆமாறு எனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கு அருள்வாயே... ---  (பத்தியால்) திருப்புகழ்.

பரவு கற்பகத் தரு வாழ்வும் ---

முத்தியை வேண்டிய பிறகு அதனினும் கீழ்ப்பட்டதாகிய கற்பகத் தரு வாழ்வை வேண்டுவது எற்றுக்கு என்று பின் வருமாறு காண்போம்.

"இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்" என்பார் ஆழ்வார்.

"மேலை இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன்" என்பார் வீரவாகுதேவர்.  

"தண்தேன் துளிர்க்கும் தருநிழல் கீழ் வாழ்க்கை வெஃகிக் கொண்டேன் பெருந்துயரம்" என்று வருந்துகின்றான் இந்திரன் மகனாகிய சயந்தன்.

அருணகிரிநாதர் கற்பகத் தரு வாழ்வு வேண்டியது அதன் பெருமை குறித்து அன்று. அதன் இனிமை குறித்தும் அன்று.  கற்பகத் தரு வாழ்வில் உள்ள அமரர் முதலியோர் அவ்வாழ்வின் இன்பத்தால் எந்தை கந்தவேள் செம்மலர் நோன்தாள் கமலங்களை மறத்தல் கூடும். ஆதலின், அவர்களை மறவாது முருகனடியை நினைந்து உய்விக்கும் பொருட்டு அதனை வேண்டுகின்றனர்.

 
புகர் இல் புத்தி உற்று, அரசு பெற்று உறப் பொலியும் அற்புதப் பெருவாழ்வும் ---

கற்பகத் தரு வாழ்வுக்குக் கீழ் இருப்பது, மண்ணுலக அரச வாழ்வு. அடிகள் அதனையும் வேண்டுகின்றனர். ஏனெனில், பெருமிதமாக வாழ்ந்து இன்புறல் பொருட்டு அன்று. அரசன் நல்லறிவு பெற்று அருள்நெறியில் நில்லானாயின், உலகிலுள்ள மக்களும் திருந்தி உய்வு பெறாது உழலுவர். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள். அரசன் திருவடி ஞானத்தைப் பெற்று திருவருள் வயப்பட்டவனாக இருத்தல் வேண்டும். அத்தகைய மன்னன் ஆளும் நாடு எல்லா நலன்களும் எய்தும்.

ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                ---  திருவள்ளுவர்.

அதனாலே தான், பற்று அறத் துறந்து பரமன் பணியிலேயே உறைத்து நின்ற பெருமாக்கோதையாரை இறைவன் அரசபதவியை வகித்து உலகை ஆளுமாறு பணித்தருளினார்.  கோச்செங்கட்சோழரது அரசாட்சியும் அவ்வண்ணமே. பற்றற்ற பரமஞானியாகிய ஜனகரது ஆட்சித் திறத்தை அறியாதவர் இல்லை. ஆதலின், அந்நலத்தினை உலகிற்கு அறிவிக்கும்பொருட்டு அரச வாழ்வு தருக என்பார்.

குற்றமில்லாத அறிவைப் பெற்று என்று கூறுமாற்றால் இதனை அறிக. 

அற்புதம் - அதிசயம். 

செல்வமும் பதவியும் அறிவை மயக்குவன. அவைகளைப் பெற்று ஞான அரசாட்சியைத் தாங்குவது அற்புதமே.

புலன் அகற்றிட ---

பொறி புலன்களின் வழியே மனதைச் செல்லாது தடுத்தல் வேண்டும். புலன்களை வென்றவரே புவியை வென்றவர் ஆவார்.  புலன்களை வென்றவர் பால் ஐம்பெரும் பூதங்களும் அடங்கும். 

இந்திரன் - வச்சிராயுதபாணி - தேவர் கோமான் பூனையாகி நடுநடுங்கி ஓடி ஒளிவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.                        ---  திருக்குறள்.

ஐம்புலன்கள் அடங்காமையே எல்லா அநர்த்தங்களுக்கும் காரணம். நல்வழியினின்றும் ஐம்புலன்களே விலக்கி விடுகின்றன. ஆறலைக்கும் வேடர்க்குச் சமானம். "ஐம்புல வேடரின் அயர்ந்தனை" என்று கூறும் சிவஞானபோதம்.

ஓரஒட்டார் ஒன்றை உன்னஒட்டார்
         மலர்இட்டு உனதாள்
சேரஒட்டார் ஐவர் செய்வது என்யான்,
         சென்று தேவர்உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக்
         கார்உடல் சோரி கக்க
கூரகட்டாரிஇட்டு ஓர்இமைப்
         போதினில் கொன்றவனே.           --- கந்தர் அலங்காரம்.


பல விதத்தினைப் புகழ் பலத்தினைத் தரவேணும் ---

முருகவேளுடைய ஆறுதிருமுகங்கள், பன்னிருபுயங்கள், திருவடிகள், வேல், மயில், சேவல் ஆகிய பலவிதங்களைப் பற்றிப் புகழும் தன்மையை அருள் புரிவீர் என்பார். "பக்கரை விசித்திரமணி" என்ற திருப்புகழை ஈண்டு நினைவு கூர்க.


தகரில் அற்ற கைத்தலம் விட ---

தகர் - ஆடு. ஆட்டுமுகம் உடைய தக்கனைக் குறிக்கின்றது.  சிவபிரானை நிந்தித்து தக்கன் ஒரு வேள்வி செய்தான்.  வீரபத்திரர் ஆண்டுச் சென்று, உண்மையை உரைத்து சிவமே பரம்பொருள் என்று உணர்த்தினர். ஆணவத் தடிப்பினால் தக்கன் அந்த அறவுரையைக் கேட்டுத் திருந்தினானில்லை. அதனால், வீரபத்திரதேவர் வெகுண்டு, சிவநிந்தனையுடன் அவ்வேள்வியில் கலந்துகொண்டு, தக்கனுக்கு அனுகூலமாக இருந்த தேவர்கள் யாவரையும் தண்டித்தனர். சூரியனுடைய பல்லை உதிர்த்தனர். சந்திரனைத் தேய்த்தனர். பிரமதேவனது சென்னியில் குட்டினர்.  தக்கனையும் எச்சனையும் சிரச்சேதம் செய்தனர். சரசுவதியின் நாசியைக் கொய்தனர். அக்கினிதேவனது கரத்தை வெட்டினார்.

காமன் உடல்,உயிர் காலன், பல் காய்கதிரோன்,
நாமகள் நாசி,சிரம் பிரமன், கரம்எரியை,
சோமன் கலை,தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோள்நோக்கம் ஆடாமோ.     --- திருவாசகம்.

பின்னே சிவபெருமானுடைய திருவருளால், தக்கன் ஆட்டுத் தலையையும், தேவர்கள் தத்தம் இழந்து உறுப்புகளையும் பெற்றனர். "அற்ற கைத்தலம்" என்றது இந்த வரலாற்றின்படி, அறுபட்டு மீண்டும் கரம் பெற்ற அக்கினி தேவனைக் குறிக்கின்றது.

சிவபெருமானுடைய நெற்றிக் கண்களினின்றும் திருவருளால் வெளிப்பட்ட ஆறு அனல் பொறிகளையும், இறைவர், வாயு தேவனிடத்தில் தந்தனர். தாங்கமாட்டாத வாயு, அக்கினி தேவனிடம் தந்தான். அந்த அக்கினியால் சுடப்பட்ட அக்கினி தேவன், பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பை கங்கா நதியில் விடுத்தனன். கங்கையும் வெதும்பி சரவணத்தில் சேர்த்தாள்.  ஆண்டு மாலயனாதி வானவர்க்கும் எட்டாத எம்பெருமான் அளவிட முடியாத கருணையால் திருவருவம் கொண்டு பலப்பல ஆடல்கள் புரிந்தனர்.

போற்றலர் புரம் அடு புனித நாயகன்
ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால்
ஏற்றது ஓர் சான்று, வண் எரியைத் தந்ததும்
சாற்ற அரும் கருணையில் தலைமை ஆனதே.

என்று இவை பற்பல இயம்பி, இன் இனிப்
பொன்றினர் அவுணர்கள் புலம்பு நம் குறை
நன்று இவண் முடிந்தது, நாமும் அத்தடம்
சென்றிடுவாம் எனச் செப்பினார் அரோ.

உருப்பம் அது ஆகிய ஒளிறு தீஞ்சுடர்
தரிப்பதோர் மருத்துவன்தம்முன் சென்றிடத்
திருப்பயில் மால் முதல் தேவர் வெள்ளியம்
பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார்.

இறத்தலும் கன்னல் ஒன்று எரியின் தீஞ்சுடர்
பொறுத்திடல் அரிது எனப் புலம்பிக் காலினோன்
மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால்
திறற்படு வன்னிதன் சென்னி சேர்த்தினான்.

சேர்த்தலும் ஒருபதம் தீயின் பண்ணவன்
வேர்த்து உடல் புழுங்குற மெலிவில் தாங்கியே
பேர்த்து ஒரு பதம் இடப் பெறாது, வல்லைபோய்
ஆர்த்திடு கங்கையின் அகத்து உய்த்தான் அரோ.

கூர்சுடர்ப் பண்ணவன் கொடுவந்து உய்த்திடும்
ஆர்சுடர்த் தொகுதி வந்து அடைய, மூவெயில்
ஊர்சுடச் சிவந்தகண் ஒருவன் துப்பு உறழ்
வார்சடைக் கரந்து என வறந்த கங்கைநீர்.

அரன்அருள் முறையினை அறிந்து, கங்கைதன்
சிரமிசை ஏந்தியே சென்று ஒர் கன்னலில்
சரவணம் எனும் தடம் தன்னிற் சேர்த்தனள்,
மரை இதழ் ஆயிடை மல்கு உற்றாலென.

ஆவயின் காறும்வந்து, ரி அயன்முதல்
தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர்,
மேவர அணியதாம் விளைவு நாடியே
காவல்கொள் நிரப்புடைக் காதலோர் என.

ஆரணன், விண்ணகம், அச்சுதன், புவி,
வாரணன் முதலிய மாதிரத்து உளோர்
ஏரண அமரர்கள் எண் திக்கு ஆகியே
சீரணி சரவணம் சேர்ந்து போற்றினார்.

கங்கையும் ஒல்கப் புக்க
     கடுங்கனல் கடவுள் சோதி
அங்கு இரு மூன்றும் முன்னர்
     அம்மைவாழ் இமையச் சாரல்
தங்கிய கமலம் பூத்த
     சரவணம் புகலும், முக்கண்
புங்கவன் அருளால் தொன்மை
     போன்றது வறத்தல் இன்றி.

விண்ணிடை இழிந்த காலின்
     மேவரு கனலில் தோன்றும்
வண்ண ஒண் கமலம் செய்ய
     முளரியை மாறு அதாகத்
தண்ணளி யோடு நல்கித்
     தரித்து எனச் சரவணப் பேர்க்
கண்ணகன் பொய்கை ஈசன்
     கண்தழல் மிசைக்கொண்டு அன்றே.

அருவமும் உருவும் ஆகி,
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
     பிழம்பு அது ஓர் மேனி ஆகக்
கருணைகூர் முகங்கள் ஆறும்,
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு
     உதித்தனன் உலகம் உய்ய.      --- கந்தபுராணம்.

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் -  தந்து,

திருமுகங்கள் ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,  -  விரிபுவனம்

எங்கும் பரக்க, இமையோர் கண்டு அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால்  - அங்கண்

எடுத்து அமைத்து, வாயுவைக் "கொண்டு ஏகுதி"என்று, எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு

பூதத் தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று

அன்னவளும் கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப,  திருவுருவாய் - முன்னர்

அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

 கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!         ---  கந்தர் கலிவெண்பா.


தனி வனத்தினில் புன மறத்தியை....... திருமார்பா ---

களவியல் திருமணத்தை உலகிற்கு உணர்த்த எம்பிரான் வள்ளியம்மையைத் தனிவனத்தில் மணந்தருளினார்.

வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை,
     வேடம் மாற்றி வழிபடும் ...... இளையோனே!   --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன், புரம் நீறுஎழ
     வெயில் நகை தந்த புராரி, ...... மதனகோபர்
விழியினில் வந்து, பகீரதி மிசை வளரும் சிறுவா, வட
     விஜயபுரந்தனில் மேவிய ...... பெருமாளே.     --- (குடல்நிணம்) திருப்புகழ்.


குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி ---

திருவிடைக்கழி என்பது ஒரு சிறந்த முருகன் தலம். திருக் கடவூர் என்னும் திருத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. குரா மரத்தின் கீழ் ஆண்டவர் எழுந்தருளி உள்ளார். மிகவும் அழகிய மூர்த்தி. இந்த மூர்த்தியினிடம் அருணகிரியாருக்கு மிக்க அன்பு.  தரிசிக்க வேண்டிய திருத்தலம்.


கருத்துரை

முருகா!  தமிழ்ப்பொருள், தவப்பயன், மேலுலக இன்பம், முத்தி வீடு, சுவர்க்க வாழ்வு, அரச வாழ்வு என்னும் இந்த ஆறினையும் தந்து, உம்மைப் புகழும் அன்பையும் ஆற்றலையும் அருள்வீர்.
                                            


No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...