திருவிடைக்கழி - 0801. இரக்கும் அவர்க்கு






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரக்கும் அவர்க்கு (திருவிடைக்கழி)

முருகா!
பிறவிக் கடலைக் கடக்க,
தேவரீரது திருவடிப் புணையைத் தந்து அருளவேண்டும்.


தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத்
     தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான

இரக்குமவர்க் கிரக்கமிகுத்
தளிப்பனசொப் பனத்திலுமற்
     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித்
திரட்டையுடுத் திலச்சினையிட்
     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப்
பனிப்பிறையொப் பெனப்புயலொப்
     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப்
பவக்கடலைக் கடக்கஇனிக்
     குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க்
களத்தடையப் புடைத்துலகுக்
     கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற்
பகப்புரியிற் புகக்கமலத்
     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப்
புலக்கையினிற் கொழித்தமணிக்
     கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற்
சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
     கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து
அளிப்பன சொப்பனத்திலும் அற்று,
     எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர்எப் ...... புலவோர்என்று,

எடுத்து முடித் தடக்கை முடித்து,
இரட்டை உடுத்து, லச்சினை இட்டு,
     அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று, ...... இயல்மாதர்

குரக்கு முகத்தினை, குழலைப்
பனிப்பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு
     எனக் குறுகிக் கலைக்குள் மறைத் ...... திடுமானின்

குளப்படியில் சளப்படும் இப்
பவக்கடலைக் கடக்க, இனிக்
     குறித்து இருபொன் கழல்புணையைத் ...... தருவாயே.

அரக்கர் அடல் கடக்க, அமர்க்
களத்து அடையப் புடைத்து, லகுக்கு
     அலக்கண் அற, குலக்கிரி பொட்டு ...... எழ, வாரி

அனைத்தும் வறப்பு உற, சுரர் கற்-
பகப் புரியில் புக, கமலத்-
     தனை சிறையிட்டு இடைக்கழியில் ...... பயில்வோனே!

கரக் கரடக் களிற்று மருப்பு
உலக்கையினில் கொழித்தமணிக்
     கழைத் தரளத் தினைத் தினையில் ...... குறுவாளைக்

கணிக் குறவக் குறிச்சியினில்
சிலைக் குறவர்க்கு இலச்சை வரக்
     கயத்தொடு கைப் பிடித்தமணப் ...... பெருமாளே.


பதவுரை

      அரக்கர் அடல் கடக்க --- அரக்கர்களின் வல்லமையை அடக்க,
    
     அமர்க் களத்து அடையப் புடைத்து --- போர்க்களத்தில் அவர்களை நன்றாகப் புடைத்து,

     உலகுக்கு அலக்கண் அற --- உலக உயிர்கள் படும் துன்பம் நீங்கவும்,

     குலக் கிரி பொட்டு எழ --- உயர்ந்த கிரவுஞ்ச மலையானது பொடிபட்டுப் போகவும்

      வாரி அனைத்தும் வறப்புற --- கடல்கள் அனைத்தும் வறண்டு போகவும்,

     சுரர் கற்பகப் புரியில் புக --- தேவர்கள் தமது கற்பக உலகத்தில் குடியேறவும்  (திருவிளையாடல் புரிந்ததோடு),

     கமலத்தனைச் சிறையிட்டு --- தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனைச் சிறையில் இட்டும்,

     இடைக்கழியில் பயில்வோனே --- அன்பர்கள் வேண்டுதலுக்கு இரங்கி, திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருந்து அருள் பாலிப்பவரே!

      கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை --- துதிக்கையையும், கன்னமத நீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, கொழித்து எடுக்கப்பட்ட இரத்தினங்களையும், மலைநாட்டில் உள்ள மூங்கிலில் பிறந்த முத்தையும் தினையைக் குத்துவது போல குற்றி விளையாடுபவளான வள்ளிநாயகியை,

      கணிக் குறவக் குறிச்சியினில் --- குறி சொல்லுகின்ற குறவர்கள் வாழுகின்ற மலையில் வாழுகின்ற

     சிலை குறவர்க்கு இலச்சை வர --- வில்லை ஏந்திய குறவர்கள் கூச்சப்படும்படி

     கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே --- (மூத்த பிள்ளையார் ஆகிய) யானையின் உதவியோடு கைப்பிடித்துத் திருமணம் புணர்ந்த பெருமையில் மிக்கவரே!

      இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன --- இல்லை என்று வந்தவர்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்குத் தம்மிடத்தில் உள்ள பொருளை மிகுதியாக அளிப்பது என்பதை

     சொப்பனத்திலும் அற்ற எனக்கு --- கனவிலும் கூடப் பயின்று அறியாத எனக்கு,

      இயலுக்கு --- இயல் தமிழுக்கும்,

     இசைக்கு --- இசைத் தமிழுக்கும்,

     எதிர் எப் புலவோர் என்று எடுத்து --- எனக்கு எதிரான புலவர்கள் ஆர் உள்ளனர் என்று அகங்காரத்துடன் பாடல்களைப் பாடி.

     முடித் தடக் கை முடித்து --- தலைமுடியையும் பருத்த கைகளையும் அலங்கரித்து,

     இரட்டை உடுத்து --- அரை ஆடை, மேலாடை என இரண்டு ஆடைகளை உடுத்து,

     இலைச்சினை இட்டு --- கைவிரல்களில் முத்திரை மோதிரம் அணிந்து,

      அடைப்பை இட --- வெற்றிலைப் பெட்டியை ஒருவர் ஏந்தி என் பின்னே வர,

     ப்ரபுத்துவம் உற்று --- தனிப் பெரும் தலைவன் என்னும்படியாக விளங்கி,

     இயல் மாதர் குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு எனக் குறுகி --- எதிர்ப்பட்ட மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த பிறை நிலவுக்கு ஒப்பு என்றும், அவரது கூந்தலை மேகத்துக்கு ஒப்பு என்றும் புகழ்ந்து, அவர்களை அணைந்து,

      கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம் இடும் --- ஆடைக்குள் மறைந்துள்ள மானின் குளம்பு போன்ற பெண்குறியில் ஆசைவைத்து, மனக்கலக்கத்தை அடைகின்ற,

     இப் பவக் கடலைக் கடக்க --- பிறவியாகிய இந்தக் கடலைக் கடக்க,

     இனிக் குறித்து --- அடியேனை இனியாவது குறிக்கொண்டு,

     இரு பொன் கழல் புணையைத் தருவாயே --- தேவரீருடைய அழகிய திருவடியாகிய புணையைத் தந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

         அரக்கர்களின் வல்லமையை அடக்க, போர்க்களத்தில் அவர்களை நன்றாகப் புடைத்து, உலக உயிர்கள் படும் துன்பம் நீங்கவும், உயர்ந்த கிரவுஞ்ச மலையானது பொடிபட்டுப் போகவும், கடல்கள் அனைத்தும் வறண்டு போகவும், தேவர்கள் தமது கற்பக உலகத்தில் குடியேறவும்  (திருவிளையாடல் புரிந்ததோடு), தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனைச் சிறையில் இட்டும், அன்பர்கள் வேண்டுதலுக்கு இரங்கி, திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருந்து அருள் பாலிப்பவரே!

     துதிக்கையையும், கன்னமத நீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, கொழித்து எடுக்கப்பட்ட இரத்தினங்களையும், மலைநாட்டில் உள்ள மூங்கிலில் பிறந்த முத்தையும் தினையைக் குத்துவது போல குற்றி விளையாடுபவளான வள்ளிநாயகியை,  குறி சொல்லுகின்ற குறவர்கள் வாழுகின்ற மலையில் உள்ள வில்லை ஏந்திய குறவர்கள் கூச்சப்படும்படி, மூத்த பிள்ளையார் ஆகிய யானையின் உதவியோடு கைப்பிடித்துத் திருமணம் புணர்ந்த பெருமையில் மிக்கவரே!

     இல்லை என்று வந்தவர்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்குத் தம்மிடத்தில் உள்ள பொருளை மிகுதியாக அளிப்பது என்பதைக் கனவிலும் கூடப் பயின்று அறியாதவன் நான். இயல் தமிழுக்கும், இசைத் தமிழுக்கும், எனக்கு எதிரான புலவர்கள் ஆர் உள்ளனர் என்று அகங்காரத்துடன் பாடல்களைப் பாடி, தலைமுடியையும் பருத்த கைகளையும் அலங்கரித்து, அரை ஆடை, மேலாடை என இரண்டு ஆடைகளை உடுத்து, கைவிரல்களில் முத்திரை மோதிரம் அணிந்து, வெற்றிலைப் பெட்டியை ஒருவர் ஏந்தி என் பின்னே வர, தனிப் பெரும் தலைவன் என்னும்படியாக விளங்கி, எதிர்ப்பட்ட மாதர்களின் குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த பிறை நிலவுக்கு ஒப்பு என்றும், அவரது கூந்தலை மேகத்துக்கு ஒப்பு என்றும் புகழ்ந்து, அவர்களை அணைந்து, ஆடைக்குள் மறைந்துள்ள மானின் குளம்பு போன்ற பெண்குறியில் ஆசைவைத்து, மனக்கலக்கத்தை அடைகின்ற பிறவியாகிய இந்தக் கடலைக் கடக்க, அடியேனை இனியாவது குறிக்கொண்டு, தேவரீருடைய அழகிய திருவடியாகிய புணையைத் தந்து அருள வேண்டும்.


விரிவுரை

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற எனக்கு ---

இறைவனுடைய கருணையை நாடுகின்ற ஒவ்வொருவரும் தாங்கள் கருணை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.  இனத்தைக் கொண்டு இனத்தைப் பெறவேண்டும். கருணை உள்ள இடத்திலேயே கருணை நிரம்பும். பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு மனம் பொறாது இரக்கம் கொண்டு,  துன்பத்தினை அகற்ற முற்படுதலே கருணையின் செயல்.

"தர்மம் சர" என்று வேதத்தின் தொடக்கத்திலும், "அறம்செய விரும்பு" என்று ஆத்திசூடியின் தொடக்கத்திலும், தருமமானது வற்புறுத்தி உபதேசிக்கப்பட்டது. உயிர்க்கு உறுதுணையாக என்றும் நின்று உதவுவது அறம் ஒன்றே ஆகும்.  "பொன்றுங்கால் பொன்றாத் துணை" என்பார் திருவள்ளுவ நாயனார்.

பொருள் தம்மிடம் உள்ளது என்பதை மனதார உணர்ந்து இருந்தும்,  கொஞ்சமும் நாணம் இல்லாமல், இல்லை என்று வந்தவருக்கு இல்லை என்று சொல்லுவது பாவம். இல்லை என்று சொன்னால், உள்ளதும் இல்லாமலே போகும். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார் நாயனார். "நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்" என்பது உலகநீதி.

அந்தக் காலத்துப் புலவர்கள் பலர்க்கு, நல்ல சொல்வளமும் கற்பனைத் திறனும் அமைந்திருந்தன. ஆயினும் அவர்கள் புதிய நூல்களைப் படைத்து மகிழ்ச்சியோடு வாழ முடியவில்லை. வாழ்க்கையில் வறுமை அவர்களை வாட்டியது. தம் பாடல்களை மக்களிடம் பாடி, அதனால் வயிறு வளர்க்க முடியாத நிலை இருந்தது. செல்வர்களைப் புகழ்ந்து பாடினார்கள். செல்வந்தர்கள் பெரிதும் உதவ முன் வந்தது இல்லை. அவர்களின் பொருளுதவியைப் பெறவும் முடியவில்லை.அதனால் மனம் நொந்து வாடிய புலவர்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது பின்வரும் பாடல்;-

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
காடு எறியும் மறவனை நாட் ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
போர்முகத்தை அறியானைப் புலி ஏறு என்றேன்,
மல்ஆரும் புயம் என்றேன் சூம்பல் தோளை,
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்,
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

காலம் எல்லாம் பலரைப் புகழ்ந்து பாடினேன். இல்லாதவை எல்லாம் சொல்லிப் பாடி வந்தேன். எனக்குக் கிடைத்த மறுமொழியும் இல்லை என்றே ஆனது.

எந்த நலமும் இல்லாதாரைப் புகழ்ந்து பாடியதும் பாவம்.

பாடி வந்தவரின் வறுமை நிலையை அறிந்தும், தம்மிடம் உள்ள பொருளில் சிறிதளவாவது ஈயாமல் இருந்ததும் பாவம்.

மரணம் என்பது எப்படி எண்ணினாலும் இனிமை தரக் கூடியது அல்ல. அப்படிப்பட்ட மரணமும் இனிமை தரும் என்கின்றார் நாயனார். எப்போது?  பிறருக்குக் கொடுத்து உதவ முடியாத நிலை உண்டாகும் போது.

சாதலின் இன்னாதது இல்லை, இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை.

இறப்பை விடக் கொடுமையானது இல்லை. யாரும் இறக்க விரும்பார். அதனாலேயே மரண பயம் எல்லோருக்கும் உண்டு. தம்மிடத்தில் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவாத நிலை உண்டாகும்போது இறந்து விடுவதே இனிமையானது என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

உயிர்கட்கு மூன்று நோய்கள் இருக்கின்றன.

1. உடம்புக்கு இடையறாது வருகின்ற நோய் பசி.
2. உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற நோய் காமம்.
3. உயிருக்கு என்றும் அகலாது வருகின்ற நோய் பிறவி.

பசிநோய், காமநோய், பிறவிநோய் என்று கூறுவர்.

இவற்றுள் பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள் போராடுவார்கள். பசி நோயுடன் சில மணி நேரம் போராட முடியாது.

பசி வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து போய்விடும்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.                    --- ஔவையார்.

பசி வந்து அடைந்தவுடன் நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து சோர்ந்து விடுகின்றன. ஆகவே, பசி காரணமாக வந்து இரந்தவருக்கு, இல்லை என்று சொல்லாமல் உணவு தருவதே மேலான அறமாகும்.

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே  --- மணிமேகலை

ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர் செல்வம் எல்லாம்
அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும் நட்பும்
நன்று என்று இரு, நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்று என்று இரு, மனமே! உனக்கு உபதேசம் இதே
                                                          --- பட்டினத்தடிகள்.

      ஐயம் இட்டு உண்”              --- ஒளவையார்.

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன் உரை தானே.     --- திருமூலர்.

பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு,பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே. 
                                                                                 --- கந்தர் அலங்காரம்.

பசித்தவர்க்கு அன்னம் அமைதியாகக் கொடுக்க வேண்டும். அன்புடன் தரவேண்டும். இன்னுரை கூறி, அகமும் முகமும் மலர்ந்து தரவேண்டும்.

பசித்தவனுக்கு அன்னம் தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும்; உள்ளம் குளிரும். உணர்வு குளிரும். உயிரும் குளிரும். உயிருக்கு உயிரான சிவம் குளிரும்.

வரவர கிழத்தனம் வருகின்றது. இளமை நீங்குகின்றது. இது உலகியற்கை. சிலர் அறியாமையால் தமக்கு மேலும் இளமை வருவதாக நினைந்து, தம்மிடத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும், இம்மியளவு கூடச் செலவழிக்காமலும், அறச் செயல்களைச் செய்யாமலும் இறுகப் பிடித்து வைத்திருப்பார்கள்.

வறியவர்க்கு வழங்குவது மிகமிகச் சிறந்த புண்ணியம்.  வறியவர் வயிற்றில் விழுந்த ஒரு அரிசி, மறுபிறப்பில் ஒரு பொற்காசாக வந்து உதவும்.

அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.                 ---  திருக்குறள்.

எப்போதும் தரும சிந்தையுடன் இருத்தல் வேண்டும். இயல்பு உள்ளவர்கள் நிரம்பவும் அறம் செய வேண்டும்.

கோச்செங்கட்சோழன், சுந்தரமாற பாண்டியன், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய மன்னர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்த அரண்மனை, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் முதலியன ஒன்றேனும் இல்லை. ஆனால், அவர்கள் செய்த அறச் செயல்களாகிய திருக்கோயில்கள் இன்றும் நின்று நிலவுகின்றன. அழியாமல் நிற்பது அறம் ஒன்றே ஆகும்.

உலக முழுவதும் ஒடுங்கிய போது, அறம் ஒன்றே ஒடுங்காது விடை வடிவாக நின்று இறைவனைத் தாங்கியது. உலகங்களை எல்லாம் தாங்கும் இறைவனையும் தாங்கும் ஆற்றல் அறத்திற்கு உண்டு.

இறைவனுக்கு அறவன் என்ற திருநாமமும் உண்டு.  காரைக்கால் அம்மையார் இறைவனை, "அறவா" என்று விளிக்கின்றார்கள். "அற ஆழி அந்தணன்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறக் கடலாகிய ஆண்டவனை அடைவதற்கு வழி அறமே ஆகும்.

இயல்பு இல்லாதவர்கள் ஒல்லும் வகையால் இம்மி அளவேனும் அறம் செய்தல் வேண்டும்.

"அவர் ஒருவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார். அவர் பணத்தையும் ஒருவருக்குத் தர மாட்டார்" என்று சிலரைச் சுட்டி உலகம் உரைக்கும். அப்படிப்பட்டவர்கள் இருப்பதை விட மறைவது நல்லது. எனெனில், கல்லும் ஆலயம் ஆகின்றது.  கட்டம் வயலுக்கு உரமாகின்றது. புல்லும் கூட்டுவதற்கு ஆகின்றது. நாய் வேட்டைக்கு உதவுகின்றது. கழுதை பொதி சுமந்து உபகரிக்கின்றது. எட்டியும் மருந்துக்கு ஆகின்றது.  துரும்பும் பல் குத்த உதவுகின்றது. மனிதனாகப் பிறந்து ஒருவருக்கும் உதவாமல் இருப்பானாயின், அவன் இருப்பதனால் பயனில்லை. 

பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவது இல்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததுஎன்று கொடுக்கஅறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!

நாயாய் பிறந்திடில் நல்வேட்டைஆடி நயம்புரியும்,
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சி ஏகம்பனே!  ---  பட்டினத்தார்.
 
கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்
     கனிகள்உப காரம் ஆகும்;
சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம்
     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்,
மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
     வாழ்ந்தாலும் என்உண் டாமே?   --- தண்டலையார் சதகம்.

ஆதலினால், மிகமிகக் குறைந்த அளவிலாவது ஒவ்வொருவரும் வறியார்க்கு உதவுதல் வேண்டும். உதவுவதற்கு ஆற்றல் இல்லையேல், உதவவேண்டும் என்ற நினைவாவது இருக்கவேண்டும். அந்த நினைவும் பனை அளவு இல்லை என்றாலும்,  தினையளவாவது இருத்தல் வேண்டும். இல்லை என வந்தோர்க்கு உதவ வேண்டும் என்னும் நினைவு கனவிலும் இல்லை என்கின்றார் அடிகளார். அவ்வளவு வன்மையான மனம் ஒருவருக்கு இருத்தல் கூடாது என்பதை இதனால் அறிவிக்கின்றார்.

தினை திறிய தானியம். ஆதலினாலேயே, "பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி" என்று அடிகளார் கல்லும் கரையுமாறு பிறிதொரு திருப்புகழில் உபதேசிக்கின்றார்.
  
வையில் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவுஅளவு ஏனும் பகிர்மின்கள், உங்கட்கு இங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல்
கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே.   ---  கந்தர் அலங்காரம்.

எமதுபொருள் எனுமருளை இன்றி, குன்றிப்
     பிளவளவு தினையளவு பங்கிட்டு உண்கைக்கு
     இளையுமுது வசைதவிர, இன்றைக்கு அன்றைக்கு.....எனநாடாது
இடுககடிது எனும்உணர்வு பொன்றிக் கொண்டிட்
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
     எனஅகலும் நெறிகருதி நெஞ்சத்து அஞ்சிப் ...... பகிராதோ..
                                                                        --- (அமுதுததி) திருப்புகழ்.  

அடிகளார் சிறிதாவது தருமம் செய்யுமாறு வற்புறுத்தி உபதேசிக்கின்றனர்.

இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து ---

பின்வரும் திருப்புகழில் அடிகளார் "பகரும் முத்தமிழ்ப் பொருள்" என்றார். முத்தமிழ் என்பது, இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்னும் மூன்று கூறுகளை உடையது. முத்தமிழின் பொருளாக உள்ள இறைவனை உணர்வதற்கு முத்தமிழ் உதவும்.

முத்தமிழில் உள்ள அருள் நூல்கள் அநேகம். அவற்றைப் பொருள் உணர்ந்து ஓதித் தெளியவேண்டும். நூல்களை ஓ, ஓத நமக்கு உள்ள அறியாமை வெளிப்படும். உயிர்க்கு இயல்பாகவே உள்ள ஆணவமலம் காரணமாக, நான் கற்றேன் என்னும் ஆணவம் மிகும்.  எனக்கு நிகர் யாரும் உண்டோ என்னும் செருக்கு மேலிடும். இதனால் பயனில்லை. "கற்றாரை யான் வேண்டைன், கற்பனவும் இனி அமையும்" என்றார் மணிவாசகப் பெருமான். "கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்; கற்றும் அறிவு இல்லாத கர்மத்தை என் சொல்லுவேன்" என்றார் தாயுமான அடிகளார்.

பல நூல்களையும் தேடித் தேடிக் கற்றும் உண்மை அறிவு விளங்கவில்லை என்றால் பயனில்லை. நான் என்னும் கசடு உள்ளத்தில் இருந்து நீங்கவேண்டும் என்னும் கருத்தில் திருவள்ளுவ நாயனார், "கசடு அறக் கற்க" என்றார்.

"ஆடு தழை தின்றால் போல் கற்றதும் கேட்டதும் ஆகி, கலக்கு உற்றேனே" என்னும் தாயுமான அடிகளாரின் அருள் வாக்கைச் சிந்திக்க வேண்டும்.

இரட்டை உடுத்து ---

இடுப்பில் உடுத்தும் ஆடை, மேல் அணியும் ஆடை என இரண்டு ஆடைகளை உடுத்த வேண்டும்.

ஒற்றை ஆடையில் இருந்தால் மரியாதை இல்லை. மரியாதைக்கு உரியவன் என்பதைக் காட்ட இரட்டை உடுத்துவது உண்டு. உடம்பை உறைக்கவும் மேலாடை உடுத்துவது உண்டு.

மேலாடை இல்லையானால் மேன்மை இல்லை என்பதை, நையாண்டிப் புலவர் பாடிக் காட்டி உள்ளதை அறிக.

"மேலாடை இன்றிச் சவை புகுந்தால், இந்த மேதினியோர்
நூல்ஆயிரம் படித்தாலும் எண்ணார், நுவல் பாற்கடலோ
மால் ஆனவன் அணி பொன்னாடை கண்டு மகளைத் தந்தே,
ஆலாலம் மீ தந்தது தோல்ஆடை சுற்றும் அரன் தனக்கே".

இப் பாடலின் பொருள் --- உடம்பின் மீது ஒரு மேலாடை இல்லாமல், ஒருவன் ஒரு சபைக்குள்ளே புகுந்தால், அவன் ஆயிரம் நூல்களைக் கற்று இருந்தாலும், இந்த உலகத்தவர் மதிப்பது இல்லை. சிறப்பித்துச் சொல்லப்படும் பாற்கடலும் கூட, பொன்னாடை அணிந்து இருந்த திருமாலுக்குத் திருமகளைத் தந்து, தோல் ஆடையை அணிந்துள்ள சிவபெருமானுக்கு ஆலகால விடத்தைத் தந்தது.

வள்ளற்பெருமான் பாடுமாறு காண்க.

"நேரா அழுக்குத் துணி ஆகில், உன்தனை நேரில்கண்டும்
பாராதவர் என நிற்பார், உடுத்தது பட்டு எனிலோ
வாராது இருப்பது என்? வாரும் என்பார், இந்த வஞ்சகர்பால்
சேராது, நன்னெஞ்சமே ஒற்றியூரனைச் சேர் விரைந்தே".

இலைச்சினை இட்டு ---

இலச்சினை - முத்திரை.

கைவிரல்களில் முத்திரை மோதிரம் அணிந்து,

அடைப்பை இட ---

அடைப்பை - வெற்றிலைப் பை.

வெற்றிலைப் பையை ஒருவர் ஏந்தி தன் பின்னே வர, ஒருவது மிகுந்த மரியாதைக்கு உரியது.

ப்ரபுத்துவம் உற்று ---

தனிப் பெரும் தலைவன் என்னும்படியாக விளங்கும் புலவர்களின் பிரபாவத்தை அடிகளார் பின்வரும் பிரமாணங்களின் மூலும் விளக்குமாறு காண்க.

நிகமம் எனில் ஒன்றும் அற்று, நாடொறு
     நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
     நிழலர், சிறு புன்சொல் கற்று, வீறு உள ......பெயர்கூறா,
நெளிய முது தண்டு சத்ர சாமர
     நிபிடம்இட வந்து, கைக்கு மோதிரம்,
     நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் ...... உடையோராய்,

முகமும் ஒரு சம்பு மிக்க நூல்களும்,
     முதுமொழியும் வந்து இருக்குமோ எனில்,
     முடிவில் அவை ஒன்றும் அற்று, வேறு ஒரு ......நிறமாகி
முறியும் அவர் தங்கள் வித்தை தான், இது
     முடிய உனை நின்று பத்தியால் மிக
     மொழியும், வளர் செஞ்சொல் வர்க்கமே வர ......அருள்வாயே.
                                                                  ---  திருப்புகழ்.

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனின் உரை பானுவாய் வியந்து உரை
     பழுதில் பெரு சீலநூல்களும், தெரி ...... சங்கபாடல்
பனுவல், கதை, காவ்யம் ஆம் எண் எண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை என்கிற
     பழமொழியை ஓதியே உணர்ந்து,பல் ......சந்தமாலை,

மடல்,பரணி, கோவையார், கலம்பகம்
     முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்,
     வகை வகையில் ஆசு சேர் பெருங்கவி ..... சண்டவாயு
மதுரகவி ராஜன் நான் என், வெண்குடை,
     விருதுகொடி, தாள மேள தண்டிகை,
     வரிசையொடு உலாவும் மால் அகந்தை ....தவிர்ந்திடாதோ?
                                                                  --- திருப்புகழ்.

இயல் மாதர் குரக்கு முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு எனக் குறுகி ---

விலைமாதர் தம்மை மிகப் புனைந்து அழகு செய்துகொள்வர். காமவயப்பட்டோர் அவரது அழகில் மயங்குவர். மேற்பூச்சு உள்ள முகத்தை, சந்திர பிம்பம் என்றும், நறுமணம் கூடிய நெய் பூசி முடித்து உள்ள கூந்தலைப் பார்த்து, மழைமேகம் என்றும் மயங்குவர்.

நெறிதரு குழலை அறல் என்பர்கள்,
நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,
நிலவினும் வெளிது நகை என்பர்கள்,
நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,
அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,
அடிஇணை கமல மலர் என்பர்கள்,
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர், அமையும், அவர் என் செய?
 
மறிமழு உடைய கரன் என்கிலர்,
மறலியை முனியும் அரன் என்கிலர்,
மதிபொதி சடில தரன் என்கிலர்,
மலைமகள் மருவு புயன் என்கிலர்,
செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,
திருநடம் நவிலும் இறை என்கிலர்,
சிவகதி அருளும் அரசு என்கிலர்,
சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே.
                                --- கோயில் நான்மணி மாலை.

இரசபாகு ஒத்தமொழி, அமுர்த மாணிக்க நகை,
     இணைஇலா சத்தி விழியார், பசும்பொன் நிரர்,
எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச்செயல்கள்,
     எழுத ஒணாதப் பிறையினார், அரும் புருவர்,
எழுது தோடு இட்டசெவி, பவள நீலக்கொடிகள்
     இகலி ஆட, படிகமொடு, டும் பொன்உரு, .....திங்கள்மேவும்

இலவு தாவித்த இதழ், குமிழை நேர் ஒத்தஎழில்
     இலகு நாசி, கமுகு மால சங்கின் ஒளி
இணைசொல் க்ரீவ, தரள இன, ஒள் தாலப்பனையினி
     இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்தஅடி
இணைஇல் ஆனைக்குவடு என் ஒளிநிலா துத்திபடர்
          இகலி ஆரத்தொடையும் ஆரும் இன்ப ரச ......தங்கமார்பின்

வரிகள் தாபித்த முலை, இசைய ஆலில் தளிரின்
     வயிறு, நாபிக் கமலமாம் எனும் சுழிய
மடு, உரோமக் கொடி என் அளிகள்சூழ் வுற்றநிரை
     மருவுநூல் ஒத்தஇடை, ர் சம்பை அல்குல்,
மணம் எலாம் உற்ற நறை கமலபோதுத் தொடை என்
     வளமைஆர்புக் கதலி சேருசெம் பொன் உடை ..... ரம்பைமாதர்

மயல்அதால் இற்ற, டியென் அவர்கள் பால் உற்றுவெகு
     மதன பாணத்தினுடன் மேவி, மஞ்சம் மிசை
வதனம்வேர் வுற்று விர, முலைகள் பூரிக்க, மிடர்
     மயில்புறா தத்தைகுயில் போல்இலங்கு அமளி
வசனமாய் பொத்திஇடை துவள மோகத்துள் அமிழ்
     வசமெலாம் விட்டும் அற வேறு சிந்தனையை ..... தந்துஆள்வாய்.
                                                                ---  திருப்புகழ்.

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள் எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் திரிந்தும்,
தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை
இசையும் கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும் வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்,
நீட்டவும் முடங்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அம் கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை
பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும்
முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்
தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்;
தோலும் இறைச்சியும் துதைந்து சீ பாயும்
காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கட வழி, தொளை பெறு வாயில்,
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால் காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடை கழி வாயில்,

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணைஅடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.

என்று மாதர் மேல் வைத்த ஆசையை மாற்றி, இறைவன் மேல்
ஆசை வைக்குமாறு பட்டினத்தடிகள் வேண்டுகின்றார்.

வள்ளல் பெருமான் நமக்கு அறிவுறுத்துமாறு காண்க....

.....           .....           .....       மந்திரத்தில்
பேய்பிடித்தால் தீர்ந்திடும்,ப் பெண்பேய் விடாதே,செந்
நாய்பிடித்தால் போலும் என்று நாடிலையே, - ஆய்வில்உன்றன்

ஏழைமை என் என்பேன், இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே, - ஊழ்அமைந்த

கார் இருளில் செல்லக் கலங்குகின்றாய், மாதர்சூழல்
பேர் இருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்

எண்வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய், ஏந்திழையார்
கண்வாள் அறுப்பக் கனிந்தனையே, - மண்வாழும்

ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய், மாதர்முலை
ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே - சீரான

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய், மாதர்முலை
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே, - பொற்புஒன்றும்

சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச்
சிங்கம் எனில் காணத் திரும்பினையே, - இங்குசிறு

பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய், மாதர் அல்குல்
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே, - ஆம்பண்டைக்

கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ, மாதர் அல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே, - கீழ்க் கதுவும்

கல் என்றால் பின்னிடுவாய், காரிகையார் கால்சிலம்பு
கல் என்றால் மேல் எழும்பக் கற்றனையே, - அல்அளகம்

மையோ கருமென் மணலோ என்பாய், மாறி
ஐயோ நரைப்பது அறிந்திலையோ? - பொய் ஓதி

ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய், உள்எலும்புஆம்
வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே, - கண்புருவம்

வில் என்றாய், வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
சொல் என்றால் சொல்லத் துணியாயே, - வல் அம்பில்

கண் குவளை என்றாய், கண்ணீர் உலர்ந்துமிக
உள்குழியும் போதில் உரைப்பாயே, - கள்குலவு

மெய்க்குமிழே நாசி என வெஃகினையால், வெண்மலத்தால்
உய்க்குமிழுஞ் சீந்தல் உளதேயோ? - எய்த்தல் இலா

வள்ளை என்றாய் வார்காது, வள்ளைதனக்கு உள்புழையோடு
உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ? - வெள்ளைநகை

முல்லை என்றாய், முல்லை முறித்து ஒருகோல் கொண்டுநிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ? - நல்லதொரு

கொவ்வை என இதழைக் கொள்கின்றாய், மேல்குழம்பும்
செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே, - செவ்வியகண்

ஆடி எனக் கவுட்கே ஆசை வைத்தாய், மேல்செழுந்தோல்
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே? - கூடியதோர்

அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய், ஏழ்துளைகள்
எந்த மதிக்கு உண்டு? தனை எண்ணிலையே, - நந்து எனவே

கண்ட மட்டும் கூறினை அக் கண்ட மட்டும் அன்றி, உடல்
கொண்டமட்டும் மற்று அதன்மெய்க் கூறு அன்றோ, - விண்டவற்றைத்

தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய், அவ்வேய்க்கு
மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே? - நாளொன்றும்

செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய், அம்மலர்க்குப்
பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே? - மங்காத

செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்புஇங்கு
எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே? - செவ்வைபெறும்

செப்பு என்றனை முலையை, சீசீ சிலந்தி அது
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? - வப்பு இறுகச்

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த்துவண்டு
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே, - தாழ்ந்த அவை

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப்
புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? - திண்கட்டும்

அந் நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும்
செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே, - அந்நீரார்

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார், சான்றாக
வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே? - தண்ணீர்மைச்

சாடி என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்துஇடும் மேல்
மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ? - மேடு அதனை

ஆல் இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு, ன் சொல்லுதியே - நூல் இடைதான்

உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக்
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே, - விண்டுஓங்கும்

ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை, சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே, தாழ்ங்கொடிஞ்சித்

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை, அன்றுசிறு
நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே,- ஆராப்புன்

நீர் வீழியை ஆசை நிலை என்றாய், வன்மலம்தான்
சோர் வழியை என்என்று சொல்லுதியே, - சார்முடைதான்

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப் புண் என்று விடுத்திலையே, - ஊறு ஆக்கி          

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி, மற்று அதன்மேல்
சீலை இடக் கண்டும் தெரிந்திலையே, - மேலையுறு

மேநரகம் என்றால் விதிர்ப்புறு நீ, மாதர் அல்குல்
கோ நரகம் என்றால் குலைந்திலையே, - ஊனம் இதைக்

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே, - அண்டாது

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய், மற்று அதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே, - மாதர் அவர்  

தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய், தண்டுஊன்றி
வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே, - நன்கிலவாய்

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய், புலால் சிறிதே
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே - சேந்த அடி

தண் தாமரை என்றாய், தன்மை விளர்ப்பு அடைந்தால்
வெண் தாமரை என்று மேவுதியோ? - வண் தாரா

மேல் நாட்டுஞ் சண்பகமே மேனி என்றாய், தீயிடுங்கால்
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ? - வானாட்டும்

மின் தேர் வடிவு என்றாய், மேல்நீ உரைத்த உள் ஈது
ஒன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண், - ஒன்றாச்சொல்

வேள் வாகனம் என்றாய், வெய்யநமன் விட்டிடும் தூது
ஆள்வாகனம் என்றால் ஆகாதோ? - வேள் ஆனோன்

காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய், காலன் என்போன்
காகளம் என்பார்க்கு என் கழறுதியே? - நாகளவும்

சாயை மயில் என்றே தருக்குகின்றாய், சார்பிரம
சாயை ஃது என்பார்க்கு என் சாற்றுதியே, - சேயமலர்

அன்ன நடைஎன்பாய், அஃது அன்று, ருந்துகின்ற
அன்னநடை என்பார்க்கு என் ஆற்றுதியே, - அன்னவரை

ஓர ஓவியம் என்பாய், ஓவியமேல் ஆங்கு எழுபத்து
ஈராயிர நாடி யாண்டு உடைத்தே? - பாரார்ந்த

முன்னுமலர்க் கொம்பு என்பாய், மூன்றொடரைக் கோடியெனத்
துன்னும் உரோமத் துவாரம் உண்டே? - இன் அமுதால்

செய்த வடிவு என்பாய்,ச் செய்கை மெய்யேல், நீ அவர்கள்
வைதிடினும் மற்று அதனை வையாயே, - பொய்தவிராய்

ஒள்ளிழையார் தம் உரு ஓர் உண்கரும்பு என்றாய், சிறிது
கிள்ளி எடுத்தால் இரத்தம் கீழ்வருமே, - கொள்ளும் அவர்

ஈடில் பெயர் நல்லார் என நயந்தாய், நாய்ப்பெயர் தான்
கேடில் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ? - நாடில்அவர்

மெல்இயலார் என்பாய், மிகு கருப்ப வேதனையை
வல்இயலார் யார் பொறுக்க வல்லார்காண்? - வில்லியல்பூண்

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய், வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே, - வேய்ந்தாங்கு

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய், வெம்புலிப்பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே, - சென்றாங்கு

நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய், கண்மூடி
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே, - ஒன்றாது

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல் அணைத்துக்
கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே, - பெண்டுஆனார்

வைதாலும் தொண்டு வலித்தாய், பிணத்தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே, - கைதாவி

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே, - வைத்தாடும்

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ, மற்றொழிந்து
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே - வஞ்சியரைப்

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய், வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே - சேர்த்தார் கைத்

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய், வன்பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே - நட்டாலும்

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய், தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே, - செவ்விதழ்நீர்

உண்டால் மகிழ்வாய் நீ, ஒண்சிறுவர் தம்சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே - கண்டு ஆகக்

கவ்வுகின்றாய் அவ் இதழை, கார் மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே, - அவ்இளையர்

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய், நீ வெறும்வாய்
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே, - முன்தானை

பட்டால் மகிழ்வு பதிந்தாய், பதைக்க அம்பு
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே, - கிட்டாமெய்த்

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய், செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன்உண்டே, - வேண்டி அவர்

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய், மற்ற அதைஓர்
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே, - தாக்கவர்க்காய்த்

தேட்டாண்மை செய்வாய், த் தேட்டாண்மையைத்தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே, - வாட்டாரைக்

கொண்டார் உடன் உணவு கொள்கின்றாய், குக்கலுடன்
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே - மிண்டு ஆகும்

இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய், புன்மலத்தை
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே, - மங்கையர்தம்

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய், ஈமம் அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே, - பூத்தாழ்வோர்

காட்டாக் குரல்கேட்பாய், கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே, - கோட்டாவி

ஆழ்ந்தார் உடன்வாழ ஆதரித்தாய், ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே - வீழ்ந்தார் உள்

வீட்டால் முலையும், எதிர் வீட்டால் முகமும் உறக்
காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே, - கூட்டாட்குச்

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே, - சைகை அது

கையால் ஒருசிலர்க்கும், கண்ணால் ஒருசிலர்க்கும்,
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே, - எய்யாமல்

ஈறு இகந்த இவ்வகையாய், இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல், அம்ம! குடர் குழம்பும்; - கூறும்இவர்

வாய் ஒருபால் பேச, மனம்ஒருபால் செல்ல, உடல்
ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்; - ஆயஇவர்

நன்று அறியார், தீதே நயப்பார், சிவதலத்தில்
சென்று அறியார், பேய்க்கே சிறப்பு எடுப்பார், - இன்று இவரை

வஞ்சம் என்கோ? வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்
புஞ்சம் என்கோ? மாநரக பூமி என்கோ? - அஞ்சுறும் ஈர்

வாள் என்கோ? வாய்க்கு அடங்கா மாயம் என்கோ? மண்முடிவு
நாள் என்கோ? வெய்ய நமன் என்கோ? - கோள்என்கோ?

சாலம் என்கோ? வான் இந்த்ர சாலம் என்கோ? வீறு ஆல
காலம் என்கோ? நின் பொல்லாக் காலம் என்கோ? - ஞாலம்அதில்

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,
மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்.....


கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம் இடும் இப் பவக் கடலைக் கடக்க, இனிக் குறித்து இரு பொன் கழல் புணையைத் தருவாயே ---

கலை - ஆடை.

மானின் குளப்பு அடி என்பது பெண்குறியினைக் குறிக்கும்.

சளப்பம் - மனக்கலக்கம்.

பவக் கடல் - பிறவியாகிய கடல்.

புணை - தெப்பம், மிதவை.

காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார்.

செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு, பற்று ஒன்று இன்றி,
கனியை நேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு, காமவான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி என்னே உய்யுமாறு என்று என்று எண்ணி,
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை,
முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்
கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

கடலில் வீழ்ந்தோர் கரை ஏறுதல் அரிது. பிறவியில் வீழ்ந்தோறும் முத்திக் கரையில் ஏறுதல் அரிது. அதனால் பிறவியைக் கடல் என்றார். 'பிறவிப் பெருங்கடல்' என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடலில் அலை ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அது போல, வாழ்வில் துன்பம் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், ஓயாது. அதனால் துன்பத்தை அலை என்றார். புயல் காற்று, கலக்கத்தைச் செய்யும், மகளிரின் தோற்றமும் கண்டாரைக் கலங்கச் செய்யும், அதனால் மகளிரைப் புயல் காற்று என்றார். சுறாமீன், தன் வாயில்பட்டாரை உள்ளே விழுங்கும். ஆசை வயப்பட்டோரும் அல்லலில் அழுந்துவர். அதனால் காமத்தைச் சுறாமீன் என்றார்.

தெப்பத்தைக் கொண்டு கடலைக் கடக்கலாம். திருவைந்தெழுத்து ஆகிய மந்திரத்தைக் கொண்டு பிறவியைக் கடக்கலாம். அதனால், ஐந்தெழுத்தைப் 'புணை' என்றார். 'வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து' என்றார் சேக்கிழார் சுவாமிகள். மீகாமன் தெப்பத்தால் மக்களைக் கரையில் சேர்க்கிறான். இங்கு முதல்வன் அஞ்செழுத்தால் மணிவாசகப் பெருமானை முத்தியில் சேர்த்தான் என்பதால், 'முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல் கரைகாட்டி ஆட்கொண்டாய்' என்றார்.

 இப்பிறவி என்னும் ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்
                 என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு,
      இருவினை எனும் திரையின் எற்றுண்டு, புற்புதம்
                 எனக்கொங்கை வரிசைகாட்டும்
 துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்ட மாருதச்
                 சுழல்வந்து வந்து அடிப்ப,
      சோராத ஆசையாம் கான் ஆறு வான்நதி
                 சுரந்தது என மேலும் ஆர்ப்ப,
 கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்
                 கைவிட்டு, மதிமயங்கி,
      கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே
                 கண் அருவி காட்டும் எளியேன்,
செப்பரிய முத்தியாம் கரை சேரவும் கருணை
                 செய்வையோ? சத்து ஆகி, என்
      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
                 தேசோ மயானந்தமே!

என்றார் தாயுமான அடிகளார்.

துன்பக் கடல்இடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்து ஏற்றும் திறத்தன, மாற்று அயலே
பொன்பட்டு ஒழுகப் பொருந்து ஒளி செய்யும், ப்பொய்பொருந்தா
அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே.

என்றருளினார் அப்பர் பெருமான்.
                                                                                                            
அறிவு இல் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்,
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினை எனும்
தொல்மீ காமன் உய்ப்ப, அந்நிலைக்
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பு எனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும்
துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்து,
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,
நிறை எனும் கூம்பு முரிந்து, குறையா
உணர்வு எனும் நெடும்பாய் கீறி,புணரும்
மாயப் பெயர்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த பொதி அவிழ் சடிலத்துப்
பை அரவு அணிந்த தெய்வ நாயக!
தொல் எயில் உடுத்த தில்லை காவல!
வமபு அலர் தும்பை அம்பலவாண! நின்
அருள் எனும் நலத்தார் பூட்டி,
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

என்று கோயில் நான்மணிமாலையில் அருளினார் பட்டினத்து அடிகள்.

 கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே ---  

கமலம் - தாமரை.

கமலத்தன் - தாமரை மலரில் வாசம் செய்யும் பிரமதேவன்.

குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கின்றி, சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து இருந்தார். அவர் அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து, வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.

கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.

பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றனன்.

முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.

பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.

“நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.

சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.

உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி" என்றனர்.

தாமரைத் தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர் பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக",ன்று உரைத்தான்.
                                                                                 ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலை குனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியும் உள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

எட்ட ஒணாத அக் குடிலையின் பயன் இனைத்து என்றே
கட்டுரைத்திலன் மயங்கலும், "இதன் பொருள் கருதாய்,
சிட்டி செய்வது இத் தன்மையதோ?" எனா, செவ்வேள்
குட்டினான், அயன் நான்குமா முடிகளும் குலுங்க,     
                                          --- கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோனொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       -- (பரவை) திருப்புகழ்.

ஆரணன் தனை வாதாடி ஓர் உரை
 ஓதுகின்றென, வாராது எனா, அவன்
 ஆணவம் கெடவே காவலாம் அதில்      இடும்வேலா
                                                                             --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”  --- கந்தர் கலிவெண்பா.


கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை, கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே ---

கரம் - யானையின் துதிக்கையைக் குறித்தது.

கரடம் - யானையின் கவுளில் இருந்து மதம் பாய்கின்ற தொளை.

மருப்பு - தந்தம்.

கழை - மூங்கில்.

"குற்றுவாளை" என்னும் சொல் இடைக்குறைந்து, "குறுவாளை" என வந்தது.

கணி - குறி சொல்லுதல். வேடர் மகளிர் குறி சொல்லுவர்.

இலச்சை - வெட்கம், நாணம், கூச்சம்.

துதிக்கையையும், கன்னமத நீர் பாய்வதும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, கொழித்து எடுக்கப்பட்ட இரத்தினங்களையும், மலைநாட்டில் உள்ள மூங்கிலில் பிறந்த முத்தையும் தினையைக் குத்துவது போல குற்றி விளையாடுபவளான வள்ளிநாயகியை,  குறி சொல்லுகின்ற குறவர்கள் வாழுகின்ற மலையில் வாழுகின்ற வில்லை ஏந்திய குறவர்கள் கூச்சப்படும்படி  மூத்த பிள்ளையார் ஆகிய யானையின் உதவியொடு கைப்பிடித்துத் திருமணம் புணர்ந்த பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் புணர்ந்த வரலாறு

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பர் ஆகிய தனது தமையனாரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

கருத்துரை

முருகா! பிறவிக் கடலைக் கடக்க, தேவரீரது திருவடிப் புணையைத் தந்து அருளவேண்டும்.









No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...