வீணர் பூண்டாலும்
வீணர் பூண்டாலும் தங்கம்
     வெறும் பொய்யாம், மேல் பூச்சு என்பார்;
பூணுவார் தராப் பூண்டாலும்,
     பொருந்திய தங்கம் என்பார்;
காணவே பனைக் கீழாகப் பால்
     குடிக்கினும், கள்ளே என்பார்;
 மாண் உலகத்தோர் புல்லர்
     வழங்கு உரை மெய் என்பாரே.

     ஏழை மக்கள் பொன்னால் ஆகிய அணிகலன்களை அணிந்து இருந்தாலும், அதனைக் காணும் உலகத்தவர், "அது பொய்யானது.  தங்கம் அல்ல. தங்க முலாம் பூசப்பட்டது" என்று சொல்லுவார்கள்.

     பொன்னால் ஆன கலன்களை அணிந்து கொள்ளத்தக்க வசதி படைத்தோர், பித்தளையை அணிந்து இருந்தாலும், "அது தங்கம் தான்" என்று சொல்லுவார்கள்.

     பாலைத் தானே குடிக்கின்றோம் என்று தைரியமாக, எல்லோரும் காணும்படி, அதனைப் பனைமரத்தின் கீழ் இருந்து குடித்தாலும், குடிப்பது கள் என்றே சொல்லுவார்கள்.

     கீழ் மக்கள் கொஞ்சம் செல்வத்தைப் படைத்தவராக இருந்தால், பொய்யையும் மெய் என்றே கூறுவார்கள். அதனை இந்த உலகத்தவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...