இரத்தினகிரி - 0351. பத்தியால்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பத்தியால் யான் உனை (இரத்தினகிரி)

முருகா!
திருப்புகழால் உம்மைத் துதித்து,
முத்திப் பெருவாழ்வைச் சேர அருள்


தத்தனா தானனத் ...... தனதான
     தத்தனா தானனத் ...... தனதான


பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா

வித்தகா ஞானசத் ...... திநிபாதா
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பத்தியால் யான் உனைப் ...... பலகாலும்
     பற்றியே, மா திருப் ...... புகழ் பாடி,

முத்தன் ஆமாறு, னைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற்கு ...... அருள்வாயே.

உத்தம அது ஆன சற் ...... குணர் நேயா!
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா!

வித்தகா! ஞானசத் ...... தி நிபாதா!
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

பதவுரை

       உத்தமம் அது ஆன சற்குணர் நேயா --- உத்தம குணத்தைக் கொண்டுள்ள நல்லியல்பு உடையோரது நண்பரே!

       ஒப்பு இலா மா மணிக்கிரி வாசா --- சமானமில்லாத, பெருமை பொருந்திய இரத்தினகிரியில் வாழ்பவரே!

       வித்தகா --- பேரறிவாளரே!

       ஞான சத்தி நிபாதா --- திருவருள் ஞானம் பதியச் செய்பவரே!

       வெற்றிவேல் ஆயுத பெருமாளே --- வெற்றியைத் தருகின்ற வேற்படையையுடைய பெருமையின் மிக்கவரே!

       யான் பக்தியால் உன்னைப் பற்றி --- அடியேன் அன்பினால் உம்மை உறுதியாகப் பற்றி,

     திருப்புகழ் பலகாலும் பாடி --- தேவரீருடைய திருப்புகழைப் பலகாலும் பாடி,

     முத்தன் ஆம் ஆறு --- ஜீவன் முத்தனாக ஆகுமாறு,

     எனை --- அடியேனை,

     பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு --- இடையறா இன்ப வாழ்வுடன் கூடி சிவகதியில் சேர்ந்து உய்வுபெற,

     அருள்வாயே --- திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

       உத்தம குணங்கள் பொருந்திய சற்குண சீலர்களுடைய நேயரே!

     உவமையில்லாத பெருமை மிக்க இரத்தினகிரியில் வாழ்பவரே!

     பேரறிவாளரே!

     திருவருள் ஞானத்தைப் பதிய வைப்பவரே! வெற்றி
    
     வேற்படையை உடைய பெருமிதம் உள்ளவரே!

       அடியேன் தேவரீரை அன்பினால் விடாதுபற்றி, திருப்புகழைப் பலகாலும் பாடி, ஜீவன் முத்தனாக ஆகுமாறு பெருவாழ்வாம் முத்தியைச் சேர்ந்து உய்வுபெற திருஅருள் புரிவீர்.


விரிவுரை

பத்தியால்.........பற்றி ---

மூவரும் தேவரும் காணாத முழுமுதலாகிய முருகவேளைப் பத்தியாலேயே பற்ற முடியும். இறைவன், “பக்திவலையில் படுவோன் காண்க,” என்றும்,பத்திசெய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்,” என்றும் மணிவாசகப் பெருமான் பாடி வைத்தார். "அன்பு எனும் வலையில் படு பரம்பொருள்" என்றார் வள்ளல் பெருமான். பற்றற்ற அப்பரமபதியே ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாக நிற்பவன்.

முத்தன்:-

இம்மையிலேயே முத்தி பெற்றவன்.

மணிக்கிரி ---

இரத்தினகிரி; இது வாட்போக்கி என்றும் பெயர் பெறும். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம், குளித்தலை இரயில்வே நிலையத்திற்ககுத் தெற்கில் ஐந்து கல் தொலைவில் உள்ளது.

சத்தி நிபாதா ---

சத்தி - அருள். நி - மிகுதி. பாதம் - பதிதல். திருவருள் ஞானத்தை ஆன்மாக்களுக்குப் பதிய வைப்பவர்.

கருத்துரை

சற்குணர் நேயரே! வித்தகரே! இரத்தினகிரி வாசரே! சத்திநிபாதரே! வேலாயுதரே! அடியேன் பக்தியால் உம்மைப் பற்றி, திருப்புகழைப் பாடி முத்திபெற அருள்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...