திரு அரிசில் கரைப்புத்தூர்




திருஅரிசிற்கரைப்புத்தூர்
(அழகாபுத்தூர்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "அழகாபுத்தூர்" என்று வழங்குகின்றனர்.

         கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருநறையூர் (நாச்சியார்கோவில்) போகும் வழியில் இத்தலம் இருக்கிறது. திருநறையூருக்கு முன்னாலேயே அழகாபுத்தூர் ஊரின் தொடக்கத்திலேயே கோவில் பேருந்துச் சாலையிலிருந்து சற்றுத் தள்ளி அருகிலேயே உள்ளது.

இறைவர்          : படிக்காசுவைத்த பரமர், சொர்ணபுரீசுவரர்

இறைவியார்      : சிவாம்பிகை,சௌந்திரநாயகி, அழகம்மை

தல மரம்           : வில்வம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - மின்னுஞ்சடை.
                                               2. அப்பர்   -  முத்தூரும் புனல்.
                                               3. சுந்தரர்  -  மலைக்கு மகள்அஞ்ச.

         இவ்வாலயம் மேற்குப் பார்த்த மூன்று நிலைகளுடைய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. நேரே கருவறை முன் மண்டபத்திற்கு எதிரில் கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். முற்றவெளியின் வலதுபுறம் விநாயகர் சந்நிதியும் இடதுபுறம் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விசேஷம். இம்மாதிரி அமைப்புள்ள ஆறுமுகர் சந்நிதி காண்பதற்கு அரிது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது.

         வெளிப் பிரகார வலம் வரும்போது கிழக்குச் சுற்றில் கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குச் செல்லும் முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர், இருபுறமும் விநாயகர், முருகர் ஆகியோரின் சுதைசிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில் இடதுபுறம் நெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவியார் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ஆவணி இமாதம் ஆயில்ய தட்சத்திரத்தன்று புகழ்த்துணை நாயனாரருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

         மூலவர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கி லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். நாடொறும் மூன்று கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மூவராலும் பாடப்பெற்ற பெருமை உடைய இத்தலத்தின் விருட்சமாக வில்வமரமும், தீர்த்தங்களாக அமிர்த புஷ்கரணி மற்றும் அரசலாறும் திகழ்கின்றன..

         புகழ்த்துணை நாயனார்: அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம்பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீசுவரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூசைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிடேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. பசியால் வாடி உயிரிழக்க நேர்ந்தாலும் ஆலயப்பணியை துறக்கும் எண்ணம் அவர் மனதில் எழவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிடேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மூர்ச்சித்து விழுந்தார். மூர்ச்சித்து விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் ஒழியும் வரை நாள்தோறும் ஒரு காசு இங்கே வைப்போம். அதைப் பெற்றுக்கொள்." என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.. இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளியவிண்ணப்பக் கலிவெண்பாவில், "காட்டும் பிரிசில் கரைப்பு உற்றோர் பாங்கு பெற ஓங்கும் அரிசில்கரைப் புத்தூரானே" என்று போற்றோ உள்ளார்.

         காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 403
பாடும் அரதைப்பெரும் பாழியே முதலாக,
சேடர்பயில் திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர் நறையூர், தென் திருப்புத்தூர், நயந்துஇறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்துஅந் நெடுநகரில் இனிது அமர்ந்தார்.

         பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

பதியின் பெயர்        பாட்டுமுதற்குறிப்பு      பண்

அரதைப்பெரும்பாழி - பைத்தபாம்போடரை  கொல்லி - தி.3 ப.30

திருச்சேறை -  முறியுறு                 சாதாரி - தி.3 ப.86

திருநாலூர்மயானம் -  பாலூரும்          சீகாமரம் - தி.2 ப.46

திருக்குடவாயில் 1.திகழுந்திருமாலொடு   இந்தளம் - தி.2 ப.22                                                      2.கலைவாழும்   காந்தாரம் - தி.2 ப.58

திருநறையூர்ச்சித்தீச்சரம்        1.ஊருலாவு   தக்கராகம் - தி.1 ப.29                                                   2.பிறைகொள்சடையர் தக்கேசி - தி.1 ப.71                                                    3.நேரியனாகும் பியந்தைக்காந்தாரம் - தி.2 ப.87

தென் திருப்புத்தூர் -  மின்னும் சடைமேல் காந்தாரம் - தி.2 ப.63

         திருஅரதைப்பெரும்பாழி இதுபொழுது அரித்துவாரமங்கலம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. இப்பதிகம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.063 திருஅரிசில்கரைப்புத்தூர்            பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னும் கடல்நஞ்சு இருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனல்ஆர் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொரு,தென் கரைமேல் புத்தூரே.

         பொழிப்புரை :மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத் தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியை யும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும்.


பாடல் எண் : 2
மேவா அசுரர் மேவுஎயில் வேவ மலைவில்லால்
ஏஆர் எரிவெங் கணையால் எய்தான் எய்தும்ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

         பொழிப்புரை :பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப்பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.


பாடல் எண் : 3
பல்ஆர் தலைசேர் மாலை சூடி, பாம்பும்பூண்டு,
எல்லா இடமும் வெண்ணீறு அணிந்துஓர் ஏறுஏறிக்
கல்ஆர் மங்கை பங்கர் எனும், காணுங்கால்
பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.

         பொழிப்புரை :புத்தூர்ப் புனிதர், பற்களோடு கூடிய தலை மாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர்.


பாடல் எண் : 4
வரிஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற
கரிஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும்ஊர்
அரிஏர் கழனிப் பழனம் சூழ்ந்துஅங்கு அழகாய
பொரிஏர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.

         பொழிப்புரை :வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற்பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.


பாடல் எண் : 5
என்போடு அரவம், ஏனத்து எயிறோடு, எழில்ஆமை,
மின்போல் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும்ஊர்
பொன்போது அலர்கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

         பொழிப்புரை :எலும்பு, பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.


பாடல் எண் : 6
வள்ளி முலைதோய் குமரன் தாதை, வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடைஒன்று உடையான் மேவும்ஊர்
தெள்ளி வருநீர் அரிசில் தென்பால் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

         பொழிப்புரை :வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.


பாடல் எண் : 7
நிலம்த ணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்றுஓர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

         பொழிப்புரை :நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.


பாடல் எண் : 8
இத்தேர் ஏக இம்மலை பேர்ப்பன் என்றுஏந்தும்
பத்துஓர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்
வைத்துஆர் அருள்செய் வரதன் மருவும் ஊர்ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

         பொழிப்புரை :இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும்.


பாடல் எண் : 9
முள்ஆர் கமலத்து அயன்மால் முடியோடு அடிதேட
ஒள்ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள்ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள்
புள்ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

         பொழிப்புரை :முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடிதேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும்.


பாடல் எண் : 10
கைஆர் சோறு கவர்குண் டர்களும், துவர்உண்ட
மெய்ஆர் போர்வை மண்டையர் சொல்லும் மெய்அல்ல,
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க்கு ஐயுறவுஇன்றி அழகுஆமே.

         பொழிப்புரை :கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம்.


பாடல் எண் : 11
நறவம் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் தமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந்து, அன்போடு இன்பம் அடைவாரே.

         பொழிப்புரை :தேன் மணம் கமழும் அழகிய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர்மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்பவல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள்.
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சி,
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         பழையாறை வடதளி என்னும் இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) -
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - 
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21)
 (ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89)

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13)
3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71)
4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) 
5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10)
6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90)
7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73)
8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63)
9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) 
10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69)

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61)
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87)
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76)
14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80)
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86)
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84)


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

5. 061    திருஅரிசில்கரைப்புத்தூர்   திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முத்து ஊரும்புனல் மொய்அரி சில்கரைப்
புத்தூ ரன்அடி போற்றிஎன் பார்எலாம்
பொய்த்து ஊரும்புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும்வினை மாற்றவும் வல்லரே.

         பொழிப்புரை : மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் ` திருவடி போற்றி ` என்று கூறுவோரெல்லாம் , பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு , பொருந்திய வன்மை உடைய தாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள் .


பாடல் எண் : 2
பிறைக்கு அணிச்சடை எம்பெரு மான்என்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துஉரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

         பொழிப்புரை : வெண்பிறையாகிய தலைக் கண்ணியணிந்த சடையுடைய எம்பெருமானே என்று கூறி , தம்முடைய குற்றங்களை எண்ணிஉணர்ந்த நல்லடியார்கள் கண்ட வணக்கத்துக்குரியவரே ! மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே ! ( எம்மையாண்டருள்க ).


பாடல் எண் : 3
அரிசி லின்கரை மேல்அணி ஆர்தரு
புரிசை நம்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்குஎலாம்
துரிசுஇல் நல்நெறி தோன்றிடும் காண்மினே.

         பொழிப்புரை : அரிசிலாற்றுக் கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை , வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும் ; காண்பீராக .

  
பாடல் எண் : 4
வேதனை, மிகு வீணையில் மேவிய
கீதனை, கிளரும்நறுங் கொன்றையம்
போதனை, புனல் சூழ்ந்தபுத் தூரனை,
நாதனை நினைந்து என்மனம் நையுமே.

         பொழிப்புரை : வேதங்கள் ஓதுபவனை , வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை , மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை , அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை , என் மனம் நினைந்து நெகிழ்கின்றது .


பாடல் எண் : 5
அருப்புப் போன்முலை யார்அல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் இட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே.

         பொழிப்புரை : கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி , நல்ல பக்தி கொண்டு , திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும் ; காண்பீராக .


பாடல் எண் : 6
பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூர்உளான்
நாம்ப ணிந்துஅடி போற்றிட நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்குஅணி ஆகுமே.

         பொழிப்புரை : பாம்பும் , பிறையும் , பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர் , நாள்தொறும் நாம் பணிந்து , தன் திருவடியைப் போற்றிட , தான் சாம்பலையும் , எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர்


பாடல் எண் : 7
கனல்அங் கைதனில் ஏந்திவெங் காட்டுஇடை
அனல்அங்கு எய்திநின்று ஆடுவர் பாடுவர்
பினல்அம் செஞ்சடை மேல்பிறை யும்,தரு
புனலும் சூடுவர் போலும்புத் தூரரே.

         பொழிப்புரை : புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி , வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர் ; பாடும் இயல்பினர் ; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர் .


பாடல் எண் : 8
காற்றி னும்கடிது ஆகி நடப்பதுஓர்
ஏற்றி னும்இசைந்து ஏறுவர், என்பொடு
நீற்றி னைஅணி வர்,நினை வாய்த்தமைப்
போற்றி என்பவர்க்கு அன்பர்புத் தூரரே.

         பொழிப்புரை : புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் . காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர் ; எலும்பும் திருநீறும் அணிவர் ; ` தம்மையே நினைவாகிப் போற்றி ` என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர் .


பாடல் எண் : 9
முன்னும் முப்புரம் செற்றனர், ஆயினும்
அன்னம் ஒப்பர் அலந்துஅடைந் தார்க்குஎலாம்
மின்னும் ஒப்பர், விரிசடை மேனிசெம்
பொன்னும் ஒப்பர்,புத் தூர்எம் புனிதரே.

         பொழிப்புரை : புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் , முன்னும் மூன்றுபுரங்களைச் சினந்தவராயினும் , வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர் ; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர் ; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர் .


பாடல் எண் : 10
செருத்த னால்தன தேர்செலவு உய்த்திடும்
கருத்த னாய்க்கயி லைஎடுத் தான்உடல்
பருத்த தோள்கெடப் பாதத்து ஒருவிரல்
பொருத்தி னார்,பொழில் ஆர்ந்தபுத் தூரரே.

         பொழிப்புரை : பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது , அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர் .

                                    திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நாயனார் திருவாஞ்சியமும் திருநறையூர்ச் சித்தீச்சரமும் பணிந்து திருஅரிசிற்கரைப்புத்தூர் இறைவரைப் போற்றிப் பாடியருளிய திருப்பதிகம்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
பாடல் எண் : 60
வாசி அறிந்து காசுஅளிக்க
         வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
         பெற்று, திருவாஞ் சியத்துஅடிகள்
பாச மறுத்துஆட் கொள்ளும் தாள் 
         பணிந்து பொருவ னார்என்னும்
மாசுஇல் பதிகம் பாடி அமர்ந்து,
         அரிசிற் கரைப்புத் தூர் அணைந்தார்.

         பொழிப்புரை : தாம் வழங்கிய பொற்காசுகளில் குற்றமும், குற்றம் இன்மையுமாகக் கொடுத்திட வல்ல திருவீழிமிழலையில் அமர்ந்து அருளும் பெருமானிடம், உயிர் விளக்கம் பெறுதற்கான அருள் பெற்றுத் திருவாஞ்சியத்தில் அமர்ந்தருளும் சிவபெருமானின், பாசம் அறுத்து ஆட்கொள்ளும் திருவடி மலர்களைப் பணிந்து, `பொருவனார்' எனத் தொடங்கும் மாசில்லாத, புகழுடைய திருப்பதிகத்தினைப் பாடி அங்குத் தங்கிப் பின் திருஅரிசில்கரைப்புத்தூரை அணுகச் சென்றார்.

         `பொருவனார்' எனத் தொடங்கும் பதிகம், பியந்தைக்காந்தாரப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.76). இத்திருப்பதிகம், இறைவனது பொருள் சேர்ந்த புகழைப் பலவாற்றாலும் எடுத்தோதியருளியது.

பாடல் எண் : 61
செழுநீர் நறையூர், நிலவுதிருச்
         சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி,
விழுநீர் மையினில் பெருந்தொண்டர்
         விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோடு இளமான் கரதலத்தில்
         உடையார் திருப்புத் தூர்வணங்கி,
தொழுநீர் மையினில் துதித்துஏத்தித்
         தொண்டர் சூழ உறையும் நாள்.

         பொழிப்புரை : அரிசிற்கரைப்புத்தூருக்கு வந்தணையும் அவர், இடையில் அரிசில் என்னும் ஆற்றின் செழுமை மிக்க நீர்வளமுடைய திருநறையூர் என்னும் ஊரில் நிலவிடும் சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலையும் வணங்கி, ஒழுக்கத்தாலும், பத்திமையாலும் விழுமிய அடியார்கள் விருப்பத்துடன் எதிர்கொள்ள, மழுவுடன் இளைய மானையும் திருக்கைகளில் கொண்ட பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் என்னும் திருப்பதியையும் பணிந்து, போற்றி, அடியார்கள் சூழ அத்திருப்பதியில் இருந்தருளும் காலத்து,


பாடல் எண் : 62
புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
         அருளும்  திறமும் போற்றிஇசைத்து,
முனிவர் போற்ற எழுந்துஅருளி,
         மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
         பதிகள் பலவும் பணிந்துபோந்து,
இனிய நினைவில் எய்தினார்
         இறைவர் திருஆ வடுதுறையில்.

         பொழிப்புரை : திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருந்தருளும் பெருமானார் முன்னர்ப் புகழ்த்துணை என்னும் நாயனாருக்கு அருள்புரிந்த வரலாற்றையும் அப்பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் போற்றிப் பாடி, அங்குள்ள முனிவர்கள் போற்றிட எழுந்தருளி, கங்கையாற்றினையும் குளிர்ந்த வெண்பிறையையும் அணிந்த சடையையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் பதிகள் பலவும் பணிந்து, இனிமை கூர்ந்த நினைவாய்த் திருவாவடுதுறையை அடைந்தார்.

         அரிசில்கரைப்புத்தூரில், `மலைக்கு மகள்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகத்துள், புகழ்த்துணையாரைச் சிறப்பித்தருளும் பாடல் ஆறாவது பாடலாகும் (தி.7 ப.9 பா.6).

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
         அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
         முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
         வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
         பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

எனவரும் இப்பாடல் புகழ்த்துணையாரின் வரலாற்றைச் சித்தரித்துக் காட்டுதல் காணலாம்.

சுந்தரர் திருப்பதிகம்

7. 009    திருவரிசிற்கரைப்புத்தூர்              பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மலைக்கும்மகள் அஞ்ச மதகரியைஉரித்தீர்,
         எரித் தீர்வரு முப்புரங்கள்,
சிலைக்குங்கொலைச் சேஉகந்து ஏறுஒழியீர்,
         சில்பலிக்குஇல்கள் தோறும் செலவுஒழியீர்,
கலைக்கொம்பும் கரிமருப் பும்இடறிக்
         கலவம்மயில் பீலியும் கார்அகிலும்
அலைக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
         அழகுஆர்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : மான்களின் கொம்புகளையும் , யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து , தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப் பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே ! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர் ; முழங்குகின்ற , கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர் .


பாடல் எண் : 2
அருமல ரோன்சிரம் ஒன்றுஅறுத்தீர்,
         செறுத்தீர்அழல் சூலத்தில் அந்தகனை,
திருமகள் கோன்நெடு மால்பலநாள்
         சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் தில்குறைவா
         நிறைவாகஓர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்துஅளித்தீர்
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

         பொழிப்புரை : சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர் ; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர் ; திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள் , அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய , அது நிறைவாகும்படி , தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து , போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர் .


பாடல் எண் : 3
தரிக்கும்தரை, நீர்,தழல் காற்று,அந்தரம்
         சந்திரன்,சவி தா,இய மானன்ஆனீர்,
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
         தையலார்பெய்யக் கொள்வது தக்கதுஅன்றால்,
முரிக்கும்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
         முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
         அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும் , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து , கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே , நீர் , ` எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம் , நீர் , நெருப்பு , காற்று , வானம் , சந்திரன் , சூரியன் , ஆன்மா ` ஆகிய எல்லாப் பொருள்களுமானீர் . ஆதலின் , ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட , அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று .


பாடல் எண் : 4
கொடிஉடை மும்மதில் வெந்துஅழிய, குன்றம்
         வில்லா நாணியில் கோல்ஒன்றினால்
இடிபட எய்துஎரித் தீர்,இமைக்கும்
         மளவில்,உமக்கு ஆர்எதிர் எம்பெருமான்,
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
         சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னைகொல்லோ,
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

         பொழிப்புரை : எம்பெருமானிரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி , மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து , இமைக்கும் அளவில் எரித்தீர் ; ஆதலின் , உமக்கு நிகராவார் யாவர் ? ஒருவரும் இல்லை ; அங்ஙனமாக , மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும் , கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம் பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ ?


பாடல் எண் : 5
வணங்கித்தொழு வார்அவர் மால்பிரமன்
         மற்றும் வானவர் தானவர் மாமுனிவர்,
உணங்கல்தலை யில்பலி கொண்டல்என்னே,
         உலகங்கள்எல் லாம்உடையீர், உரையீர்,
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
         இனக்கெண்டைதுள் ளக்கண்டு இருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்அரி சில்தென்கரை
         அழகுஆர்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : கயலும் , சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள் , ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும் , கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு , முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற ( உண்கின்ற ) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , உலகம் எல்லாவற்றையும் உடையவரே , உம்மை அடிபணிந்து , கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார் , திருமாலும் , பிரமனும் , மற்றைய தேவரும் , அசுரரும் , பெரிய முனிவருமாவர் ; அங்ஙனமாக , நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ ? சொல்லியருளீர் .

  
பாடல் எண் : 6
அகத்துஅடி மைசெய்யும் அந்தணன்தான்
         அரிசிற்புனல் கொண்டுவந்து ஆட்டுகின்றான்,
மிகத்தளர்வு எய்தி, குடத்தையும்நும்
         முடிமேல்விழுத் திட்டு, நடுங்குதலும்,
வகுத்துஅவ னுக்குநித் தல்படியும்
         வரும்என்றுஒரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துஉகந்தீர்,
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

         பொழிப்புரை : சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர் , பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து , நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு , அப்பிழைக்காக நடுக்கமுற , நீர் அவரது கனவில் தோன்றி , ` அன்பனே , நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும் , நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து , நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து , அவரை ஆட்கொண்டருளினீர் .


பாடல் எண் : 7
பழிக்கும்பெரும் தக்கன்எச் சம்அழியப்
         பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டுஅவர் அங்கம் சிதைத்துஅருளும்
         செய்கை, என்னைகொ லோ,மைகொள் செம்மிடற்றீர்,
விழிக்குந்தழைப் பீலியொடு ஏலம்உந்தி
         விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
         அழகுஆர்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட , முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே , கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி , ஒளி வீசுகின்ற மாணிக்கம் , முத்து , பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு , கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரை யிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே , நீர் , உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி , சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி , அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ ?


பாடல் எண் : 8
பறைக்கண்நெடும் பேய்க்கணம் பாடல்செய்ய,
         குறள்பாரிடங் கள்பறை தாம்முழக்க,
பிறைக்கொள்சடை தாழ, பெயர்ந்து,நட்டம்
         பெருங்காடுஅரங் காகநின்று ஆடல்என்னே,
கறைக்கொள்மணி கண்டமும் திண்தோள்களும்
         கரங்கள்சிரந் தன்னிலும் கச்சும்ஆகப்
பொறிக்கொள்அர வம்புனைந் தீர்,பலவும்
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

         பொழிப்புரை : நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும் , திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும் , முன் கைகளிற் கங்கணமாகவும் , தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக் கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே , நீர் , பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடுதலைச் செய்யவும் , குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும் , பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய , காலங் கடந்த காடே அரங்கமாக நின்று , அடிபெயர்த்து நடனமாடுதல் என் ?


பாடல் எண் : 9
மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்,
         வளர்புன்சடைக் கங்கையை வைத்துஉகந்தீர்,
முழைக்கொள்அர வோடுஎன்பு அணிகலனா
         முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ,
கழைக்கொள்கரும் பும்கத லிக்கனியும்
         கமுகின்பழுக் காயும் கவர்ந்துகொண்டிட்டு
அழைக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
         அழகுஆர்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : ` கழை ` என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும் , வாழைப்பழங்களையும் , கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே , நீர் , மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர்; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின் மேல், `கங்கை` என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது , புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும் , எலும்புமே அணிகலங்களாக , மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ ?


பாடல் எண் : 10
கடிக்கும்அர வால்,மலை யால்அமரர்
         கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்உல கங்களை என்று,அதனை
         உமக்கேஅமு தாகஊண்டீர், உமிழீர்,
இடிக்கும்மழை வீழ்த்துஇழுத் திட்டுஅருவி
         இருபாலும் ஓடிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேர்அரி சில்தென்கரை
         அழகுஆர்திருப் புத்தூர் அழகனீரே.

         பொழிப்புரை : இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு , முன்பு அருவியாய் ஓடி , பின்பு , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , நீர் , கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு , மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி , அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் ; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை .


பாடல் எண் : 11
கார்ஊர்மழை பெய்து பொழிஅருவிக்
         கழையோடுஅகில் உந்திட்டு இருகரையும்
போர்ஊர்புனல் சேர்அரி சில்தென்கரைப்
         பொழில்ஆர்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடுஐந்து
         அழகால்உரைப் பார்களும், கேட்பவரும்
சீர்ஊர்தரு தேவர்க ணங்களொடும்
         இணங்கி,சிவ லோகம் அதுஎய்துவரே.

         பொழிப்புரை : மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய , அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும் , அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு , இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை , நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும் , மொழிக்குற்றம் , இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும் , அத்துதியைக் கேட்பவர்களும் , சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட் கூடி வாழ்ந்து , பின் சிவலோகத்தை அடைவார்கள் .


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...