திரு நறையூர்ச் சித்தீச்சரம்





திரு நறையூர்ச் சித்தீச்சரம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.


இறைவர்         : சித்தநாதேசுவரர், வேதேசுவரர், நரேசுவரர்

இறைவியார்      : அழகம்மை, சௌந்தர நாயகி

தல மரம்          : பவளமல்லி

தீர்த்தம்           : சூல தீர்த்தம், பிரம தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. ஊருலாவு பலி,
                                                            2. பிறைகொள் சடையர்,
                                                            3. நேரியனா குமல்லன்

                                       2. சுந்தரர்  -     நீரும் மலரும் நிலவும்.


     இத்திருத்தலத்தின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் தீர்த்தக் குளத்தில் ஒரு மலர்ந்த தாமரை மலரில் மேதாவி மகரிஷி முன் தோன்றினாள். மகரிஷியும் அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

         கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.

         சம்பந்தர், சுந்தரர் இருவரால் பாடப்பெற்று, திருநாவுக்கரசரால் திருத்தாண்டகத்தில் குறிக்கப்பட்டுள்ள இத்தலம் மிகப் பழமையானது. நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற நிட்டையில் ஆழ்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.

         சோழர்காலத் திருப்பணியைப் பெற்ற இக்கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். கொடிமரத்து விநாயகர். பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஆலயத்தில் இறைவன் கருவறையில் லிங்க உருவில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இவ்வாலயத்தில் இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தின் தென்திசையில் ஒரு தட்சிணாமூர்த்தியும், மேற்கு திசையில் மற்றொரு தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்கு திசையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சந்நிதி உள்ளது. ரிஷபத்தின் தலை மீது வலது கையை ஊன்றியபடி காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும், பிச்சாடனர் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டியவை. கோஷடத்திலுள்ள லிங்கோத்பவர் உருவச்சிலையும் கலை அழகுடன் காணப்படுகிறது. பிரகாரத்தில் ஒரே சந்நிதிக்குள் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும் இங்கு சிறப்பாகும். மேதாவி மகரிஷி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு லட்சுமியை மகளாகப் பெற்று பின்பு அவளை மகாவிஷ்ணுவிற்கு மணம் முடித்த தலம் இதுவாகும். மேதாவி மகரிஷிக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இறைவி சௌந்தர நாயகி அம்பாள் தனி சந்நிதியில் காட்சி தருகிறாள். குபேரன், தேவர்கள், கந்தருவர்கள் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். தீர்த்தம் பிரம தீர்த்தம். இது கோயிலுக்கு வடக்கே உள்ளது. மாசி மாதத்தில் மூன்று நாட்களும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்களும் சூரிய கிரணங்கள் மூலலிங்கத்தின் மீது படுகின்றது. சூரியனே இத்தலத்தில் இறைவனை வணங்குவதாக கருதப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஏணுடன் கா ஈட்டும் பெருநறை ஆறு என்ன வயல் ஓடி நாட்டும் பெருநறையூர் நம்பனே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 403
பாடும் அரதைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர் நறையூர்,தென் திருப்புத்தூர் நயந்துஇறைஞ்சி,
நீடுதமிழ்த் தொடைபுனைந்துஅந் நெடுநகரில் இனிது அமர்ந்தார்.

         பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

பதியின் பெயர்        பாட்டுமுதற்குறிப்பு      பண்

அரதைப்பெரும்பாழி - பைத்தபாம்போடு  கொல்லி - தி.3 ப.30

திருச்சேறை -          முறியுறு          சாதாரி - தி.3 ப.86

திருநாலூர்மயானம் -  பாலூரும்         சீகாமரம் - தி.2 ப.46

திருக்குடவாயில் 1.திகழுந்திருமால்       இந்தளம் - தி.2 ப.22                                                      2.கலைவாழும்    காந்தாரம் - தி.2 ப.58

திருநறையூர்ச் சித்தீச்சரம்      
                                    1.ஊருலாவு - தக்கராகம் - தி.1 ப.29                                                            2.பிறைகொள்சடை - தக்கேசி - தி.1 ப.71                                                   3.நேரியனாகும் -பியந்தைக்காந்தாரம் - தி.2 ப.87 

தென் திருப்புத்தூர் -  மின்னும் சடைமேல் காந்தாரம் - தி.2 ப.63

         திருஅரதைப்பெரும்பாழி இதுபொழுது அரித்துவாரமங்கலம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. இப்பதிகம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


1.029 திருநறையூர்ச்சித்தீச்சரம்       பண் – தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஊர் உலாவு பலிகொண்டு உலகுஏத்த
நீர் உலாவு நிமிர்புன் சடைஅண்ணல்,
சீர் உலாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச் சரம்சென்று, அடைநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திருமுடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.


பாடல் எண் : 2
காடு நாடும் கலக்கப் பலிநண்ணி,
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ,
வீடும் ஆக, மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! காட்டின்கண் முனிவர் குடில்களிலும், நாட்டின்கண் இல்லறத்தார் வீடுகளிலும் விரும்பிப் பலியேற்று, ஓடி வரும் கங்கை தங்கிய ஒளிவீசும் சிவந்தசடைகள் தாழ, தம் உடல்களை விடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும் அந்தணர் வாழும் நறையூரில், புகழால் நீடிய சித்தீச்சரத்தில் விளங்கும் பெருமானை நினைவாயாக.


பாடல் எண் : 3
கல்வி யாளர், கனகம் அழல்மேனி,
புல்கு கங்கை புரிபுன் சடையான்ஊர்,
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரம்சென்று அடைநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சமே! பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனியராய், கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது ஊர், கல்வியாளர் நிறைந்ததாய், திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும். அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.


பாடல் எண் : 4
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிகள் இடம்ஆகும்,
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! மேல்நோக்கிய நீண்டு வளரவல்ல செஞ் சடைகள் தாழுமாறு ஆடுதலில் வல்ல அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய பாடுதலில் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் சோலைவளம் உடைய நறையூரில் பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

பாடல் எண் : 5
உம்ப ராலும் உலகின் அவராலும்
தம்பெ ருமை அளத்தற்கு அரியான்ஊர்,
நண்பு உலாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! தேவர்களாலும், உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய செம்பொன் மயமான சித்தீச்சரத்தையே தெளிவாயாக.


பாடல் எண் : 6
கூர் உலாவு படையான், விடைஏறி,
போர் உலாவு மழுவான், அனல்ஆடி,
பேர் உலாவு பெருமான் நறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே இடமாமே.

         பொழிப்புரை :கூர்மைமிக்க சூலப்படையை உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவ பெருமான் திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.


பாடல் எண் : 7
அன்றி நின்ற அவுணர் புரம்எய்த
வென்றி வில்லி விமலன் விரும்பும்ஊர்,
மன்றில் வாச மணம்ஆர் நறையூரில்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர் களின் முப்புரங்களையும் எய்தழித்த வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப் பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக.


பாடல் எண் : 8
அரக்கன் ஆண்மை அழிய, வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும்ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.


பாடல் எண் : 9
ஆழி யானும் மலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்,
சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

         பொழிப்புரை :நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், உணராதவனாய், ஓர் ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த் தேட எரியுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்புமிக்க இடமாகிய திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாய்.


பாடல் எண் : 10
மெய்யின் மாசர் விரிநுண் துகில்இலார்
கையில் உண்டு கழறும் உரைகொள்ளேல்,
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச் சரமே, தவம்ஆமே.

         பொழிப்புரை :உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.


பாடல் எண் : 11
மெய்த்து உலாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.

         பொழிப்புரை :வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.

                                             திருச்சிற்றம்பலம்



1.071  திருநறையூர்ச்சித்தீச்சரம்          பண் - தக்கேசி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிறைகொள்சடையர், புலியின்உரியர், பேழ்வாய் நாகத்தர்,
கறைகொள்கண்டர், கபாலம்ஏந்தும் கையர், கங்காளர்,
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வுஎய்திச்
சிறைகொள்வண்டு தேன்ஆர்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :பெருமை உடைய மறையவர் தங்கள் இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப்பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர். புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடையபாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.


பாடல் எண் : 2
பொங்குஆர்சடையர், புனலர்,அனலர், பூதம் பாடவே
தங்காதலியும் தாமும்உடனாய்த் தனிஓர் விடைஏறிக்
கொங்குஆர்கொன்றை வன்னிமத்தம் சூடிக் குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையும் சேரும் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :தழைத்த சடையினராய், கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள் பாடத்தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்றதொருவிடைமீது, தேன் பொருந்திய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக்களிக்கும் சித்தீச் சரத்தில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 3
முடிகொள்சடையர், முளைவெண்மதியர், மூவா மேனிமேல்
பொடிகொள்நூலர், புலியின்அதளர், புரிபுன் சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவில் கயல் ஆர்இனம்பாயக்
கொடிகொள்மாடக் குழாம்ஆர்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :முடியாகச் சடையினை உடையவராய், ஒரு கலை யோடு தோன்றும் வெண்மையான மதியை அணிந்தவராய், மூப்படையாததம் திருமேனியின்மேல் திருநீற்றையும் முப்புரிநூலையும் அணிந்தவராய், புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர் நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 4
பின்தாழ்சடைமேல் நகுவெண்தலையர், பிரமன் தலைஏந்தி
மின்தாழ்உருவில் சங்கார்குழைதான் மிளிரும் ஒருகாதர்,
பொன்தாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகம்
சென்றார்செல்வத் திருஆர்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :பூசைக்குகந்த பொன்போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச்செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.


பாடல் எண் : 5
நீர்ஆர்முடியர், கறைகொள்கண்டர், மறைகள் நிறைநாவர்,
பார்ஆர் புகழால் பத்தர்சித்தர் பாடி ஆடவே,
தேர்ஆர்வீதி முழவுஆர்விழவின் ஒலியும் திசைசெல்லச்
சீர்ஆர்கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடிஆடத் தேரோடும் வீதிகளில் முழவின் ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறைபொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.


பாடல் எண் : 6
நீண்டசடையர், நிரைகொள் கொன்றை விரைகொள் மலர்மாலை
தூண்டுசுடர்பொன் ஒளிகொள்மேனிப் பவளத்து எழிலார்வந்து
ஈண்டுமாடம் எழிலார்சோலை இலங்கு கோபுரம்
தீண்டுமதியம் திகழும்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நீண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.


பாடல் எண் : 7
குழல்ஆர்சடையர், கொக்கின்இறகர், கோல நிறமத்தம்,
தழல்ஆர்மேனித் தவளநீற்றர், சரிகோ வணக்கீளர்,
எழில்ஆர்நாகம் புலியின்உடைமேல் இசைத்து, விடைஏறிக்
கழல்ஆர்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :அழகு பொருந்திய பாம்பினைப் புலித்தோல் ஆடைமேல் பொருந்தக் கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச்சித்தீச்சரத்து இறைவர், மாதொருபாகராதலின் கூந்தலும் சடையும் அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர்சூடித் தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திரு நீற்றை அணிந்தவர்.


பாடல் எண் : 8
கரைஆர்கடல்சூழ் இலங்கைமன்னன், கயிலை மலைதன்னை
வரைஆர்தோளால் எடுக்க,முடிகள் நெரித்து, மனம்ஒன்றி
உரைஆர்கீதம் பாட,நல்ல உலப்புஇல் அருள்செய்தார்
திரைஆர்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வவளம் மிக்க நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை போன்ற தன் தோளால் பெயர்க்க முற்பட்டபோது, தலைகளைக் கால் விரலால் நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல் களைப்பாடிப் போற்ற, அளவிடமுடியாத நல்லருளை வழங்கியவர்.

  
பாடல் எண் : 9
நெடியான்பிரமன் நேடிக்காணார், நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமாமறையும் அண்டத்து அமரரும்
முடியால்வணங்கிக் குணங்கள்ஏத்தி முதல்வா அருள்என்னச்
செடியார்செந்நெல் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :திருமாலும் பிரமனும் தேடிக்காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின் மனத்தில் விளங்கித்தோன்றுபவராய், அடியவர்களும், அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி `முதல்வா அருள்` என்று வழிபடுமாறு செந்நெற்பயிர்கள் புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 10
நின்றுஉண்சமணர், இருந்துஉண்தேரர் நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர்வாயில் உரைகேட்டு உழல்வீர்காள்,
கன்றுஉண் பயப்பால் உண்ணமுலையில் கபாலம் அயல்பொழியச்
சென்றுஉண்டுஆர்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

         பொழிப்புரை :நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச்சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல்பவரே! எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்து விட அக்கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.


பாடல் எண் : 11
குயில்ஆர்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயில்ஆர் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயில்ஆர்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்குஇனிய பாடல்வல்லார் பாவ நாசமே.

         பொழிப்புரை :குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

                                             திருச்சிற்றம்பலம்


2.087 திருநறையூர்ச்சித்தீச்சரம்       பண் - பியந்தைக்காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நேரியன் ஆகும்அல்லன், ஒருபாலும் மேனி
         அரியான்,முன் ஆய ஒளியான்,
நீர்இயல் காலும்ஆகி, நிறைவானும் ஆகி,
         உறுதீயும் ஆய நிமலன்,
ஊரிஇயல் பிச்சைபேணி உலகங்கள் ஏத்த
         நல்குண்டு, பண்டு சுடலை
நாரிஒர் பாகம்ஆக நடம்ஆட வல்ல
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :ஊர்கள் தோறும் சென்று , பிச்சையேற்று உலகங் கள் போற்ற நல்குவதை உண்டு , முற்காலத்தே சுடலையில் மாதொரு பாகனாக நடனமாடவல்ல , நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவபெருமான் , நுண்ணியன் . பேருருவினன் . தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன் சோதிப்பிழம்பு ஆனவன் . நீர் , காற்று , முதலான ஐம்பூத வடிவினன் .



பாடல் எண் : 2
இடமயில் அன்னசாயல் மடமங்கை தன்கை
         எதிர்நாணி பூண வரையில்
கடும்அயில் அம்புகோத்து எயில்செற்று உகந்து,
         அமரர்க்கு அளித்த தலைவன்,
மடமயில் ஊர்திதாதை எனநின்று,தொண்டர்
         மனம்நின்ற மைந்தன், மருவும்
நடமயில் ஆலநீடு குயில்கூவு சோலை
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும் , புகழ் நீடிய குயில்கள் கூவவும் , விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில் விளங்கும் நம்பனாகிய அப்பெருமான் , இடப்பாகத்தே மயிலன்ன சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில் அரவு நாணைப் பூட்டிக் கடிதான கூரிய அம்பினைக் கோத்து , மூவெயில்களைச் செற்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன் . இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர் எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான் .


பாடல் எண் : 3
சூடக முன்கைமங்கை ஒருபாக மாக
         அருள்கார ணங்கள் வருவான்,
ஈடுஅகம் ஆனநோக்கி இடுபிச்சை கொண்டு
         படுபிச்சன் என்று பரவத்
தோடுஅக மாய்ஒர்காதும் ஒருகாது இலங்கு
         குழைதாழ வேழ உரியன்,
நாடகம் ஆகஆடி மடவார்கள் பாடும்
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப் போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல் அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க அருள்புரிய வருபவன் . பெரிய வீடுகளை நோக்கிச் சென்று அவர்கள் இடும் பிச்சையை ஏற்று , மிக்க ஈடுபாடு உடையவன் என்று அடியவர் பரவி ஏத்த , இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து யானையின் தோலைப் போர்த்துள்ளவன் .


பாடல் எண் : 4
சாயல்நல் மாதொர்பாகன், விதிஆய சோதி,
         கதியாக நின்ற கடவுள்,
ஆய்அகம் என்னுள்வந்த அருள்ஆய செல்வன்,
         இருள்ஆய கண்டன், அவனித்
தாய்என நின்றுஉகந்த தலைவன், விரும்பு
         மலையின்கண் வந்து தொழுவார்
நாயகன் என்றுஇறைஞ்சி மறையோர்கள் பேணும்
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம் முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற , சித்தர்கட்கு ஈசுவரன் என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து இறை வனாகிய அவன் , அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக் கொண்ட வன் . எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி . சிவகதியாக நிற்கும் கடவுள் . என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன் . இருண்ட கண்டத்தினன் . தாயெனத் தலையளி செய்யும் தலைவன் .


பாடல் எண் : 5
நெதிபடு மெய்,எம்ஐயன், நிறைசோலை சுற்றி
         நிகழ்அம்ப லத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க்கு ஒருத்தன்,
         எமர்சுற்றம் ஆய இறைவன்,
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
         விடைஏறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :வாளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல் களிற் பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன் , சேமநிதியாகக் கருதப்படும் மெய்ப்பொருள் . எமக்குத் தலைவன் . நிறைந்த சோலை கள் சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் . அமரர்க்குத் தலைவன் . அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன் . பிறை பொருந்திய சடை தாழ்ந்து தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன் .

  
பாடல் எண் : 6
கணிகையொர் சென்னிமன்னும் அதுவன்னி கொன்றை   
        மலர்துன்று செஞ் சடையினான்,
பணிகையின் முன்இலங்க வருவேடம் மன்னு
         பலவாகி நின்ற பரமன்,
அணுகிய வேதஓசை அகல்அங்கம் ஆறின்
         பொருள்ஆன ஆதி அருளான்,
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி ஏத்து
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர் தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன் . கங்கை தங்கிய முடி மீது வன்னி , கொன்றைமலர் முதலியன பொருந்திய சடையினை உடையவன் . வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங்கள் பலவாகத் தோன்றி அருள்புரிபவன் . தன்னை அணுகிய வேதங் களின் ஓசை , அகன்ற ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன் .


பாடல் எண் : 7
ஒளிர்தரு கின்றமேனி உருஎங்கும் அங்கம்
         ஆவைஆர, ஆடல் அரவம்
மிளிர்தரு, கைஇலங்க அனலேந்தி ஆடும்
          விகிர்தன், விடங்கொள் மிடறன்,
துளிதரு சோலைஆலை தொழில்மேவ வேதம்
         எழிலார வென்றி அருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்கள் ஆரும்
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :தேன் துளிக்கும் சோலைகளையும் , கரும்பினைப் பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின் எழுச்சியையும் , வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வான ளாவிய , மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள் ஆட , கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன் . விடம் பொருந்திய கண்டத்தினன் .


பாடல் எண் : 8
அடல்எருது ஏறுஉகந்த அதிரும் கழற்கள்
         எதிரும் சிலம்பொடு இசையக்
கடல்இடை நஞ்சம்உண்டு, கனிவுற்ற கண்டன்,
         முனிவுற்று இலங்கை அரையன்
உடலொடு தோள்அனைத்தும் முடிபத்து இறுத்தும்,
         இசைகேட்டு இரங்கி ஒருவாள்,
நடலைகள் தீர்த்துநல்கி நமைஆள வல்ல
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :இலங்கை மன்னனாகிய இராவணனின் உடல் தோள் பத்துத்தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது இசையைக்கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன் . அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன் . கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில் நிறுத்தியோன் .


பாடல் எண் : 9
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
         எதிர்கூடி நேடி நினைவுற்று,
இலபல எய்தஒணாமை எரியாய் உயர்ந்த
         பெரியான், இலங்கு சடையன்,
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
         அருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாசம் மணநாறு வீதி
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப் பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்து தலால் மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்ப னாகிய இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும் புகழ்மிக்க திருமாலும் எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில் உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி , தீயாய் ஓங்கிய பெரியோன் , விளங்கும் சடைமுடியை உடையவன் .


பாடல் எண் : 10
துவர்உறுகின்ற ஆடை உடல்போர்த்து உழன்ற
         அவர்தாமும், அல்ல சமணும்,
கவர்உறு சிந்தையாளர் உரைநீத்து உகந்த
         பெருமான், பிறங்கு சடையன்,
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
         முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
         நறையூரின் நம்பன் அவனே.

         பொழிப்புரை :தவம் நிறைந்த பத்தர்கள் , சித்தர்கள் , மறை வல்லோர் விரும்பி வழிபடவும் , மாதர்கள் முறையாகப் பாடி அடைய வும் , நவமணிகள் செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும் கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன் , துவர் ஏற்றிய ஆடையை உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய மாறுபட்ட மனம் உடை யோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான் ஆவன் . அவன் விளங்கும் சடைமுடி உடையோன் .


பாடல் எண் : 11
கானல் உலாவி ஓதம் எதிர்மல்கு காழி
         மிகுபந்தன் முந்தி உணர
ஞானம் உலாவுசிந்தை அடிவைத்து உகந்த
         நறையூரின் நம்பன் அவனை,
ஈனம் இலாதவண்ணம் இசையால் உரைத்த
         தமிழ்மாலை பத்து நினைவார்,
வானம்நி லாவவல்லர், நிலம்எங்கும் நின்று
         வழிபாடு செய்யும் மிகவே.

         பொழிப்புரை :ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமை யில் உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடி களைப் பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை , குற்ற மற்றவகையில் இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நம்பியாரூரர், திருவீழிமிழலையிலி இருந்து திருவாஞ்சியம் சென்று பணிந்து பாடியபின், திருஅரிசிற்பரைப் புத்தூருக்குச் செல்லும் வழியில் திருநறையூர்ச் சித்தீச்சரத்தை வணங்கிப் பாடியருளியது இத் திருப்பதிகம். (பெ. ஏயர். பு. 61.)

பெரிய புராணப் பாடல் எண் : 61
செழுநீர் நறையூர் நிலவுதிருச்
         சித்தீச் சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெருந்தொண்டர்
         விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோடு இளமான் கரதலத்தில்
         உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்துஏத்தித்
         தொண்டர் சூழ உறையும் நாள்.

         பொழிப்புரை : அரிசிற்கரைப்புத்தூருக்கு வந்தணையும் அவர், இடையில் அரிசில் என்னும் ஆற்றின் செழுமை மிக்க நீர்வளமுடைய திருநறையூர் என்னும் ஊரில் நிலவிடும் சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலையும் வணங்கி, ஒழுக்கத்தாலும், பத்திமையாலும் விழுமிய அடியார்கள் விருப்பத்துடன் எதிர்கொள்ள, மழுவுடன் இளைய மானையும் திருக்கைகளில் கொண்ட பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் என்னும் திருப்பதியையும் பணிந்து, போற்றி, அடியார்கள் சூழ அத்திருப்பதியில் இருந்தருளும் காலத்து,

         "திருநறையூர்" ஊர்ப்பெயர். "சித்தீச்சரம்" திருக்கோயிலின் பெயர். இவ்விடத்து அருளிய பதிகம் `நீரும் மலரும்'(தி.7 ப.93) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

சுந்தரர் திருப்பதிகம்

7. 093   திருநறையூர்ச் சித்தீச்சரம்         பண் - குறிஞ்சி
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவும் உடையான் இடமாம்,
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு , மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , சடையின்மேல் நீரையும் , பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .


பாடல் எண் : 2
அளைப்பை அரவுஏர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்,
வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த்
திளைக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர் , மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , புற்றில் வாழ்கின்ற , படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி , துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகிய இறைவனது இடமாகும் .


பாடல் எண் : 3
இகழுந் தகையோர் எயில்மூன்று எரித்த
பகழி யொடுவில் உடையோன் பதிதான்,
முகிழ்மென் முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : அரும்புபோலும் , மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே , தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறை யூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பை யும் , வில்லையும் உடைய இறைவனது இடமாகும் .


பாடல் எண் : 4
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரல்கோன் இருக்கும் இடமாம்,
நறக்கொள் கமலம் நனிபள் ளிஎழத்
திறக்கும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை , நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச் சரம் ` என்னும் திருக்கோயிலே , வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை , தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும் .


பாடல் எண் : 5
முழுநீறு அணிமே னியன், மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்,
கழுநீர் கமழக் கயல்சேல் உகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : குளங்களில் செங்கழுநீர்ப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும் , சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற , மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும் , அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்பு களைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இடமாகும் .


பாடல் எண் : 6
ஊன்ஆர் உடைவெண் தலைஉண் பலிகொண்டு
ஆன்ஆர் அடல்ஏறு அமர்வான் இடமாம்,
வான்ஆர் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேன்ஆர் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும் , வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , ஊன் பொருந்திய , உடைந்த , வெள்ளிய தலையில் , உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று , ஆனினத்ததாகிய , வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும் .

  
பாடல் எண் : 7
கார்ஊர் கடலில் விடம்உண்டு அருள்செய்
நீர்ஊர் சடையன் நிலவும் இடமாம்,
வார்ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர்ஊர் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : கச்சு மேற்பொருந்தப் பெற்ற தனங்களையுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , தேவர்கட்கு அருள்செய்த, நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும் .


பாடல் எண் : 8
கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்,
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர் கள் , நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , யானைத் தோலையும் , ஆண் மான்கன்றையும் , எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும் .


பாடல் எண் : 9
பேணா முனிவான் பெருவேள் விஎலாம்
மாணா மைசெய்தான் மருவும் மிடமாம்,
பாண்ஆர் குழலும் முழவும் விழவில்
சேண்ஆர் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : பண் நிறைந்த குழல்களின் ஓசையும் , மத்தளங் களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக் களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தி யிருக்கும் இடமாகும் .


பாடல் எண் : 10
குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடமாம்,
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறையூர்ச் சித்தீச் சரமே

         பொழிப்புரை : நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள , ` சித்தீச்சரம் ` என்னும் திருக்கோயிலே , கொடிய கூற்றுவனை உதைத்த , குறியினின் றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும்.


பாடல் எண் : 11
போர்ஆர் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் இவைவல் லவர்கள்
ஏர்ஆர் இமையோர் உலகுஎய் துவரே

         பொழிப்புரை : போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற , புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள் , எழுச்சி பொருந்திய தேவருலகத்தை அடைவார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...