தீர்த்தமலை - 0411. பாட்டில் உருகிலை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாட்டில் உருகிலை (தீர்த்தமலை)

ஏ மனமே!
அடியார்க்கு எளியனாகிய முருகனை அடைவாய்

தாத்த தனதன தாத்த தனதன
     தாத்த தனதன தாத்த தனதன
          தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான


பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
     கூற்று வருவழி பார்த்து முருகிலை
          பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம்

பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
     நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
          பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது, நல் ...... வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
     யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
          பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ......னிதுகேளாய்

வாக்கு முனதுள நோக்கு மருளுவ
     னேத்த புகழடி யார்க்கு மெளியனை
          வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
     பூட்டி திரிபுர மூட்டி மறலியி
          னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
     யாட்டின் முகமதை நாட்டி மறைமக
          ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
     ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
          சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா!

தீர்த்த எனதகம் ஏட்டையுட னினை
     ஏத்த அருளுட னோக்கி அருளுதி
          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,
     கூற்று வருவழி பார்த்தும் உருகிலை,
          பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை, ...... தினமானம்

பாப்பு அணியன் அருள் வீட்டை விழைகிலை,
     நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை,
          பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது, நல் ...... வழிபோக,

மாட்டம் எனுகிறை, கூட்டை விடுகிலை,
     ஏட்டின் விதிவழி ஓட்டம் அறிகிலை,
          பார்த்தும் இனிஒரு வார்த்தை அறைகுவன் ......இது கேளாய்.
 
வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன்,
     ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை,
          வாழ்த்த இருவினை நீக்கும் முருகனை ....மருவாயோ?

ஆட்டி வடவரை வாட்டி அரவொடு
     பூட்டி, திரிபுரம் மூட்டி, மறலியின்
          ஆட்டம் அற சரண் நீட்டி, மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி, மகம் அதை வீட்டி, ஒருவனை
     அட்டின் முகமதை நாட்டி, மறைமக
          ளார்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் ......அருள்பாலா!

சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
     ஓட்டி, அழல்பசை காட்டி, சமணரை
          சீற்றமொடு கழு ஏற்ற அருளிய ...... குருநாதா!

தீர்த்த! எனது அகம் ஏட்டை உடன் நினை
     ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி,
          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.


பதவுரை

ஆட்டி --- அகில உலகங்களையும் ஆட்டி வைப்பவராகிய சிவபெருமான்,

வடவரை வாட்டி --- மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,

அரவொடு பூட்டி --- வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டி,

திரிபுரம் மூட்டி --- திரிபுரத்தில் தீயை மூட்டி வேக வைத்து,

மறலியின் நாட்டம் அற --- கூற்றுவனுடைய கருத்து அழியும்படி,

சரண் நீட்டி --- திருவடியை நீட்டி உதைத்துத் தள்ளி,

மதன் உடல் திருநீறு ஆய் ஆக்கி --- மன்மதனுடைய உடம்பைச் சாம்பலாகும்படிச் செய்து,

மகம் அதை வீட்டி --- தக்கனுடைய யாகத்தை அழித்து,

ஒருவனை --- அந்த யாகத்தின் தலைவனான தக்கனுக்கு,

ஆட்டின் முகம் அதை நாட்டி --- ஆட்டின் முகத்தைப் பொருத்த,வைத்து,

மறைமகளர்க்கும் வடுவு உற வாட்டும் --- சரஸ்வதி தேவிக்கு காயம் உண்டாகும்படி வாட்டிய,

உமை அவன் அருள்பாலா --- உமாநாதராகிய சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

சீட்டை எழுதி --- வாழ்க அந்தணர் என்று திருப்பாசுரத்தை எழுதிய சீட்டை

வையாற்றில் எதிர் உற ஓட்டி --- வையை யாற்றில் எதிரேறுமாறு ஓட்டியும்,

அழல் பசை காட்டி --- நெருப்பில் இட்ட ஏடு பச்சையாக இருக்கும்படி காட்டியும்,

சமணரை --- சமணர்களை

சீற்றமொடு கழு ஏற்ற அருளிய --- சினத்துடன் கழுவில் ஏற்றுமாறு அருள்புரிந்த,

குருநாதா --- குருநாதரே!

தீர்த்த --- தூயவரே!

எனது அகம் ஏட்டை உடன் --- என்னுடைய மனம் விருப்புடன்,

நினை ஏத்த --- உம்மையே புகழும்படி,

அருளுடன் நோக்கி அருளுதி --- தேவரீர் திருவருளுடன் சிறியேனைப் பார்த்து அருள்புரிவீராக.,

தீர்த்தமலை நகர் காத்த --- தீர்த்தமலை நகரைக் காத்தவரே,

சசி மகள் --- தேவசேனைக்கு உகந்த,

பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

மனதே --- ஏ மனமே!

நீ மேற்கூரிய,

பாட்டில் உருக இலை --- முருகனுடைய பாட்டைக் கேட்டு உருகவில்லையே!

கேட்டும் உருக இலை --- அப்பாடலைக் கேட்டும் உருகவில்லையே;

கூற்று வரு வழி பார்த்தும் உருக இலை --- இயமன் வரும் வழியைக் கண்டும் நீ இறைவனை நினைத்து உருகவில்லையே;

பாட்டை --- துன்பத்தை,

அநுதினம் ஏற்றும் அறிகிலை ---தினந்தேழறும் ஆநுபவித்தும் உண்மையை உணர்கின்றாயில்லை;

தினமானம் --- நாள்தோறும்,

பாப்பு அணியன் அருள் --- பாம்பை அணியாக அணிந்த சிவபெருமான் நல்கும்,

வீட்டை விழைகிலை --- முத்தி வீட்டை நீ விரும்புகின்றாயில்லை;

நாக்கின் நுனி கொடு --- நாவின் நுனியைக் கொண்டு,

ஏத்த அறிகிலை --- அப்பெருமானைப் புகழுதற்கு விரும்பினாயில்லை;

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது --- பாழும் இந்தப் பிறப்புக்களிலேயே ஈடுபடுகின்ற மனமே!

நல் வழிபோக மாட்டம் எனுகிறை --- நல்ல வழியிலே போகமாட்டேன் என்கின்றாய்,

கூட்டை விடுகிலை --- சிறைக்கூடமாகிய இந்த உடற்கூட்டை விடுகின்றாயில்லை;

ஏட்டின் விதி வழி --- ஏட்டில் எழுதியுள்ள தலைவிதியின்படி,

ஓட்டம் அறிகிலை --- வாழ்க்கையில் ஓட்டம் என்பதையும் அறிகின்றாயில்லை;

பார்த்தும் --- இப்படியெல்லாம் நீ இருக்கின்றாய் என்பதைப் பார்த்தும், நான் சும்ம விருக்காமல்

இனி ஒரு வார்த்தை அறைகுவன் --- இனி ஒரு நல்லுரை கூறுகின்றேன்.

இது கேளாய் --- இதை நீ கேட்பாயாக;

புகழ் ஏத்த வாக்கும் --- அவன் புகழை ஏத்துவதற்கு நல்லவாக்கையும்,

உனது உள நோக்கும் அருளுவன் --- உனது உள்ளத்தில் நல்ல கருத்தையும் அருள்புரிவான்,

(ஆதலால்)

அடியார்க்கும் எளியனை --- தன் அடியார்க்கு எளியவனை,

வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ---- வாழ்த்துவோருடைய இருவினைகளை விலக்கும் முருகப் பெருமானை,

மருவாயே --- நீ சேரமாட்டாயோ?


பொழிப்புரை


     எல்லா உலகங்களையும் ஆட்டி வைப்பவராகிய சிவபெருமான் வடமேருகிரியை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி, முப்புரத்திலே தீயை மூட்டி, இயமனை விழுந்து உருள திருவடியை நீட்டி, மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு செய்து, தக்கனது யாகத்தை யழித்து, அத் தக்கனுக்கு ஆட்டுத் தலையைக் கொடுத்து, சரஸ்வதிக்கு அங்கப்பழுது உண்டாக்கிய உமாபதியாகிய சிவபெருமானுடைய, திருக்குமாரரே!

வாழ்க அந்தணர் என்ற திருப்பாசுரம் எழுதிய சிட்டை வையை யாற்றில் எதிரேறுமாறு செய்தும், நெருப்பில் இட்ட ஏடு பச்சென்றிருக்குமாறு செய்தும், சமணர்களைச் சினந்து கழுவிலேறு மாறும் செய்தருளிய குருநாதரே!

தூயவரே!

என் மனம் விருப்புடன் உம்மை ஏத்தும் படி நீர் திருவருள் பார்வையால் பார்த்தருளுக.

தீர்த்தமலை நகரில் காவல் புரிந்து தெய்வயானைக்கு உகந்திருக்கும் பெருமிதம் உடையவரே!

ஏ மனமே! மேலே கண்ட பாட்டில் நீ உருகுகின்றாயில்லை; அப்பாடலைக் கேட்டும் உருகின்றாயில்லை;

இயமன் வரும் வழியை பார்த்தும் உருகின்றாயில்லை;

நாள்தோறும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமான் அருளும் முத்தியின்பத்தை விரும்புகின்றாய் இல்லை;

பாழும் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்ற உடம்பாகிய கூட்டை விடுகின்றாயில்லை;

ஏட்டில் எழுதியுள்ள விதி வழி வாழ்க்கையின் ஓட்டம் என்பதை அறிகின்றாயில்லை;

உனது போக்கை நான் பார்த்து, இனி ஒரு நல்மொழி கூறுகின்றேன். இதைக்கேள்;

முருகனைப் புகழ்ந்து ஏத்த நல்லவாக்கும் உயர்ந்த உள்ளமும் அருளுவான்; அடியார்க்கு எளியனும் வாழ்த்தும் அடியவருடைய இருவினைகளை நீக்குபவனுமாகிய முருகனை நீ சேர்ந்து உய்ய மாட்டாயோ?

விரிவுரை

இத் திருப்புகழ் மனதை முன்னிலையாக்கிப் பாடியது, “அந்தோ மனமே” என்ற திருச்சிராப்பள்ளி திருப்புகழும் இது போன்றது.

பாட்டில் உருகிலை ---

முருகப் பெருமானுடைய அருட்புகழ் நிறைந்த பாடல்களைப் பாடி மனம் உருக வேண்டும்.

கேட்டும் உருகிலை ---

பாடி உருகும் ஆற்றல் இல்லையாயினும், பிறர் பாடக்கேட்டாவது உள்ளம் உருக வேண்டும். இன்னிசைப்பாடல் கல்லையும் இரும்பையும் உருக்கும்.

கூற்று வருவழி பார்த்தும் உருகிலை ---

உடல்வேறு உயிர்வேறாகக் கூறுபடுத்துகின்றவன் கூற்றுவன்; இந்த இயமன் வருகின்ற வழியைப் பார்த்தாவது மனம் உருக வேண்டாமோ?

பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை ---

பாடு-துன்பம். தினந்தினம் ஆன்மா நுகர்நின்ற துன்பங்களைப் பார்த்தாவது மனம் உருகவேண்டும்.

பாப்பு அணியன் அருள் வீட்டை விழைகிலை ---

பாம்பு என்ற சொல் பாப்பு என வந்தது. தாருக வனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து பெருமானைக் கொல்லும் பொருட்டுக் கொடிய பாம்புகளை யேவினார்கள். அவற்றை அரனார் ஆபரணமாக அணிந்து கொண்டருளினார்.

வீம்புஉடைய வன்முனிவர் வேள்வி செய்து விட்டகொடும்
பாம்பு அனைத்தும் தோள்மேல் பரித்தனையே       --- திருவருட்பா.

கொல்ல வந்த பாம்புக்கும் அருள்புரிந்த எம்பிரான், வழிப்பட்டாருக்கு எத்துணை அருள்புரிவார். இதற்கு கருணை கடலாகிய சிவபெருமான் அருள்புரிகின்ற முத்தி வீட்டை மனமே! நீ விரும்பவில்லையே!

இறைவன் மனிதனுக்கு மெல்லிய நாவினைக் கொடுத்தார். நாக்கை நரம்பில்லாமலும் படைத்தருளினார். நரம்புள்ள பகுதிகள் சுளுக்கும். கை கால் கழுத்து இவை சுளுக்கின்றன. நாவில் நரம்பு இருந்தால் அடிக்கடி சுளுக்கிக் கொள்ளும். பேச்சுத் தடைப்படும். அற்புதமான கருவி நாக்கு. அந்த நாவால் இறைவனைப் பாடிப்பரவுதல் வேண்டும்.

நாக்கைக் கொண்டான் நாமமம் நவில்கிலார்”        --- அப்பர்.

நாமேல் நடவீர் நடவீர் இனியே”        --- கந்தரநுபூதி

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது ---

மனது-மனதே! பாழும் பிறவிச் சுழலிலேயே நீ உழல்கின்றனையே? பிறவிக்கு ஏதுவான ஆசையை விடவில்லையே?

நல்வழி போகமாட்டம் எனுகிறை ---

நல்ல வழியிலே போக மாட்டேன் என்கிறது. நீர் பள்ளத்தை நாடிச் செல்வது போல் மனம் பாவச் செயல்களையே நாடுகின்றது.

கூட்டை விடுகிலை ---

கூடு-இந்த உடம்பு.

கூடு கொண்டு உழல்வேனை”                     --- (மூலமந்) திருப்புகழ்.

இந்த உடம்பு ஒரு சிறைச்சாலை., அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டப்பட்டு ஆன்மா இதில் உறைகின்றது.      

விதிகாணும் உடம்பை விடா வினையேன்”      --- கந்தரநுபூதி.

ஏட்டின் விதிவழி ஓட்டம் அறிகிலை ---

பிரம்மா எழுதி வைத்த ஏட்டின் விதிப்படிதான் ஓட்டம் நடைபெறும். எல்லாம் அவ்விதியின்படி நடைபெறும். அதை யறியாத மனம் அவலப்படுகின்றது.

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இது கேளாய் ---

மனமே! நீ இவ்வாறு எந்த வகையிலும் நலம் நாடாது அவலமாவதைக் கண்டு, நாம் இனி சும்மாவிருப்பது நன்றன்று என்று கருதி ஒரு சொல் கூறுகிறேன். கேட்டு உய்வாயாக.

வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் ---

புகழ் ஏத்த வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் என்று மாற்றிப் பொருள் கொள்க. அப்பெருமானுடைய புகழை ஏத்தும் இனிய நல்வாக்கு சித்தியை அருளுவான்.

உள்ளத்தை நோக்கும் அக நோக்கையும் அருளுவான். ஆதலால் மனமே! அடியார்க்கு எளிமையான முருகனை மருவு. அவன் இருவினை நீக்கி எளிதில் அருள்புரிவான்.

ஆட்டி ---

இறைவன் அகலி உலகங்களையும் சாட்டையில்லா பம்பரம் போல் ஆட்டிவைக்கின்றான்.

சாட்டையில்பம்பர சாலம் போலிறை
   ஆட்டுவான்உலகெலாம் அறிந்து நெஞ்சமே”      --- தாயுமானார்.

பல பந்துகளை ஆட்டுகின்றவன் ஆடுவதுபோல் தானும் உலகெலாம் ஆட்டிவைக்கும் இறைவன் தழனும் ஆடுகின்றான்.

வடவரை வாட்டி ---

திரிபுரம் எரிக்க முயன்றபோது, தேவர்கள் வடமேரு மலையை வில்லாக்கி இறைவனிடம் தந்தார்கள்.

அரவொடு பூட்டி ---

அந்த மேரு வில்லில் வாசுகி என்ற நாகராசனை நாணாகச் சேர்த்தார்கள்.

மாநாக நாண்வலுப் புறத்துவக்கியொர்
   மாமேருபூதரத் தநுப்பிடித் தொரு
   மாலாய வாளியைத் தொடுத்து”           --- (ஆனாதஞான) திருப்புகழ்.

திரிபுரம் மூட்டி ---

வில்லுந்தேரும் சாரதியும் அமைத்துத் தந்தபின் தேவர்கள் தமது உதவியாலேயே சிவபெருமான் திரிபுரத்தை அழிக்கப் போகின்றார் என்று எண்ணினார்கள்.

அந்த எண்ணத்தை அறிந்த அரசனார், “நமக்கு வில்லுந்தேரும் வேண்டுமோ?” என்று திருவுளம் பற்றிச்சிறிது புன்னகை பூத்தார். அச்சிரிப்பிலிருந்து எழுந்த ஒரு நெருப்புப்பொறி முப்புரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கியது.

மறலியின் ஆட்டம் அற சரண் நீட்டி ---

மார்கண்டேயருடைய வாழ்நாள் முடிவுபெற்றது. அன்று அவருடைய உயிரைப் பற்றவந்த இயமனை இறைவர் தமது இடப்பாதக் கொழுந்தால் உதைத்து அருளினார்.

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்தே
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றது என்று தரும ராசர்க்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.   --- அப்பர்.
  
மதன் உடல் திருநீறாய் ஆக்கி ---

திரிபுரத்தைச் சிரித்து எரித்தார். மன்மதனைப் பார்த்து எரித்தார்.

மகம் அதை வீட்டி ---

தக்கன் சிவநித்தையுடன் செய்த வேள்வியைச் சிவபெருமான் வீரபத்திரை யேவி அழித்தருளினார்.

ஒருவனை ஆட்டின் முகமதை நாட்டி ---

சிவபெருமானா? அவர் கடவுளா? என்று தலையையாட்டிய தக்கனுக் எப்போதும் தலையையாட்டிக் கொண்டேயிருக்கின்ற ஆட்டு முகத்தைக் கொடுத்தார்.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற.                    --- திருவாசகம்.

மறைமகளார்க்கும் வடுவுற ---

சரஸ்வதியின் மூக்கைக் கொய்து வடுப்படுத்தினார்.

சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற ---

திருஞானசம்பந்தர் சமணர்களுடன் மதுரையில் புனல்வாதம் செய்தபோது “வாழ்க அந்தணர்” என்று திருப்பாசுரத்தை எழுதிய ஏட்டை வையையாற்றில் விட்டருளினார். அவர் விடுத்த ஏடு நீரில் எதிர் ஏறிச் சென்றது. சமணர்கள் ஏடு கடலை நோக்கி ஓடியது.

அழல் பசை காட்டி ---

அனல் வாதஞ் செய்தபோது, “போகமார்த்த” என்ற திருநள்ளாற்றுத் திருப்பதி ஏட்டை நெருப்பில் இட்டபோது அந்த ஏடு வேகாமல் பச்சென்றிருந்தது.

தீர்த்த ---

தீர்த்தன் - பரிசுத்தமானவன்.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்”                                    தீருவெம்பாவை.

எனது அகம் ஏட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி ---

அகம் ஏட்டை; ஏட்டை-விருப்பம்; அகம்-உள்ளம்; உள்ளத்தில் விருப்பமுடன் இறைவனுடைய புகழை ஏத்த வேண்டும். அப்பெருமான் அருட்கண்ணால் நோக்கியருளுவான்.

தீர்த்தமலை:-

மொரப்பூர் புகைவண்டி நிலையத்துக்கு 8 கல் தொலைவில் உள்ள ஹரூக்கு வடகிழக்கே 9.30 கல் தொலைவில் உள்ள தலம். மலையடிவாரத்திலும் மலைமீதும் ஆலயங்கள் இருக்கின்றன. சைவ எல்லப்பநாவலர் பாடிய தலபுராணம் உண்டு


கருத்துரை

ஏ மனமே! நீ முருகனை மருவுவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...