பூத தயை இல்லாத




11.  தகாத சேர்க்கை எதற்கா?

பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே
     பொருளைஅரு ளிச்செய் தனை!
  புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே
     பொல்லாத மிடிவைத் தனை!

நீதிஅகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
     நெறிமாத ரைத்தந் தன்னை!
  நிதானம்உள உத்தமர்க்கு இங்கிதம் இலாதகொடு
     நீலியைச் சேர்வித் தனை!

சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று
     தாழ்ந்துபர வச்செய் தனை!
  தமிழ்அருமை அறியாத புல்லர்மேற் கவிவாணர்
     தாம்பாட வேசெய் தனை!

ஆதரவு இலாமல் இப்படி செய்தது என் சொலாய்?
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     இதன் பொருள் ---

     அமல --- இயல்பாகவே மலம் அற்றவனே!

     எமது அருமை மதவேள் --- எமது அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     பூத தயை இல்லாத லோபியர் இடத்திலே பொருளை அருளிச் செய்தனை --- உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சத் தனம் மிகுந்தவர் இடத்திலே செல்வத்தைக் கொடுத்து அருள் செய்கின்றாய்,

     புண்ணியம் செய்கின்ற சற்சனரிடத்திலே பொல்லாத மிடி வைத்தனை --- புண்ணியச் செயல்களையே புரிகின்ற நல்லவர்களிடத்திலே கொடிய வறுமையை வைக்கின்றாய்,

     நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத் தக்க நெறி மாதரைத் தந்தனை --- அறநெறியில் இருந்து நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி போன்ற கற்பு நெறியிலே நிற்கும் பெண்சை மனைவியாகத் தந்தாய்.

     நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை - அமைதியே வடிவான உத்தம குணம் பொருந்திய நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத, தீமையே புரிகின்ற நீலி போன்றவளைக் கூட்டி வைத்தாய்.

     சாதியில் உயர்ந்த பேர், ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை --- உயர்குடியிலே தோன்றியவர்களை, இழிந்த குலத்திலே பிறந்தவர் பின்னே போய், வணங்கிப் போற்றுமாறு வைத்தாய்.

     தமிழ் அருமை அறியாத புல்லர் மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை --- தமிழின் இனிமையைக் அறியாத புன்மைக் குணம் உடையவர்களை, நல்ல கவிஞர்கள் புகழ்ந்து பாடுமாறு செய்தாய்.

      இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! - இவ்வாறு ஒருவர்க்கொருவர் ஆதரவாக இல்லாமல் பண்ணினது ஏன்? கூறுவாயாக.

     குறிப்பு ---- எல்லாம் இறைவன் விரும்பித் தந்தது அல்ல.
அவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். அவரவர் வினைப்படி, இறைவன் ஆணை தந்தது என்று கொள்ளவேண்டும்.

பூதம் என்பது உயிர்களைக் குறித்தது.  

இங்கிதம் - குறிப்பு அறிந்து  நடத்தல், கருத்து அறிந்து நடத்தல், இனிமையாக இருத்தல், சமய உசிதமாக நடத்தல்.  

நீலி - வஞ்சகம், கொடியவள், ஒரு பெண்பேய். பொய்யானவள். பாசாங்கு செய்பவள். செருக்கு மிக்கவள்.    

அருந்ததி - வசிட்டரின் மனைவி.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...