திருச்செங்கோடு - 0380. அத்துகிரின்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அத் துகிரின் நல் (திருச்செங்கோடு)

முருகா!
உன்னைத் துதியாமல்
இந்த உடம்பு வீணாக அழிதல் கூடாது.


தத்த தனதனன தத்த தனதனன
     தத்த தனதனன ...... தனதான


அத்து கிரினலத ரத்து அலனவள
     கத்து வளர்செய்புள ...... கிதபூத

ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
     யத்தி யிடனுறையு ...... நெடுமாம

ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
     லத்து ரகசிகரி ...... பகராதே

யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
     யத்தி னிடையடிமை ...... விழலாமோ

தத்து கவனவரி ணத்து வுபநிடவி
     தத்து முநியுதவு ...... மொழியாறுத்

தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
     தத்தை தழுவியப ...... னிருதோளா

தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
     தத்து மலையவுணர் ...... குலநாகந்

தத்த மிசைமரக தத்த மனியமயில்
     தத்த விடுமமரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அத் துகிரின் நல் அதரத்து, அல் அன அள-
     கத்து வளர்செய் புள ...... கித  பூத-

ரத்து, இரு கமல கரத்து, இதயம் உருகி,
     அத்தி இடன் உறையும் ...... நெடு மாம-

ரத்து மலர் கனி அலைத்து வரும், டை
     தலத்து, உரக சிகரி ...... பகராதே,

அத்தி மல உடல் நடத்தி, எரி கொள் நிரை-
     யத்தின் இடை அடிமை ...... விழல்ஆமோ?

தத்து கவன அரிணத்து, உபநிட வி-
     தத்து, முநிஉதவும் ...... மொழியால், துத்-

தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர்
     தத்தை தழுவிய  ...... பனிருதோளா?

தத்து உததி துரகதத்து மிகு திதிசர்
     தத்து மலை அவுணர் ...... குலநாகம்

தத்த மிசை மரகதத் தமனிய மயில்
     தத்த விடும் அமரர் ...... பெருமாளே.

 பதவுரை

      தத்து கவன அரிணத்து --- வேக நடையுடைய மானினிடத்தில்

     உபநிடவிதத்து முநி உதவு மொழியால் --- உபநிடத விதங்களையுணர்ந்த சிவமுனிவர் தந்த சொல்லால்,

     துத்தத்தை --- பாலை,

     நறவை --- தேனை,

     அமுதத்தை நிகர் --- அமுதத்தையும் ஒத்த,

     குறவர் தத்தை --- குறவர் குலத்தில் வளர்ந்த கிளிபோன்ற வள்ளியம்மை

     தழுவிய பன் இரு தோளா --- தழுவிய பன்னிரண்டு திருத்தோள்களை உடையவரே!

      தத்து உததி துரகதத்து மிகு திதிசர் --- அலைவீசும் கடல் போல குதிரைப்படை மிகுந்த அசுரர்களும்,

     தத்து மலை அவுணர் --- தாவுகின்ற மலைபோன்ற அவுணர்களும் ஆகிய,

      குல நாகம் தத்த --- சர்ப்பக் கூட்டம் நடுங்கி ஒடுங்க,

     மிசை --- அவர்கள் மீது,

     மரகத தமனிய மயில் --- மரகத நிறமும் பசும்பொன் நிறமும் படைத்த மயில் மீது

     தத்த விடும் --- ஆரோகணித்து, தாவி விடுத்துக் கொண்டு வந்த,

     அமரர் பெருமாளே ---  தேவர்கள் போற்றும் பெருமையிற் சிறந்தவரே!

      அத் துகிரின் நல் அதரத்து --- அந்தப் பவளம் போன்ற நல்ல உதட்டிலும்,
    
     அல் அன அளகத்து ---  இருள்போன்ற கூந்தலிலும்,

     வளர் செய் புளகித பூதரத்து ---  புளகித்து வளர்கின்ற மலைபோன்ற தனங்களிலும்,

     இரு கமல கரத்து ---  இரண்டு தாமரை மலர் போன்ற கரங்களிலும்,

     இதயம் உருகி --- மனம் உருகி,

     அத்தி இடம் உரையும் - சமுத்திரத்தில் உறைந்த,

     நெடு மா மரத்து --- சூரனாகிய நீண்ட மாமரத்தின்,

     மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து --- மலரையும் கனியையும் அலைந்து வந்து அமர்ந்தருளிய தலமாகிய,  

     உரக சிகரி பகராதே --- நாககிரியைத் துதி செய்யாமல்,

     அத்தி மல உடல் நடத்தி --- எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து,

     எரிக்கொள் நிரையத்தின் இடை --- நெருப்பு மயமான நரகத்திலே,

     அடிமை விழலாமோ --- உமது அடியேன் விழலாமோ?


பொழிப்புரை


     வேகமான நடையை உடைய மானின் பால், உபநிடதங்களை உணர்ந்த சிவமுனிவர் தந்தவரும், பால் தேன் அமுதம் இவற்றை ஒத்த மொழியையுடைய கிளி போன்றவருமாகிய வள்ளிநாயகியார் தழுவிய பன்னிரு புயத்தை உடையவரே!

     அசுரர்களும், தாவும் மலைபோன்ற அவுணர்களும் ஆகிய சர்ப்பக் கூட்டம் நடுங்கி ஒடுங்க, மரகத நிறமும் பொன்னிறமும் பொருந்திய மயில் மீது ஆரோகணித்து வந்த, தேவர் போற்றும், பெருமிதம் உடையவரே!

     அந்த பவளம் போன்ற உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், புளகித்து வளர்கின்ற மலைபோன்ற தனங்களிலும், தாமரை போன்ற இரு கரங்களிலும் உள்ளம் உருகி, கடலில் முளைத்த சூரனாகிய மாமரத்தில், மலர் கனி இவற்றை அலைத்து அழித்து, வந்து அமர்ந்தருளிய நாககிரியைத் துதியாமல், எலும்புடன் கூடிய மல உடம்பைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் உமது அடியேன் விழலாமோ?
   
விரிவுரை

இத் திருப்புகழில் அருணகிரியார் பதங்களை அமைத்திருக்கின்ற அழகும் சமர்த்தும் மிக மிகச் சிறந்தன. தத்த தனதனன தத்த தனதனன என்ற அற்புதமான சந்த நடையழகுடன் கூடியது இத் திருப்புகழ்.

பாட்டின் பிறப்குதியைத் தமிழன்பர்கள் ஊன்றிப் படித்து இன்புறுக. தத்து என 5 முறையும், தத்தை என 3 முறையும், தத்த என 3 முறையும், எத்துணை அழகாக அந்த அடிகள் அமைந்திருக்கின்றன. ஆ! அற்புதமான பதங்கள்.

அத்துகிரின் நல் அதரத்து ---

அ துகிரின்நல் அதரத்து, பெண்களின் அதரம் பவளம் போல் விளங்கும்.

அல் அன அளகத்து ---

அல் அன அளகத்து. அல்-இருள். அன-அன்ன. இருள்போன்ற கரிய கூந்தல்.

வளர்செய் புளகித பூதரத்து ---

பூதரம்-மலை. ஆகுபெயராக-தனத்தைக் குறிக்கின்றது.

இதயம்உருகி ---

மாதர்களின்அவயவ நலத்தினால் மனம் உருகி நல்வழி விடுத்து அல்வழி யடுத்து அழிவர் பலர்.


அத்தியிடன் உறைவு நெடு மாமரத்து ---

அத்தி-கடல். சூரபன்மன் கடைசி நேரத்தில் கடலில் இரும்பு மா மரமாக முளைத்து உலகை நடுக்கினான்.


உரக சிகரி ---

உரகம் - பாம்பு. உரகசிகரி-நாககிரி. இம் மலையைப் பரவினோர் நரகிடைப் புகுதார்.

அத்தி மலவுடல் நடத்தி ---

அத்தி-எலும்பு.எலும்பும் மலமும் பொருந்திய இந்த வுடம்பைச் சுமந்து பாவம் புரிவர்.

எரிகொள் நிரையத்தினிடை அடிமை விழலாமோ ---

அடியேன் எரி மயமான நரகிடை விழலாமோ! விழாதவண்ணம் ஆட்கொண்டருள்வீர்.

தத்து கவன அரிணத்து ---

தத்து கவன அரிணம். தத்து - வேகமான, கவனம் - நடை. அரிணம்-மான்.

உபநிட விதத்து முநியுதவு ---

வள்ளி மலையில் தவஞ்செய்த உபநிடதங்களை யுணர்ந்த சிவமுனிவர் பார்வையால் மானிடம் வள்ளி தோன்றுமாறு செய்தார்.


மொழியால் துத்தத்தை நறவை அமுதத்தை ---

மொழியால் துத்தத்தை நறவை அமுதத்தை --- பால், தேன், அமுதம் இவற்றை நிகர்க்கின்ற இனிய மொழியையுடையவன்.

தத்துததி துரகதத்து மிகுதி திசர் ---

தத்து - தாவுகின்ற, உததி - கடல் போன்ற. துரகதம் - குதிரை. திதிசர் - திதி பெற்றவர்கள்; தைத்தியர்கள்.

தத்து மலையவுணர் ---

தத்து - தாவுகின்ற மலை போன்ற அவுணர்கள்.

குல நாகம் தத்த ---

குலம்-கூட்டம். சர்ப்பம் போன்று கூட்டமாக வந்த அந்த அசுரர்கள் நடுங்குமாறு முருகர் மயில்மீது சென்று அழித்தருளினார்.

கருத்துரை

         நாககிரி நாதனே! நரகிடை விழாவண்ணம் நல்லருள் செய்வீர்.
                 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...