திருத் தருமபுரம்




திருத் தருமபுரம்

இறைவர்              : தருமபுரீசுவரர், யாழ்முரிநாதர்.

இறைவியார்           : மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி.

தல மரம்               : வாழை.

தீர்த்தம்               : தரும தீர்த்தம், பிரம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - மாதர் மடப்பிடி யும்மட.

         சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         இத்தலத்திற்கு அருகாமையில் "தக்களூர்" என்ற் தேவார வைப்புத் தலம் உள்ளது. தருமபுரம் செல்பவர்கள் இத்தலத்திற்கும் சென்று வழிபடலாம்.

         காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறம் காணப்படும் மாதாகோயில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. திருதெளிச்சேரி என்ற பாடல் பெற்ற திருத்தலம் காரைக்கால் நகரில் கோயில்பத்து என்ற இடத்திலுள்ளது. பாடல் பெற்ற திருத்தலம் திருநள்ளாறும் அருகிலுள்ளது.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முரிப் பதிகம் பெற்ற சிறப்புடையது இத்திருத்தலம்.

     தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஒரு 5 நிலை இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்துள்ள 3 நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. 2-ம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுரமின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. 2-ம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து கருவறையில் இறைவன் யாழ்முரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர் இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார்.தெற்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதெட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதே போல உற்சவ மூர்த்திகளுள் யாழ்மூரிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.

         இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரமதீர்த்தம், தருமதீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அரைதுள்ளன. தலமரமாக வாழை உள்ளது.

          சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நீக்கும் கரும புரத்தில் கலவாது அருள் செய் தரும்புரம் செய் தவமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 443
அடியவர்கள் களிசிறப்பத் திருவேட்டக்
         குடிபணிந்து, அங்கு அலைவாய்ப் போகிக்
கடிகமழும் மலர்ப்பழனக் கழனிநாட்டு
         அகன்பதிகள் கலந்து நீங்கி,
கொடிமதில்சூழ் தருமபுரம் குறுகினார்,
         குண்டர்சாக் கியர்தம் கொள்கை
படிஅறியப் பழுதுஎன்றே மொழிந்து உய்யும்
         நெறிகாட்டும் பவள வாயர்.

         பொழிப்புரை : அடியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையத் திருவேட்டக்குடியைச் சென்று வணங்கி, அவ்விடத்தினின்றும் கடற்கரை வழியே சென்று மணம் கமழும் மலர்களையுடைய வயல்கள் நிறைந்த சோழநாட்டின் பெரும்பதிகளை அடைந்து, உள்ளம் குளிர வணங்கி, அவற்றினின்றும் நீங்கிச் சமண சாக்கியர்களின் கொள்கைகள் குற்றம் உடையவை என்று உலகம் அறிய எடுத்துக் காட்டி, உய்யும் நெறியைக் காட்டும் பவள வாயை உடைய பிள்ளையார் கொடிகள் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த தருமபுரத்தை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 444
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
         பிறப்புஇடமாம், அதனால் சார
வரும் அவர்தம் சுற்றத்தார் வந்துஎதிர்கொண்டு,
         அடிவணங்கி வாழ்த்தக் கண்டு,
பெருமைஉடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார்,
         பிள்ளையார் அருளிச் செய்த
அருமையுடைப் பதிகம் தாம் யாழினால்
         பயிற்றும்பேறு அருளிச் செய்தார்.

         பொழிப்புரை : தருமபுரம் திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாரின் தாயாரது பிறப்பிடம் ஆதலால், அப்பதியைச் சாரவரும் அவருடைய சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அவர் திருவடியை வணங்கி வாழ்த்தினார்களாக, அதைப் பார்த்துப் பெருமை பொருந்திய திரு நீலகண்ட யாழ்ப்பாணர் அவர்களுக்குத் தாம் செய்து வரும் பணியை எடுத்துக் கூறுவாராய், ஆளுடைய பிள்ளையார் அருளிய அரிய திருப்பதிகங்களைத் தாம் யாழில் இட்டுப் பயிற்றப் பெற்ற பேற்றை அருளிச் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 445
கிளைஞரும் மற்று அதுகேட்டுக் "கெழுவுதிருப்
         பதிகத்தில் கிளர்ந்த ஓசை
அளவுபெறக் கருவியில் நீர் அமைத்துஇயற்றும்
         அதனாலே, அகிலம் எல்லாம்
வளரஇசை நிகழ்வது"என விளம்புதலும்
         வளம்புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து, திரு நீலகண்டப்
         பெரும்பாணர் உணர்த்து கின்றார்.

         பொழிப்புரை : உறவினரும்அதைக் கேட்டு, பொருந்திய திருப்பதிகத்தில் பொதிந்த ஓசையானது அளவு பெறும்படி யாழாகிய இசைக் கருவியில் நீவிர் பொருந்தும்படி வைத்து வாசிப்பதானால், உலகம் எல்லாம் அவ்விசை வளரும்படி நிகழ்கின்றது எனக் கூறியதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் உள்ளம் நடுக்கம் கொண்டு, வளமுடைய சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கிச் சொல்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 446
"அலகுஇல்திருப் பதிகஇசை அளவுபடா
         வகை, இவர்கள் அன்றி யேயும்
உலகில்உளோரும் தெரிந்து,அங்கு உண்மையினை
         அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்,
பலர்புகழும் திருப்பதிகம் பாடி அரு
         ளப் பெற்றால், பண்பு நீடி
இலகும்இசை யாழின்கண் அடங்காமை
         யான்காட்டப் பெறுவன்" என்றார்.

         பொழிப்புரை : `அளவற்ற திருப்பதிக இசைக் கூறுகளைக் கருவியில் அளவுபடாதவாறு, இவர்களே அன்றி இன்னும் உலகில் உள்ளவரும் அறிந்து அவ்வுண்மையை உணர்ந்து உய்யுமாறு உணர்த்தும் தன்மையினால், பலதிறத்தவரும் புகழும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளுகின்ற பேறு பெறுவேனானால், பண்பினால் நீண்டு விளங்கும் அவ்விசையானது யாழில் அடங்காத நிலையை நான் அவர்க்கு எடுத்துக் காட்டப் பெறுவேன்\' என்று பிள்ளையாரிடம் பாணர் விண்ணப்பித்துக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 447
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன்
         தொழுதுதிருப் பதிகத்து உண்மை,
பூதலத்தோர் கண்டத்தும், கலத்தினிலும்,
         நிலத்து நூல் புகன்ற வேத
நாதஇசை முயற்சிகளால் அடங்காத
         வகைகாட்ட நாட்டு கின்றார்,
"மாதர்மடப் பிடிபாடி" வணங்கினார்
         வானவரும் வணங்கி ஏத்த.

         பொழிப்புரை : மறைகளின் நெறியை வளர்ப்பவரான பிள்ளையாரும் ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட இறைவர் திருமுன்பு நின்று, திருப்பதிகத்தின் உண்மைத் திறமானது, உலகத்தவரின் மிடற்றிலும் கருவியிலும், உலகினர் மறைவழிவகுத்த இசைநூல்களின் நாத வகைகளினாலும் அடங்காத வகையினை அறியக் காட்டுமாறு நிலைநாட்டுபவராய்த் தேவர்களும் வணங்கிப் போற்றும்படி `மாதர் மடப்பிடி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.

         மாதர் மடப்பிடி' (தி.1 ப.136) எனத் தொடங்கும் இவ்வரிய பதிகம் மேகராகக்குறிஞ்சியில் அமைந்த பதிகமாகும். வியாழக்குறிஞ்சிப் பண்ணில் அமைந்தது என்றும் சிலர் கருதுவர். யாழ்மூரி என்பது பண்ணன்று, பாணர்தம் வேண்டுகோளால் பாடி, யாழை முரிக்க நேர்ந்த வரலாற்றைக் குறிக்க வந்த தொடருமன்று. யாழில் இசைக்க இயலாதவாறு அமைந்த இசையமைப்பாகும்.


பெ. பு. பாடல் எண் : 448
வண்புகலி வேதியனார் "மாதர்மடப்
         பிடி"எடுத்து வனப்பில் பாடி,
பண்பயிலும் திருக்கடைக்காப் புச்சாத்த
         அணைந்து,பெரும் பாண னார்தாம்
நண்புஉடையாழ்க் கருவியினில் முன்புபோல்
         கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்கு,
எண்பெருகும் அப்பதிகத்து இசைநரம்பில்
         இடஅடங்கிற்று இல்லை அன்றே.

         பொழிப்புரை : வளம்மிக்க சீகாழியில் தோன்றிய பிள்ளையார் `மாதர் மடப்பிடி' எனத் தொடங்கி அழகு பொருந்தப்பாடிப் பண் பயில்கின்ற திருக்கடைக்காப்புச் சாத்தி நிறைவு செய்யத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அங்கு நின்று யாழ்க் கருவியில் அமைத்து முன் போல் அப்பதிக இசையினை இசைக்கப் புகுந்த அளவில், அவருக்கு அப்பதிகத்தின் இசை, யாழ் நரம்பில் வைத்து வாசிக்க அடங்காமல் போயிற்று.


பெ. பு. பாடல் எண் : 449
அப்பொழுது திருநீல கண்டஇசைப்
         பெரும்பாணர் அதனை விட்டு,
மெய்ப்பயமும் பரிவுமுஉற, பிள்ளையார்
         கழல்இணைவீழ்ந்து, எழுந்து, நோக்கி,
"இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து
         இசையாழில் ஏற்பன் என்னச்
செப்பியதுஇக் கருவியைநான் தொடுதலின்அன்
         றோ"என்று தெளிந்து செய்வார்.

         பொழிப்புரை : அதுபொழுது திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் வாசிப்பதைக் கைவிட்டு, உடலில் நடுக்கமும், உள்ளத்தில் வருத்தமும் பொருந்தப் பிள்ளையாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, அவரைப் பார்த்து, `இந்தப் பெரியவர் அருளிச் செய்த திருப்பதிகத்தின் இசையை யாழில் இசைப்பேன் என்று மேற்கொள்ளச் செய்த இந்த யாழ்க் கருவியை நான் தொடுதலால் விளைந்ததன்றோ!\' என்று உள்ளத்தில் தெளிந்து, அதற்குத்தக, மேற்கொண்ட செயலைச் செய்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 450
வீக்குநரம்பு உடை யாழினால் விளைந்தது
         இதுஎன்று, அங்கு அதனைப் போக்க
ஓக்குதலும், தடுத்துஅருளி, "ஐயரே,
         உற்றஇசை அளவினால் நீர்
ஆக்கிய இக்கருவியினைத் தாரும்"என
         வாங்கிக்கொண்டு, அவனி செய்த
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
         வாயர்பணித்து அருளு கின்றார்.

         பொழிப்புரை : `முறுக்கிக் கட்டப்பட்ட நரம்பையுடைய யாழால் இக்குற்றம் உண்டானது' எனக் கூறி, அதனை முரிப்பதற்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயன்ற போது, உலகம் செய்த நற்பேற்றின் வடிவாய் உள்ள பிள்ளையார், பாணரின் அச்செயலைத் தடுத்து `ஐயரே! பொருந்திய இசை நூலில் விதித்த அளவுப்படி நீவிர் இயற்றும் இந்த யாழ்க்கருவியைத் தாரும்' என்று, அதனைத் தம் கையில் பெற்றுக் கொண்டு, மேலும் ஆணையிடுபவராய்,


பெ. பு. பாடல் எண் : 451
"ஐயர், நீர் யாழ்இதனை முரிக்கும் அதுஎன்?,
         ஆள்உடையாள் உடனே கூடச்
செய்யசடை யார்அளித்த திருவருளின்
         பெருமையெலாம் தெரிய, நம்பால்
எய்தியஇக் கருவியினில் அளவுபடு
         மோ, நந்தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவுறஇக் கருவிஅள
         வையின்இயற்றல் வழக்கே" என்றார்.

         பொழிப்புரை : `ஐயரே! இந்த யாழை முரிப்பது ஏன்? ஆளுடைய பிராட்டியாருடன் எழுந்தருளியிருக்கும் சிவந்த சடையை உடைய சிவபெருமான் அளித்த திருவருளின் பெருமையெல்லாம், நம்மிடத்தில் பொருந்திய இக் கருவியின் அளவில் அடங்குமோ? நம் இயல்புக்குத் தக்கவாறு இவ்வுலகத்தவர் மகிழ, இந்தக் கருவியின் அளவுக்குள் அமையும் நிலையில் இயற்றுவதே ஏற்றதாகும்\' என்று அருளி,


பெ. பு. பாடல் எண் : 452
"சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
         செயல்அளவில் எய்துமோ?, நீர்
இந்த யாழினைக்கொண்டே இறைவர்திருப்
         பதிகஇசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர்"
         எனக்கொடுப்ப, புகலி மன்னர்
தந்த யாழினைத்தொழுது கைக்கொண்டு,
         பெரும்பாணர் தலைமேல் கொண்டார்.

         பொழிப்புரை : `மனத்தானும் அளவுபடுத்தற்கியலாத இசையின் பெருமையைச் செயலுள் பொருந்தச் செய்ய வருமோ? இந்த யாழைக் கருவியாகக் கொண்டு இறைவர் திருப்பதிகத்தை இதனுள் பொருந்த வந்த அளவில் இயைத்து இசைப்பீராக!\' எனப் பிள்ளையார் பணித்துக் கொடுத்த யாழை, அவரைத் தொழுது ஏற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், அதனைத் தலைமீது வைத்துப் போற்றிக் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 453
அணைவுறும்அக் கிளைஞருடன் பெரும்பாணர்
         ஆள்உடைய பிள்ளை யார்தம்
துணைமலர்ச்சே வடிபணிந்து, துதித்துஅருள,
         தோணிபுரத் தோன்ற லாரும்
இணையில் பெருஞ் சிறப்புஅருளி, தொண்டர்உடன்
         அப்பதியில் இனிது மேவி,
பணைநெடுங்கை மதயானை உரித்தவர்தம்
         பதிபிறவும் பணியச் செல்வார்.

         பொழிப்புரை : சூழ இருந்த சுற்றத்தாருடன் பெரும்பாணர், ஆளுடைய பிள்ளையாரின் இரு மலர் அனைய திருவடிகளையும் வணங்கிப் போற்றிட, சீகாழியில் தோன்றிய தலைவரும், ஒப்பில்லாத பெருஞ்சிறப்புக்களை அவர்களுக்கு அளித்து, தம் தொண்டர்களுடனே அப்பதியில் இனிதாய் அமர்ந்திருந்த பின், அவர் பெரிய நீண்ட துதிக்கையையுடைய யானையை உரித்த இறைவரின் பிற பதிகளையும் வணங்கச் செல்பவராய்,



1.136   திருத்தருமபுரம்                       பண் - யாழ்முரி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மாதர்ம டப்பிடியும் மட அன்னமும் அன்னதுஓர்
         நடை உடைம் மலைமகள் துணைஎன மகிழ்வர்,
பூதஇ னப்படைநின்று இசைபாடவும் ஆடுவர்
         அவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்,
வேதமொடு ஏழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்திரை
         இரைந் நுரை கரை பொரு துவிம்மிநின்று அயலே,
தாதவிழ் புன்னை தயங்கும லர்ச்சிறைவண்டுஅறை
         எழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத்தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.


பாடல் எண் : 2
பொங்குந டைப்புகலில் விடை யாம்அவர் ஊர்திவெண்
பொடி அணி தடம் கொண்மார்பு பூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவர் ஆடுவர்,
வளங் கிளர் புனல்அர வம்வைகிய சடையர்,
சங்குக டல்திரையால் உதை யுண்டுச ரிந்துஇரிந்து
ஒசிந்து அசைந்து இசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்இருள் ஒல்கநின்று
இலங்கு ஒளிந் நலங்கு எழில் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :சினம் பொங்கிய நடையினைஉடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.


பாடல் எண் : 3
விண்ணுறு மால்வரைபோல் விடை ஏறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரிஒளி கொள்தோடுநின்று இலங்கக்
கண்ணுற நின்றுஒளிரும் கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவர் இழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்உற நின்றவர் தம்உரு வம்அயன் மால்தொழவ்
அரி வையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண்இதழ் முல்லையொடுஎண் இதழ் மௌவல் மருங்குஅலர்
கருங் கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :வானளாவிய பெரிய மலை போன்ற விடையின்மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடைநாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.


பாடல் எண் : 4
வார்உறு மென்முலைநல் நுதல் ஏழையொடு ஆடுவர்,
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்,
கார்உற நின்றுஅலரும் மலர்க் கொன்றைஅம் கண்ணியர்,
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுஉறை பதியர்,
பார்உற விண்ணுலகம் பர வப்படு வோர்அவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தார்உறு நல்அரவம் மலர் துன்னிய தாதுஉதிர்
தழை பொழில் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :கச்சணிந்த மென்மையான தனங்களை யுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதிசூடிய சடையினரும், கார் காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுலகத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி, மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.


பாடல் எண் : 5
நேரும் அவர்க்குஉணரப் புகில் இல்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந்து இடம் படுவ்வதொர் நிலையர்,
பேரும் அவர்க்குஎனையா யிரம் முன்னைப்பி றப்புஇறப்பு
இலா தவர் உடற் றுஅடர்த் தபெற்றியார் அறிவார்
ஆரம் அவர்க்குஅழல்வா யதொர் நாகம் அழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் இதழிநல் அலங்கல்
தாரம் அவர்க்குஇமவான் மகள், ஊர்வது போர்விடை
கடிபடு செடி பொழில் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத் தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப்பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 6
கூழைஅம் கோதைகுலா யவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத்                                                                 துவர்வாய்
மாழைஒண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டுமு ரன்றுஇனந்
துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையும் ஞாழலுந்நீ டிய கானலில் அள்ளல்
இசைபுள் இனந் துயில் பயில் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத்தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.


பாடல் எண் : 7
தேமரு வார்குழல்அன் னந டைப்பெடை மான்விழித்
திருந்து இழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையில் துதை வெண்மதி துன்றுகொன்
றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோல் உடையர்
காமரு தண்கழிநீ டிய கானல் அகண்டகங்
கடல் அடை கழி இழி யமுண்டகத்து அயலே
தாமரை சேர்குவளைப் படு கில்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயல் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூயசெஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர்,பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.


பாடல் எண் : 8
தூவண நீறுஅகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்,
கோவண மும்உழையின் அத ளும்உடை ஆடையர்,
கொலைம் மலி படை யொர்சூ லம்ஏந்திய குழகர்,
பாவண மாஅலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய்து அருள்புரி தலைவர்,
தாவண ஏறுடைஎம் அடி கட்குஇடம் வன்தடங்
கடல் இடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத்திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான்தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள்புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 9
வார்மலி மென்முலைமாது ஒரு பாகம் அதாகுவர்
வளங் கிளர் மதி அர வம்வைகிய சடையர்,
கூர்மலி சூலமும்வெண் மழு வும்அவர் வெல்படை,
குனி சிலைதனிம் மலை அதுஏந்திய குழகர்,
ஆர்மலி ஆழிகொள்செல் வனும் அல்லிகொள் தாமரைம்
மிசை யவன் அடிம் முடி அளவுதாம் அறியார்
தார்மலி கொன்றைஅலங் கல் உகந்தவர் தங்குஇடம்
தடங் கடல் இடுந் திரைத் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 10
புத்தர்கள் தத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநல்தவர் புலவோர்
பத்தர்கள் அத்தவமெய்ப் பயனாக உகந்தவர்,
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி அணிவர்,
முத்தன வெண்நகைஒண் மலை மாதுஉமை பொன்அணி
புணர்ம் முலை இணை துணை அணைவதும் பிரியார்,
தத்துஅரு வித்திரள்உந் திய மால்கடல் ஓதம்வந்து
அடர்ந் திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே.

         பொழிப்புரை :புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.


பாடல் எண் : 11
பொன்நெடு நல்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூஉம் புன றிரூஉ அமர் புகல்லிஎன்று உலகில்
தன்னொடு நேர்பிறஇல் பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடல் தருமபுரம் பதியை,
பின்னெடு வார்சடையில் பிறை யும்அர வும்உடை
யவன் பிணை துணை கழல் கள்பேணுதல் உரியார்
இன்நெடு நன்னுலகுஎய் துவர் எய்திய போகமும்
உறு வர்கள் இடர் பிணி துயர்அணைவ் விலரே.

         பொழிப்புரை :பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.

         ஞானசம்பந்தப் பெருமான் செந்தமிழால் திருத்தருமபுரப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் கழல்களைப் பேணுதல் உரியார் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; இடரும் பிணியும் எய்தப்பெறார், என்றும் இன்பம் பெறுவர் என்கின்றது.
        
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...