குன்றக்குடி - 0376. நாமேவு குயிலாலும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாமேவு குயிலாலும் (குன்றக்குடி)

முருகா!
மாதர் மயல் எனும் துன்பத்தை ஒழித்து,
உனது திருவடி இன்பத்தை அருள்


தானான தனதான தானான தனதான
     தானான தனதான ...... தனதான


நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
     நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும்

நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
     நாடாசை தருமோக ...... வலையூடே

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
     லேவாரும் விழிமாதர் ...... துயரூடே

ஏகாம லழியாத மேலான பதமீதி
     லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய்

தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
     தானேறி விளையாடு ...... மொருபோதில்

தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோத ரன்முராரி ...... மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ...... புயவீரா

வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


நா மேவு குயிலாலும், மா மாரன் அயிலாலும்,
     நாள்தோறும் மதிகாயும் ...... வெயிலாலும்,

நார் மாதர் வசையாலும், வேய் ஊதும் இசையாலும்,
     நாடு ஆசை தரும் மோக ...... வலைஊடே

ஏமாறி, முழுநாளும் மாலாகி, விருதாவிலே,
    வாரும் விழிமாதர் ...... துயர்ஊடே

ஏகாமல், ழியாத மேலான பதமீதில்
     ஏகீ, உன் உடன் மேவ ...... அருள்தாராய்.

தாம் மோகமுடன் ஊறு பால்தேடி, உரல்ஊடு
     தான்ஏறி விளையாடும் ...... ஒரு போதில்,

தாயாக வரு சோதை காணாது, களவாடு
     தாமோதரன் முராரி ...... மருகோனே!

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மால்ஆகி விளையாடு ...... புயவீரா!

வான்நாடு புகழ்நாடு தேன்ஆறு புடைசூழ
     மாயூரகிரி மேவும் ...... பெருமாளே.

பதவுரை

       தாம் மோகம் உடன் ஊறுபால் தேடி --- தாம் ஆசையோடு கறந்த பாலைத் தேடி

     உரல் ஊடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் --- உரலுடன் ஏறி விளையாடிய ஒரு பொழுதில்,

     தாய் ஆகவரு சோதை காணாது --- தாயாக வந்த யசோதரை காணாவண்ணம் பாலைத் திருடிய,

     களவு ஆடு தாமோதரன் முராரி மருகோனே --- தாமோதரன், முராரி எனப்படும் திருமாலின் திருமருகரே!

      மாமாது --- இலக்குமியின் மகளாகியவரும்,

     வனமாது --- வனத்தில் வளர்ந்தவரும்,

     கார்மேவு சிலைமாது --- மேகந்தவழும் வள்ளிமலையில் வாழ்ந்தவரும் ஆகிய வள்ளியம்மை மீது

     மால் ஆகி விளையாடு புய வீரா --- அன்பு பூண்டு விளையாடுகின்ற திருத்தோள்களை உடைய வீரரே!

      வான் நாடு புகழ் நாடு --- விண்ணுலகத்தோரும் புகழ்கின்ற நாட்டில்

     தேன் ஆறு புடை சூழும் --- தேனாறு அருகில் சூழ்ந்து ஓடுகின்ற

     மாயூரகிரி மேவும் பெருமாளே --- மாயூரகிரியில் எழுந்தருளியுள்ள பெருமையில் மிகுந்தவரே!

      நா மேவு குயிலாலும் --- அச்சத்தைத் தரும் குயிலாலும்,

     மா மாரன் அயிலாலும் --- சிறந்த மன்மதனுடைய கணையினாலும்,

     நாள்தோறும் மதிகாயும் வெயிலாலும் --- தினந்தோறும் சந்திரன் காய்கின்ற வெயிலினாலும்,

     நார் மாதர் வசையாலும் --- அன்புள்ள பெண்கள் கூறும் வசை மொழியினாலும்,

     வேய் ஊதும் இசையாலும் --- புல்லாங்குழல் இசையாலும்,

     நாடு ஆசை தரும் மோக வலை ஊடே ஏமாறி --- விரும்புகின்ற ஆசையால் வரும் மோக வலைக்குள்ளே அடியேன் சிக்கி, ஏமாற்றம் அடைந்து,

     முழு நாளும் மால் ஆகி விருதாவிலே --- நாள் முழுவதும் மயக்கங்கொண்டு, வீணாக,

     வாரும் விழிமாதர் துயர் ஊடே ஏகாமல் --- நீண்ட கண்களையுடைய மாதர்களால் வரும் துன்பத்துக்குள்ளே செல்லாமல்,

     அழியாத மேல் ஆன பதம் மீதில் ஏகீ --- அழிவில்லாததும் மேலானதும் ஆகிய பதத்தை அடைந்து

     உன் உடன் மேவ அருள் தாராய்  --- தேவரீருடன் மருவி இருக்கத் திருவருளைத் தருவீராக.

பொழிப்புரை

கறந்த பாலைத் தாம் மோகமுடன் தேடிச்சென்று, உரலின் மீது ஏறி விளையாடிய போதில், தாயாக வந்த யசோதை காணாதபடி பலைக் களவு செய்த தாமோதரனும் முராரியும் ஆகிய திருமாலின் திருமருகரே!

இலட்சுமியின் புதல்வியும், காட்டில் வளர்ந்தவரும், மேகந் தவழும் வள்ளிமலையில் வாழ்ந்தவருமாகிய வள்ளி பிராட்டியார் அன்பு கொண்டு விளையாடுகின்ற திருத்தோள்களை உடைய வீரரே!

தேவ வுலகம் புகழ்கின்ற நாட்டில் தேனாறு ஓடுகின்ற மாயூர கிரியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

அச்சத்தைத்தரும் குயிலினாலும், சிறந்த மன்மதனுடைய கணையினாலும், நாள் தோறும் சந்திரன் காயும் வெளியிலனாலும், அன்புள்ள பெண்கள் கூறும் வசை மொழியாலும், புல்லாங்குழலின் இசையாலும், விரும்புகின்ற ஆசையால் விளைந்த மோகவலையிற் சிக்கிய அடியேன், ஏமாற்றம் அடைந்து, மயக்கமுற்று வீணாக நீண்ட கண்களையுடைய மாதர்களால் உண்டாகுந் துன்பத்துக்குள் சென்று துன்பத்தை அடையாத வண்ணம், அழிவில்லாததும் மேலானதுமான நிலையை அடைந்து, உம்முடன் இருக்கும் பதத்தை அருள்புரிவீராக.
    
விரிவுரை

நாமேவு குயிலாலும் ---

நாம்-அச்சம், காமுகர்க்கு குயிலின் ஓசை ஆசையை அதிகரிக்கச் செய்யும்.

விருது குயிலது கூவ”                   --- (இரவியென) திருப்புகழ்.

நாளுதோறும் மதிகாயும் வெயிலாலும் ---

காமுகர்க்குச் சந்திரனுடைய குளிர்ந்த கிரணம் வெப்பத்தைக் கொடுக்கும்.

இரவியென வடவையென ஆலாலவிடமதென
   உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும் வர”       --- திருப்புகழ்.

நார் மாதர் வசையாலும் ---

நார்-அன்புள்ள, அன்புள்ள பெண்கள் வசைமொழி பகர்வார்கள்.

தெருவினில்நடவாமடவார் திரண்டொறுக்கும்
   வசையாலே”                                      --- திருப்புகழ்.

மாதர் துயர் ஊடே ஏகாமல் ---

பெண்களினால் வரும் துன்பத்துக்குள் செல்லாமல், திருவருள் நெறியில் செல்லவேண்டும்.

உன் உடன் மேவ அருள்தாராய் ---

முருகனுடன் இருக்கும் பதம்.

தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் ---

தாம-உதரன்;  தாமம்-கயிறு. உதரன்-வயிற்றையுடையவன்.

கண்ணபிரான் தாயாக வந்த யசோதைக்குத் தெரியாமல் பால் தயிர் வெண்ணெயைத் திருடியுண்டபோது, அவள் கயிற்றினால் வயிற்றைக் கட்டினாள். அதனால் தாமோதரன் என்று பேர் பெற்றார்.

தயிர்நெய் விழுங் கிட்டு ஆய்ச்சியர்
தாம்பினால் ஆர்க்கத் தழும்பிருந்த தாமோதரா    --- பெரிய திருமொழி.

முராரி ---

முரன் என்ற அரக்கனைக் கொன்றதனால் முராரி எனப் பேர் பெற்றனர்.

சிலைமாது மாலாகி விளையாடு புயவீரா:-

வள்ளிநாயகி முருகவேள் மீது மிகவும் அன்பு வைத்து புயமாகிய மலையில் விளையாடினாள்.

  குறமாது தனக்கு விநோத
   கவினாரு பயத்தி லுலாவு விளையாடிக்
   களிகூரும்.....”                           --- (நிலையாத) திருப்புகழ்.

தேனாறு புடைசூழ மாயூரகிரி:-

கானாறும் தேனாறும் ஓடும் வளமையுள்ள மலை குன்றக்குடி.

கருத்துரை

குன்றக்குடி மேவு குமரா! உன் உடனாகும் பதத்தைத் தந்தருள்வீர்.




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...