திருப்
பேணுப்பெருந்துறை
(திருப்பந்துறை)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் "திருப்பந்துறை" என
வழங்கப்படுகின்றது.
கும்பகோணம் - நாச்சியார்கோவில் -
எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் அரிசிலாற்றின்
தென்கரையில் இத்திருத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இறைவர்
: சிவானந்தேசுவரர், பிரணவேசுவரர்.
இறைவியார்
: மங்களாம்பிகை, மலையரசி.
தல
மரம் : வன்னி.
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - பைம்மா நாகம்.
மாணிக்கவாசகரை ஆட்கொண்ட
திருப்பெருந்துறை வேறு. பேணுபெருந்துறை என்னும் இத்திருத்தலம் வேறு.
பிரணவ மந்திரத்திறகு
பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். பின்னர்
முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை
நிந்தனை செய்து விட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க தனது மாமனான
மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும்
மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி
மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார். அதன்படி முருகர் திருப்பனந்தாள்
அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை
தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார்.
அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை
அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும்
முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக
இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும்
தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த
சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர்
மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும்
வல்லவரானார்.
எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும்
திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை
பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சகதியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும்
தலமாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே
முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம்
செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம்
செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம். எதிரில் மங்கள
தீர்த்தம். அதன் கரையில் கோயிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதகள் உள்ளன. குக
விநாயகர், சாட்சி விநாயகர்
என்று பெயர்கள். அவர்களை வழிபட்டு ஆலயத்தினுள் சென்று இறைவனை வணங்கலாம். இராஜ
கோபுரம் வழியே உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். ஒரே
பிரகாரமுள்ளது. கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை
சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி, முருகன்
சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன. சுவாமி
சந்நிதியில் பழமையான முருகப்பெருமானின் உருவச்சிலை உள்ளது. சின் முத்திரையுடன்
தியான நிலையிலுள்ள தண்டபாணி பார்த்துப் பரவசம் அடைய வேண்டிய திருமேனி.
ஆலயத்திலுள்ள பிட்சாடனர் உருவச்சிலையும் மிகச் சிறப்பானது. அம்பாள் மங்களாம்பிகை
தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவ்வாலயத்தின் தலமரம் வன்னி.
இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன்
மட்டும் தனது தேவியருடன் இருக்க,
மற்ற
கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
செங்கற்கோயிலாக இருந்த இக்கோயில்
கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்று இத்தல கல்வெட்டு தெரிவிக்கிறது. இத்தலத்தில்
பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய
பிரதோஷம், சிவராத்திரி
தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மந்தணத்தைக் காணும் அருந்துறை இக்காமர் தலம் என்று எவரும் பேணுபெருந்துறையில்
பெம்மானே" என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 549
ஓங்குபுனல்
பேணு பெருந்துறையும் உள்ளிட்ட,
பாங்குஆர்
திலதைப் பதிமுற்ற மும்பணிந்து,
வீங்குஒலிநீர்வீழி
மிழலையினில் மீண்டும் அணைந்து,
ஆங்குஇனிது
கும்பிட்டு அமர்ந்து உறையும் அந்நாளில்.
பொழிப்புரை : பெருகும் நீர்வளம்
கொண்ட திருப்பேணுபெருந்துறையையும் அதனை உள்ளிட்ட அருகிலுள்ள திலதைப்பதி
மதிமுத்தத்தினையும் போய் வணங்கிப் பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த
திருவீழிமிழலையினில் மீண்டும் எழுந்தருளி, அங்கு இனிதாய் வணங்கி விருப்பமுடனே
இருந்து வரும் நாள்களில்,
பேணுபெருந்துறையில்
அருளிய பதிகம் `பைம்மா நாகம்' (தி.1 ப.42) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
திலதைப்பதி மதிமுத்தத்தில் அருளிய
பதிகம் `பொடிகள் பூசி' (தி.2 ப.118) எனத் தொடங்கும் செவ்வழிப்பண்ணிலமைந்த
பதிகமாகும்.
1.042 திருப்பேணுபெருந்துறை பண்
- தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பைம்மா
நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண்
கொம்புஒன்று பூண்டு.
செம்மாந்து, ஐயம் பெய்க என்று
சொல்லி,
செய்தொழில் பேணிஓர்
செல்வர்,
அம்மான்
நோக்கிய அம்தளிர் மேனி
அரிவை ஓர் பாகம்
அமர்ந்த
பெம்மான், நல்கிய தொல்புக ழாளர்
பேணுபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :திருப்பேணு
பெருந்துறை இறைவர், படம் பொருந் திய
பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த
கொன்றை மலர், வெண்மையான பன்றிக்
கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று `ஐயம் இடுக` என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய்
இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற
விழிகளையும், தளிர் போன்ற
மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.
பாடல்
எண் : 2
மூவரும்
ஆகி, இருவரும் ஆகி ,
முதல்வனும் ஆய்நின்ற
மூர்த்தி,
பாவங்கள்
தீர்தர நல்வினை நல்கி,
பல்கணம் நின்று பணிய,
சாவம்
அதுஆகிய மால்வரை கொண்டு
தண்மதில்
மூன்றும் எரித்த
தேவர்கள்
தேவர், எம்பெரு மானார்,
தீதுஇல் பெருந் துறை
யாரே.
பொழிப்புரை :குற்றமற்ற பேணு
பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும்
மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத்
தோற்றும் சிவன், சக்தி ஆகிய
இருவருமாய், அனைவர்க்கும்
தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண்
கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த
தேவதேவராவார்.
பாடல்
எண் : 3
செய்பூங்
கொன்றை கூவிள மாலை
சென்னியுள் சேர்புனல்
சேர்த்தி,
கொய்பூங்
கோதை மாதுஉமை பாகம்
கூடி,ஓர் பீடுஉடை வேடர்,
கைபோல்
நான்ற கனிகுலை வாழை
காய்குலை யில்கமுகு
ஈனப்
பெய்பூம்
பாளை பாய்ந்துஇழி தேறல்
பில்குபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :யானையின் கை போன்ற நீண்ட
வாழைக்குலையில் பழுத்த பழங்களிலும்,
காய்த்த
குலைகளிலும், கமுக மரங்களின்
பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு
பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர்.
பாடல்
எண் : 4
நிலனொடு
வானும் நீரொடு தீயும்
வாயுவும் ஆகி ஓர்
ஐந்து
புலனொடு
வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர், வெண்பொடிப் பூசி
நலனொடு
தீங்கும் தான் அலது இன்றி
நன்கெழு சிந்தையர்
ஆகி,
மலனொடு
மாசும் இல்லவர் வாழும்
மல்குபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும்
இறைவர், திருவெண்ணீறு அணிந்து
நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும்
அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர்.
பாடல்
எண் : 5
பணிவாய்
உள்ள நன்கு எழு நாவின்
பத்தர்கள் பத்திமை
செய்ய,
துணியார்
தங்கள் உள்ளம் இலாத
சுமடர்கள் சோதிப்ப
அரியார்,
அணிஆர்
நீலம் ஆகிய கண்டர்,
அரிசில் உரிஞ்சு
கரைமேல்
மணிவாய்
நீலம் வாய்கமழ் தேறல்
மல்குபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :அரிசிலாற்றின் அலைகள்
மோதும் கரையில் அமைந்ததும், நீல மணிபோலும் நிறம்
அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய
பேணுபெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய
பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத
அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம்
பொருந்திய கண்டத்தை உடையவர்.
பாடல்
எண் : 6
எண்ணார்
தங்கள் மும்மதிள் வேவ
ஏவலம் காட்டிய எந்தை,
விண்ணோர்
சாரத் தன்அருள் செய்த
வித்தகர், வேத முதல்வர்,
பண்ஆர்
பாடல் ஆடல் அறாத
பசுபதி, ஈசன், ஓர் பாகம்
பெண்ஆண்
ஆய வார்சடை அண்ணல்,
பேணுபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :திருப்பேணுபெருந்துறை
இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின்
முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில்வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட
அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய
பாடல்களோடு, ஆடி மகிழும்
பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட
சடைமுடியுடைய தலைவராவர்.
பாடல்
எண் : 7
விழையார்
உள்ளம் நன்கெழு நாவில்
வினை கெட,வேதம் ஆறுஅங்கம்
பிழையா
வண்ணம் பண்ணிய வாற்றால்
பெரியோர் ஏத்தும்
பெருமான்,
தழைஆர்
மாவின் தாழ்கனி உந்தித்
தண்அரி சில்புடை
சூழ்ந்து
குழைஆர்
சோலை மெல்நடை அன்னம்
கூடுபெ ருந்துறையாரே.
பொழிப்புரை :தழைத்த
மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே
சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள் கூடி
விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர், விருப்பம்
பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம்வினைகெட, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும்
பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர்.
பாடல்
எண் : 8
பொன்அம்
கானல் வெண்திரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்னன்
ஒல்க, மால்வரை ஊன்றி,
மாமுரண் ஆகமும்
தோளும்
முன்ஆவை
வாட்டி, பின்அருள் செய்த
மூஇலை வேல்உடை
மூர்த்தி,
அன்னம்
கன்னிப் பேடை யொடுஆடி
அணவுபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :ஆண் அன்னம்
கன்னிமையுடைய பெண் அன்னத் தோடு ஆடியும், கூடியும்
மகிழும் பேணு பெருந்துறை இறைவர்,
அழகிய
கடற்கரைச் சோலைகளும், வெண்மையான கடல்
அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும்
கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு
பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய
சிறந்த வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின்
அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார்.
பாடல்
எண் : 9
புள்வாய்
போழ்ந்து மாநிலம் கீண்ட
பொருகடல் வண்ணனும், பூவின்
உள்வாய்
அல்லி மேல் உறைவானும்,
உணர்வரி யான், உமை கேள்வன்,
முள்வாய்
தாளின் தாமரை மொட்டின்
முகமலரக் கயல் பாயக்
கள்வாய்
நீலம் கண்மலர் ஏய்க்கும்
காமர்பெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :முட்களையுடைய
தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல
மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத்
தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங்கொண்ட பகாசுரனின் வாயைப்
பிளந்தும், நிலவுலகைத்
தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும்
நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின்
கணவர்.
பாடல்
எண் : 10
குண்டும்
தேரும் கூறை களைந்தும்
கூப்புஇலர்
செப்புஇலர் ஆகி,
மிண்டும்
மிண்டர் மிண்டுஅவை கண்டு
மிண்டு செயாது, விரும்பும்,
தண்டும்
பாம்பும் வெண்தலை சூலம்
தாங்கிய தேவர் தலைவர்,
வண்டும்
தேனும் வாழ்பொழில் சோலை
மல்குபெ ருந்துறை
யாரே.
பொழிப்புரை :இறைவரைக் குண்டர்களாகிய
சமணர்களும், தேரர்களாகிய
புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி
வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண் தவம்
புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை
விரும்புமின். யோகதண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய
நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில்
உள்ளார்.
பாடல்
எண் : 11
கடைஆர்
மாடம் நன்குஎழு வீதிக்
கழுமல ஊரன், கலந்து
நடைஆர்
இன்சொல் ஞானசம் பந்தன்,
நல்லபெ ருந்துறை மேய
படைஆர்
சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்துஇவை
வல்லார்,
உடையார்
ஆகி உள்ளமும் ஒன்றி
உலகினில் மன்னுவர்
தாமே.
பொழிப்புரை :வாயில்களையுடைய மாட
வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு
பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன்
திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி
உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment