கொங்கணகிரி - 0410. ஐங்கரனை ஒத்தமனம்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஐங்கரனை (கொங்கணகிரி)

முருகா! அருள் புரிவாய்


தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
     தந்ததன தத்ததன ...... தனதான


ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே

அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே

தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே

தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே

மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே

மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே

குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றி வளர்
     அந்திபகல் அற்ற நினைவு ...... அருள்வாயே.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி, உனை
     அன்பொடு துதிக்க மனம் ...... அருள்வாயே.

தங்கிய தவத்து உணர்வு தந்து, டிமை முத்திபெற
     சந்திர வெளிக்கு வழி ...... அருள்வாயே.

தண்டிகை கனப் பவுசு எண் திசை மதிக்க, வளர்
     சம்ப்ரம விதத்துடனெ ...... அருள்வாயே.

மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம்
     உன்தனை நினைத்து அமைய ...... அருள்வாயே.

மண்டலிகர் ராப்பகலும் வந்து சுப ரட்சை புரி
     வந்து அணைய புத்தியினை ...... அருள்வாயே.

கொங்கில் உயிர் பெற்று வளர் தென்கரையில் அப்பர் அருள்
     கொண்டு, உடல் உற்ற பொருள் ...... அருள்வாயே.

குஞ்சர முகற்கு இளைய கந்தன்என, வெற்றிபெறு
     கொங்கண கிரிக்குள் வளர் ...... பெருமாளே.


 பதவுரை

         குஞ்சர முகற்கு --- யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கும்,

     இளைய --- இளையவராகிய,

     கந்தன் என வெற்றி பெறு --- கந்தப் பெருமான் என்று அசுரர்களையெல்லாம் வெற்றி பெறுகின்ற,

     கொங்கணகிரிக்கு உள் வளர் --- கொங்கணகிரி என்னுந் திருமலையில் எழுந்தருளி வளர்கின்ற,

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

         ஐங்கரனை ஒத்த மனம் --- ஐந்து திருக்கரங்களையுடைய விநாயகப் பெருமானைப் போல் எல்லாக் காரியங்களுக்கும் முற்படுகின்ற மனமானது,

     ஐம்புலம் அகற்றி --- மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐந்து புலன்களின் வழியே செல்லுந் தொழிலை நீக்கி,

     வளர் --- வினைகளை வளர்க்கின்ற,

     அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே --- மறப்பு நினைவு என்ற கேவல கலசங்கள் கழன்று நினைவற்ற நினைவைத் தந்தருள்வீர்,

அம்புவி தனக்கு உள் வளர் --- அழகிய பூமண்டத்தில் என்றும் நின்று வளர்கின்ற,

செம் தமிழ் வழுத்தி --- செம்மைப் பண்புடைய தமிழ் மொழியால் பரவுதல் புரிந்து,

உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே --- தேவரீரை அன்போடு துதிப்பதற்கு நன் மனத்தை யருள்புரிவீர்;

தங்கிய தவத்து உணர்வு தந்து --- நிலைபெற்ற தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து

அடிமை முத்தி பெற --- அடியேன் சிவகதி பெறுமாறு

சந்திர வெளிக்கு --- சந்திரவொளி வீசுகின்ற மேலைவெளிக்கு,

வழி அருள்வாயே --- வழியை அருள்புரிவீர்.

தண்டிகை --- பல்லக்கு,

கன பவுசு --- பெருமை தங்கிய உயர்வு முதலியவற்றுடன்,

எண்திசை மதிக்க வளர் --- எட்டு திசைகளிலுள்ளோரும் மதிக்குமாறு வளர்ச்சியடைகின்ற,

சம்ப்ரம விதத்து உடனே அருள்வாயே --- மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருவாழ்வை அருள்புரிவீர்,

மங்கையர் சுகத்தை --- பெண்களது இன்பத்தை,

வெகு இங்கிதம் என உற்ற மனம் --- மிகுந்த இனிமையென்று எண்ணி அதில் சேர்ந்துள்ள மனமானது,

உன்தனை நினைத்து அமைய அருள்வாயே --- தேவரீரை சதா தியானித்து அமைதியடைய அருள்புரிவீர்;

மண்டலிகர் --- அரசர்கள்,

ரா பகலும் --- இரவு பகலும்,

வந்து சுப ரக்ஷை புரி --- நன்னெறி சேர்ந்து உயிர்களை நன்மையாகக் காத்து அரசு புரிந்து,

வந்து அணைய புத்தியினை அருள்வாயே --- சிவநெறியிலே வந்து சேர நல்லறிவைத் தந்தருள்வீர்,

கொங்கில் --- கொங்குநாட்டில்,

தென்கரையில் --- அவிநாசி என்ற திருத்தலத்தின் அணித்தாயுள்ள ஏரியில் தென்கரையில்,

அப்பர் அருள்கொண்டு --- சிவபெருமானுடைய திருவருளைக் கொண்டு,

உயிர் பெற்று வளர் உடல் உற்ற பொருள் --- இழந்த உயிரைப்பெற்று முதலைவாயினின்றும் உடம்பு வெளிப்பட்ட திருவருட் செல்வத்தை,

அருள்வாயே --- அருளுவீராக.

பொழிப்புரை


         யானைமுகமுடைய விநாயகப் பெருமானுக்கு இளையவராக விளங்கி, மூன்று உலகங்களையுந் தனது வலிமையால வற்றச் செய்து வெற்றிக்கொள்ளும், கொங்கணகிரி எனுந் திருமலைமேல் எழுந்தருளி வளர்கின்ற பெருமிதமுடையவரே!

         விநாயகரைப் போல் எல்லாக் காரியங்களிலும் முற்படுகின்ற மனத்தை ஐம்புலன்களின் வழியே செல்லவொட்டாது தடுத்து நினைப்பு மறப்பு நீங்கிய சகச நிலையில் நிற்க அருள்புரிவீர்.

         பூமண்டலத்தில் வளர்கின்றதாகிய செந்தமிழ்ப் பாடலால் தேவரீரை அன்புடன் துதிசெய்து உய்யுமாறு நன்மனத்தை யருள்புரிவீர்;

         நிலைபெற்ற தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து அடியேன் சிவகதி பெறுமாறு சந்திர மண்டலமாகிய குளிர்ந்தமேலைப் பெருவெளிக்கு வழியை அருள்புரிவீர்;

         பல்லக்கு மிக்க உயர்வு முதலியவற்றுடன் எட்டுத் திசைகளிலுள்ள யாவரும் மதிக்குமாறு வளர்ச்சியடைகின்ற மிகுந்த மகிழ்ச்சியை அருள் புரிவீர்;

         அரசர்கள் இரவும் பகலும் உயிர்களை இனிது புரந்து சிவநெறி சார்ந்து உய்ய நல்லறிவைத் தந்தருள்வீர்;

         கொங்குநாட்டில் அவிநாசியில் ஏரிக்குத் தென்கரையில், சுந்தமூர்த்தியினால், சிவபெருமான் திருவருள் துணைகொண்டு, முதலைவாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட திருவருட் செல்வத்தை அருள்புரிவீராக.


விரிவுரை
  
ஐங்கரனை ஒத்த மனம் ---

விநாயகர் ஐந்து கரங்களால் ஐம்பெருந் தொழில்களை யாற்றுவதுபோல், மனம் ஐம்புலன்களால் உலக விவகாரத்தை நடத்துகின்றது என்பது ஒருவர் உரை.

அன்றியும் ஐங்கரன் என்பதற்கு யானை என்று பொருள் கொண்டு, யானை இடையறாது அசைந்து கொண்டே இருப்பதுபோல் மனம் அசைந்து கொண்டிருக்கின்றது என்பது வேறு ஒருவர் உரை.

அன்றியும், ஐங்கரன் என்பதற்கு யானை என்று பொருள் கொள்வது பொருந்தாது. வேறு எந்த இடத்திலும் அப்படி நூல் வழக்கில் காணப்படவில்லை. மனதை யானையாக சங்கரர் சிவானந்த லஹரியில் உருவகம் பண்ணி யிருக்கின்றார். எனினும் ஐங்கரன் என்பதற்று ஐந்து கரங்களையுடையவன் என்பதே பொருள்.

இனி ஐங்கரமுடைய கணேசமூர்த்தி எல்லாக் காரியங்கட்கு முற்பட்டு நிற்பவர். அவரின்றி ஒரு கருமமும் நிகழாது. அதுபோல் மனமும் எல்லாக் கருமங்கட்கும் முற்பட்டு நிற்பது. மனமின்றி ஒரு கருமமும் நிகாழது. “தேவரனையர் கயவர்” என்று இழிவு சிறப்பாகக் கூறியதுபோல் இம்மூடமனமும் முன்னிற்கின்றது என்று மிக நயமும் அதிசயமும் உண்டாக சுவாமிகள் உரைக்குந்திறனை உன்னுந்தோறும் உவகை ஊற்றெடுக்கின்றது?

அந்திபகலற்ற நினைவு ---

அந்தி-மறப்பு, பகல்-நினைவு. இவற்றை வடநூலார் கேவல சகலம்என்பர். இரவு பகலற்று நிற்கு நிலைதான் சிறந்த நிலை. அதனை அருணகிரியார் பல இடங்களில் இனிது பேசுகின்றார். அந்நிலையைடைய ஒவ்வொருவரும் பெரிதும் முயற்சிக்க வேண்டும். அது நினைவும் மறதியும் இல்லாத நடுநிலை.

அந்திபக லென்றிரண்டையு மொழித்து” --- (அந்தகன்வரு) திருப்புகழ்

இராப்பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே”  --- கந்தர் அலங்காரம்.

          .......................அல்லும் பகலுமில்லாச்
சூதானதற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய்இனிமனமே தெரியாதொரு பூதர்க்குமே”           --- கந்தர் அலங்காரம்

கருதா மறவா நெறிகாண எனக்கு
   இருதாள் வனசம் தரவென் றிசைவாய்”  --- கந்தர் அநுபூதி

இரவுபகல் அற்ற இடத்தே ஏகாந்த யோகம்
வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே.

கங்குல்பகல் அற்ற திருக் காட்சியர்கள் கண்டவழி
எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.        --- தாயுமானார்.

அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ்:-

செந்தமிழ் செம்மைப் பண்புடையது. ஏனைய மொழிகளைப் போல் தேய்ந்தும் இறந்தும் உருமாறியும் சிதைந்தும் போகாமல் என்றும் நின்று வளர்கின்ற மொழி தமிழ்.

 அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே:-

செந்தமிழ்பாடல்களால் செம்மேனி எம்மானை எம்புருகிக் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ துதிக்க வேண்டும்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு
பொன்போன் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழைவார்க்கு அன்றி
என்பொன் மணியினை எய்த ஒண்ணாதே   ---- திருமந்திரம்

சந்திர வெளிக்கு வழி:-

ஆநாதாரமுங்கடந்து, பிரமந்திரமுந் தாண்டி சந்திர மண்டலமாகிய அமுத மண்டலத்துடன் கூடிய மேலைவெளி.

நாமமதி மீதி லூறுங்கலா இன்ப                    அமுதூறல்
   நாடிய யதன்மீது போய்நின்ற ஆனந்த
   மேலைவெளியேறி நீயின்றி நானின்றி
   நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே”
                                                                               --- (மூளும்வினை) திருப்புகழ்.

தண்டிகை.............................அருள்வாயே:-

பல்லக்கு பெருமை முதலியன விரும்பும் ஆன்மாக்களும், அவற்றை இறைவனிடங் கேட்டு உய்யும் பொருட்டு விருப்புவெறுப்பற்ற சுவாமிகள் இங்ஙன் கூறியருளினார்கள்.

மண்டலிகர்.........................அருள்வாயே:-

மன்னர்கள் மன்னுயிரை இனிது அறநெறி வழுவாது புரந்துய்யுமாறு வேண்டுகின்றார்.

வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்,
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,
ஆழ்க தீயது, எல்லாம் அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.     --- திருஞானசம்பந்தர்.
        
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.        --- பெரிய புராணம்.
        
வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க, மன்னன்
கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க,
நான்மறை அறங்கள் ஓங்க, நல் தவம் வேள்வி மல்க,
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.           --- கந்தபுராணம்.

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. --- திருவிளையாடற் புராணம்.
  
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்     --- புறநானூறு

ஆதலால் அரசன் எவ்வழியோ அவ்வழி குடிமகள் நிற்பர். எனவே அரசன் நன்னெறி நிற்கில் குடிகளும் திருந்தி நல்வழிப்படுவர். மன்னன் உலகிற்குத்தான், அரசன் என்று எண்ணாது காவலன் என்று எண்ணுதல் வேண்டும்.


கொங்கிலுயிர் பெற்று.........அருள்வாயே:-

அவிநாசியில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகனை இழந்து வருந்துந் தாய்தந்தையரைக் கண்டு உள்ளம் இரங்கி, நீர் வற்றி ஏரியினிடம் போய்.

உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்,
 அரைக்கு  ஆடு அரவா, ஆதியும் அந்தமும் ஆயினாய்,
 புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே,
 கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே”

என்று பாடியருளலும் வருணன் நீரையும் பிரமன் முதலையையும், முதலை வயிற்றில் பிள்ளை உடம்பையும், இயமன் பாலன் உடம்பில் உயிரையும் விட்டனர்கள். முதலை வாயினின்றும் பாலன் வெளிப்பட்டனன். அத்திருவருட் செல்வத்தைத் தருமாறு வேண்டுகின்றனர்.

கருத்துரை

         இபமாமுகன் தனக்கு இளையவேர! கொங்கணகிரியில் வாழும் குமாரக் கடவுளே! மனம் அடங்கவும், தமிழால் துதிக்கவும், மேலைவெளிக்கு வழியும், இன்பநிலையும் தியான நிலையும், அரசர் நன்னெறி நிற்கவும், திருவருட் செல்வமும் தந்தருள்வீர்.No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...