அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பொன்றலைப் பொய்
(திருச்செங்கோடு)
முருகா! திருவடியை அருள்
தந்த
தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத்
தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான
பொன்ற
லைப்பொய்க் கும்பி றப்பைத்
தும்ப றுத்திட் டின்று நிற்கப்
புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ......
கறியாமே
பொங்கி
முக்கிச் சங்கை பற்றிச்
சிங்கி யொத்தச் சங்க டத்துப்
புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல்
துன்று
மிச்சைப் பண்ட னுக்குப்
பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப்
...... பதிமீதே
தொண்டு
பட்டுத் தெண்ட னிட்டுக்
கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே
குன்றெ
டுத்துப் பந்த டித்துக்
கண்சி வத்துச் சங்க ரித்துக்
கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச்
...... சுரலோகா
கொம்பு
குத்திச் சம்ப ழுத்தித்
திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம்
சென்று
ரித்துச் சுந்த ரிக்கச்
சந்த
விர்த்துக் கண்சு கித்துச்
சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ்
செண்ப
கத்துச் சம்பு வுக்குத்
தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பொன்றலை, பொய்க்கும் பிறப்பைத்
தும்பு அறுத்திட்டு இன்று நிற்க,
புந்தியில் சற்றும் குறிக்கைக்கு
...... அறியாமே,
பொங்கி
முக்கி, சங்கை பற்றிச்
சிங்கி ஒத்தச் சங்கடத்து,
புண் படைத்துக் கஞ்ச மைக்கண் ......
கொடியார்மேல்
துன்றும்
இச்சைப் பண்டனுக்கு,
பண்பு அளித்து, சம்ப்ரமித்து,
தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்
...... பதிமீதே
தொண்டு
பட்டு, தெண்டன் இட்டு,
கண்டு பற்ற, தண்டை வர்க்கத்
துங்க அரத்தப் பங்கயத்தைத் ......
தருவாயே.
குன்று
எடுத்து, பந்து அடித்து,
கண் சிவத்துச் சங்கரித்து,
கொண்டல் ஒத்திட்டு இந்த்ரனுக்கு இ
...... சுரலோகா!
கொம்பு
குத்திச் சம்பு அழுத்தி,
திண் தலத்தில் தண்டு வெற்பைக்
கொண்ணு அமுக்கிச் சண்டை இட்டுப் ..பொரும்வேழம்
சென்று
உரித்து, சுந்தரிக்கு அச்-
சம் தவிர்த்து, கண் சுகித்து,
சிந்தையுள் பற்று இன்றி நித்தக் ......
களிகூரும்
செண்பகத்துச்
சம்புவுக்குத்
தொம்பதத்துப் பண்பு உரைத்துச்
செங்குவட்டில் தங்கு சொக்கப் ......
பெருமாளே.
பதவுரை
குன்று எடுத்து --- கிரவுஞ்சமலையை எடுத்து,
பந்து அடித்து --- பந்தடிப்பது போல் வேலால் எடுத்து
எறிந்து,
கண் சிவந்து --- கண்கள் சிவந்து,
சங்கரித்து --- அதனை அழித்து,
கொண்டல் ஒத்திட்டு --- மேகத்தை யொத்துக் கைமாறு
கருதாமல்,
இந்திரனுக்கு இ சுரலோகா --- தேவலோகத்தை இந்திரனுக்கு
ஈந்தவரே!
கொம்பு குத்தி --- கொம்பால் குத்தியும்,
சம்பு அழுத்தி --- சம்பங்கோரை போன்ற நுனியால்
அழுத்தியும்,
திண் தலத்தில் --- திண்ணிய இப்பூமியில்,
தண்டு வெற்பை கொண்டு அமுக்கி --- கதையையும் மலையையும்
கூட அடக்கி,
சண்டை இட்டு --- போர் செய்து,
பொரும்
வேழம் --- எதிர்த்த யானையை,
சென்று உரித்து --- சென்று அதை உரித்து,
சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து
--- பார்வதிக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கண்களிப்புடன்,
சிந்தையில் பற்று இன்றி --- திருவுள்ளத்தில் எதனிடத்தும்
பற்று இன்றி,
நித்தம் களி கூரும் --- நாள்தோறும் மகிழும்,
செண்பகத்து --- செண்பக மலரணியும்,
சம்புவுக்கு --- சிவபெருமானுக்கு,
தொம் பதத்து --- துவம் என்ற சொல்லுக்கு,
பண்பு உரைத்து --- விளக்க இயல்பை உபதேசித்து,
செங்குவட்டில் தங்கு --- திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும்,
சொக்க --- அழகிய,
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
பொன்றலை --- இறத்தலை உடையதாய்,
பொய்க்கும் --- நிலையில்லாததாயுள்ள,
பிறப்பை --- பிறப்பு என்பதை,
தும்பு அறுத்திட்டு --- அதன் தும்பினை அறுத்து,
இன்று நிற்க --- இன்று ஒரு நிலையில் நிற்கும்படி,
புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே ---
புத்தியில் சற்றேனும் குறித்து மேற்கொள்ள அறியாமல்,
பொங்கி முக்கி --- சினந்தும் முயற்சி செய்தும்,
சங்கை பற்றி --- சந்தேகங்கொண்டு,
சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து --- விஷம்
போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி,
கஞ்ச மை கண் --- தாமரை யொத்த மை பூசிய கண்களையுடைய,
கொடியார் மேல் --- மாதர்கள் மீது,
துன்றும் இச்சை பண்டனுக்கு --- ஆசை பொருந்திய
பொருளனாகிய எனக்கு,
பண்பு அளித்து --- நற்குணத்தை அளித்து,
சம்ப்ரமித்து --- சிறப்புறச் செய்து,
தும்பி பட்சிக்கும் ப்ரச --- வண்டு உண்ணும் தேனையுடைய,
செய் பதி மீது --- வயலூர் தலத்தில்,
தொண்டு பட்டு --- தொண்டு செய்யும் தன்மையைக் கொண்டு,
தெண்டன் இட்டு --- அட்டாங்கமாக வீழ்ந்து கும்பிட்டு,
கண்டு பற்ற --- அடியேன் தெரிசித்து பற்றுமாறு,
தண்டை வர்க்க --- தண்டை முதலிய அணிகலன் அணிந்துள்ள,
துங்க அரத்த பங்கயத்தை --- தூய்மையும் செம்மையும்
உடைய பாத தாமரையை,
தருவாயே --- தந்தருள்வீராக.
பொழிப்புரை
கிரவுஞ்ச மலையை வேலாயுதத்தால் பந்துபோல்
எறிந்து கண் சிவந்து, அதனை அழித்து, மேகம் போல் கைமாறு கருதாது
இந்திரனுக்குத் தேவலோகத்தை ஈந்தவரே!
கொம்பினால் குத்தியும் சம்பங்கோரை போன்ற
நுனியால் அழுத்தியும், திண்ணிய பூமியில்
கதாயுதத்தையும் மலையையுங் கூட அடக்கக் கூடிய வலிமையுடன் போர் புரிந்து யானையை, அதன் முன் சென்று அதன் தோலை உரித்து, பார்வதிக்கு இருந்த அச்சத்தை யகற்றிக்
கண் களிப்புடன், திருவுளத்தில், பற்று ஒன்றும் இன்றி தினந்தோறும்
மகிழ்ச்சியடையும், செண்பக மலரணியும்
சிவபெருமானுக்கு "த்வம்" என்ற சொல்லுக்கு விளக்கத்தை உபதேசித்துத்
திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் அழகிய பெருமிதம் உடையவரே!
நிலையின்றி இறத்தலையுடைய பிறப்பின் தும்பை அறுத்து, இன்று ஓர் ஒழுக்கத்தில் நிலைத்து
நிற்கப் புத்தியில் சற்றேனும் மேற்கொள்ள அறியாமல், சினந்தும் முயன்றும், சந்தேகங்கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம்
புண்ணாகித் தாமரை போன்ற மை பூசிய கண்களையுடைய மாதர்களின் மீது, ஆசை பொருந்தி நெருங்கிய எனக்கு
நற்குணத்தை அளித்து, வண்டு உண்ணும் தேன் பொருந்திய
பூந்தாதுக்களுடன் கூடிய வயலூரில் தொண்டு பட்டு, அஷ்டாங்க பஞ்சாங்க வணக்கம் செய்து, உம்மைத் தெரிசித்துப் பற்றுதற்கு, தண்டை முதலிய அணிகலன்கள் அணிந்த, தூய சிவந்த பாத தாமரையைத்
தந்தருளுவீராக.
விரிவுரை
பொன்றலைப்
பொய்க்கும் பிறப்பு ---
பொன்றுதல்-இறத்தல்.
பொய்-நிலைபேறு இல்லாதது. இறத்தலும் தோன்றி மறையும் தன்மையும் உடையது. இப்பிறப்பு.
தும்பறுத்து
---
பிறப்பையுண்டாக்கும்
தும்பு போன்றது வினை. வினையொழிந்தால் பிறப்பு ஒழியும்.
துன்றும்
இச்சைப் பண்டன் ---
இச்சை
நெருங்கிய பொருளன். பண்டம்-பொருள்.
தும்பி
பட்சிக்கும் ப்ரசம் ---
பிரசம்-தேன்.
வண்டு பருகுவது தேன்.
செய்ப்பதி
மீதே தொண்டுபட்டுத் தொண்டன் இட்டு ---
அருணகிரியாரை
ஆட்கொண்ட திருத்தலம் வயலூர். அங்கு அருணகிரியார் தொண்டுபட்டார்.
தண்டைவர்க்கத்
துங்கரத்தப் பங்கயம் ---
தண்டை.
சிலம்பு, கிண்கிணி முதலிய
அணிகலன்கள் அணிந்த பாதம்.
துங்கம்
அரத்தம். துங்கம்-தூய்மை, அரத்தம்-சிவப்பு. தூய
சிவந்த தாமரைத்தாள்.
சம்பழுத்தி
---
சம்பு-சம்பங்கோரை, சம்பங்கோரை போல் நுனியால் அழுத்தி,
சென்று
உரித்து ---
சிவபெருமான்
கஜசம்மாரம் புரிந்த பெருமையை இது குறிக்கின்றது.
தொம்பதம்
---
தத்வமஸி.
இது சாமவேத மகா வாக்கியம்.
தத்-அது,த்வம்-நீ. அஸி-ஆகின்றாய். அது நீ
ஆகின்றாய். மஹா வாக்கியங்கள் நான்கு. அவற்றின் விவரம்.
தத்வமஸி --- சாமவேத சாந்தோக்ய உபநிடதம். இதன் பொருள்; அது நீ ஆகின்றாய்.
ப்ரக்ஞானம்
பிரமம் --- ருக்வேதம்-ஐதரேயாரண்யகம்.
இதன்
பொருள்; பெரிய ஞானமே
சொரூபமாகவுள்ளது பிரமம்.
அயமாத்மா
பிரம்மம் --- அதர் வணம் மாண்டூக்யம்.
அயம்ஆத்மா-இந்த
ஆத்மா. ப்ரஹ்ம - பெரியது.
அஹம்பரஹ்மாஸ்மி
---யஜுர் வேதம். ப்ருஹதாரண்யம்.
அஹம்-நான், பிரஹ்ம அஸ்மி-பிரம்மமாக இருக்கின்றேன்.
இவற்றின் சுருக்கம் ஸோஹம்.
இந்த
நான்கு மகா வாக்கியங்களை சிரவணம் (கேட்டல்) (1), மனனம் (சிந்தித்தல்) (2), நிதித்யாசனம் (தெளிதல்) (3) ,சமாதி (நிட்டை கூடுதல்) (4) என்று ரிபு கீதை கூறுகின்றது.
ஞானம்
என்பது நான்கு வகையாக நிகழும் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.
கேட்டலுடன்
சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் என ஈர் இரண்டாம் கிளக்கில்
ஞானம்,
வீட்டை
அடைந் திடுவர் நிட்டை மேவி னோர்கள்.
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டியபுண்
ணியநாத ராகி, இன்பம்
இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநல்
குலத்தினில் வந்து அவதரித்து, குருவால்
ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே.
கேட்டல், கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச்
சிந்தித்தலும், சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும், அதன் பின்னர் நிட்டை
கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும்.
நிட்டை
கை கூடியவர்கள் மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர்.
நிட்டை
கைகூடாது முதல் மூன்று படிகளில் நின்றவர், அவரவர் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான
உலகங்களுக்குச் சென்று, அங்குள்ள இன்பத்தை இனிது நுகர்ந்து, மீண்டும் சிவபெருமான்
அருளால் இந்த உலகில் நல்ல குடியில் வந்து பிறப்பார்கள். அதன் பின்னர்
அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி இறைவன் திருவடியை அடைவார்கள்.
கருத்துரை
திருச்செங்கோட்டுத் தெய்வமே! உமது பாத
பங்கயந் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment