குன்றக்குடி - 0378. பிறர் புகழ்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பிறர்புகழ் இன்சொல் (குன்றக்குடி)

முருகா! பொதுமாரை விரும்பி, பங்கப் படாமல் அருள்.


தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான


பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
     பருவம தன்கைச் ...... சிலையாலே

பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச்

சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
     செயலும ழிந்தற் ...... பமதான

தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ

கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
     கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன்

கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
     கிழிபட துன்றிப் ...... பொருதோனே

குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
     பனமநு வுஞ்சொற் ...... குருநாதா

குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.

தம் பிரித்தல்


பிறர் புகழ் இன்சொல் பயிலும் இளந்தைப்
     பருவ மதன் கைச் ...... சிலையாலே,

பிறவி தருர் சிக்கு அது பெருகும், பொய்ப்
     பெருவழி சென்று, க் ...... குணம் மேவி,

சிறுமை பொருந்தி, பெருமை முடங்கி,
     செயலும் அழிந்து, ற் ...... பம் அது ஆன

தெரிவையர் தம் கண்கயலை விரும்பிச்
     சில சில பங்கப் ...... படல் ஆமோ?

கெறுவித வஞ்சக் கபடமொடு எண்திக்-
     கிலும் எதிர் சண்டைக்கு ...... எழுசூரன்

கிளைஉடன் மங்க, தலைமுடி சிந்த,
     கிழிபட, துன்றிப் ...... பொருதோனே!

குறுமுநி இன்பப் பொருள்பெற அன்று, ற்-
     பன மநுவும் சொல் ...... குருநாதா!

குலகிரி, துங்கக் கிரி உயர் குன்றக்-
     குடி வளர் கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

       கெறுவித வஞ்சக் கபட மொடு - கர்வமும், வஞ்சனையும், சூதும் கொண்டு,

     எண் திக்கிலும் --- எட்டுத் திசைகளிலும்,

     எதிர் சண்டைக்கு எழு சூரன் --- எதிர்த்து சண்டைக்கு என்று எழுந்த சூரபன்மன்,

     கிளை உடன் மங்க --- சுற்றத்தாருடன் மங்கி அழியுமாறு,

     தலை முடி சிந்த --- அவர்களின் தலைமுடிகள் சிதறவும்,

     கிழிபட --- அவர்களின் உடல் கிழிப்பட்டு அழியும்படியும்,

     துன்றிப் பொருதோனே --- நெருங்கிப் போர்புரிந்தவனே!

       குறுமுநி --- அகத்திய முனிவர்,

     இன்ப பொருள் பெற --- இன்பத்தைத்தரும் உண்மைப் பொருளையறியும்படி,

     அன்று உற்பன மனுவும் சொல் --- அந்நாள் திருவுளத்தில் உதித்த மந்திரத்தை உபதேசித்த,

     குருநாதா --- குருநாதரே!

       குலகிரி --- சிறந்த கிரியாகவும்,

     துங்ககிரி --- பரிசுத்தமான கிரியாகவும்,

     உயர் --- சிறந்துள்ள,

     குன்றக்குடி வளர் கந்த --- குன்றக்குடியில் வீற்றிருந்தருளும் கந்தக் கடவுளே!

       பெருமாளே - பெருமையிற் சிறந்தவரே!

       பிறர் புகழ் --- மற்றவர்கள் புகழும்

     இன்சொல் பயிலும் --- இனிய சொற்களைப் பயிலுகின்ற

     இளந்தைப் பருவ --- இளம்பருவமுள்ள

     மதன் கை சிலையாலே --- மன்மதனுடைய கையில் உள்ள வில்லாலே,

     பிறவி தரும் சிக்கு அது -- பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள்

     பெருகும் பொய்ப் பெருவழி சென்று --- பெருகுகின்ற  பொய்யான பெரிய வழியில் சென்று,

     அ குண மேவி --- அப் பொய்க்குணத்தையே பொருந்தி,

     சிறுமை பொருந்தி --- அதனால் சிறுமை அடைந்து,

     பெருமை முடங்கி ---  பெருமை சுருங்கி,

     செயலும் அழிந்து --- செயல்கள் அழிந்து,

     அற்பம் அது ஆன --- அற்பகுணமுள்ள,

     தெரிவையர் தம் --- மாதர்களின்,

     கண்கயலை விரும்பி --- கயல்மீன்போன்ற கண்களை விரும்பி,

     சில சில பங்கம் படலாமோ --- அதனால் சிலசில அவமானங்களை அடியேன் அடையலாமோ?

பொழிப்புரை

     கர்வமும், வஞ்சனையும் சூதும் கொண்டு எட்டுத் திசைகளிலும் எதிர்த்துப் போருக்கு எழுந்த சூரபன்மன், சுற்றத்தாருடன் மங்கியழியவும், அவர்கள் தலைமுடிகள் சிதறவும், உடல் கிழியவும், நெருங்கிப் போர் புரிந்தவரே!

     அகத்திய முனிவர் இன்பந் தரும் உண்மைப் பொருளை அறியும்படி அன்று திருவுளத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதரே!

     சிறந்ததும், தூயதும் ஆகிய குன்றக்குடி என்ற திருமலைமீது எழுந்தருளியுள்ள, கந்தப் பெருமானே! பெருமித முடையவரே!

     மற்றவர்கள் புகழும் இனிய சொற்களைப் பயிலுகின்ற இளம் பருவமுள்ள மன்மதனுடைய கையிலுள்ள வில்லால், பிறவியினால் உண்டாகின்ற சிக்கல்கள் பெருகும் பொய் வழியிற் சென்று, அப்பொய்மையே பொருந்தி, சிறுமை பெருகி, கயல்மீன் போன்ற கண்களை விரும்பிய சிலசில அவமானங்களை அடியேன் அடையலாமோ?


விரிவுரை

பிறர்புகழ் ---

மன்மதனை சிவஞானியர் அன்றி மற்றவர்கள் புகழ்வார்கள். அதனால் பிறர் புகழ் என்று இங்கு அடிகளார் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

இளந்தைப்பருவ மதன் ---

மன்மதன் இளமையான பருவமுள்ளவன். சிறுபிள்ளையாதலால் சதா குறும்பு செய்வான்.

பிறவி தரும் சிக்கு அது பெருகும் ---

பிறப்பின் தன்மையால் பல சிக்கல்கள் ஏற்படும். அது பிறவியின் குணமாகும். மரம், செடி, கொடிகளில் காய்க்கும் காய்கள் ஒன்று போல் காய்க்கின்றன. ஒரு காய் உறைக்கும்; ஒன்று புளிக்கும்; ஒன்று இனிக்கும் என்றில்லாமல் எல்லாம் ஒன்று போல்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு தாய் ஒரு தந்தையிடம் பிறக்கும் பிள்ளைகள் ஒன்றுபோல் மற்றொன்று இருப்பதில்லை.

உதாரணமாக, தந்தை விச்சிரவசு; தாய் கேகசி. இந்த இருவருக்கும் பிறந்த இராவணன் குணம் வேறு; கும்பகர்ணன் குணம் வேறு; விபீஷணன் குனம் வேறு; சூர்ப்பணகையின் குணம் வேறு. இதற்கு என்ன காரணம்?

இராவணன் கரு உதித்த நேரம் சந்தியா காலம் - மாலை. கும்பகர்ணன் கரு உதித்த நேரம் நடு இரவு.விபீஷணன் கரு உதித்த நேரம் பிரம்ம முகூர்த்தம். சூர்ப்பணகை கருஉதித்த நேரம் காலை. சந்தியா காலம். அந்ததந்த கருப்பதிந்த நேரத்துக்குத் தக்கவாறு குணங்கள் மாறுபட்டன. அதனால் பிறப்பினால் பலப்பல விதமான குணங்கள் ஏற்படுகின்றன.

பொய்ப் பெருவழி சென்றக் குணமேவி ---

மெய்வழி விடுத்துப் பொய் வழியடுத்து பொய்மையான குணங்களை அடைந்து ஆன்மாக்கள் கெடுகின்றன.

சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி ---

சிறுமை-நற்குணங்கள் இன்றி சிறுமையை அடைந்து, அதனால் பெருமை குன்றி மனிதர் மாய்கின்றனர்.

குறுமுனி இன்பப் பொருள்பெற அன்று உற்பன மநுவும் சொற் குருநாதா:-

அகத்தியர் குறிய வடிவமுள்ள பெரியவர். வடிவத்தால் சிறியவர்; மாதவத்தால் பெரியவர். அவருடைய கை கவிழ்ந்தது; விந்தமலை பாதல வுலகம் புகுந்தது. கை இப்படி மேல் பக்கம் புரண்டது. ஏழுகடல்களும் வற்றிவிட்டன.

உற்பனம்-தோற்றம். முருகவேள் தமது உள்ள சிறந்த திருத்தலம். இத் திருமலையின் பெருமையை அடிகளார் குலகிரி “என்றும், துங்கக்கிரி” என்றும் இங்கு வியந்துரைக்கின்றார்.

கருத்துரை

குன்றக்குடி வளரும் குகனே! மாதர் வயப்பட்டு மங்காத வண்ணம் அருள்செய்வீர்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...