குன்றக்குடி - 0372. அழகு எறிந்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அழகு எறிந்த  (குன்றக்குடி)

முருகா! மாதர் ஆசையை விட அருள்


தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான


அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே

அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
     டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே

சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
     தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே

துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
     துயரை யென்றோ ழிந்து ...... விடுவேனோ

எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
     யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே

இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே

மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
     மநுவி யம்பி நின்ற ...... குருநாதா

வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
     மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே,

அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு
     அணி சதங்கை கொஞ்சு ...... நடையாலே,

சுழி எறிந்து நெஞ்சு சுழல, நஞ்சு அணைந்து
     தொடும் இரண்டு கண்கள் ...... அதனாலே,

துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள்
     துயரை என்று ஒழிந்து ...... விடுவேனோ?

எழுது கும்பகன் பின் இளைய தம்பி, நம்பி
     எதிர் அடைந்து, இறைஞ்சல் ...... புரிபோதே

இதம் மகிழ்ந்த் இலங்கை அசுரர் அந்தரங்கம்
     மொழிய, வென்ற கொண்டல் ...... மருகோனே!

மழு உகந்த செங்கை அரன் உகந்து இறைஞ்ச,
     மநு இயம்பி நின்ற ...... குருநாதா!

வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து, துங்க
     மலை விளங்க வந்த ...... பெருமாளே.


பதவுரை

       எழுது ---- அடைக்கலம் புகும் பொருட்டு எழுந்து,

     கும்பகன் பின் இளைய தம்பி ---- கும்பகர்ணனுடைய இளைய தம்பியாகிய விபீஷணன்,

     நம்பி - நம்பிக்கையுடன்,

     எதிர் அடைந்து --- ஸ்ரீராமர் முன் வந்து சேர்ந்து,

     இறைஞ்சல் புரி போதே ---- வணங்கிய சமயத்தில்

     இதம் மகிழ்ந்து --- இதயம் மகிழ்ந்து,

     இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய –-- இலங்கையில் உள்ள அரக்கர்களின் இரகசியங்களை எடுத்துரைக்க,

     வென்ற கொண்டல் மருகோனே --- வெற்றிபெற்ற, மேக நிறத்தராம் இராமரது திருமருகரே!

       மழு உகந்த செம்கை அரன் உகந்து இறைஞ்ச --- மழுவை மகிழ்ச்சியுடன் ஏந்தும் சிவந்த கரத்தையுடைய சிவபெருமான் மகிழ்ச்சியுடன் வணங்க,

     மநு இயம்பி நின்ற குரு நாதா --- பிரணவ மந்திரத்தை உபதேசித்து நின்ற குருநாதரே!

      வளம் மிகுந்த குன்றநகர் புரந்து --- வளமை மிகுந்த குன்ற நகரைக் காத்து,

     துங்க மலை விளங்க வந்த பெருமாளே --- விளங்க வந்த தூய அம்மலையில் வீற்றிருந்தருளும் பெருமையில் மிகுந்தவரே!

       அழகு எறிந்த சந்த்ர முகவடம் --- அழகு வீசும் சந்தினைப் போன்ற முகவட்டத்தினின்றும் கலந்த

     அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே --- அமுதம் போன்ற திரண்ட இனிய செஞ்சொல் பேச்சினாலே,

     அடி துவண்ட தண்டை --- பாதத்தில் தெளிந்து கிடக்கும் தண்டை,

     கலீல் எனும் சிலம்பொடு --- கலீல் என ஒலிக்கும் சிலம்புடன்,

     அணி சதங்கை கொஞ்சு நடையாலே --- அழகிய சதங்கை ஆகிய ஆபரணங்கள் கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலே,

     சுழி எறிந்து நெஞ்சு சுழல --- உள்ளமானது நீர்ச்சுழிபோல் சுழல,

     நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே --- நஞ்சைக் கலந்திருக்கின்ற இரண்டு கண்களாலே,

     துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் --- நெருங்கிய இரு தனங்களையுடைய பொதுமாதர்களின்

     துயரை என்று ஒழிந்து விடுவேனோ --- மயக்கத்தால் வரும் துன்பத்தை என்று அடியேன் விடுவேனோ?

பொழிப்புரை

            கும்பகர்ணனுடைய தம்பியாகிய விபீஷணர், அடைக்கலம் புகுமாறு எழுந்து, நம்பிக்கையுடன் இராமருடைய திருமுன் வந்து வணங்கியபோது, இதயம் மகிழ்ந்து இலங்கையில் உள்ள அரக்கர்களின் இரகசியங்களை எடுத்துரைக்க, வெற்றிபெற்ற மேக வண்ணராம் ஸ்ரீராமரது திருமருகரே! மழுவையேந்திய சிவந்த திருக்கரத்தையுடைய சிவபெருமான் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதரே! வளமை மிகுந்த குன்ற நகரைக் காத்து, அங்குள்ள தூய மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

            அழகு வீசும் நிலாவைப் போன்ற முகவட்டத்தினின்றும் அமுதம் போன்ற திரண்ட இன்னுரையாலும், பாதத்தில் துவண்டு கிடக்கும் தண்டையும், கலீல் என ஒலிக்கும் சிலம்பும், அழகிய சதங்கையும் கொஞ்சும் நடையினாலும், என் உள்ளம் நீர்ச் சுழி போல் சுழல, நஞ்சு கலந்து இருகண்களினாலும் அடியேன் கலக்கமுற்று, நெருங்கிய இரு தனங்களையுடைய பொதுமாதர்களின் துயரை என்று விடுவேனோ?


விரிவுரை

துயரை என்று ஒழிந்து விடுவேனோ ---

ஆசை மூவகைப்படும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.

மண்ணாசையும் பொன்னாசையும் மனிதனுக்கே உரியவை. மற்றப் பெண்ணாசை புழு முதல் சகல உயிர்களுக்கும் உண்டு. தேவரும் முனிவரும் பெண்ணாசையால் பேதுற்றார்கள். இந்திரனும் சந்திரனும் பெண்ணாசையால் பெருமை குன்றினார்கள். ஆகவே பெண்ணாசையை இறைவனுடைய திருவருள் துணையால் வந்த ஞானவொளியால் விலக்கவேண்டும். ஆதலால் சுவாமிகள் ‘என்று விடுவேனோ?‘ என்று இங்கே வேலவனை வேண்டுகின்றார்.

எழுது கும்பகன் பின் இளைய தம்பி ---

"எழுந்து" என்ற சொல் சந்தத்தை நோக்கி "எழுது" என வந்தது.

விபீஷணன், அண்ணனைக் காட்டிக் கொடுத்த சகோதரத் துரோகி என்று சிலர் குறை கூறுவர். இது பிழை.

விபீஷணர், இராவணன் இனிது வாழவேண்டும் என்று அறிவுரை பல பகர்ந்தார்.

அவர் இராவணனைப் பார்த்து கூறும் இனிய பாடலை இதோ உற்றுப் பாருங்கள்.

எந்தைநீ, யாயும்நீ, எம்முன் நீ,உயர்
வந்தனைத் தெய்வம்நீ, மற்றும் முற்றும்நீ,
இந்திரப் பெரும்பதம் இழக்கின் றாய்,என
நொந்தனன், ஆதலால், நுவல்வது ஆயினேன்.

அண்ணா! எனக்குத் தந்தை, தாய், தமையன், தெய்வம் எல்லாம் நீதான். இந்திரனுக்கும் எய்தா இனிய பதத்தை இழக்கின்றாய் என்று உள்ளம் உலைந்து உரைக்கின்றேன்” என்கின்றார். இவருடைய அறிவுரைகளை இராவணன் கேட்டிருந்தால் அவன் அழிந்திருக்க மாட்டான். முறைக்காய்ச்சல் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விபீஷணர் கூறிய இன்னுரைகள் அவனுக்குக் கசந்தது. அவரை வாள் கொண்டு வெட்டப் போனான்.

விபீஷணர் அவனைத் துறந்து, தென் கடற்கரையில் அமர்ந்துள்ள இராமரைச் சரணாகதி அடைந்தார்.

இவரை இராவணன் தம்பி என்று கூறாமல் கும்பகர்ணன் தம்பி என்று சுவாமிகள் குறிப்பிடுகின்றார். ஏன்?

கும்பகர்ணன் உள்ளத்தால் உயர்ந்தவன். தன் தமையனுக்குப் பல முறை நீதி நெறிகள் இடித்து இடித்து எடுத்துரைத்தான்.

ஆசுஇல் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம்,
மாசில் புகழ் காதல்உறுவேம், வளமை கூரப்
பேசுவது மானம், இடை பேணுவது கருமம்,
கூசுவது மானுடரை நன்று நம கொற்றம்.

ஆனதோ வெஞ்சமம், அளவில் கற்புடை
சானகி துயர் இன்னமும் தீர்ந்தது இல்லையோ,
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்
போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே.

இவ்வாறு இனிய அறிவுரை கூறி, போர்மூண்டு விட்டபடியால் தமையனுக்காகப் போர்புரிந்து, உயிரைத் தியாகம் புரிந்தான் கும்பகர்ணன்.

அதனால் கும்பகர்ணனுடைய தம்பி என்று கூறுகின்றார்.

இத மகிழ்ந்து ---

இதயம் மகிழ்ந்து என்ற சொல் இதம் மகிழ்ந்து என வந்தது. அன்றி இதமாக மகிழ்ந்து என்றும் கொள்ளலாம்.

இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய ---

வீடணன் அடைக்கலம் புகுந்தபின் இராமர் அவரைப் பார்த்து,

ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி
வராகெழு கனைகழல் அரக்கன் வன்மையும்
தார்கெழு தானையின் அளவம் தன்மையும்
நீர்கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான்.

இப்படி இராமர் இலங்கை வாழ் அசுரரது அளவையும் ஆற்றலையும் கூறுமாறு வினாவினார். விபீஷணர் அவையனைத்தையும் விவரமாக விளம்பினார்.

அரன் உகந்து இறைஞ்ச மநு விளம்பி நின்ற ---

மநு-மந்திரம். அரன்-பாவங்களைப் போக்குபவர்.

ஹர ஹர என்ற நாமம் எங்கு ஒலிக்கப்படுகின்றதோ அங்கு துயரம் அகலும்.

எல்லாம் அரன்நாமமே சூழ்க; வையகமுந்துயர் தீர்கவே"     --- திருஞானசம்பந்தர்.


கருத்துரை

குன்றக்குடி மேவும் குருபரா! மாதர் ஆசைய விட அருள் செய்வீர்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...