இரத்தினகிரி - 0350. சுற்ற கபடோடு




 அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சுற்றகபடோடு (இரத்தினகிரி)

முருகா!
உலக இன்பங்களில் உழன்று அழியாமல்
உனது திருவடித் தாமரையை அருள்

தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

......... பாடல் .........

சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
     கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
     சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு .....துயர்மேவித்

துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
     செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
     சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே

சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
     தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
     சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித்

தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
     சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
     தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
     தத்ததன தானதன தானனன தானனன
     திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம்

திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
     னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
     திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே

எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
     மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
     எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா

எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
     சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
     ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சுற்ற கபடோடு பல, சூது வினை ஆனபல
     கற்ற களவோடு, பழிகாரர், கொலைகாரர்,சலி
     சுற்றவிழல் ஆன பவிஷோடு, கடல் மூழ்கிவரு .....துயர்மேவி,

துக்க சமுசார வலை மீன் அது என, கூழில் விழு
     செத்தை என, மூளும் ஒரு தீயில் மெழுகு ஆன உடல்,
     சுத்தம் அறியாத பறி காயம்,தில் மேவி வரு ...... பொறியாலே

சற்று மதியாத கலிகாலன் வரு நேரம் அதில்
     தத்து அறியாமல்,ஒடி ஆடிவரு சூதர்ஐவர்,
     சத்த, பரிச ஆன, மணம, ரூப, ரசம் ஆன பொய்மை ...... விளையாடி,

தக்க மடவார் மனையை நாடி, அவரோடு பல
     சித்து விளையாடு வினை, சீசி, இது நாற, உடல்
     தத்தி, முடிவு ஆகி விடுவேனொ? முடியாத பதம் ...... அருள்வாயே.

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
     தத்ததன தானதன தானனன தானனன
     திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... என தாளம்

திக்குமுகிலு ஆட,  அரி ஆட, அயன் ஆட, சிவன்
     ஒத்து விளையாட, பரை ஆட, வரர் ஆட, பல
     திக்கு அசுரர் வாட, சுரர் பாட, மறை பாட, எதிர் ...... களம்மீதே

எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட,பெல
     மிக்க நரி ஆட, கழுது ஆட, கொடி ஆட, சமர்
     எற்றி வரு பூதகணம் ஆட, ஒளி ஆட விடு ...... வடிவேலா

எத்தி ஒரு மானை, தினை காவல் வல பூவைதனை,
     சித்தம் அலை காமுக! குகா! நமசிவாயனொடு
     ரத்நகிரி வாழ்முருகனே! இளையவா! அமரர் ...... பெருமாளே.


பதவுரை

       தித்தமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு திக்குடுடு டூடமட, டாடமட டூடுடுடு என --- தித்தி மித.....டூடுடுடு என்ற ஒலியுடன்,

     தாளம் திக்கு முகில் ஆட --- திசைகளில் திரண்டு தாளம் ஒலிக்கவும்,

     அரி ஆட --- திருமால் ஆடவும்,

     அயன் ஆட --- பிரமதேவர் ஆடவும்,

     சிவன் ஒத்து விளையாட --- சிவபெருமானும் அதற்கு இசைந்து களிநடம் புரியவும்,

     பரை ஆட --- அம்பிகை ஆடவும்,

     வரர் ஆட --- சிறந்த முனிவர்கள் ஆடவும்,

     பல திக்கு அசுரர் வாட --- பல திசைகளிலும் இருந்த அசுரர்கள் மனம் வாடவும்,

     சுரர் பாட --- தேவர்கள் கீதங்கள் பாடவும்,

     மறை பாட --- வேதங்கள் துதி செய்யவும்,

     எதிர் கள மீதே --- எதிர்த்து வந்த போர்க்களத்திலே,

     எத்திசையும் நாடி --- எல்லாத் திசைகளிலும் தேடிச் சென்று,

     யமனார் --- கூற்றுவனார்,

     நிணமொடு ஆட --- சதைக் கொழுப்பில் ஆடவும்,

     பெலம் மிக்க நரி ஆட --- வலிமை மிகுந்த நரிகள் ஆடவும்,

     கழுது ஆட --- பேய்கள் ஆடவும்,

     கொடி ஆட --- காக்கைகள் ஆடவும்,

     சமர் எற்றி வரு பூதகணம் ஆட --- போரில் மோதி வருகின்ற பூதகணங்கள் ஆடவும்,

     ஒளி ஆட --- ஒளி வீசவும்,

     விடு வடிவேலா --- விடுத்தருளிய கூரிய வேலாயுதத்தை உடையவரே!

       எத்தி ஒரு மானை --- ஏமாற்றி ஒப்பற்ற மான் போன்ற வள்ளியை,,

     தினை காவல் வல பூவை தனை --- தினை காவலில் வல்ல நாகண வாய்ப்பறவை போன்ற வள்ளி பிராட்டியாரை,

     சித்தம் அலை காமுக --- உள்ளத்தைக் கலக்குவித்த, ஆசையுடையவரே!

        குகா --- குகப் பெருமாளே!

        நமசிவாயனொடு ரத்னகிரி வாழ் முருகனே --- சிவபெருமானுடன் இரத்னகிரியில் வாழ்கின்ற முருகக் கடவுளே!

        இளையவா --- இளம்பூரணரே!

       அமரர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையிற் சிறந்தவரே!

       சுற்ற கபடொடு பல --- சூது நிறைந்த தொழில்கள் பலவும்

     சூது வினை ஆன பல --- சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும்,

     கற்ற களவோடு பழிகாரர் --- கற்றுக்கொண்ட கள்ளச் செயலுடன் பழியையுடையவர்கள்,

     கொலைகாரர்  --- கொலைகாரர்களாகிய இவர்களுடன் கூடி,

     சலி சுற்ற விழல் ஆன பவிஷோடு --- சலிப்புற்று அலைந்து வீணான பெருமையுடன்,  துன்பக் கடலில் முழுகி,

     கடல் மூழ்கி வருதுயர் மேவி --- அதனால் வரும் துன்பத்தை அடைந்து,

     துக்க சமுசார அலை மீன் அது என = துக்கத்துடன் கூடிய குடும்ப வாழ்க்கையான,  கடலில் மீன்போல் அலைந்தும்,

     கூழில் விழு செத்தை என --- கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்தும்,

     மூளும் ஒரு தீயில் மெழுகு ஆன உடல் --- மூண்டு எரியும் பெரிய நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் உருகும் உடல்,

     சுத்தம் அறியாத பறி காயம் --- தூய்மையே அறியாத பாரம் உடைய உடல்,

     அதில் மேவி வரு பொறியாலே --- இத்தகைய உடம்பில் பொருந்தியுள்ள மெய் வாய் கண் நாசி செவி என்னும் இந்திரியங்களால்,

     சற்றும் மதியாத --- சிறிதும் மதிக்காத,

     கலி காலன் வரும் நேரம் அதில் --- வலிய காலன் வருகின்ற நேரத்தில்,

     தத்து அறியாமல் --- இந்த ஆபத்து வருவதை அறியாமல்,

     ஓடி ஆடி வரு --- ஓடியாடி வருகின்ற,

     சூதர் ஐவர் --- சூதாடிகளான ஐம்புலன்கள் ஐவர்கள்,

     சத்த பரிச ஆன மணம் ரூபம் ரசம் ஆன பொய்மை --- ஓசை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம் (கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிதல்) என்ற இன்பங்களில்,

     விளையாடி --- விளையாடி (அதன் காரணமாக),

     தக்க மடவார் மனையை நாடி --- தகுந்த மாதர்களையும் அவர்களின் வீடுகளையும் தேடிச் சென்று,

     பல சித்து விளையாடு வினை --- பல மாய வித்தைகளை அம்மாதருடன் ஆடுகின்ற தொழிலில்,

     சீசி இது நாற --- சீசி என்று பலருக்கும் வெறுப்புண்டாக,

     உடல் தத்தி --- என் உடல் வருத்தமடைந்து,

     முடிவு ஆகி விடுவேனோ --- அடியேன் இறந்து படுவேனோ?

     முடியாத பதம் அருள்வாயே --- அழிவில்லாத உமது திருவடியைத் தந்தருளுவீர்.

பொழிப்புரை

            தித்தமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு திக்குடுடு டூடமட, டாடமட டூடுடுடு என்ற தாளங்கள் திசைகளில் திரண்டு ஒலிக்கவும், திருமால் ஆடவும், பிரமன் ஆடவும், சிவபிரான் இசைந்து விளையாடவும், பராசக்தி ஆடவும், முனிவர்கள் ஆடவும், பல திசைகளில் உள்ள அசுரர்கள் வாடவும், தேவர்கள் துதி செய்து பாடவும், வேதங்கள் துதி செய்யவும், எதிர்த்து வந்த போர்க் களத்திலே எல்லாத் திசைகளிலுந் தேடிச் சென்று, கூற்றுவனார் தசைகளுடன் ஆடவும், வலிய நரிகள் ஆடவும், பேய்கள் ஆடவும், காகங்கள் ஆடவும், போரில் மோதி வருகின்ற பூதக் கூட்டங்கள் ஆடவும், ஒளி வீசவும், கூரிய வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

     ஒப்பற்ற மான் போன்றவரும், தினைப்புனத்தைக் காவல் புரிவதில் வல்லவரும், நாகணவாய்ப் பறவை போன்றவரும் ஆன வள்ளிபிராட்டியாரை ஏமாற்றி, அவருடைய உள்ளத்தை அலைத்த காமுகரே!

     குகமூர்த்தியே!

     சிவபெருமானுடன் இரத்தினகிரியில் வாழுகின்ற முருகக் கடவுளே!

     இளம் பூரணரே!

     தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!

            சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும், சூது நிறைந்த செயல்கள் பலவும் கற்ற, களவுடைய பழிகாரரும் கொலைகாரரும் ஆகிய மாதருடன் கூடிச் சலிப்புற்று அலைந்து அலைந்து வீணான பெருமையுடன் துன்பக் கடலில் முழுகி, அதனால் துயரத்தை அடைந்த, கவலை தரும் குடும்பம் என்னும் கடலில் மீன்போல் அலைந்தும், கூழில் விழுந்த குப்பைபோலக் கிடந்தும், மூண்டு எரியும் பெரிய நெருப்பில் இட்ட மெழுகு போல் உருகும் உடல் - தூய்மையில்லாத சுமையான உடல் - இத்தகைய உடலில் பொருந்திய மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐம்பொறிகளால், சிறிதும் மதியாமல் வலிமையான காலன் வருங்காலத்தில், இந்த இடர் வருகின்றதே என்று அறியாமல் ஓடியாடி வருகின்ற சூதாடிகளான சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐம்புலன்களால் வரும் பொய்யின்பங்களில் திளைத்து விளையாடி, தகுந்த மாதர்களையும், அவர்களது வீடுகளையும் தேடிச் சென்று, அவர்களுடன் பல மாய வித்தைகளை விளையாடுகின்ற தொழில், சீச்சீ என்று பலர் வெறுக்க, உடல் வருந்தி அடியேன் அழியலாமோ? உமது முடிவில்லாத திருவடியை அடியேனுக்குத் தந்தருளுவீராக.


விரிவுரை

சுற்ற கபடோடு ---

பொருட் பெண்டிர்களைச் சுற்றி வஞ்சனையும் சூதும் வாதும் களவும் பழி பாவங்களும் இருக்கும்.


பொறியாலே ---

மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம்பொறிகளால் மக்கள் அலைப்புண்டு இடர்ப்படுகின்றார்கள்.

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனது தாள்
சேர ஒட்டார் ஐவர்; செய்வது என் யான்? சென்று தேவர் உய்யச்
சோர நிட்டூரனை சூரனை கார் உடல் சோரி கக்கக்
கூர கட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே!   --- கந்தரலங்காரம்.

சூதர் ஐவர் ---

இவர்கள் ஐம்புல வேடர்கள்.

      ஐம்புலவேடரின் அயர்ந்தனை”        --- சிவஞானபோதம்.

தித்திமிதி . . . . .டூடுடுடு என தாளம் ---

இது போர்க்களத்தில் ஒலிக்கின்ற தாள வகைகள்.

திக்குமுகிலாட ---

திசைகளில் ஒலி திரண்டு ஒலிக்க. முகில்-திரள்.

அரியாட. . . . பூத கணமாட ---

அப் போர்க்களத்தில் ஆனந்த மிகுதியால் அரி, அயன், அரன், உமை, முனிவர், இயமன், ஆகியோருடன், பேய், நரி, காகம், பூதம் ஆகிய அனைத்தும் ஆடி மகிழ்ந்தன.

எத்தி ---

எத்துதல் - ஏமாற்றுதல்.

முருகவேள் வள்ளியிடம் வேடனாகவும், வேங்கை மரமாகவும், வளையல்காரனாகவும், தவ முதியோனாகவும் சென்று ஏமாற்றித் திருவிளையாடல் புரிந்தருளினார்.


சித்தம் அலை காமுக ---

வள்ளியின் சித்தத்தை அலைத்த-கலக்கிய காமுகரே!

நமசிவாயன் ---

சிவபெருமானுடைய திருநாமங்களில் இது சிறந்தது.

      நக்கர் தம் நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே”
      நாதன் நாமம் நமச்சிவாயவே”               --- திருஞானசம்பந்தர்.

கருத்துரை

இரத்தினகிரி மேவும் இளம் பூரணரே! உனது அழியாத அடிமலரை அளித்தருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...