அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாதாளம் ஆதி லோக
(விராலிமலை)
முருகா! அடியேன் நரகில்
விழாவண்ணம் அருள்.
தானான
தான தான தனதன
தானான தான தான தனதன
தானான தான தான தனதன ...... தனதான
பாதாள
மாதி லோக நிகிலமு
மாதார மான மேரு வெனவளர்
பாடீர பார மான முலையினை ......
விலைகூறிப்
பாலோடு
பாகு தேனெ னினியசொ
லாலேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை ......
கவிபாடும்
வேதாள
ஞான கீனன் விதரண
நாதானி லாத பாவி யநிஜவன்
வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச
வ்யாபார
மூடன் யானு முனதிரு
சீர்பாத தூளி யாகி நரகிடை
வீழாம லேசு வாமி திருவருள் ......
புரிவாயே
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபட ......
மறைவேள்விச்
சோமாசி
மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியி ......
லிளையோனே
கூதாள
நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை
கூராரல்
தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பாதாளம்
ஆதி, லோக நிகிலமும்,
ஆதாரம் ஆன மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை ...... விலைகூறி,
பாலோடு
பாகு தேன் என் இனிய சொ-
லாலே, அநேக மோகம் இடுபவர்,
பாதாதி கேசம் ஆக வகைவகை ......
கவிபாடும்
வேதாள
ஞான கீனன், விதரண
நாதான் இலாத பாவி அநிஜவன்,
வீணாள் படாத போத தவம் இலி, ...... பசுபாச
வ்யாபார
மூடன், யானும் உனது இரு
சீர்பாத தூளி ஆகி, நரகிடை
வீழாமலே சுவாமி திருவருள் ......
புரிவாயே.
தூதாள ரோடு காலன் வெருவிட,
வேதா முராரி ஓட, அடுபடை
சோரா, வலாரி சேனை போடிபட, ...... மறைவேள்விச்
சோமாசிமார்
சிவாய நம என,
மா மாய வீர கோரம் உடன், இகல்
சூர்மாள வேலை ஏவும் வயலியில் ...... இளையோனே!
கூதாள
நீப, நாக மலர்மிசை,
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகரம் ...... அடர் சோலை
கூருஆரல்
தேரு நாரை மருவிய,
கான்ஆறு பாயும் ஏரி வயல்பயில்,
கோனாடு சூழ் விராலி மலையுறை ......
பெருமாளே.
பதவுரை
தூது ஆளரோடு காலன் வெருவிட --- தன்னுடைய
தூதர்களுடன் காலன் அஞ்சவும்,
வேதா --- பிரமாவும்,
முராரி ஓட --- திருமாலும் அஞ்சி ஓடவும்,
அடு படை சோரா --- கொல்லவல்ல படைகள் சோர்ந்து,
வலாரி சேனை பொடிபட --- இந்திரனுடைய சேனைகள்
பொடிபட்டு அழியவும்,
மறை வேள்வி --- வேத மந்தரங்களுடன் கூடிய
யாகங்கள்,
சோமாசிமார் --- சோமயாக முதலியன செய்யும்
பெரியோர்கள்,
சிவாயநம என --- சிவாயநம என்ற ஐந்தெழுத்தை
ஓதித் துதிக்கவும்,
மாய வீர கோரம் உடன் இகல் --- பெரிய
மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தப் போர் செய்த,
சூர் மாள --- சூரபன்மன் இறக்கும்படி,
வேலை ஏவும் --- வேலாயுதத்தை விடுத்தருளிய,
வயலியில் இளையோனே --- வயலூரில்
வீற்றிருக்கும் இளையவரே!
கூதாள --- கூதாள மலரிலும்,
நீப --- கடப்ப மலரிலும்,
நாக மலர்மிசை --- சுரபுன்னை மலரிலும்,
சாதாரி --- சாதாரி என்ற பண்,
தேசி --- தேசி என்ற பண்,
நாமக்ரியை முதல் --- நாத நாமக்கிரியை என்ற
பண் முதலியவற்யையும்,
கோலால --- கோலாகலமாக,
நாத கீத --- நாத கீதங்களைப் பாடும்,
மதுகரம் அடர்சோலை --- வண்டுகள் நிறைந்த
சோலைகளும்,
கூர் ஆரல் தேரும் --- மிகுதியாக ஆரல் மீன்களை
ஆய்ந்து தேடுகின்ற,
நாரை மருவிய --- நாரை என்ற நீர்ப்பறவைகள்
பொருந்திய,
கான் ஆறுபாயும் --- காட்டாறு பாய்கின்ற,
ஏரி --- ஏரிகளும்,
வயல் பயில் --- வயல்களும் நெருங்கியுள்ள,
கோனாடு சூழ் --- கோனாட்டில் விளங்கும்,
விராலிமலை, உறை --- விராலிமலையில்
எழுந்தருளியிருக்கும்,
பெருமாளே --- பெருமையிற்
சிறந்தவரே!
பாதாளம் ஆதி லோக நிகிலமும் --- பாதாளம் முதலிய உலகங்கள்
எல்லாவற்றுக்கும்,
ஆதாரம் ஆன --- ஆதாரமாகிய
மேரு என வளர் --- மேருமலை போல் உயர்ந்து வளர்ந்துள்ளதும்,
பாடீர --- சந்தனம் அணிந்ததும்,
பாரம் ஆன --- பாரமுள்ளதுமாகிய
முலையினை விலை கூறி --- முலையை விலை பேசி,
பாலோடு பாகு தேன் என் இனிய சொலாலே --- பால், சர்க்கரை பாகு, தேன் என்றவை போன்ற இனிய மொழிகளால்,
அநேக மோகம் இடுபவர் --- எண்ணில்லாத மோகத்தைச்
செய்பவர்களாகிய பொதுமாதருடைய,
பாதாதி கேசம் ஆக --- அடி முதல் முடி வரையுள்ள
உறுப்புக்களை,
வகைவகை கவி பாடும் --- வகை வகையாகப் புகழ்ந்து
கவிகள் பாடுகின்ற,
வேதாள --- பேயன்,
ஞான கீனன் --- அறிவு குறைந்தவன்,
விதரண நா தான் இலாத பாவி --- விவேகமுள்ள
நாக்கு இல்லாத பாவி,
அநிஜவன் --- உண்மையே இல்லாதவன்,
வீண் நாள் படாத போத தவம் இலி --- வீணாள்
உண்டாகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன்,
பசு பாச வ்யாபார மூடன் --- உயிரைப் பற்றியும்
உலகத்தைப் பற்றியுமே பேசி வியாபாரஞ் செய்கின்ற மூடனாகிய,
யானும்--- அடியேனும்,
உனது இரு சீர்பாத தூளி ஆகி --- தேவரீருடைய
இரு சிறந்த திருவடிகளின் தூளியாகும் பேறு பெற்று,
நரகு இடை வீழாமலே --- நரகத்தில் வீழாதபடி,
சுவாமி --- உடையவரே!
திருஅருள் புரிவாயே! --- திருவருள்
புரிந்தருள்வீராக.
பொழிப்புரை
தனது தூதர்களுடன் காலன் அஞ்சவும், பிரமனும் திருமாலும் அஞ்சி ஓடவும், கொல்ல வல்ல ஆயுதங்கள் சோர்ந்து போய்
இந்திரனுடைய சேனைகள் பொடிபட்டு அழியவும், வேதமந்திரங்களுடன்
கூடிய யாகங்கள், சோமயாகம் முதலிய
செய்யும் பெரியோர்கள் சிவாயநம என்று துதி செய்யவும், பெரிய மாயங்களைச் செய்து வீரமாகவும்
கோரமாகவும் போர் புரிந்த சூரபன்மன் மாளும்படி வேலை விடுத்தருளிய இளையவரே!
வயலூரில் எழுந்தருளிய இளையவரே!
கூதாள மலரிலும், கடப்ப மலரிலும், சுரபுன்னை மலரிலும், மொய்த்து, சாதாரி, தேசி, நாதநாமக்கிரியை முதலிய பண்களையும்
கோலாகலமாகப் பாடி நாதகீதங்கள் ஒலிக்கின்ற வண்டுகள் நிறைந்த சோலைகளும், மிகுந்த ஆரல் மீன்களை ஆய்ந்து இரையாகத்
தேடுகின்ற நாரைகள் வாழ்கின்ற காட்டாறுகள் பாயும் ஏரிகளும், வயல்களும் நெருங்கியுள்ள, விராலிமலையில் வீற்றிருக்கும்
பெருமிதமுடையவரே!
பாதாளம் முதலிய உலகங்கள்
எல்லாவற்றுக்கும்
ஆதாரமாகிய
மேருமலைபோல் உயர்ந்து வளர்ந்துள்ளதும், சந்தனக்குழம்பு
பூச்பெற்றதும், பாரமுடையதுமாகிய முலையை
விலைபேசி, பால் சர்க்கரைப்பாகு, தேன் போன்ற இனிய மொழிகளால் எண்ணற்ற
மோகத்தைச் செய்கின்ற பொது மகளிரின்,
அடிமுதல்
முடிவரையுள்ள அங்கங்களைச் சிறப்பித்துக் கவிகள் பாடுகின்ற பேயனும், அறிவில்லாதவனும், விவேக முடைய நாக்கு இல்லாத பாவியும், உண்மை யில்லாதவனும் வீண் நாளையகற்றும்
அறிவும் தவமும் இல்லாதவனும், உயிரைப்பற்றியும்
உலகத்தைப் பற்றியுமே பேசி வியாபாரஞ் செய்கின்றவனும் ஆகிய அடியேன், தேவரீருடைய சிறந்த இரு திருவடிகளின்
துகளாகும் பேற்றினைப் பெற்று, நரகில் விழாதவண்ணம், என்னை
உடையவரே! உமது திருவருள் புரிவீராக.
விரிவுரை
பாதாளம்
ஆதி லோக நிகிலமும் ஆதாராமான மேரு ---
பாதலம்
முதலிய எல்லா உலகங்களுக்கும் மேருமலை ஆதாரமாகி நிற்கின்றது. அந்த உலகங்கள் யாவும்
மேருமலையில் கோத்து நிறைபெறுகின்றன. மேரு நடுத்தூண்போல் நிற்கின்றது.
“மேருத்தூண் ஒன்று
நடுநட்டு” - மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்
“மேரு நடுநாடி” ----
திருமந்திரம்
மோகம்
இடுபவர் ---
பொதுமகளிர்
மேருமலை போன்ற தனத்தை விலை கூறியும் பால், பாகு, தேன் பால் இனிக்க இனிக்கப் பேசியும்
தம்மை நாடி வந்தவர் சொக்கிப் போகுமாறு மோகிக்கச் செய்வார்கள்.
பாதாதி
கேசமாக வகை வகை கவிபாடும் ---
மாதர்களின்
பாதம் முதல் கூந்தல் வரையுள்ள அங்கங்களைத் தனித்தனியே வருணித்துக் கவிகள் பாடி
புலவர்கள் தாம் கற்ற தமிழை அவமாக்குவர்.
உதிர்வதும், நரைப்பதுமாகிய கூந்தலை மேகம் என்றும், பாக்கின் பாளையென்றும், கொடிப்பாசி யென்றும், பல்வேறு உவகைகளில் கூறுவர். இவ்வாறு கண், நெற்றி, நாசி, காது, பற்கள், இதழ், கழுத்து, முதலிய உறுப்புக்களை விதவிதமாக உவமை
கூறிப் பாடுவார்கள். நைடதம் முதலிய நூல்கள் இதற்குச் சான்று.
ஞானகீனன்
---
ஞானஹீனன்-அறிவற்றவன்.
இயற்கையாயுள்ள
எம்பெருமானைப் பாடாமல், செயற்கை அழகைப் பாடுவதனால் அறிவற்றவன்.
விதரண
நா தான் இலாத பாவி ---
விதரணம்-விவேகம்.
உயர்ந்த
தமிழால் இழிந்த பொருள்களைப் பாடுவதனால்
அறிவற்ற நாவை உடையவன்.
நாக்கு
இறைவன் தந்தது
உடம்பில்
எல்லாப் பகுதியிலும் நரம்புகள் உண்டு. நாக்கை மட்டும் இறைவன் நரம்பின்றிப்
படைத்தான். ஏன்? நரம்புள்ள பகுதிகள்
சுளுக்கிக் கொள்ளும். கழுத்து சுளுக்கும்; கை சுளுக்கும்; கால் சுளுக்கும்.
நாக்குக்கு
நரம்பிருந்தால் சுளுக்கிவிடும். பேசமுடியாத அவல நிலை அடிக்கடி வரும். பேச்சுத்
தடைபட்டுப் போகும். அதனால், இறைவன் கருணையோடு
பேசுங் கருவியாகிய நாவை நரம்பின்றிப் படைத்தருளினார். அப்பரமன் தந்த நாவால் அவனையே
இல்லையென்று கூறுவது எத்துணைப் பேதமை? சிந்தியுங்கள்.
அவன் தந்த நாவால் அவனை வாழ்த்தவேண்டும்.
வணங்கத்
தலைவைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து,
இணங்கத்
தன் சீரடியார் கூட்டமும் வைத்து, எம்பெருமான்
அணங்கொட்
அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. ---
திருவாசகம்
பூக்
கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்
நாக்கைக்
கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே
இரை தேடி அலமந்து
காக்கைக்கே
இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்
வாழ்த்த
வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச்
சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த
மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா
வினையேன் நெடுங் காலமே. --- அப்பர்.
இறைவனுடைய
திருநாமங்களைச் சொல்லாத நாக்கு என்ன நாக்கு என்ற வடலூர் வள்ளலார் பாடுகின்றார்.
அநிஜவன்
---
நிஜம்-மெய்; அநிஜவன்-உண்மை இல்லாதவன். அகரம் இன்மைப்
பொருளில் வந்தது. நியாயம் இல்லாதது அநியாயம். அதுபோல் நிஜம் இல்லாதது அநிஜம்.
வீணாள்படாத
போத தவமிலி ---
அறிவு-வீணாள்
படாமல் தடுக்கும். தவத்தைக் கொடுக்கும். ஆதலால் அறிவும் தவமும் இல்லாதவன் என்றார்.
பசுபாச
வ்யாபார மூடன் ---
பசு-உயிர்.
பாசம்உலகம். உயிரின்மீது பற்று வைத்தும், உலகப்
பொருள்களின்மீது பற்று வைத்தும்,
அவற்றுக்காகப்
பாடுபட்டுத் திரிகின்வன்.
சீர்பாத
தூளியாகி ---
இந்தசொல்
மிக உயர்ந்த சொல். நாம் இறைவனுடைய சீர்பாத தூளியாக ஆகவேண்டும். ஆக மிக உயர்ந்த
சொல். அடியார்களின் அடிப்பொடியாக ஓர் ஆழ்வார் விளங்கினார். தொண்டடிரடிப்
பொடியாழ்வார்.
அடியார்களின்
சீர்பாதத் தூளி சென்னியில் படுமாயின் சகல பாவங்களும், பாநுவைக் கண்ட பனிபோல் நீங்கும்.
தருப்புகழ்
வல்ல சுரர்மகள் நாயகன், சங்கரர்க்கு
குரு
புகழ்வல்ல
குமரேசன் சண்முகன் குன்றுஎறிந்தோன்,
மருப்புகழ்
வல்ல அருணகிரிப் பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ்
வல்லவர் சீர்பாத தூளி என் சென்னியதே.
ஆடுமின்
அன்பு உடையீர், அடிக்கு ஆட்பட்ட
தூளிகொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர் உமரோடு எமர் சூழவந்து
வாடும்
இவ்வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின்
பத்தர் உள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே. ---
சுந்தரர்.
இத்
தேவாரப் பாடலின் பொழிப்புரை----
அன்புடையவர்களே
, அன்புக் கூத்தினை
ஆடுங்கள் ; தொண்டராய் உள்ளவர்களே, சிவபெருமானது திருவடிக்கு
ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள்; பத்தராய் உள்ளவர்களே, உம்மவரோடு எம்மவரும் சூழ ஒன்று கூடி, மனம் மெலிதற்குக் காரணமான இல்
வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று, திருப்பழமண்ணிப் படிக்கரையைப்
பாடுங்கள்.
நரகிடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே ---
குற்றம்
புரிந்தோர் சிறைச்சாலை புக அரசாங்கத்தார் தண்டிப்பதுபோல், பாவம் புரிந்தோர் இருள் உலகமாகிய நரகம்
புக இறைவனுடைய ஆணை ஒறுக்கும்.
அசிபத்தியும், கும்பிபாகம், ரௌரவம் முதலிய பல நரகங்கள் உள. தீவினை
புரிந்தோர் அவற்றில் சென்று பெருந்துயரங்களை நுகர்வார்கள்.
இத்தகைய
கொடிய நரகில் புகுதாவண்ணம் காத்தருள்வீர் என்று அடிகளார் இறைவனிடம்
முறையிடுகின்றார்.
முராரி
---
முர
அரி. முரன் என்ற அசுரனைத் திருமால் வதைத்தார். அதனால் முராரி என்று பேர் பெற்றார்.
வலாரி
---
வல
அரி. வலன் என்ற அசுரனைத் திருமால் வதைத்தார். அதனால் வலாரி என்று பேர் பெற்றனன்.
வலன்
என்ற அசுரன் தான் இறந்தால் தன் உடல் நவமணிகளாகுமாறு வரம் பெற்றிருந்தான். இந்திரன்
அவனை வஞ்சனையால் யாகப் பசுவாகுமாறு செய்து, யாகத்தில் வதைத்தான்.
யாகத்தில்
மறைந்த இவன் உடல் விலையுயர்ந்த இரத்தினங்கள் ஆயின.
உதிரம்-மாணிக்கமாயிற்று
பற்கள்-முத்துக்களாயின
மயிர்கள்-வைடூரியங்களாயின
எலும்புகள்-வைரங்களாயின
பித்தம்-மரகதமாயிற்று
மாமிசம்-கோமேதகமாயிற்று
தசைகள்-பவளமாயின
கண்கள்-நீலமாயின
கபம்-புஷ்பராகமாயிற்று
சோமாசிமார்
---
சோமசிமார்-சோமயாகஞ்
செய்பவர்கள். வேதாமங்களில் விதித்தவாறு சிவயாகங்களை நியம நியதியுடன் செய்கின்ற
மறையோர். சோமாசி- சோமயாசியெனப் பேர் பெறுவர்.
சோமயாகம்-தேவர்பொருட்டுச்
சோமரசம் அளிக்கும் வேள்வி.
சோமம்-யாகங்களில்
தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங்கொடி.
பெரிய
புராணத்தில் சோமாசிமாற நாயனார் என்று ஒருவர் இருந்தார் என்பது உலககறிந்த உண்மை.
கூதாளம்
---
கூதளம்
என்பது ஒரு மலர். சங்குபோன்ற வடிவுடன் இருக்கும். “கூதாள கிராத குலிக்கு இறைவா”
என்று அநுபூதியிலும் கூறியுள்ளார்.
நாகம்
---
நாகம்
- சுரபுன்னை.
சாதாரி
---
சாதாரி
என்ற பண் இப்போது காமவர்த்தனி யென்று வழங்குகின்றது. காமவர்த்தனியை இப்போது
பந்துவராளி என்று பிழைபடக் கூறுகின்றார்கள்.
தேசி
---
தேசி
என்பது ஒருவகை இராகம்.
நாதநாமக்ரியா
---
இது
நிஷாதாந்தராகம் .மாயாமாளவ கௌளையில் பிறந்தது.
கூராரல்
தேரு நாரை ---
கூர்
- மிகுதி; ஆரல் - ஒரு வகை மீன். நாரை என்ற பறவை
வெள்ளியசிறகையும், பசிய காலையும் சிவந்த
வாயையும் உடையது.
இது
ஆரல்மீனையும், கொண்டை மீனையும், நெற்கதிர்களையும் உண்ணும்.
கோனாடு
---
“பகுவாய் நாரை ஆரல்
வாரும் பாசூரே” --- திருஞானசம்பந்தர்
“ஆரல் அருந்த வயிற்ற
நாரை” ---
குறுந்தொகை
எறும்பீசர்
மலைக்கு மேற்கு; மதிற்கறைக்குக்
கிழக்கு; காவிரி நதிக்குத்
தெற்கு; பிரான் மலைக்கு
வடக்கு. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்டது கோனாடு என்று கொங்கு மண்டல சதகம்
கூறுகின்றது.
கருத்துரை
விராலிமலை
உறை வேலவரே! அடியேன் நரகில் விழாத வண்ணம் அருள்புரிவீர்.
No comments:
Post a Comment