விராலிமலை - 0358. கரதல மும்குறி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரதல முங்குறி (விராலிமலை)

முருகா!
மாதர் மயலில் சிக்கி இளமை அழியும் முன்
நல்லுணர்வு பெற அருள்


தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான


கரதல முங்குறி கொண்ட கண்டமும்
     விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
     கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக்

களபசு கந்தமி குந்த கொங்கைக
     ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
     கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா

இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
     பொருதுசி வந்துகு விந்தி டும்படி
     யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ......     லுறமூழ்கி

இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
     வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
     இளமைகி ழம்படு முன்ப தம்பெற ......    வுணர்வேனோ

பரதசி லம்புபு லம்பு மம்பத
     வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
     பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ......யிடையேபோய்ப்
  
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
     மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
     படியுந டுங்கவி ழும்ப னம்பழ ......        மெனவாகும்

மருதமு தைந்தமு குந்த னன்புறு
     மருககு விந்தும லர்ந்த பங்கய
     வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி

மலையில்வி ளங்கிய கந்த என்றுனை
     மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
     வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கர தலமும், குறி கொண்ட கண்டமும்,
     விரவி எழுந்து சுருண்டு, வண்டுஅடர்
     கனவிய கொண்டை குலைந்து அலைந்திட, ...... அதிபாரக்

களப சுகந்தம் மிகுந்த கொங்கைகள்
     இளக முயங்கி, மயங்கி, அன்புசெய்
     கனிஇதழ் உண்டு துவண்டு, பஞ்சணை ...... மிசை வீழா,

இரதம் அருந்தி, உறுமு கருங்கயல்
     பொருது சிவந்து, குவிந்திடும் படி,
     இதவிய உந்தி எனும் தடந்தனில் ......         உறமூழ்கி,

இனியதொர் இன்பம் விளைந்து அளைந்து, பொய்
     வனிதையர் தங்கள் மருங்கு இணங்கிய,
     இளமை கிழம்படு முன் பதம்பெற ......    உணர்வேனோ?

பரத சிலம்பு புலம்பும் அம்பத
     வரிமுக எண்கின் உடன், குரங்குஅணி
     பணிவிடை சென்று முயன்ற குன்றுஅணி ......   இடையேபோய்,

பகடி இலங்கை கலங்க, அம்பொனின்
     மகுட சிரம் தசமும் துணிந்து, எழு
     படியும் நடுங்க, விழும் பனம்பழம் ......    எனஆகும்,

மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு
     மருக! குவிந்து மலர்ந்த பங்கய
     வயலியில் வம்பு அவிழ் சண்பகம் பெரிய ...... விராலி

மலையில் விளங்கிய கந்த என்று, உனை
     மகிழ்வொடு வந்திசெய் மைந்தன் என்தனை
     வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டுஅருள் ...பெருமாளே.

  
பதவுரை


      பரத சிலம்பு --- பரத நாடகத்திற்குரிய சிலம்பு காலணி,

     புலம்பும் அம் பத --- ஒலிசெய்கின்ற அழகிய திருவடியை டையவரே!

     வரி முக எண்கின் உடன் --- வரிகளோடு கூடிய முகமுடைய கரடிப்படையுடன்,

     குரங்கு அணி --- குரங்குப் படைகள்,

     பணிவிடை சென்று முயன்ற --- குற்றேவல் செய்தற்குப் போய் முயற்சி செய்த,

     குன்று அணி இடையே போய் --- அழகிய மலைவழியே சென்று,

     பகடி இலங்கை கலங்க --- ஆடலோடு கூடிய இலங்காபுரி கலங்க,

     அம்பொ(ன்)னின் மகுட சிரம் தசமும் --- அழகிய பொன்னாற் செய்யப்பட்ட மணிமுடிகளைத் தரித்த, (இராவணனுடைய) பத்துத்தலைகளும்,

     துணிந்து --- அறுபட்டு

     எழு படியும் நடுங்க --- ஏழு உலகங்களும் நடுங்குமாறு,

     விழும் பனம்பழம் என ஆகும் --- மரத்திலிருந்து விழுகின்ற பனம்பழம் போல் விழுந்துருளச் செய்தவரும்,

     மருதம் உதைந்த --- மருத மரத்தை உதைத்தவரும் ஆகிய,

     முகுந்தன் அன்புறும் --- முக்தியைத் தருகின்ற திருமால் அன்பு கொள்கின்ற,

     மருக --- திருமருகரே!

      குவிந்து மலர்ந்த பங்கய வயலில் --- கதிரவன் மறைவதால் குவிந்து மீளவுந் தோன்றுவதால் மலர்கின் தாமரைகள் நிறைந்த வயலூர் என்னுந் திருத்தலத்திலும்,

     வம்பு அவிழ் --- வாசனை வீசுகின்ற,

     சண்பகம் பெரிய விராலிமலையில் --- பெரிய சண்பகத் தருக்கள் நிறைந்த விராலிமலையிலும்,

     விளங்கிய கந்த என்று உனை --- வாழ்கின்ற கந்தக் கடவுளே என்று தேவரீரை,

     மகிழ்வொடு வந்தி செய் --- மகிழ்ச்சியுடன் தொழுகின்ற,

     மைந்தன் என்தனை --- புதல்வனாகிய அடியேனை,

     வழிவழி அன்பு செய் --- வழிவழியாக அன்பு செய்கின்ற

     தொண்டு கொண்டு அருள் --- அடிமை கொண்டருளிய,

      பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      கரதலமும் --- கையாகிய தலமும்

     குறிகொண்ட கண்டமும் --- நகக்குறியுடன் கூடிய கழுத்தும்,

     விரவி எழுந்து --- கலந்து ஆற்றுவதால் மேல் எழுந்து,

     சுருண்டு --- சுருள்பெற்று,

     வண்டு அடர் --- வண்டுகள் நெருங்கி உள்ள,

     கனவிய கொண்டை குலைந்து அலைந்திட --- பருத்த கூந்தல் குலைந்து அலைய,

     அதி பார --- மிகவும் பெரிதும்,

     களப சுகந்தம் மிகுந்த --- கலவைச் சாந்து பூசப்பட்டு மணங் கமழ்கின்றதும் ஆகிய

     கொங்கைகள் இளக --- தனங்கள் இளகவும்,

     முயங்கி மயங்கி --- விலைமகளிருடன் கலந்து மயங்கியும்,

     அன்புசெய் கனி இதழ் உண்டு துவண்டு --- அன்பைச் செய்கின்ற கனிபோன்ற இதழமுதைப் பருகி துவண்டும்,

     பஞ்சணை மிசை வீழா --- பஞ்சணைமேல் வீழ்ந்தும்,

     இரதம் அருந்தியும் --- இன்பத்தை உண்டும்,

     உறும் கருங்கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி --- பொருந்தியுள்ள கருமையான அவர்கள் கண்கள் பூசல் செய்து சிவந்து குவியுமாறு,

     இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி --- இதமாகிய உந்தி என்னும் இடத்தில் பொருந்தி அதில் முழுகியும்

     இனியது ஓர் இன்பம் விளைந்து அளைந்து --- இனியதாகிய ஓர் இன்பம் உண்டாகி அதில் கலந்தும்,

     பொய் வனிதையர் தங்கள் மருங்கு இணங்கிய --- பொய்யாக அன்பு செய்கின்ற பரத்தையிடத்தில் கூடி வறிதே கெடுகின்ற,

     இளமை கிழம் படு முன் --- இளமைப் பருவமானது முதுமைப் பருவத்தை அடைவதற்குள்,

     பதம் பெற உணர்வேனோ --- தேவரீருடைய திருவடியைப் பெற்றுய்ய உணர்வு பெறமாட்டேனோ?

பொழிப்புரை


         பரதக் கூத்திற்கிசைய ஒலிக்கும் சிலம்பு இனிது ஒலிக்கும் அழகிய திருவடியை உடையவரே!

         வரிகளை உடைய முகத்துடன் கூடிய கரடிப் படையுடன் குரங்குப் படைகளும் பணிவிடை செய்து சீதையைத் தேடுதற்கு முயன்ற மலைகளின் வழியே சென்று, ஆடல் பாடல்களுடன் கூடிய இலங்கை கலங்கவும், அழகிய பொன் முடிகளுடன் கூடிய இராவணனுடைய பத்துத் தலைகளும், ஏழுலகங்களும், நடுங்குமாறு பனம்பழம் போல விழுந்து உருளவும் போர் செய்தவரும், கிருஷ்ணாவதாரத்தில் மருத மரங்களின் இடையே போய் அவற்றை உதைத்தவரும், முத்தியைத் தருபவருமாகிய திருமால் அன்பு கொள்கின்ற திருமருகரே!

         குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூர் என்னும் திருத்தலத்திலும், மணங் கமழ்கின்ற பெரிய சண்பக மரங்கள் மிகுந்த விராலி மலையிலும் விளங்குகின்ற கந்தப் பெருமாளே! என்று துதிசெய்து மகிழ்ச்சியுடன் தொழுகின்ற குழந்தையாகிய அடியேனை வழிவழியாக அன்புசெய் தொண்டு கொண்டருளிய பெருமிதமுடையவரே!

         கழுத்தில் கை செருகி ஆற்றுவதால் மேலெழுந்து சுருண்டு வண்டுகள் மொய்த்துள்ள பருத்த கூந்தல் குலைந்து அலையவும், கலவைச் சாந்து கமழ்கின்ற பருத்த தனங்கள் இளகவும், கூடி மயங்கியும், அன்புறுகின்ற கனி நிகர்த்த அதரத்தைப் பருகியும், துவண்டும், பஞ்சணை மேல் வீழ்ந்தும், இன்பமுற்றும், கரிய கண்கள் பூசலாடி சிவந்து குவியுமாறு, இதஞ்செய்கின்ற உந்தியில் முழுகியும், இனிய சுகத்தில் கலந்து, பொய்யாக நடிக்கும் பரத்தையர் பால் இணங்கிய இளமையானது கிழப்பருவத்தை அடையும் முன்னரேயே தேவரீரது திருவடியைப் பெற்று உய்ய உணர்ச்சியை அடையமாட்டேனோ?


விரிவுரை


இளமை கிழம்படுமுன் பதம்பெற உணர்வேனோ ---

கிழப் பருவம் மிகவும் கொடுமையானது; மனைவியும் மக்களும் வெறுப்பர்; நண்பர் அறவே புறக்கணிப்பர்; உடல் நலம் குன்றி விடும்; கண்பார்வை மங்கும்; செவிடுபடும்; உண்டது செமிக்காது; இறைவனைச் சிறிது நேரம் இருந்து தியானிக்க உடம்பு இடந்தராது. ஆதலால் இளமைப் பருவம் மாறி முதுமைப் பருவம் வருவதற்குள் இறைவனது பதம்பெறுவதற்கு உணரவேண்டும்.

காலன் வருமுன்னே, கண்பஞ்சு அடைமுன்னே,
பால்உண் கடைவாய் படுமுன்னே, --- ஓலஞ்செய்து
உற்றார் அழுமுன்னே, ஊரார் சுடுமுன்னே,
குற்றாலத்து ஈசனையே கூறு.            --- பட்டனத்தடிகள்

நரைவரும் என்று எண்ணி நல்லறி வாளர்
குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங்கு எழுந்திருப் பார்.              ---  நாலடியார்.

முற்பகுதியில் 11 வரிகளில் இளமையை அழிக்க வல்லது இதுவென்றும், அதனின்றும் தப்பி என்றும் அகலாத இளமையைத் தரவல்ல இளம்பூரணனது இன்னருளைப் பெறுவதற்கு முயலவேண்டும் மென்றுங் குறிப்பிடுகின்றனர்.

பரதசிலம்பு புலம்பும் அம்பத ---

பரதம் என்பது ஒருவகைக் கூத்து. பாவ, ராக, தாளம் மூன்றுங் கூடியதற்கு பரதம் என்பர். அக்கூத்திற்கு ஆசிரியர் நடராஜமூர்த்தி.

இன்பத் திறம் உதவு பரதகுரு வந்திக்கும் சற் குருநாதா” --- (அமுதுததி) திருப்புகழ்.

பரதநடனத்திற்கு இசைய சிலம்பு முருகவேள் திருவடியில் மிகவும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இனியநாத சிலம்பு புலம்பிடும்
 அருணஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்”     --- (கமலமாதுடன்) திருப்புகழ்

மகுட சிரம் தசமும் ---

இராவணன், கும்பகர்ணன், விபீடணன், மூவரும் உடன்பிறந்தவர்கள். முறையே தாமசம், ராஜசம், சத்துவம் என்ற முக்குணங்களாவார். சத்துவகுணமாகிய விபீடணர் பகவானாகிய ஸ்ரீராமரிடம் அடைக்கலம் புகுந்தனர். தாமசம் ராஜசம் என்ற இருவரும் அழிந்தனர். அதில் தாமசகுணமாகிய ராவணனுக்குப் பத்துத் தலைகள். அவையாவன. காமம், குரோதம், லோபம், மதம், மற்சரம், ஈருஷை, டம்பம், மமகாரம், அகங்காரம் என்பன.

வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டருள் ---

அருணகிரிநாத சுவாமிகள் பல இடங்களில் தன்னை வழிவழியடிமை என்று தெரிவிக்கின்றார்கள்.

       தஞ்சமாகியெ வழிவழி அருள்பெறும்
        அன்பினால் உனதுஅடிபுகழ் அடிமை”       --- (பஞ்சபாதக) திருப்புகழ்

முடிய வழிவழி அடிமை யெனும்உரிமை அடிமை முழுது
             உலகறிய மழலை மொழி கொடுபாடு மாசுகவி
   முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன
             முகுள பரி மளநிகில கவிமாலை சூடுவதும்”   ---  சீர்பாதவகுப்பு

கருத்துரை

திருமால் மருகரே! வயலூரிலும் விராலிமலையிலும் வாழ்கின்ற பெருமாளே! பெண்ணாசையில் சிக்கி இளமை வறிதே கழியுமுன் உணர்வு அருள்வீர்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...