கொடுங்குன்றம் - 0370. அனங்கன் அம்பு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அனங்கன் அம்பு (கொடுங்குன்றம்)

முருகா! 
மாதர் ஆசையால் தடைபட்ட தொண்டனை ஏற்று அருள்


தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான


அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே

அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே

முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே

முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ

தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா

செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக்

குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை

கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் ...... கண்களாலே,

அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் ...... கொங்கையாலே,

முனிந்து மன்றம் கண்டும் தண்டும் ...... பெண்களாலே,

முடங்கும் என்தன் தொண்டும் கண்டு, ன்று ...... இன்பு உறாதோ?

தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா

செறிந்து அடர்ந்தும் சென்றும் பண்பின் ...... தும்பிபாட,

குனிந்து இலங்கும் கொம்பும் கொந்தும் ...... துன்று சோலை

கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் ...... தம்பிரானே.


பதவுரை

       தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந் தெந் னானா --- தெனந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா என்று,

     செறிந்து அடர்ந்தும் சென்றும் --- நெருங்கிச் சென்று,

     பண்பின் தும்பி பாட  --- நல்ல முறையில் வண்டுகள் பாட,

     குனிந்து இலங்கும் --- வளைந்து விளங்கும்,

     கொம்பும் --- கொம்புகளும்,

     கொந்தும் துன்று சோலை --- பூங்கொத்துக்களும் நெருங்கிய சோலை சூழ்ந்துள்ள,

     கொழும் திண் --- செழுமையும் திண்மையும் உடைய,

     கொடுங்குன்றம் தங்கும் --- கொடுங்குன்றத்தில் வீற்றிருக்கும்,

     தம்பிரானே - தனிப்பெரும் தலைவரே!

       அனங்கன் --- மன்மதனுடைய,

     அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் --- பொருந்திய கணைகள் ஐந்து தங்குகின்ற,

     கண்களாலே --- கண்களினாலும்,

     அடர்ந்து எழும் பொன்குன்றம் --- நெருங்கி எழுந்துள்ள பொன்மலையும்,

     கும்ப --- குடமும் போன்ற

     கொங்கையாலே --- தனங்களினாலும்,

     முனிந்து --- கோபங்கொண்டு,

     மன்றம் கண்டும் --- பொதுச் சபை ஏறியும்,

     தண்டும் --- தமக்குரிய பொருளை வசூலிக்கும்,

     பெண்களாலே --- பொது மாதர்களினால்,

     முடங்கும் என்றன் --- முடக்கம் அடைந்த அடியேனுடைய,

     தொண்டும் கண்டு இன்று இன்பு உறாதோ --- தொண்டினையும் கண்டு இன்று உமது திருவுள்ளம் இன்பம் அடையாதோ?

பொழிப்புரை

     தெனந் தெனந்தெந் தெந்தெந் தெந்தெனானா என்று ஒலி செய்து கொண்டு ஒன்றுகூடி நெருங்கிச் சென்று நல்ல முறையில் வண்டுகள் பாட, அப்பாடலைக் கேட்டு வளைந்து விளங்கும் கொம்புகளும் பூங்கொத்துகளும், நெரு்கிய சோலைகள் சூழ்ந்தசெழுமையும் திண்மையும் உடைய கொடுங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள தனிப் பெருந்தலைவரே!

     மன்மதனுடைய பொருந்திய ஐந்து கணைகளுந் தங்குகின்ற கண்களினாலும், நெருங்கி எழுகின்ற, பொன்மலையையும் குடத்தையும் ஒத்த தனங்களினாலும், கோபித்து நியாய சபையேறிப் பொன்னை வசூலிக்கும் விலைப் பெண்களினால் தடைபடுகின்ற அடியேனுடைய தொண்டினைக் கண்டு இன்று தேவரீருடைய திருவுள்ளம் மகிழ மாட்டதோ?

விரிவுரை

அனங்கன் ---

அங்கம் - சரீரம். மன்மதன் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணால் எரிந்தான். இரதிதேவி வேண்டி முறையிட்டாள். சிவபெருமான் மன்மதனை யெழுப்பி, இரதிக்கு மட்டும் உருவமுள்ளவனாகவும், மற்றவர்க்கு அருவமாகவும் இருந்து அவனை அவனுக்குரிய தொழிலைப் புரியுமாறு பணிந்தருளினார் அதனால் அனங்கன் ஆயினான்.

அம்பொன்று அஞ்சும் தங்கும் கண்கள்:-

மன்மதனுடைய கணைகள் ஐந்து மலர்கள். அவை மயக்கம், முதலிய ஐந்து வினைகள் செய்யும். இந்த மலர்க்கணைகள் செய்யும் ஐந்தொழில்களையும் விலைமகளிரது கண்கள் செய்யும். அதனால் அக்கணைகள் தங்குங் கண்கள் என்று கூறினார்.

முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ---

விலைமகளிர் தம்பால் வந்து பழகிய ஆண்கள் பணந்தரச் சிறிது பின்வாங்குவார்களாயின், பொதுவாகவுள்ள நியாய சபையில் சென்று வழக்கினைக் கூறிப் பொருளை வசூலிப்பார்கள்.

முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்றுஇன்புறாதோ ---

மாமதர் மயலால் தடைபட்ட அடியேனுடைய தொண்டினைக் கண்டு, முருகா! உனது திருவுள்ளம் கருணையினால் மகிழ்ந்து இன்பம் அடையவேணும்.

தும்பி பாடக் குனிந்து இலங்குங் கொம்பு ---

வண்டுகள் பாடுவதனால், அப்பாடலின் இனிமைக்காக அசரமாய மரக்கொம்புகளும் உருகி வளைகின்றன. இது இசையின் பெருமையைத் தெரிவிக்கின்றது.

இசைக்குச் சராசரங்கள் அனைத்தும் ஈடுபடும் என்பதை ஆனாயர் சரிதையாலும் தெரிக.

இன்றும் நல்ல வாத்தியங்களில் ஒலியால் பயிர் வளர்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


கருத்துரை

            கொடுங்குன்றத்தில் மேவிய குமாரக் கடவுளே! அடியேனுடைய தொண்டினை ஏற்று அருள்புரியும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...