திருக் கோட்டாறு
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
காரைக்காலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருகோட்டாறு
திருத்தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும்
சாலையில் நெடுங்காடு தாண்டிய பிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு
வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்
இத்திருத்தலம் உள்ளது.
இறைவர்
: ஐராவதீசுவரர்
இறைவியார்
: வண்டமர் பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை
தல
மரம் : பாரிஜாதம்
தீர்த்தம் : வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள்: சம்பந்தர் - 1.
கருந்தடங்கண்ணின்,
2. வேதியன் விண்ணவரேத்த.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு முறை
துர்வாசரை அவமரியாதை செய்தது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம்
ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து
பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு
கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி
காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். துர்வாச
முனிவரின் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று
இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது
திருவிளையாடல் புராண வரலாறு. அவ்வாறு வெள்ளை யானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல
தலங்களுள் திருகோட்டாறு தலமும் ஒன்று என்பர். வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை
இடித்து மழையை ஆறுபோலச் பெய்யச் செய்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர்
பெற்றதென்பர்.
மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரம்.
உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதி. விசாலமான
வெளிச் சுற்று. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன.
பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள்
காணப்படுகின்றன. உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுபக முனிவர், முருகன், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரிய, சந்திரர், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன.
சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின்
உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் மிகச்
சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
மூலவர் சந்நிதியில் முன்னால் தேன்கூடு
உள்ளது. இந்த தேன்கூடு பல்லாண்டுக் காலமாக இருந்து வருகின்றது என்று சொல்கின்றனர்.
இத்தேன் கூட்டைப் பற்றிச் சொல்லப்படும் செவி வழிச் செய்தி பின்வருமாறு.
சுபமகரிஷி என்பவர் தினந்தோறும் வந்து
இப்பெருமானைத் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர்
வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. அதைக் கண்ட சுபமகரிஷி தேனீ
வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார்.
அக்காலந் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச்
செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு
முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்கள். மீண்டும்
தேன்கூடு கட்டப்படுகின்றதாம். இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில்
பின்புறத்தில் உள்ளது.
வள்ளல் பெருமான்தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், தெள் ஆற்றின் நீள் தாறு கொண்டு அரம்பை நின்று
கவின் காட்டும் கோட்டாறு மேவும் குளிர் துறையே" என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் பகல் 11-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 459
மன்னுதிரு
நள்ளாற்று மருந்தைவணங்
கிப்போந்து, வாச நன்னீர்ப்
பொன்னிவளம்
தருநாட்டுப் புறம்பணைசூழ்
திருப்பதிகள் பலவும்
போற்றி,
செந்நெல்வயல்
செங்கமல முகம்மலரும்
திருச்சாத்த மங்கை
மூதூர்
தன்னில்எழுந்து
அருளினார், சைவசிகா
மணியார்மெய்த்
தவத்தோர் சூழ.
பொழிப்புரை : பின், நிலைபெற்ற திருநள்ளாற்றில்
வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடைபெற்றுச்
சென்று, மணமுடைய நல்லநீர்
பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறம்பணை சூழ்ந்த
பல திருப்பதிகளையும் வணங்கி வழிபட்டு, மெய்
அடியார்கள் சூழச் சைவசிகாமணியாரான பிள்ளையார் செந்நெல் வயல்களிலே செந்தாமரை
மலர்கள் மாதர் முகம் என மலர்தற்கு இடமான `திருச்சாத்தமங்கை' என்ற பழம் பதியை அணுகினார்.
புறம்பணைசூழ்
திருப்பதிகள் பிறவும் என்றது, அருகிலிருக்கும் பழம்
பதிகளைக் குறிப்பினும், அவை இவை எனத்
தெரிந்தில. எனினும் திருக்கோட்டாறு எனும் பதி இடைப்படவுள்ளது. அங்கு அருளிய
பதிகங்கள் இரண்டாம்.
1. `கருந்தடங்கண்ணின்' : (தி.2 ப.52) - சீகாமரம்
2. `வேதியன் விண்ணவர்' : (தி.3 ப.12) - காந்தாரபஞ்சமம்.
2.052 திருக்கோட்டாறு பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கருந்த
டங்கண்ணின் மாத ரார்இசை
செய்யக் கார்அதிர்
கின்ற பூம்பொழில்
குருந்த
மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த
எம்பெரு மானை உள்கி
இணையடி தொழுது
ஏத்தும் மாந்தர்கள்
வருந்து
மாறுஅறியார் நெறிசேர்வர் வான்ஊடே.
பொழிப்புரை :கரிய பெரிய கண்களை
உடைய மகளிர் இசை பாடவும், அதற்கேற்ப மேகங்கள்
முழவொலிபோல ஒலிக்கவும், அழகிய பொழிலிலுள்ள
குருந்தம் மாதவி ஆகியவற்றின் மணம் நிறையவும் விளங்கும் கோட்டாற்றில் வீற்றிருந்த
பெருமானை நினைந்து அவருடைய இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள் வருந்தார். விண் வழியாக
வீட்டுநெறியை எய்துவர்.
பாடல்
எண் : 2
நின்று
மேய்ந்து நினைந்து மாகரி
நீரொ டும்மலர் வேண்டி
வான்மழை
குன்றில்
நேர்ந்துகுத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும்
மன்னிய எம்பி ரான்கழல்
ஏத்தி வான்அரசு ஆள
வல்லவர்
பொன்று
மாறுஅறியார் புகழார்ந்த புண்ணியரே.
பொழிப்புரை :பெரியயானை நின்று
மேய்ந்து நினைந்து நீர் மலர் வேண்டி வான்மழை பெறுதற் பொருட்டு மலைபோல எழுந்து, மேகங்களைக்குத்திப் பணிசெய்யும்
கோட்டாற்றுள் என்றும் நிலை பெற்றிருக்கும் எம்பிரான் திருவடிகளை ஏத்தி வானுலகை அரசாளவல்லவர்
அழியார். அவர்புகழ் வாய்ந்த புண்ணியர் ஆவார்.
பாடல்
எண் : 3
விரவி
நாளும் விழா இடைப்பொலி
தொண்டர் வந்து
வியந்து பண்செயக்
குரவம்
ஆரும் நீழல்பொழில்மல்கு கோட்டாற்றில்
அரவ
நீள்சடை யானை உள்கிநின்று
ஆத ரித்துமுன் அன்பு
செய்துஅடி
பரவு
மாறுவல் லார்பழிபற்று அறுப்பாரே.
பொழிப்புரை :நாள்தோறும் நடைபெறும்
விழாக்களில் கலந்து கொண்டு பொலிவு எய்தும் தொண்டர் புகழ்ந்து பாட, குரா மரங்களின் பொழில் நீழலில் அமைந்த
கோட்டாற்றில் விளங்கும் பாம்பு அணிந்த நீண்ட சடையுடையவனை நினைந்து, ஆதரவுடன் அன்பு செய்து பரவுவார், பழியும் பற்றும் நீங்கப் பெறுவர்.
பாடல்
எண் : 4
அம்பின்
நேர்விழி மங்கை மார்பலர்
ஆட கம்பெறு மாட
மாளிகைக்
கொம்பில்
நேர்துகி லின்கொடிஆடு கோட்டாற்றில்
நம்
பனே,நட னே,ந லந்திகழ்
நாதனே, என்று காதல் செய்தவர்
தம்பிந்
நேர்ந்துஅறி யார்தடுமாற் றவல்வினையே.
பொழிப்புரை :அம்புபோன்ற விழியை
உடைய மங்கையர் ஆடுமிடமாகக் கொண்ட மாடமாளிகைகளில் கொம்பிற் கோத்து உயர்த்திய
துகிற்கொடிகள் ஆடும் கோட்டாற்றில் விளங்கும் நம்பனே! நடனம் புரிபவனே! நன்மைகள்
பலவும் வாய்ந்த நாதனே! என்று அன்பு செய்தவர், தமக்குப் பின் தடுமாற்றம் வல்வினைகள்
வருவதை அறியார்.
பாடல்
எண் : 5
பழைய
தம்அடி யார்து திசெயப்
பார் உளோர்களும் விண்
உளோர்தொழக்
குழலும்
மொந்தை விழாவொலி செய்யுங்கோட்டாற்றில்
கழலும்
வண்சிலம் பும்ஒ லிசெயக்
கான் இடைக்கணம் ஏத்த
ஆடிய
அழகன்
என்றுஎழுவார் அணிஆவர் வானவர்க்கே.
பொழிப்புரை :பழமையான தம் அடியவர்
துதிசெய்யவும், மண்ணுளோர், விண்ணுளோர் தொழவும் குழல் மொந்தை
முதலியன விழாஒலி செய்யவும் விளங்கும் கோட்டாற்றில் கழலும் வளமான சிலம்பும்
ஒலிக்கக் கானகத்தே பேய்க்கணம் ஏத்த ஆடிய அழகன் என்று சிவபெருமானை வணங்கப் போதுவார், வானவர்க்கு அணியாவர்.
பாடல்
எண் : 6
பஞ்சின்
மெல்லடி மாதர் ஆடவர்
பத்தர் சித்தர்கள்
பண்பு வைகலும்
கொஞ்சி
யின்மொழியால் தொழின்மல்கு கோட்டாற்றில்
மஞ்ச
னே,மணி யே,ம ணிமிடற்று
அண்ண லே,என உள் நேகிழ்ந்தவர்
துஞ்சு
மாறுஅறியார் பிறவார்இத் தொல்நிலத்தே.
பொழிப்புரை :பஞ்சு போன்ற மெல்லிய
அடிகளை உடைய மாதர்கள், ஆடவர்கள், பத்தர்கள், சித்தர்கள் ஆகியோர் இறைவனுடைய பண்புகளை
நாள்தோறும் இன்மொழியால் தொழுகின்ற கோட்டாற்றில் மைந்தனே! மணியே! மணிமிடற்று அண்ணலே
என்று உள்நெகிழ்ந்து வணங்குவோர் இனி இறத்தல் பிறத்தல் இலராவர்.
பாடல்
எண் : 7
கலவ
மாமயி லாளொர் பங்கனைக்
கண்டு கண்மிசை நீர்நெ
கிழ்த்து,இசை
குலவு
மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு
மாமதி சேர்ச டைஉடை
நின்ம லா, என உன்னு வார்அவர்
உலவு
வானவரின் உயர்வாகுவது உண்மையதே.
பொழிப்புரை :தோகையை உடைய மயில்
போன்றவளாகிய பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு தோத்திரம்
சொல்லுவார் குடிகொண்டுள்ள கோட்டாற்றில், நிலாவொளி
வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என அவனை நினைவார் வானில் உலவுகின்ற
வானவர்களினும் உயர்வாகுவது உண்மை.
பாடல்
எண் : 8
வண்டல்
ஆர்வயல் சாலி ஆலை,வ
ளம்பொ லிந்திட வார்பு
னல்திரை
கொண்ட
லார்கொணர்ந்து அங்குஉலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டு
எலாம்துதி செய்ய நின்ற
தொழில னே,கழ லால் அரக்கனை
மிண்டு
எலாந்தவிர்த்து என்உகந்திட்ட வெற்றிமையே.
பொழிப்புரை :வண்டல் மண் பொருந்திய
நெல்வயல்களும் கரும் பாலைகளும் வளம் பொலிய மிக்க தண்ணீரை மேகங்கள் கொண்டு வந்து
தரும் கோட்டாற்றில் தொண்டர்களெல்லாம் துதிக்க ஐந்தொழில் புரிபவனே! திருவடியால்
இராவணனின் வலிமையைக் கெடுத்துப்பின் அவனை உகந்திட்ட வெற்றிமை யாதோ?
பாடல்
எண் : 9
கருதி
வந்துஅடி யார்தொ ழுதுஎழக்
கண்ண னோடுஅயன் தேட, ஆனையின்
குருதி
மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி
னால்மட மாது நீயும்வி
யப்பொ டும்உயர்
கோயில் மேவிவெள்
எருதுஉகந்
தவனே இரங்காய்உனது இன்னருளே.
பொழிப்புரை :அடியவர் கருதி வந்து
தொழுது எழவும், கண்ணனோடு பிரமன்
தேடவும், ஆனையின் குருதி
மெய்யில் கலக்குமாறு அதன் தோலைப் போர்த்துக் கோட்டாற்றில் உயரிய புகழுரைகளோடு
உமையம்மையும் நீயும் வியப்போடு உயரிய கோயிலில் எழுந்தருளி வெள்ளிய எருதை வாகனமாக
உகந்த பெருமானே! உனது இனிய அருளை வழங்க இரங்குவாயாக.
பாடல்
எண் : 10
உடையி
லாதுஉழல் கின்ற குண்டரும்
ஊண ரும்தவத் தாய
சாக்கியர்
கொடை
இலாமனத்தார், குறையாருங் கோட்டாற்றில்
படையில்
ஆர்மழு ஏந்தி ஆடிய
பண்ப னே,இவர் என்கொ லோநுனை
அடைகி
லாதவண்ணம் அருளாய்உன் அடியவர்க்கே.
பொழிப்புரை :உடை உடுத்தாது
திரியும் சமணரும், ஊண் அருந்தாத
தவத்தைப் புரியும் புத்தரும் உலோபியின் மனம் போன்றவர். அவர்கள் கூறும் குறை
உரைபொருந்தக் கோட்டாற்றில் படைக்கலமாக மழுவை ஏந்தி ஆடிய பண்பனே! சமண பௌத்தர்கள்
உன்னை அடையாமைக்குரிய காரணம் யாது?
அதனை
அடியவர்க்குக் கூறியருளுக.
பாடல்
எண் : 11
கால
னைக்கழ லால் உதைத்துஒரு
காம னைக்கன லாகச்
சீறிமெய்
கோல
வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூல
னை,முடிவு ஒன்று இலாதஎம்
முத்த னை, பயில் பந்தன் சொல்லிய
மாலை
பத்தும்வல்லார்க்கு எளிதுஆகும் வானகமே.
பொழிப்புரை :காலனைக் கழலணிந்த
காலால் உதைத்தும், காமனை நெற்றிக்
கண்ணால் கனலாகுமாறு சீறியும், மேனியின் ஒரு
பாதியில் அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு கூடிக்குடிகொண்டுள்ள கோட்டாற்றில், எல்லாப் பொருள்கட்கும் மூலகாரணனை
முடிவில்லாத முத்தனை ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய இத்தமிழ் மாலைபத்தையும்
வல்லவர்க்கு வானகம் எளிதாகும்.
திருச்சிற்றம்பலம்
3.012 திருக்கோட்டாறு பண் -
காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வேதியன், விண்ணவர் ஏத்தநின்
றான்,விளங் கும்மறை
ஓதிய
ஒண்பொருள் ஆகிநின் றான்,ஒளி ஆர்கிளி
கோதிய
தண்பொழில் சூழ்ந்துஅழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை
யேநினைந்து ஏத்தவல் லார்க்குஅல்லல் இல்லையே.
பொழிப்புரை :வேதங்களை அருளிச்
செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான். அவ்வேதங்களால் போற்றப்படும்
உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான். அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான
சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள
ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
பாடல்
எண் : 2
ஏலம
லர்க்குழல் மங்கைநல் லாள்இம வான்மகள்
பால்அம
ருந்திரு மேனிஎங் கள்பர மேட்டியும்,
கோலம
லர்ப்பொழில் சூழ்ந்துஎழில் ஆர்திருக் கோட்டாற்றுள்
ஆலநீ
ழல்கீழ் இருந்துஅறம் சொன்ன அழகனே.
பொழிப்புரை :மணம் கமழும்
கூந்தலையுடைய மங்கை நல்லாளான, இமவான் மகளான
உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான், வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த
அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து
சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான்.
பாடல்
எண் : 3
இலைமல்கு
சூலம்ஒன்று ஏந்தினா னும்,இமை யோர்தொழ
மலைமல்கு
மங்கைஓர் பங்கன் ஆயம்மணி கண்டனும்,
குலைமல்கு
தண்பொழில் சூழ்ந்துஅழ கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு
வார்சடை ஏற்றுஉகந்த அழகன் அன்றே.
பொழிப்புரை :சிவபெருமான் இலைபோன்ற
சூலப்படையைக் கையில் ஏந்தியவன். விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை
ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன். கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன், காய்களும், கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த
சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
பாடல்
எண் : 4
ஊன்அம
ரும்உட லுள்இருந் தவ்வுமை பங்கனும்,
வான்அம
ரும்மதி சென்னிவைத் தமறை ஓதியும்,
தேன்அம
ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
தான்அம
ரும்விடை யானும்எங் கள்தலை வன்அன்றே.
பொழிப்புரை :இறைவன் உடம்பினை
இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் .
வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன் . வேதங்களை அருளிச் செய்தவன் .
இடபத்தை வாகனமாக உடையவன் . அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த
திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான்
.
பாடல்
எண் : 5
வம்புஅல
ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும்,
செம்பவ
ளத்திரு மேனிவெண் நீறுஅணி செல்வனும்,
கொம்புஅம
ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பன்
எனப்பணி வார்க்குஅருள் செய்எங்கள் நாதனே.
பொழிப்புரை :சிவபெருமான் நறுமணம்
கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும்
வலிமையுடையவன் . செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள
செல்வன் . அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன் , கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள்
கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு
அருள்புரிபவன் . அவனே எங்கள் தலைவன் .
பாடல்
எண் : 6
பந்துஅம
ரும்விரன் மங்கைநல் லாள்ஒரு பாகமா
வெந்துஅம
ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்,மிகும்
கொந்துஅம
ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண
னைநினைந்து ஏத்தவல் லார்க்குஇல்லை அல்லலே.
பொழிப்புரை :சிவபெருமான்
பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்டவன் . வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன் . மிகுதியாகக்
கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந் தருள்கின்ற , அனைத்துயிர்களிடத்தும்
செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை .
பாடல்
எண் : 7
துண்டுஅம
ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்,
வண்டுஅம
ருங்குழல் மங்கைநல் லாள்ஒரு பங்கனும்,
தெண்திரை
நீர்வயல் சூழ்ந்துஅழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமும்
எண்திசை ஆகிநின்ற அழகன் அன்றே.
பொழிப்புரை :துண்டித்த பிறை போன்ற
சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான் . நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற
சிவந்த நிறமுடையவன் . பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய
மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன். கடலும், நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த
நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்
அண்டங்களும், எட்டுத்திசைகளுமாகி
நின்ற அழகன் அல்லனோ ?
பாடல்
எண் : 8
இரவு அமரும் நிறம் பெற்று உடை ய இலங்கைக்கு இறை
கரவு அமரக் கயிலை எடுத்தான் வலி செற்றவன்,
குரவு அமரும் மலர்ச் சோலை சூழ்ந்த திருக் கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான், அடியார்க்கு அருள்
செய்யுமே.
பொழிப்புரை :இரவு போன்ற
கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன் வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த
திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான் .
பாடல்
எண் : 9
ஓங்கிய
நாரணன் நான்முக னும்உண ராவகை
நீங்கிய
தீ உரு ஆகி நின்ற நிமலன், நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழிலார் திருக் கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே.
பொழிப்புரை :செருக்குடைய
திருமாலும், பிரமனும் உணரா வண்ணம்
அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்.
நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான். தேவர்கட்கெல்லாம் தேவனாவான்.
பாடல்
எண் : 10
கடுக்கொடுத்த
துவர் ஆடையர், காட்சியில் லாததோர்
தடுக்குஇடுக்
கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்அருள்
கொடுக்ககில்லாக் குழகன், அமரும் திருக்
கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.
பொழிப்புரை :சாயம் பற்றும்
பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும், சிறுபாயைச் சுமந்து திரியும்
சமணர்களுக்கும் தன்னை நாடாததால்,
அருள்
புரியமாட்டாத அழகன் சிவபெருமான். திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்
தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடு கின்றவர்களும், தேவர்கட்குத் தலைவராவர்.
பாடல்
எண் : 11
கொடிஉயர்
மால்விடை ஊர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
அடிகழல்
ஆர்க்கநின்று ஆடவல்ல அரு ளாளனைக்
கடிகம
ழும்பொழில் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
படிஇவை
பாடிநின்று ஆடவல் லார்க்குஇல்லை பாவமே.
பொழிப்புரை :இடபத்தைக்
கொடியாகவும், வாகனமாகவும் கொண்டு
திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான்
திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க,
திருநடனம்
புரியும் அருளாளன். அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளை யுடைய சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும்
நீங்கும் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment