திருக் கருவிலிக் கொட்டிட்டை




திருக் கருவிலிக்கொட்டிட்டை
(கருவேலி)

சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மக்கள் வழக்கில் "கருவேலி" என்று வழங்கப்படுகின்றது.

         கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் ஒரு கி.மீ. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

         கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மீ. வந்தும் கருவேலியை அடையலாம்.

         திருவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும், வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமும் உள்ளது.

இறைவர்               : சற்குண நாதேசுவரர்.

இறைவியார்           : சர்வாங்க நாயகி.

தீர்த்தம்                 : எம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : அப்பர் - மட்டிட்டகுழ லார்சுழ.

     ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேசிவரர் என்ற பெயருடன் இலிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

         அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

         இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இந்நிமிடம் சிந்தும் கரு வலியின் திண்மை. என்று தேர்ந்தவர்கள் முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சி,
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : பழையாறை வடதளியில் இருந்து, பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.

 
5. 069    திருக்கருவிலிக் கொட்டிட்டை  திருக்குறுந்தொகை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மட்டஇட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டுஇட் டுமயங் கிப்பரி யாது,நீர்
கட்டுஇட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டைஉறை வான்கழல் கூடுமே.

         பொழிப்புரை : தேனையுடைய மலர்களை வைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக .


பாடல் எண் : 2
ஞாலம் மல்கு மனிதர்காள், நாள்தொறும்
ஏல மாமல ரோடுஇலை கொண்டு,நீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழில் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : உலகில் நிறைந்த மனிதர்களே ! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர் உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 3
பங்கம் ஆயின பேசப் பறைந்து,நீர்
மங்கு மாநினை யாதே, மலர்கொடு
கங்கை சேர்சடை யான்தன் கருவிலிக்
கொங்கு வார்பொழில் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : குற்றமுடையவற்றைப் பேசுதலால் , நீர் மங்கு மாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு , கங்கை சேர்ந்த சடை யானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 4
வாடி நீர்வருந் தாதே, மனிதர்காள்,
வேட னாய்விச யற்குஅருள் செய்த,வெண்
காட னார்உறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழில் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : மனிதர்களே ! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 5
உய்யு மாறுஇது கேள்மின் உலகத்தீர்,
பைகொள் பாம்புஅரை யான்,படை ஆர்மழுக்
கையி னான்உறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : உலகத்தில் உள்ளவர்களே ! இதுவே உய்யும்வழி ; கேட்பீராக ; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும் , மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற , கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.


பாடல் எண் : 6
ஆற்ற வும்அவ லத்துஅழுந் தாது,நீர்
தோற்றும் தீயொடு நீர்நிலம் தூவெளி
காற்றும் ஆகிநின் றான்தன் கருவிலிக்
கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : நீர் , மிகவும் துன்பத்தில் அழுந்தாமல் , தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 7
நில்லா வாழ்வு நிலைபெறும் என்றுஎண்ணி,
பொல்லா ஆறு செயப்புரி யாது, நீர்
கல் ஆரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல் ஏறுஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது , நீர் , கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 8
பிணித்த நோய்ப்பிற விப்பிரிவு எய்துமாறு
உணர்த்த லாம்இது கேள்மின், உருத்திர
கணத்தி னார்தொழுது ஏத்துங் கருவிலிக்
குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக ! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும் , எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 9
நம்பு வீர்,இது கேண்மின்கள், நாள்தொறும்
எம்பி ரான்என்று இமையவ ரேத்தும்
ஏகம்ப னார்உறை கின்ற கருவிலிக்
கொம்பு அனார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : மனிதர்களே ! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக ; நாள்தோறும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும் , பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .


பாடல் எண் : 10
பார் உளீர், இது கேள்மின், பருவரை
பேரு மாறுஎடுத் தானை அடர்த்தவன்,
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

         பொழிப்புரை : உலகிலுள்ளவர்களே ! இது கேட்பீராக ! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...