திருச்செங்கோடு - 0396. மந்தக் கடைக்கண்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மந்தக் கடைக்கண் (திருச்செங்கோடு)

முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்.

தந்தத் தனத்தந் தாத்தன
     தந்தத் தனத்தந் தாத்தன
         தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான


மந்தக் கடைக்கண் காட்டுவர்
     கந்தக் குழற்பின் காட்டுவர்
         மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக

வஞ்சத் திரக்கங் காட்டுவர்
     நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
         வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச்

சந்தப் பொருப்புங் காட்டுவர்
     உந்திச் சுழிப்புங் காட்டுவர்
         சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே

சண்டைப் பிணக்குங் காட்டுவர்
     பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
         தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ

பந்தித் தெருக்கந் தோட்டினை
     யிந்துச் சடைக்கண் சூட்டுமை
         பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா

பைம்பொற் பதக்கம் பூட்டிய
     அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
         பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா

கொந்திற் புனத்தின் பாட்டிய
     லந்தக் குறப்பெண் டாட்டொடு
         கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே

குன்றிற் கடப்பந் தோட்டலர்
     மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
         கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மந்தக் கடைக்கண் காட்டுவர்,
     கந்தக் குழல்பின் காட்டுவர்,
         மஞ்சள் பிணிப்பொன் காட்டுவர், ...... அநுராக

வஞ்சத்து இரக்கம் காட்டுவர்,
     நெஞ்சில் பொருத்தம் காட்டுவர்,
         வண்பல் திருப்பும் காட்டுவர், ...... தனபாரச்

சந்தப் பொருப்பும் காட்டுவர்,
     உந்திச் சுழிப்பும் காட்டுவர்,
         சங்கக் கழுத்தும் காட்டுவர், ...... விரகாலே

சண்டைப் பிணக்கும் காட்டுவர்,
     பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர்,
         தங்கட்கு இரக்கம் காட்டுவது ...... ஒழிவேனோ?

பந்தித்த எருக்கம் தோட்டினை
     இந்துச் சடைக்கண் சூட்டு உமை
         பங்கில் தகப்பன் தாள்தொழு ...... குருநாதா!

பைம்பொன் பதக்கம் பூட்டிய
     அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர்
         பங்கப் படச் சென்று ஓட்டிய ...... வயலூரா!

கொந்தில் புனத்தின் பாட்டுஇயல்
     அந்தக் குறப் பெண்டு ஆட்டொடு
         கும்பிட்டிடக் கொண்டாட்டமொடு ...... அணைவோனே!

குன்றில் கடப்பம் தோட்டு அலர்
     மன்றல் ப்ரசித்தம் கோட்டிய
         கொங்கில் திருச்செங்கோட்டு உறை ...... பெருமாளே.


 பதவுரை


     பந்தித்த --- கட்டப்பட்ட,

     எருக்கம் தோட்டினை --- எருக்கம் பூ மாலையை,

     இந்து சடை கண் சூடு --- சந்திரனுடன் கூடிய சடையில் சூடுபவரும்,

     உமை பங்கில் --- உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவருமாகிய,

     தகப்பன் தாள் தொழு --- தந்தையாருடைய திருவடியைத் தொழுகின்ற,

      குருநாதா --- குருநாதரே!

     பை பொன் பதக்கம் பூட்டிய --- பசுமையாகிய பொன்னாலாகிய பதக்கத்தை அணிவித்த,

     அன்பர்க்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப் பட --- பக்தனை எதிர்த்து வந்த பகைவர்கள் தோல்வி அடையும்படி,

     சென்று ஒட்டி --- அங்கு சென்று அவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்த,

     வயலூரா --- வயலூர் வள்ளலே!

     கொந்தில் புனத்தின் பாட்டு இயல் --- பூங்கோத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பாடிக்கொண்டு இருந்த,

     அந்த குற பெண்டு ஆட்டொடு --- அந்தக் குறமகளுடன் விளையாடி,

     கும்பிட்டிட கொண்டாட்டமொடு --- கும்பிடுவதற்கு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு,

     அணைவோனே --- தழுவியவரே!

     குன்றில் கடப்பம் தோட்டு அலர் --- மலையில் கடப்ப மலர் மலரும்,

     மன்றல் ப்ரசித்தம் கோட்டிய --- வாசனையால் வரும் புகழைக் கொண்ட,

     கொங்கில் திருச்செங்கோடு உறை --- கொங்கு நாட்டில்

திருச்செங்கோட்டில் வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     மந்த கடைக் கண் காட்டுவர் --- மெல்ல கடைக் கண்ணைக் காட்டுவர்,

     கந்த குழல் பின் காட்டுவர் --- வாசனை பொருந்திய கூந்தலை பின்பு காட்டுவர்,

     மஞ்சள் பிணி பொன் காட்டுவர் --- மஞ்சள் அணிந்த அழகைக் காட்டுவர்,

     அநுராக வஞ்சத்து இரக்கம் காட்டுவர் --- காமப்பற்று உள்ளவர் போல் வஞ்சனை செய்து இரக்கத்தைக் காட்டுவர்,

     நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் --- உள்ளத்தில் பொருத்தம் இருப்பதாகக் காட்டுவர்,

     வண் பல் திருப்பும் காட்டுவர் --- வளப்பமான பற்களின் பாகங்களை காட்டுவர்,

     தனபார சந்த பொருப்பும் காட்டுவர் --- தனமான பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர்,

     உந்தி சுழிப்பும் காட்டுவர் --- உந்தியில் சுழியையும் காட்டுவர்,

     சங்குக் கழுத்தும் காட்டுவர் --- சங்குபோன்ற கழுத்தையுங் காட்டுவர்,

     விரகாலே சண்டை பிணக்கும் காட்டுவர் --- தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர்,

     பண்டு இட்டம் ஒடுக்கம் காட்டுவர் --- பழமையான நேசம் ஒடுங்குதலையும் காட்டுவர்,

     தங்கட்டு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ --- அத்தகைய பொது மகளிருக்கு தயை காட்டுவதை அடியேன் விட மாட்டேனோ?


பொழிப்புரை

     கட்டப்பட்ட எருக்க மலர்மாலையை, சந்திரனையணிந்த சடையிலே சூடுபவரும், உமையொருபாகரும் ஆகிய தந்தையின் திருவடியைத் தொழுகின்ற குருநாதரே!

     பசும் பொன் பதக்கத்தைச் சமர்ப்பித்த அன்பனை எதிர்த்து வந்த பகைவர்கள் தோல்வியுற்றுப் புறங்காட்டி யோடுமாறு செய்த வயலூர் வள்ளலே!

     பூங்கொத்துக்களுடன் கூடிய தினைப்புனத்தில் பாடிக்கொண்டிருந்த அந்தக் குறமாதை விளையாட்டாகக் கும்பிட்டு மகிழ்ச்சியுடன் மருவியவரே!

     மலையில் கடப்ப மலரின் வாசனையின் புகழ்கொண்ட, கொங்கு நாட்டில் திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         மெல்லக் கடைக்கண் காட்டுவர். வசானையுடைய கூந்தலைப்பின்பு காட்டுவர். மஞ்சள் அணிந்த அழகைக் காட்டுவர். வளமையான புன்சிரிப்பைக் காட்டுவர், மலைப்போன்ற அழகிய பெரிய தனங்களைக் காட்டுவர், சுழிந்த தொப்புளைக் காட்டுவர், சங்கம் போன்ற கழுத்தைக் காட்டுவர், தந்திரமாகச் சண்டையிட்டுப் பிணங்குவதைக் காட்டுவர், முன் இருந்த விருப்பத்தைக் குறைத்துக் காட்டுவர். இத்தகைய பொது மாதரிடம் தயை காட்டுவதை அடியேன் விடமாட்டேனோ?


விரிவுரை

மந்தக் கடைக்கண் காட்டுவர் ---

மந்தம்-தாமதம். பொதுமாதர் மெதுவாகத் தமது கடைக்கண் பார்வையால் இளைஞரை ஈர்த்து வசப்படுத்துவார்கள்.

வண்பல் திருப்புங் காட்டுவர் ---

வண் பல் திருப்பு. வளப்பமான பல்லின் பல திருப்பங்களைக் காட்டுவர்.

வண்பற்று இருப்பு. வளமையான ஆசையின் உறைவிடத்தைக் காட்டுவர் எனினும் அமையும்.

தகப்பன் தாள் தொழு குருநாதா ---

தகப்பனாருடைய தாளைத் தொழுகின்ற குருநாதா! தகப்பன் உமது தாளைத் தொழுகின்ற குருநாதா! என்று இரு பொருள்கள் பயக்க நின்ற அருமைப்பாடுடையது.

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்படச் சென்று ஓட்டிய வயலூரா ---

நல்லியக்கோடன் என்ற அரசன் முருக பக்தன். பகைவர்கள் அவனுடைய நகரை வளைத்துக் கொண்டார்கள். அவன் அஞ்சி முருகனை வழிபட்டான். முருகவேள் அவன் கனவில் தோன்றி ஒரு கேணியில் உள்ளதாமரை மலர்களைப் பறித்துப் பகைவர்கள் மீது ஏவுமாறு பணிந்தருளினார். அவ்வாறே நல்லியக்கோடன் கேணியில் மலர்ந்துள்ள தாமரை மலர்களைப் பறித்து எறிந்தான். அவை வேல்களைாகச் சென்று பகைவரை ஓட்டின. வேல் எறிந்து வென்ற ஊர் “வேலூர்” என்று பேர் பெற்றது. இவன் வரலாறு சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூலில் வருகின்றது.

திறல்வேல் நுதியில் பூத்தகேணி
   விறல்வேல் வென்றி வேலூர்”

வெறிவண்டு இசைபாடும்புகழ் வேலூரினை ஆளும்,
பொறிதங்கிய புகழான் நலியக்கோடன் உறங்கும்
நெறிவந்து "அலர்வேல் ஏவுதி நலியும் பகை" என்ற
மறியின்சுதை தலைவா! எனை மறவேல்,எனை மறவேல். ---  பாம்பன் சுவாமிகள்.

இம்மன்னன் பைம் பொன்பதக்கம் சூட்டி முருகனை வழி பட்டிருக்க வேண்டும். அல்லது வேறு முருகனடியார் வரலாற்றைக் குறிக்கலாம். எத்தனையோ இனிய வரலாறுகள் விளக்கம் இன்றி மறைந்துவிட்டன.


கருத்துரை

         திருச்செங்கோட்டில் விளங்கும் தேவ தேவா! பொது மாதரின் மையல் அற அருள்செய்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...