திரு வீழிமிழலை
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில்
பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள திருத்தலம்.
திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து
பேருந்து வசதிகள் உள்ளன.
வீழிச் செடிகள்
நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.
இறைவர்
: நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
இறைவியார் : சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.
தல
மரம் : வீழிச் செடி / விழுதி செடி.
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள்
: 1. சம்பந்தர் - 1. சடையார்புனல்
2.
தடநில
வியமலை,
3.
அரையார்
விரிகோவண,
4.
இரும்பொன்
மலைவில்லா,
5.
வாசி
தீரவே, காசு,
6.
அலர்மகள்
மலிதர,
7.
ஏரிசையும்
வடவாலின்,
8.
கேள்வியர்
நாடொறும்,
9.
சீர்மருவு
தேசினொடு,
10.
மட்டொளி
விரிதரு,
11.
வெண்மதி
தவழ்மதில்,
12.
வேலி
னேர்தரு கண்ணி,
13.
துன்று
கொன்றைநஞ்,
14.
புள்ளித்தோ
லாடை.
15.
மைம்மரு
பூங்குழல்
2. அப்பர் - 1. பூதத்தின் படையர்,
2.
வான்சொட்டச்
சொட்ட,
3.
கரைந்து
கைதொழு,
4.
என்பொ
னேயிமையோர்,
5.
போரானை
ஈருரிவைப்,
6.
கயிலாய
மலையுள்ளார்,
7.
கண்ணவன்காண்
கண்ணொளி,
8.
மானேறு
கரமுடைய,
3. சுந்தரர் - 1. நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்.
4. சேந்தனார் - ஏகநாயகனை.
இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை
செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப்
பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின் பாதத்தில்
விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளம் உள்ளது.
இத்தல விநாயகர் -
படிக்காசு விநாயகராவார்.
இத்தலத்திற்கு
பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.
இத்தலம் 24 திருமுறைப் பதிகங்களையுடையது. திருமுறை
மட்டுமன்றி, சேந்தனாரின்
திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின்
திருப்புகழும் பெற்ற சிறப்புடையத் தலமாகும்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி
அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய
பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும்,
மேற்கிலும்
உள்ளன.
ஞானசம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள்
வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (ஞானசம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்)
உள்ளன.
இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில்
இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.
இத்தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்த்திகளான ஸ்ரீ
மறைஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது - உள்ளது.
இக்கோயிலிலுள்ள
வெளவால் நத்து (வாவல் நெற்றி) மண்டபம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும்.
கோயில் திருப்பணிகள் செய்யும் தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள்
நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில இம் மண்டபமும் ஒன்றாகும்.
வெளவால் நத்தி
மண்டபம் - கல்யாண மண்டபம் உள்ளது;
அழகான
அமைப்பு - நடுவில் தூணில்லாமல்,
சுண்ணாம்பு
கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு - பார்ப்பவரை வியக்கச் செய்யும்.
இக்கோயில் மாடக்
கோயில் அமைப்புடைது.
சுவாமி உள்ள இடம்
விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய
இவ்விமானம் திருமால் கொணர்ந்தது,
என்பதனை
"தன்றவம் பெரிய சலந்தரனுடலம் ..." என்ற சம்பந்தரின் வாக்கிலிருந்தும்
அறியலாம்.
இறைவன் உமையை
மணந்துக் கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும்
தூணும், வெளியில்
மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணூம் உள்ளன.
இத்தலத்தில் தான் மிழலைக் குறும்பர்
என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார்.
ஞானசம்பந்தரும், அப்பரும் படிக்காசுப் பெற்று அவற்றைக்
கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை
என வழங்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர், அம்பாள் - படியளந்த நாயகி.
உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள்
படியைப் பிடித்தக் கையோடும் காட்சித் தருகின்றனர். தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்திற்கும்
ஒவ்வொன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து
இருக்கவுள்ளது பலாமரமாகும்.
இத்திருக்கோயிலைச்
சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "முன் அரசும் காழி மிழலையரும் கண்டு தொழக் காசு அளித்த
வீழிமிழலை விராட்டு உருவே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 538
பாம்பு
ரத்துஉறை பரமரைப்
பணிந்துநல் பதிகஇன்
இசைபாடி,
வாம்பு
னல்சடை முடியினார்
மகிழ்விடம்
மற்றும்உள் ளனபோற்றி,
காம்பி
னில்திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனிஅம்
பணைநீங்கித்
தேம்பொ
ழில்திரு வீழிநன்
மிழலையின்
மருங்குஉறச் செல்கின்றார்.
பொழிப்புரை : பிள்ளையார்
திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய
திருப்பதிகத்தைப் பாடியருளி, தாவும் அலைகளையுடைய
கங்கை ஆற்றைச் சூடிய முடியையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பிற பதிகளையும்
போற்றி, மூங்கில் போல்
விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து, தேனையுடைய சோலைகள் சூழ்ந்த
திருவீழிமிழலையின் அருகே செல்கின்றவராகி,
பெ.
பு. பாடல் எண் : 539
அப்பொழுதின்
ஆண்ட அரசை எதிர்கொண்ட
மெய்ப்பெருமை
அந்தணர்கள், வெங்குருவாழ்
வேந்தனார்
பிற்படவந்து
எய்தும் பெரும்பேறு கேட்டு உவப்பார்,
எப்பரிசி
னால்வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார்.
பொழிப்புரை : அவ்வாறு பிள்ளையார்
செல்லும் பொழுது முன் வந்த திருநாவுக்கரசரை எதிர்கொண்ட வாய்மையில் மிக்க பெருமை
உடைய அந்தணர்கள், சீகாழித் தலைவர்
பின்னர் வந்து சேர இருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ந்து, வரவேற்றற்குரிய எல்லா வகையாலும்
குறைவின்றி ஒருங்கு கூடிவந்து அங்கு எதிர் கொள்வார்களாய்,
பெ.
பு. பாடல் எண் : 540
நிறைகுடம்
தூபம் தீபம் நீடநிரைத்து ஏந்தி
நறைமலர்ப்பொற்
சுண்ணம் நறும்பொரியும் தூவி
மறைஒலிபோய்
வான்அளப்ப மாமுரசம் ஆர்ப்ப
இறைவர்திரு
மைந்தர்தமை எதிர்கொள்வர வேற்றார்.
பொழிப்புரை : நிறைகுடம், நறுமணப்புகை, ஒளிவிளக்கு என்ற இவற்றைத் தொடர்ந்து
வரிசை பெற ஏந்திய வண்ணம், தேன் பொருந்திய புதிய
மலர்களையும் பொன்சுண்ணத்தையும் மணமுடைய பொரிகளையும் தூவி, மறையின் ஒலிமிகுந்த வானத்தில் நிறையவும், பெரிய முரசுகள் ஒலிக்கவும், இவ்வாறாக இறைவரின் மகனாரான பிள்ளையாரை
எதிர் கொள்ளும் வகையால் வரவேற்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 541
வந்துதிரு
வீழி மிழலை மறைவல்ல
அந்தணர்கள்
போற்றிஇசைப்பத் தாமும் மணிமுத்தின்
சந்தமணிச்
சிவிகைநின்று இழிந்து தாழ்ந்துஅருளி
உய்ந்த
மறையோ ருடன்அணைந்து அங்கு உள்புகுவார்.
பொழிப்புரை : திருவீழிமிழலை என்ற
பதியில் உள்ள மறைகளில் வல்ல அந்தணர்கள் வந்து போற்ற, பிள்ளையார் தாமும் மணிகளுள் சிறந்த
முத்துகளால் ஆன புகழத்தக்க அழகிய சிவிகையினின்றும் இறங்கி, வணங்கி, தம் வருகையால் உய்வு பெற்ற
அந்தணர்களுடனே சேர்ந்து அந்நகரத்துள் புகுபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 542
அப்போது
"அரைஆர் விரிகோ வணஆடை"
ஒப்பு
ஓத அரும்பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப்போதப்
போதுஅமர்ந்தார் தம்கோயில் மேவினார்
கைப்போது
சென்னியின்மேல் கொண்டு கவுணியனார்.
பொழிப்புரை : அப்போது, `அரையார் விரிகோவண ஆடை\' எனத் தொடங்கும் ஒப்புக் கூற இயலாத
திருப்பதிகத்தில், ஓங்கும் இசையைப்
பாடியருளி, கைம்மலர்களைத்
தலைமீது குவித்துக் கொண்டு, உண்மையான ஞானத்தால்
வழிபடப் பெறும் தத்துவம் முப்பத்தாறாலும் அமைந்த இதயதாமரையில் விரும்பி
வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலுள் சென்றார்.
`அரையார் விரிகோவணம்' (தி.1 ப.35) எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப்
பண்ணிலமைந்ததாகும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
1.035 திருவீழிமிழலை பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அரைஆர்
விரிகோ வணஆடை
நரைஆர்
விடையூர்தி நயந்தான்
விரையார்
பொழில்வீ ழிம்மிழலை
உரையால்
உணர்வார் உயர்வாரே.
பொழிப்புரை :இடையிற் கட்டிய
விரிந்த கோவண ஆடையையும், வெண்மை நிறம்
பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும், மணம் பொருந்திய பொழில்களால்
சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.
பாடல்
எண் : 2
புனைதல்
புரிபுன் சடைதன்மேல்
கனைதல்
ஒருகங் கைகரந்தான்
வினையில்
லவர்வீ ழிம்மிழலை
நினைவில்
லவர்நெஞ் சமும்நெஞ்சே.
பொழிப்புரை :மலரால்
அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற
கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும்
திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?
பாடல்
எண் : 3
அழவல்
லவர்ஆ டியும்பாடி
எழவல்
லவர்எந் தைஅடிமேல்
விழவல்
லவர்வீ ழிம்மிழலை
தொழவல்
லவர்நல் லவர்தொண்டே.
பொழிப்புரை :அழவல்லவரும், ஆடியும் பாடியும் எழவல்லவரும்
எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள
திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.
பாடல்
எண் : 4
உரவம்
புரிபுன் சடைதன்மேல்
அரவம்
அரையார்த்த அழகன்
விரவும்
பொழில்வீ ழிம்மிழலை
பரவும்
அடியார் அடியாரே.
பொழிப்புரை :வலிமையை
வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும், பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள
அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், பொழில்கள்
விரவிச்சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.
பாடல்
எண் : 5
கரிதா
கியநஞ்சு அணிகண்டன்
வரிதா
கியவண்டு அறைகொன்றை
விரிதார்
பொழில்வீ ழிம்மிழலை
உரிதா
நினைவார் உயர்வாரே.
பொழிப்புரை :கரியதாகிய நஞ்சினை
உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும், வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும்
கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய
திருவீழிமிழலையைத் தமக்கு உரியதலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.
பாடல்
எண் : 6
சடையார்
பிறையான் சரிபூதப்
படையான்
கொடிமே லதொர்பைங்கண்
விடையான்
உறைவீ ழிம்மிழலை
அடைவார்
அடியா ரவர்தாமே.
பொழிப்புரை :சடைமிசைச்சூடிய
பிறைமதியை உடையவனும், இயங்கும் பூதப்படைகளை
உடையவனும், கொடிமேல் பசிய கண்களை
உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை
அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ அசைநிலை.
பாடல்
எண் : 7
செறிஆர்
கழலும் சிலம்புஆர்க்க
நெறிஆர்
குழலா ளொடுநின்றான்
வெறிஆர்
பொழில்வீ ழிம்மிழலை
அறிவார்
அவலம் அறியாரே.
பொழிப்புரை :கால்களிற் செறிந்த
கழல், சிலம்பு ஆகிய அணிகள்
ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான்
எழுந்தருளியதும் மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்றதுமான திருவீழிமிழலையைத்
தியானிப்பவர் அவலம் அறியார்.
பாடல்
எண் : 8
உளையா
வலிஒல்க அரக்கன்
வளையா
விரல்ஊன் றியமைந்தன்
விளைஆர்
வயல்வீ ழிம்மிழலை
அளையா
வருவார் அடியாரே.
பொழிப்புரை :மிகவருந்திக் கயிலை மலையைப்
பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த
சிவபிரான் எழுந்தருளியதும், விளைவு மிகுந்த
வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.
பாடல்
எண் : 9
மருள்செய்து
இருவர் மயலாக
அருள்செய்
தவன், ஆர்அழலாகி
வெருள்செய்
தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய்
தவர்தீ வினைதேய்வே.
பொழிப்புரை :திருமால் பிரமன் ஆகிய
இருவரும் அஞ்ஞானத் தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய அழலுருவாய் வெளிப்பட்டு நின்று
வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச்
சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.
பாடல்
எண் : 10
துளங்கும்
நெறியார் அவர்தொன்மை
வளங்கொள்
ளன்மின்,புல் அமண்தேரை
விளங்கும்
பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள்
பவர்தம் வினைஓய்வே.
பொழிப்புரை :தடுமாற்றமுறும்
கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச்
சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின்
வினைகள் ஓய்தலுறும்.
பாடல்
எண் : 11
நளிர்கா
ழியுள்ஞா னசம்பந்தன்
குளிர்ஆர்
சடையான் அடிகூற
மிளிர்ஆர்
பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா
டல்வல்லார்க்கு இலைகேடே.
பொழிப்புரை :குளிர்ந்த
காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய
திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலைப்
பெருமான் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 543
நாவின்
தனிமன்னர் தாமும் உடன்நண்ண
மேவிய, விண்இழிந்த கோயில்
வலங்கொள்வார்,
பூஇயலும்
உந்தியான் போற்றப் புவிக்கு இழிந்த
தேஇயலும்
மெய்கண்டு சிந்தைவியப்பு எய்தினார்.
பொழிப்புரை : நாவால் ஒப்பற்ற
அரசரான திருநாவுக்கரசர் தம்முடன் கூடியிருக்க, நான்முகன் தோன்றுதற்கிடனாய கொப்பூழ்த்
தாமரையை உடைய திருமால் வணங்கி வழிபடும் பொருட்டு, விண்ணுலகத்தினின்றும் இம்மண்ணுலகத்தில்
இறங்கிய தெய்வ வடிவாய்த் திகழும் அப்பெருமானைக் கண்டு, உள்ளத்தில் பெருவியப்பை அடைந்தார்
ஆளுடைய பிள்ளையார்.
பெ.
பு. பாடல் எண் : 544
வலம்கொண்டு
புக்குஎதிரே வந்து, வரநதியின்
சலம்கொண்ட
வேணித் தனிமுதலைத் தாழ்ந்து,
நிலம்கொண்ட
மேனியராய், நீடுபெருங் காதல்
புலம்கொண்ட
சிந்தையினால், பொங்கிஇசை
மீப்பொழிந்தார்.
பொழிப்புரை : அப்பிள்ளையார், வலமாக வந்து கோயிலுக்குள்ளே புகுந்து, திருமுன்பு சென்று, வானின்றிழிந்த கங்கை நீரைத் தாங்கிய
சடையையுடைய ஒப்பில்லாத முழுமுதலான இறைவரைத் திருமேனி முழுதும் நிலத்திலே பொருந்த
விழுந்து வணங்கிப் பெருகிய அன்பு வெள்ளமானது மெய்ம்முழுதும் வழிவதைப் போன்று
இசையால் பொழிவார் ஆனார்.
பெ.
பு. பாடல் எண் : 545
போற்றிச்
"சடைஆர் புனல் உடையான்" என்று எடுத்துச்
சாற்றிப்
பதிகத் தமிழ்மாலைச் சந்த இசை
ஆற்ற
மிகப்பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றுஅழகர்
சேவடிக்கீழ் நின்றுஅலைந்து நீடினார்.
பொழிப்புரை : அவ்வாறு போற்றுமவர், `சடையார் புனல் உடையான்\' எனத் தொடங்கிப் பெருமானின் புகழ்
நவிலும் பதிகமான தமிழ் மாலையைப் பாடி, நீற்று
அழகரான இறைவரின் திருவடிகளின் கீழ் ஆனந்தவெள்ளத்தினுள் நின்று அதன் கரைகாண
மாட்டாது அதனுள் நிலைத்திருந்தார்.
`சடையார் புனல் உடையான்' (தி.1 ப.11) எனத் தொடங்குவது நட்டபாடைப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
1.011 திருவீழிமிழலை பண் –
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சடைஆர்புனல்
உடையான்ஒரு சரிகோவணம் உடையான்
படைஆர்மழு
உடையான்பல பூதப்படை உடையான்
மடமான்விழி
உமைமாதுஇடம் உடையான்எனை உடையான்
விடைஆர்கொடி
உடையான்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :சடைமுடியில்
கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து
நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப்
படையை உடையவனும், பலவகையான பூதங்களைப்
படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை
பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தே
கொண்டவனும், என்னை ஆளாக உடையவனும், விடைக்கொடி உடையவனும் ஆகிய சிவபிரான்
எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.
பாடல்
எண் : 2
ஈறுஆய்,முதல் ஒன்றாய்,இரு பெண்ஆண்,குணம் மூன்றாய்
மாறாமறை
நான்காய்,வரு பூதம்அவை ஐந்தாய்,
ஆறுஆர்சுவை, ஏழ்ஓசையொடு
எட்டுத்திசை தானாய்
வேறாய்உடன்
ஆனான்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :ஊழிக் காலத்தில்
அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத்
தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை
வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம்
திருவீழிமிழலை.
பாடல்
எண் : 3
வம்மின்அடி
யீர், நாள்மலர்
இட்டுத்தொழுது உய்ய
உம்அன்பினொடு
எம்அன்புசெய்து ஈசன்உறை கோயில்
மும்என்றுஇசை
முரல்வண்டுகள் கெண்டித்திசை எங்கும்
விம்மும்பொழில்
சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :அன்றலர்ந்த மலர்களைச்
சாத்தி வணங்கி உய்தி பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு எம் அன்பையும்
ஏற்றருளும் இறைவன் உறையும் கோயில்,
மும்
என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும் வண்டுகள் மலர்களைக் கிளறுவதால் திசையெங்கும் மணம்
கமழும் பொழில்கள் சூழ்ந்ததும், தண்ணிய வயல்களைக்
கொண்டதுமாகிய திருவீழிமிழலை.
பாடல்
எண் : 4
பண்ணும்பதம்
ஏழும்,பல ஓசைத்தமிழ்
அவையும்,
உள்நின்றதொர்
சுவையும், உறு தாளத்துஒலி
பலவும்,
மண்ணும்புனல்
உயிரும்வரு காற்றும்சுடர் மூன்றும்
விண்ணும்முழுது
ஆனான்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும்
வல்லோசை, மெல்லோசை
முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய
இறைவனது இடம் திருவீழிமிழலை.
பாடல்
எண் : 5
ஆயாதன
சமயம்பல அறியாதவன், நெறியின்
தாயானவன், உயிர்கட்குமுன்
தலைஆனவன், மறைமுத்
தீஆனவன், சிவன்எம்இறை
செல்வத்திரு வாரூர்
மேயான்அவன்
உறையும்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல
சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும்
அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும்
திருப்பெயருடையவன். எங்கட்குத்தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில்
எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.
பாடல்
எண் : 6
கல்ஆல்நிழல்
கீழாய்இடர் காவாய், என வானோர்
எல்லாம்ஒரு
தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்வாய்எரி
காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில்
எய்தான்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :சிவபிரான் கல்லால
மரநிழற்கீழ் யோகியாய் வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த வானோர் காவாய் என
வேண்ட, சூரிய சந்திரராகிய
சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய
குதிரைகளைச் செலுத்த, அக்கினிதேவனை வலிய
வாயாகவும், வாயுதேவனை இறகாகவும்
கொண்ட திருமால் ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப் பூட்டி மேருமலையாகிய
வில்லால் செலுத்தித் திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம் திருவீழிமிழலை.
பாடல்
எண் : 7
கரத்தான்மலி
சிரத்தான்கரி உரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி
படத்தன்அடி பணிமூவர்கட்கு ஓவா
வரத்தான்மிக
அளித்தான்இடம் ,வளர்புன்னைமுத்து
அரும்பி
விரைத்தாதுபொன்
மணிஈன்றுஅணி வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :பிரமகபாலம் பொருந்திய
திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர்
அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன்.
அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கிய புன்னை
மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன்தாதுக்களை ஈன்று பச்சை
மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 8
முன்நிற்பவர்
இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித்து
எடுத்தான்முடி தடந்தோள்இற ஊன்றிப்
பின்னைப்பணிந்து
ஏத்தப்பெரு வாள்பேரொடும் கொடுத்த
மின்னிற்பொலி
சடையான்இடம் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :தன்னை எதிர்த்து
நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள
கயிலாயமலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள் தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால்
இடருழந்த அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப் பெரிதாகிய வாள், இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக்
கொடுத்தருளிய மின்னல் போலப் பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம்
திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 9
பண்டுஏழுலகு
உண்டான், அவை கண்டானுமுன்
அறியா
ஒண்தீயுரு
ஆனான்உறை கோயில்நிறை பொய்கை
வண்தாமரை
மலர்மேன்மட அன்னம்நடை பயில
வெண்தாமரை
செந்தாதுஉதிர் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :முன்னொரு காலத்து
ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக்காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப் படைத்தருளிய நான்முகனும்
தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும் கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த
செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில வெண் தாமரை சிவந்த தாதுக்களை
உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை
ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின.
பாடல்
எண் : 10
மசங்கல்சமண்
மண்டைக்கையர் குண்டக்குணம் இலிகள்
இசங்கும்பிறப்பு
அறுத்தான்இடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி
களிமஞ்ஞைகள் ஒளிகொண்டுஎழு பகலோன்
விசும்பைப்பொலி
விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
பொழிப்புரை :மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும்
பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற்
குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள்
நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப்
போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான தேனீக்கள்
தேனை உண்டு களித்து ஒலி செய்யவும்,
பசுமை
நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும்
ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில்
சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 11
வீழிம்மிழ
லைம்மேவிய விகிர்தன்தனை,
விரைசேர்
காழிந்நகர்
கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்இசை
வல்லார்சொலக் கேட்டார்அவர் எல்லாம்
ஊழின்மலி
வினைபோயிட உயர்வான்அடை வாரே.
பொழிப்புரை :வீழிமிழலையுள்
எழுந்தருளிய விகிர்தனாகிய இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப் பதியில் தோன்றிய
கலைவல்ல ஞானசம்பந்தன் பாடியருளிய பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட
வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச்
சிவப்பேறு எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 546
நீடியபே
ரன்புஉருகி உள்அலைப்ப நேர்நின்று
பாடிஎதிர்
ஆடிப் பரவிப் பணிந்துஎழுந்தே
ஆடிய
சேவடிகள் ஆர்வம்உற உட்கொண்டு
மாடுஉயர்
கோயில் புறத்துஅரிது வந்துஅணைந்தார்.
பொழிப்புரை : நிலையான பேரன்பு
உருகுதலால் திளைத்து நிற்கும் அவர்,
திருமுன்பு
நின்று பாடியும், ஆனந்தக் கூத்தாடியும், போற்றியும், பணிந்தும், எழுந்தும், அருட்பெருங்கூத்து இயற்றும் திருவடிகளை
அன்பு பொருந்த மனத்துள் வைத்தவராய்,
உயர்ந்த
திருக்கோயிலின் புறத்தே அரிதாய் வந்து, (ஆளுடைய
பிள்ளையாரும், ஆளுடைய அரசரும்)
சேர்ந்தனர்.
திருமுன்பு நின்று
இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 547
வந்துஅணைந்து
வாழ்ந்து, மதிற்புறத்துஓர்
மாமடத்துச்
செந்தமிழ்சொல்
வேந்தரும் செய்தவரும் சேர்ந்துஅருள,
சந்தமணிக்
கோபுரத்துச் சார்ந்தவட பால்சண்பை
அந்தணர்சூ
ளாமணியார் அங்குஓர் மடத்துஅமர்ந்தார்.
பொழிப்புரை : அங்ஙனம் வந்து
சேர்ந்து பெருவாழ்வு பெற்றுத் திருமதில் புறத்திலுள்ள ஒரு பெருமடத்தில்
செந்தமிழ்ச் சொல் அரசரான திருநாவுக்கரசரும் தவத்தையுடைய திருத்தொண்டர்களும்
சேர்ந்திருப்ப, சீகாழியில் தோன்றிய
அந்தணர் பெருமானான சம்பந்தர் அழகிய மணிகளையுடைய கோபுரத்தைச் சார்ந்த வடபகுதியில்
அங்கு ஒரு திருமடத்தில் விரும்பி எழுந்தருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 548
அங்கண்
அமர்வார் அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய
காதலினால் காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ்
வாகீசருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும்
இடர்தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்.
பொழிப்புரை : அங்கு விரும்பி
எழுந்தருளியிருப்பவர், சிவ பெருமான்
திருவடிகளின் கீழ்ப் பொருந்திக் கிடந்த விருப்பத்தினால் வழிபாட்டிற்குரிய காலம்தோறும், தவறாமல், பொங்கும் புகழை உடைய திருநாவுக்கரசரும்
கூடச் சென்று, வழிபட்டுப் போற்றி, எங் கும் துன்பம் தீர்ப்பவர்களாய்
இன்பமுடன் விரும்பித் தங்கியிருந்தனர்.
காலந்தொறும் சென்று இசைத்த
பதிகங்கள் எவையும் கிடைத்தில.
பெ.
பு. பாடல் எண் : 549
ஓங்குபுனல்
பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்குஆர்
திலதைப் பதிமுற்ற மும்பணிந்து
வீங்குஒலிநீர்வீழி
மிழலையினில் மீண்டும் அணைந்து
ஆங்குஇனிது
கும்பிட்டு அமர்ந்து உறையும் அந்நாளில்.
பொழிப்புரை : பெருகும் நீர்வளம்
கொண்ட திருப்பேணுபெருந்துறையையும் அதனை உள்ளிட்ட அருகிலுள்ள திலதைப்பதி
மதிமுத்தத்தினையும் போய் வணங்கிப் பெருகும் ஒலியுடைய நீர் சூழ்ந்த
திருவீழிமிழலையினில் மீண்டும் எழுந்தருளி, அங்கு இனிதாய் வணங்கி விருப்பமுடனே
இருந்து வரும் நாள்களில்,
பெ.
பு. பாடல் எண் : 550
சேண்உயர்
மாடப் புகலி உள்ளார்
திருஞான சம்பந்தப்
பிள்ளை யாரைக்
காணும்
விருப்பில் பெருகும் ஆசை
கைம்மிகு காதல் கரை
இகப்பப்
பூணும்
மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார்மலர்ப்
பாதம் போற்றி
வேணு
புரத்தை அகன்று போந்து
வீழி மிழலையில் வந்து
அணைந்தார்.
பொழிப்புரை : வானளாவ உயர்ந்த
மாடங்களை உடைய சீகாழியில் வாழ்கின்ற மறையவர்கள், திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சென்று
காணவேண்டும் என்ற விருப்பத்தால்,
பெருகும்
ஆசைமீதூரத் திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரின் மலரடிகளை வணங்கி, விடைபெற்றுச் சீகாழியினின்றும்
திருவீழிமிழலையை அடைந்தார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 551
"ஊழி முடிவில் உயர்ந்த
வெள்ளத்து
தோங்கிய காழி உயர்
பதியில்
வாழி
மறையவர் தாங்கள் எல்லாம்
வந்து மருங்குஅணைந்
தார்கள்" என்ன
வீழி
மிழலையின் வேதி யர்கள்
கேட்டுமெய்ஞ்
ஞானம்உண் டாரை முன்னா
ஏழ்இசை
சூழ்மறை எய்த ஓதி
எதிர்கொள் முறைமையில்
கொண்டு புக்கார்.
பொழிப்புரை : ஊழிக்காலத்தில்
பெருகும் நீர் வெள்ளத்தில் ஆழாமல் மிதந்த சீகாழியில், பெருவாழ்வை உடைய அந்தணர்கள் எல்லாம்
வந்து, தம் பதியின் அருகே
சேர்ந்தனர் எனத் திருவீழிமிழலையில் வாழும் மறையோர்கள் கேள்வியுற்று, மெய்ஞ்ஞான அமுது உண்ட பிள்ளையாரை எண்ணி
மனத்துள் கொண்டு, ஏழிசை சூழும் மறைகளில்
வல்ல அந்தச் சீகாழி மறையவர்பால் சேர்ந்து, முறைப்படி எதிர்கொண்டு வரவேற்று, அவர்களை அழைத்துக் கொண்டு நகரத்துள்
புகுந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 552
சண்பைத்
திருமறை யோர்கள் எல்லாம்
தம்பிரா னாரைப்
பணிந்து போந்து
நண்பில்
பெருகிய காதல் கூர்ந்து
ஞானசம் பந்தர்
மடத்தில் எய்திப்
பண்பிற்
பெருகும் கழும லத்தார்
பிள்ளையார் பாதம்
பணிந்து பூண்டே
"எண்பெற்ற தோணி
புரத்தில் எம்மோடு
எழுந்தரு ளப்பெற
வேண்டும்" என்றார்.
பொழிப்புரை : சீகாழியினைச் சேர்ந்த
மறையவர்களெல்லாம் கோயிலுள் சென்று,
தம்
இறைவரை வணங்கிச் சென்று, நட்பால் பெருகிய
பெருவிருப்பம் மிக்கு, ஞானசம்பந்தரின்
திருமடத்தைச் சேர்ந்து, நற்பண்பினால்
பெருகும் சீகாழியில் உள்ளவர்களுக்கு உரிமை உடைய சம்பந்தரின் திருவடிகளை வணங்கித்
தலைமீது கொண்டு, `மேன்மையுடைய
திருத்தோணிபுரத்தில் எம்முடனே எழுந்தருளும் பேறு யாங்கள் பெற வேண்டும்\' என வேண்டிக் கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 553
என்றுஅவர்
விண்ணப்பம் செய்த போதில்
ஈறுஇல் சிவஞானப்
பிள்ளை யாரும்,
"நன்றுஇது சாலவும், தோணி மேவும்
நாதர் கழல்இணை நாம்
இறைஞ்ச
இன்று
கழித்து மிழலை மேவும்
இறைவர் அருள்பெற்றுப்
போவது" என்றே
அன்று
புகலி அருமறையோர்க்கு
அருள்செய்து அவர்க்கு
முகம்அளித்தார்.
பொழிப்புரை : என அவர்கள்
வேண்டிக்கொண்டபோது எல்லையில்லாத சிவஞானம் பெற்ற சம்பந்தரும் `மிகவும் நல்லது' ஆனால் திருத்தோணியில்
எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடிகளை நாம் வணங்குவதற்கு இன்று கழிந்து நாளைத்
திருவீழிமிழலை இறைவரின் அருளைப் பெற்று நாம் போகலாம்!' எனக் கூறி, அன்று அவர் சீகாழி மறையவர்களுக்கு அருள்
செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 554
மேல்பட்ட
அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க்கு ஆய
விருந்து அளிப்பப்
பால்பட்ட
சிந்தைய ராய்ம கிழ்ந்து
பரம்பொருள் ஆனார்
தமைப் பரவும்
சீர்ப்பட்ட
எல்லை இனிது செல்லத்
திருத்தோணி மேவிய
செல்வர் தாமே
கார்ப்பட்ட
வண்கைக் கவுணி யர்க்குக்
கனவுஇடை முன்நின்று
அருள்செய் கின்றார்.
பொழிப்புரை : மேன்மையுடைய
திருவீழிமிழலை அந்தணர்கள், சீகாழியினின்றும்
வந்த அந்தணர்களுக்கு விருந்தளிக்க,
ஏற்ற
அவர்களும் அன்பு கொண்ட உள்ளம் உடையராகி, மகிழ்ந்து
இறைவரை வழிபட்டுப் போற்றும் சீர்மை பொருந்திய கால எல்லை இனிதாய்க் கழியத்
திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர், தாமே
மேகம் போன்ற வண்மையுடைய பிள்ளையாருக்குக் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 555
"தோணியில் நாம்அங்கு
இருந்த வண்ணம்
தூமறை வீழிமிழலை
தன்னுள்
சேண்உயர்
விண்நின்று இழிந்த இந்தச்
சீர்கொள் விமானத்துக்
காட்டு கின்றோம்,
பேணும்
படியால் அறிதி" என்று
பெயர்ந்துஅருள்
செய்யப் பெருந் தவங்கள்
வேணு
புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத்
தொடும் உணர்ந்தார்.
பொழிப்புரை : அச் சீகாழியில் `தோணியில் தாம் இருந்த காட்சியை இங்குத்
தூய மறைவடிவாகிய திருவீழிமிழலையுள் விண்ணினின்றும் இழிந்த இந்தச் சிறப்புடைய
விமானத்திடம் காணும்படி காட்டுகின்றோம். கண்டு வழிபடும் வகையினால் அறிவாயாக!\' என்று கூறி மறைந்து போக, சீகாழிப் பதியினர் முன் செய்த தவத்தால்
தோன்றிய பிள்ளையார், தம் உடலில் தோன்றிய
மயிர்க்கூச்சலுடன் துயிலுணர்ந்து எழுந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 556
அறிவுற்ற
சிந்தைய ராய் எழுந்தே,
அதிசயித்து உச்சிமேல்
அங்கை கூப்பி
வெறிஉற்ற
கொன்றையி னார்ம கிழ்ந்த
விண்இழி கோயிலில் சென்று
புக்கு,
மறிஉற்ற
கையரைத் தோணி மேல்முன்
வணங்கும் படிஅங்குக்
கண்டு வாழ்ந்து,
குறியில்
பெருகும் திருப்ப திகம்
குலவிய கொள்கையில்
பாடுகின்றார்.
பொழிப்புரை : விழிப்புற்ற
சிந்தையுடையவராய் எழுந்து அதிசயம் அடைந்து, தலையின் மேலே அழகிய கைகளை வைத்துக்
கூப்பித் தொழுது, மணம் பொருந்திய
கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் விண்ணிழி விமானமுடைய கோயிலுள்
புகுந்து மானேந்திய கையையுடைய இறைவரைத் திருத்தோணியின் மேல் முன் வணங்கும் அந்த
வண்ணமே அங்குக் கண்டு, வாழ்வடைந்து, அக்குறிநிலையின் பெருமை காட்டும்
திருப்பதிகத்தைப் பொருந்திய கொள்கையால் பாடுபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 557
"மைம்மரு
பூங்குழல்" என்று எடுத்து
மாறுஇல் பெரும் திருத்தோணி தன்மேல்
கொம்மை
முலையினாள் கூட நீடு
கோலம் குலாவும் மிழலை
தன்னில்
செம்மை
தருவிண் இழிந்த கோயில்
திகழ்ந்த
படி"இது என்கொல்" என்று
மெய்ம்மை
விளங்கும் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்தனர் வேத
வாயர்.
பொழிப்புரை : `மைம்மரு பூங்குழல்' (தி.1 ப.4) எனத் தொடங்கி ஒப்பில்லாத பெருந்
திருத்தோணி மீது இளங் கொங்கையையுடைய திருநிலைநாயகி அம்மையாருடன் கூடநீடும்
திருக்கோலம், விளக்கம் உடைய
திருவீழிமிழலையில் செம்மை தருகின்ற விண்ணிழி விமானத்தில் விளங்க இருந்த வண்ணம் இது
என்? என வினவும் பொருளுடன்
உண்மை விளங்கும் திருப்பதிகத்தை,
மறைவாயினரான
சம்பந்தர் பாடியருளினார்.
`மைம்மரு பூங்குழல்' (தி.1 ப.4) எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டபாடைப்
பண்ணிலமைந்த பதிகமாகும். `புகலி நிலாவிய
புண்ணியனே, மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியது என்கொல்? சொல்லாய்' எனும் பொருண்மை பாடல் தொறும்
அமைந்திருத்தலின், அதுகொண்டு
இவ்வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் அமைத்துக் கூறுவாராயினர்.
வினாவுரை: - காழியில் அம்மையப்பராக
எழுந்தருளியிருக்கும் காட்சியை வீழிமிழலையிற்காட்ட, தரிசித்த சம்பந்தப் பெருமான் வினாவாக
உரைத்தன.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
1.004 திருப்புகலியும் திருவீழிமிழலையும் பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மைம்மரு
பூங்குழல் கற்றைதுற்ற
வாள்நுதல் மான்விழி
மங்கையோடும்
பொய்ம்மொழி
யாமறை யோர்கள்ஏத்தப்
புகலி நிலாவிய
புண்ணியனே,
எம்மிறை
யே, இமை யாதமுக்கண்
ஈச, என்நேச, இதுஎன்கொல்சொல்லாய்,
மெய்ம்மொழி
நான்மறை யோர்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :கற்றையாகச் செறிந்து
கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி
சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற
விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத
அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம்
ஈசனே!, என்பால் அன்பு
உடையவனே, வாய்மையே பேசும்
நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து
கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!
குருவருள்: `பொய் மொழியா மறையோர்` என்று காழி அந்தணர்களை எதிர்மறையால்
போற்றிய ஞானசம்பந்தர் `மெய்ம்மொழி
நான்மறையோர்` என வீழி அந்தணர்களை
உடன்பாட்டு முகத்தால் கூறியுள்ள நுண்மை காண்க.`பொய்யர் உள்ளத்து அணுகானே` என்ற அருணகிரிநாதர் வாக்கினையும் இதனோடு
இணைத்து எண்ணுக. சீனயாத்திரீகன் யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக் குறிப்பில்
பொய், களவு, சூது, வஞ்சகம் இல்லாதவர்கள் என இந்தியரின்
சிறப்பைக் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாம். ஞானசம்பந்தர் காலமும்
யுவான்சுவாங் காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும்.
பாடல்
எண் : 2
கழல்மல்கு
பந்தொடுஅம் மானை,முற்றில்,
கற்றவர் சிற்றிடைக்
கன்னிமார்கள்
பொழின்மல்கு
கிள்ளையைச் சொல்பயிற்றும்
புகலி நிலாவிய புண்ணியனே,
எழின்மல
ரோன்சிரம் ஏந்தி உண்டுஓர்
இன்புறு செல்வம்
இதுஎன்கொல்சொல்லாய்,
மிழலையுள்
வேதியர் ஏத்திவாழ்த்த
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :மகளிர்க்குப்
பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுகளைக் கற்ற
சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள
கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில்
விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில்
பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க
விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!
பாடல்
எண் : 3
கன்னியர்
ஆடல் கலந்துமிக்க
கந்துக ஆடை
கலந்துதுங்கப்
பொன்இயல்
மாடம் நெருங்குசெல்வப்
புகலி நிலாவிய
புண்ணியனே,
இன்னிசை
யாழ்மொழி யாள்ஓர்பாகத்து
எம்இறையே இது
என்கொல்சொல்லாய்,
மின்இயல்
நுண்இடை யார்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :கன்னிப் பெண்கள்
விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான
அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது
இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல்
போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி
விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!
பாடல்
எண் : 4
நாகப
ணந்திகழ் அல்குல்மல்கு
நல்நுதல் மான்விழி
மங்கையோடும்
பூகவ
னம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலி நிலாவிய
புண்ணியனே,
ஏகபெ
ருந்தகை ஆயபெம்மான்,
எம்இறையே இது
என்கொல்சொல்லாய்,
மேகம்
உரிஞ்சுஎயில் சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :பாம்பின் படம் போன்று
திகழும் அல்குலையும், அழகு மல்கும்
நுதலையும், மான் விழி போன்ற
விழியையும் உடைய பார்வதிஅம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும்
தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும் புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே
முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழி
மிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.
பாடல்
எண் : 5
சந்துஅளறு
ஏறுத டம்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள
ராதவாய்மைப்
புந்தியில்
நான்மறை யோர்கள்ஏத்தும்
புகலி நிலாவிய
புண்ணியனே,
எந்தமை
ஆள்உடை ஈச, எம்மான்,
எம்இறையே இது
என்கொல்சொல்லாய்,
வெந்தவெண்
நீறுஅணி வார்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :சந்தனக் குழம்பு
பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய
நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே
ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை
அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக்
காரணம் என்னையோ? சொல்வாயாக!
பாடல்
எண் : 6
சங்குஒளி
இப்பி சுறாமகரம்
தாங்கி நிரந்து
தரங்கம்மேல்மேல்
பொங்குஒலி
நீர்சுமந்து ஓங்குசெம்மைப்
புகலி நிலாவிய புண்ணியனே,
எங்கள்பி
ரான், இமை யோர்கள்பெம்மான்,
எம்இறையே இது
என்கொல்சொல்லாய்,
வெங்கதிர்
தோய்பொழில் சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய்
வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும்
செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம்
கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக்
காரணம் என்னையோ! சொல்வாயாக!
பாடல்
எண் : 7
காமன்
எரிப்பிழம்பு ஆகநோக்கிக்
காம்புஅன தோளியொ
டும்கலந்து
பூமரு
நான்முகன் போல்வர்ஏத்தப்
புகலி நிலாவிய
புண்ணியனே,
ஈமவ
னத்துஎரி ஆட்டுஉகந்த
எம்பெரு மான்இது
என்கொல்சொல்லாய்,
வீமரு
தண்பொழில் சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :மன்மதன்
தீப்பிழம்பாய் எரியுமாறு கண்ணால் நோக்கி, மூங்கில்
போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை
மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே!
சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த
பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக்
காரணம் என்னையோ! சொல்வாயாக!
பாடல் எண் : 8
இலங்கையர்
வேந்துஎழில் வாய்த்ததிண்தோள்
இற்றுஅல றவ்விரல்
ஒற்றி,ஐந்து
புலங்களைக்
கட்டவர் போற்றஅந்தண்
புகலி நிலாவிய
புண்ணியனே,
இலங்குஎரி
ஏந்திநின்று எல்லிஆடும்
எம்இறையே, இது என்கொல்சொல்லாய்,
விலங்கல்ஒண்
மாளிகை சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :இலங்கையர் தலைவனாகிய
இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு
தன் கால் விரலால் சிறிது ஊன்றி,
ஐம்புல
இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும்
புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம்
தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில்
விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
பாடல்
எண் : 9
செறிமுள
ரித்தவிசு ஏறிஆறும்
செற்றுஅதில்
வீற்றுஇருந் தானும்,மற்றைப்
பொறிஅர
வத்துஅணை யானும்காணாப்
புகலி நிலாவிய
புண்ணியனே,
எறிமழு
வோடுஇள மான்கைஇன்றி
இருந்தபி ரான்,இது என்கொல்சொல்லாய்
வெறிகமழ்
பூம்பொழில் சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :மணம் செறிந்த தாமரைத்
தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக்
கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக்
கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம்
கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை
விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
குருவருள்:`எறிமழுவோடு இளமான் கையின்றி இருந்த
பிரான்` என்றதனால் தனக்குத்
திருவீழிமிழலையில் அருள் செய்த பெருமான் மழு ஆயுதமும் மானும் கைகளில் இல்லாமல்
சீகாழித் திருத்தோணி மலையில் வீற்றிருந்தருளும் உமாமகேசுரர் என்பதைக்
குறித்தருள்கின்றார் ஞானசம்பந்தர். அங்ஙனம் உள்ள காழிக் கோலத்தை வீழியிலும்
காட்டியது என்னே என்று வியந்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடல்
எண் : 10
பத்தர்க
ணம்பணிந்து ஏத்தவாய்த்த
பான்மையது அன்றியும்
பல்சமணும்
புத்தரும்
நின்றுஅலர் தூற்ற, அந்தண்
புகலி நிலாவிய
புண்ணியனே,
எத்தவத்
தோர்க்கும் இலக்காய்நின்ற
எம்பெரு மான்,இது என்கொல்சொல்லாய்
வித்தகர்
வாழ்பொழில் சூழ்மிழலை
விண்இழி கோயில்
விரும்பியதே.
பொழிப்புரை :தன்னிடம்
பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும்
புண்ணியனே! எவ் வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற
எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில்
விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.
பாடல்
எண் : 11
விண்இழி
கோயில் விரும்பிமேவும்
வித்தகம் என்கொல், இதுஎன்றுசொல்லிப்
புண்ணிய
னை, புக லிந்நிலாவும்
பூங்கொடி யோடுஇருந்
தானைப்போற்றி,
நண்ணிய
கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம்
பந்தன்சொன்ன
பண்இயல்
பாடல்வல் லார்கள்இந்தப்
பாரொடு விண்பரி
பாலகரே.
பொழிப்புரை :விண்ணிழி கோயில்
விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு
விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப்பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு
விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம்
என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி
உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப்பதிகத்
திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் திருப்பதிக
வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 558
செஞ்சொல்
மலர்ந்த திருப்ப திகம்
பாடி, திருக்கடைக் காப்புச்
சாத்தி,
அஞ்சலி
கூப்பி விழுந்து எழுவார்
ஆனந்த வெள்ளம்
அலைப்பப் போந்து,
மஞ்சுஇவர்
சோலைப் புகலி மேவும்
மாமறை யோர்தமை நோக்கி, வாய்மை
நெஞ்சில்
நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை
அருள்செய் கின்றார்.
பொழிப்புரை : செம்மையான சொற்கள்
பொருந்திய திருப்பதிகத்தைப் பாடித் திருக்கடைக்காப்பும் பாடி நிறைவுசெய்து, கைகளைக் கூப்பி, நிலத்தில் விழுந்து எழுபவரான பிள்ளையார், பெருகிய ஆனந்தம் தம்மை அலைப்ப வெளியே
வந்து, மேகங்கள் தவழும்
சோலைகள் சூழ்ந்த சீகாழியினின்றும் வந்த மறையவர்களை நோக்கி, உண்மைவடிவாய்த் தம் உள்ளத்தில் நிறைந்த
திருவருள் குறிப்பால் உணர்த்தப் பெற்ற அருளியல்பை அருளிச் செய்பவராய்,
பெ.
பு. பாடல் எண் : 559
"பிரம புரத்தில்
அமர்ந்த முக்கண்
பெரிய பிரான்பெரு மாட்டி
யோடும்
விரவிய
தானங்கள் எங்கும் சென்று
விரும்பிய கோயில்
பணிந்து போற்றி
வருவது
மேற்கொண்ட காதல் கண்டுஅங்கு
அமர்ந்த வகைஇங்கு
அளித்தது" என்று
தெரிய
உரைத்துஅருள் செய்து,
"நீங்கள்
சிரபுர மாநகர்
செல்லும்" என்றார்.
பொழிப்புரை : சீகாழியில்
வீற்றிருக்கின்ற முக்கண்களை உடைய பெருமான், தம் பெருமாட்டியுடன் வீற்றிருக்கும்
இடங்கள் எங்கும் சென்று, விரும்பிப் பணிந்து
போற்றி வருதலை அப்பெருமான் தாம் அறிந்துகொண்டு, அங்குத் திருத்தோணியில் வீற்றிருந்த
வகையினை இங்குக் காணுமாறு அளித்தார்' என்று
விளங்கக் கூறி, `நீங்கள் சீகாழிக்குச்
செல்லுங்கள்' என்றுரைத்தார்.
காழிக்காட்சியை
வீழியிற் காட்டியது, காழிக்குத் தாம்
வருதலைத் தவிர்க்கும் திருவுளக் குறிப்பாதலை உணர்ந்த பிள்ளையார், அங்கிருந்து அழைக்க வந்தார்க்குக் கூறி
அனுப்பி வைத்தார்.
பெ.
பு. பாடல் எண் : 560
என்று
கவுணியப் பிள்ளை யார்தாம்
இயம்ப, பணிந்து, அருள் ஏற்றுக் கொண்டே,
ஒன்றிய
காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய, ஒருவாறு அகன்று
போந்து,
மன்றுள்
நடம்புரிந் தார்ம கிழ்ந்த
தானம் பலவும்
வணங்கிச் சென்று,
நின்ற
புகழ்த்தோணி நீடு வாரைப்
பணியும் நியதிய ராய்
உறைந்தார்.
பொழிப்புரை : என்று கவுணியர்குலத்
தோன்றலான பிள்ளையார் அருள, வணங்கி அவர் உரைத்த
கட்டளையை ஏற்றுக் கொண்டு, பொருந்திய
பெருவிருப்பத்தால் தங்கள் மனம் அங்கு நிற்க, நீங்காத இயல்பிலே ஒருவாறாக அரிதின்
நீங்கிச் சென்றார்கள். நீங்கிச் சென்று, திருக்கூத்தியற்றும்
பெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, நிலையான புகழையுடைய தோணிபுரத்தில்
வீற்றிருக்கும் இறைவரை நாளும் பணியும் நியதி உடையவராய் விளங்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 561
சிரபுரத்து
அந்தணர் சென்ற பின்னை,
திருவீழி மேவிய
செல்வர் பாதம்
பரவுதல்
செய்து, பணிந்து, நாளும்
பண்பின் வழாத்திருத்
தொண்டர் சூழ,
உரவுத்
தமிழ்த்தொடை மாலை சாத்தி,
ஓங்கிய நாவுக்கு
அரசரோடும்
விரவி, பெருகிய நண்பு கூர
மேவி, இனிதுஅங்கு உறையும்
நாளில்.
பொழிப்புரை : சீகாழி மறையவர்கள்
விடைபெற்றுச் சென்றபின்பு, திருவீழிமிழலையில்
மேவிய இறைவரின் திருவடிகளை வணங்கி,
எந்நாளும்
அடிமைப் பண்பினின்றும் நீங்காமல் ஒழுகும் திருத்தொண்டர் சூழ்ந்திருக்க, சிறந்த தமிழால் தொடுக்கப்பட்ட
திருப்பதிகங்களைச் சாத்தி, அன்புமிக்க
திருநாவுக்கரசருடன் கூடிப் பெருகிய நட்புமிக்கு ஓங்கப் பொருந்தி இனிதாய்
அப்பதியில் தங்கி இருந்தனர். அந்நாள் களில்,
குறிப்புரை : இதுபொழுது அருளிய திருப்பதிகங்கள்
பல. அவற்றுள் கிடைத்தவை:
1. `தடநிலவிய' (தி.1 ப.20) நட்டபாடை.
2. `இரும்பொன்மலை' (தி.1 ப.82) குறிஞ்சி.
3. `அலர்மகள் மலிதர' (தி.1 ப.124) வியாழக்குறிஞ்சி.
4. `ஏரிசையும்' (தி.1 ப.132) மேகராகக்குறிஞ்சி.
5. `கேள்வியர்' (தி.3 ப.9) காந்தாரபஞ்சமம்.
6. `சீர்மருவு' (தி.3 ப.80) சாதாரி.
7. `மட்டொளி' (தி.3 ப.85) சாதாரி.
8. `வெண்மதி' (தி.3 ப.98) சாதாரி.
9. `வேலின் நேர்தரு' (தி.3 ப.111) பழம்பஞ்சுரம்.
10.`துன்று கொன்றை' (தி.3 ப.116) பழம்பஞ்சுரம்.
11.`புள்ளித் தோலாடை' (தி.3 ப.119) புறநீர்மை.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகங்கள்
1.020 திருவீழிமிழலை பண் –
நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தடநில
வியமலை நிறுவியொர்
தழல்உமிழ் தருபட
அரவுகொடு
அடல்அசு
ரரொடுஅம ரர்கள்அலை
கடல்கடை வுழிஎழு
மிகுசின
விடம்அடை
தருமிட றுஉடையவன்,
விடைமிசை வரும்அவன்
உறைபதி
திடமலி
தருமறை முறைஉணர்
மறையவர் நிறைதிரு
மிழலையே.
பொழிப்புரை :பெரியதாகிய
மந்தரமலையை மத்தாக நிறுத்தி, அழல் போலும் கொடிய
நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய
அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத்தோன்றிய
உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான்
உறையும் தலம், நான்மறைகளை முறையாக
ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 2
தரையொடு
திவிதலம் நலிதரு
தகுதிறல் உறுசல தரனது
வரைஅன
தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற
அருளினன்,
உரைமலி
தருசுர நதிமதி
பொதிசடை யவன்உறை
பதிமிகு
திரைமலி
கடல்மணல் அணிதரு
பெறுதிடர் வளர்திரு
மிழலையே.
பொழிப்புரை :மண்ணுலகத்தோடு
விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை
வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன
பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த
திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 3
மலைமகள்
தனைஇகழ்வு அதுசெய்த
மதிஅறு சிறுமன
வனதுயர்
தலையினொடு
அழல்உரு வனகரம்
அறமுனி வுசெய்தவன்
உறைபதி,
கலைநில
வியபுல வர்கள்இடர்
களைதரு கொடைபயில்
பவர்மிகு
சிலைமலி
மதிள்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு
மிழலையே.
பொழிப்புரை :மலைமகளாகிய
பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை
ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை
வெளிப்படுத்திய சிவபிரான்உறையும் தலம், கலை
ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும்
கொடையாளர்கள் வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள்
வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 4
மருவலர்
புரம்எரி யினில்மடி
தர,ஒரு கணைசெல நிறுவிய
பெருவலி
யினன்நலம் மலிதரு
கரன்உர மிகுபிணம் அமர்வன
இருள்இடை
அடையுற வொடுநட
விசையுறு பரன்இனிது
உறைபதி
தெருவினில்
வருபெரு விழஒலி
மலிதர வளர்திரு
மிழலையே.
பொழிப்புரை :பகைமை பாராட்டிய
திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெருவலி
படைத்தவனும், நன்மைகள் நிறைந்த
திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள்
நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு
நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும்
பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 5
அணிபெறு
வடமர நிழலினில்
அமர்வொடும் அடிஇணை
இருவர்கள்
பணிதர
அறநெறி மறையொடும்
அருளிய பரன்உறை
விடம்ஒளி
மணிபொரு
வருமர கதநில
மலிபுனல் அணைதரு
வயல்அணி
திணிபொழில்
தருமணம் அதுநுகர்
அறுபத முரல்திரு
மிழலையே.
பொழிப்புரை :அழகிய கல்லால
மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர்
ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர்
ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்செய்த
சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள்
ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து
வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள்
முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 6
வசைஅறு
வலிவன சரஉரு
அதுகொடு நினைவுஅரு
தவமுயல்
விசையன
திறன்மலை மகள்அறி
வுறுதிறல் அமர்மிடல்
கொடுசெய்து
அசைவில
படைஅருள் புரிதரும்
அவன்உறை பதிஅது, மிகுதரு
திசையினில்
மலர்குல வியசெறி
பொழில்மலி தருதிரு
மிழலையே.
பொழிப்புரை :குற்றமற்ற வலிய வேடர்
உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய
கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில்
அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத
பாசுபதக் கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள் திசைகள் எங்கும்
மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை யாகும்.
பாடல்
எண் : 7
நலமலி
தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை
ஒளிமுதல்
மலர்அவை
கொடுவழி படுதிறன்
மறையவன் உயிரது
கொளவரு
சலமலி
தருமற லிதன்உயிர்
கெடவுதை செய்தவன்
உறைபதி,
திலகம்
இதுஎனவுல குகள்புகழ்
தருபொழில் அணிதிரு
மிழலையே.
பொழிப்புரை :நன்மைகள் பலவும்
நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர், மணப்புகை, தீபம், மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை
புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க
இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும்
பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 8
அரன்உறை
தருகயி லையைநிலை
குலைவுஅது செய்த
தசமுகனது
கரம்இரு
பதுநெரி தரவிரல்
நிறுவிய கழல்அடி
உடையவன்,
வரன்முறை
உலகுஅவை தருமலர்
வளர்மறை யவன்வழி
வழுவிய
சிரம்அது
கொடுபலி திரிதரு
சிவன்உறை பதிதிரு
மிழலையே.
பொழிப்புரை :சிவபிரான்
எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய
இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த
திருவடிகளை உடையவனும், வரன் முறையால்
உலகைப்படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழிவழுவியதால் ஐந்தாயிருந்த அவன்
சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான்
உறையும் பதி திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 9
அயனொடும்
எழில்அமர் மலர்மகள்
மகிழ்கணன் அளவிடல்
ஒழியவொர்
பயமுறு
வகைதழல் நிகழ்வதொர்
படிஉரு அதுவர
வரன்முறை
சயசய
எனமிகு துதிசெய
வெளிஉரு வியஅவன்
உறைபதி
செயநில
வியமதில் மதியது
தவழ்தர உயர்திரு
மிழலையே.
பொழிப்புரை :நான்முகனும் அழகிய
மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற
அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான்
உறையும் பதி, வெற்றி விளங்கும்
மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 10
இகழ்உரு
வொடுபறி தலைகொடும்
இழிதொழில் மலிசமண்
விரகினர்,
திகழ்துவர்
உடைஉடல் பொதிபவர்
கெட,அடி யவர்மிக அருளிய
புகழ்உடை
இறைஉறை பதி, புனல்
அணிகடல் புடைதழு
வியபுவி
திகழ்சுரர்
தருநிகர் கொடையினர்
செறிவொடு திகழ்திரு
மிழலையே.
பொழிப்புரை :பிறரால் இகழத்தக்க
உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில்
மிகுதியாகப்புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில்
போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத்தன் அடியவர்களுக்கு மிகவும் அருள்
புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட
இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய
திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 11
சினமலி
கரிஉரி செய்தசிவன்
உறைதரு திருமிழ
லையைமிகு
தனமனர்
சிரபுர நகர்இறை,
தமிழ்விர கனதுஉரை
ஒருபதும்
மனமகிழ்
வொடுபயில் பவர்எழில்
மலர்மகள் கலைமகள்
சயமகள்
இனமலி
புகழ்மகள் இசைதர
இருநிலன் இடைஇனிது
அமர்வரே.
பொழிப்புரை :சினவேகத்தோடு வந்த
யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த
மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன்
உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர்
தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண்
இனிதாக வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
1.082 திருவீழிமிழலை பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இரும்பொன்
மலைவில்லா, எரிஅம்பா நாணில்
திரிந்த
புரமூன்றும் செற்றான் உறைகோயில்,
தெரிந்த
அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி
எதிர்கொள்வார் வீழி மிழலையே.
பொழிப்புரை :பெரிய பொன்மயமான
மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக
அவ்வில்நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய
சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த
அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள்
வாழும் திருவீழிமிழலை ஆகும்.
பாடல்
எண் : 2
வாதைப்
படுகின்ற வானோர் துயர்தீர,
ஓதக்
கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்,
கீதத்து
இசையோடும், கேள்விக் கிடையோடும்,
வேதத்து
ஒலிஓவா வீழி மிழலையே.
பொழிப்புரை :துன்புறும்
தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய
கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி
என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேதபாராயணத்தின் ஒலி
நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.
பாடல்
எண் : 3
பயிலும்
மறையாளன் தலையில் பலிகொண்டு
துயிலும்
பொழுதுஆடும் சோதி உறைகோயில்,
மயிலும்
மடமானும் மதியும் இளவேயும்
வெயிலும்
பொலிமாதர் வீழி மிழலையே.
பொழிப்புரை :வேதங்களை ஓதிய
பிரமனின், தலையோட்டில்
பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும்
கோயில், மயில், மடப்பம் பொருந்தியமான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு
இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர்
வாழும் திருவீழிமிழலையாகும்.
பிரமகபாலத்தில்
பிச்சை ஏற்று, எல்லாம் துயிலும்
நள்ளிரவில் நட்டமாடும் பெருமான் கோயில் வீழிமிழலை என்கின்றது. இந்நகரத்து மாதர்
மயிலையும் மானையும் மதியையும் மூங்கிலையும் வெயிலையும் போல் விளங்குகின்றார்கள்; சாயலால் மயில், பார்வையால் மான், நுதலழகால் மதி, தோளால் மூங்கில், கற்பால் வெயில்
எனக்கொள்க.
பாடல்
எண் : 4
இரவன்
பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு
அருள்செய்த நிமலன் உறைகோயில்,
குரவம்
சுரபுன்னை குளிர்கோங்கு இளவேங்கை
விரவும்
பொழில்அந்தண் வீழி மிழலையே.
பொழிப்புரை :தக்கன் செய்த
யாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய
தேவர்கள் ஆகியோரை, வீரபத்திரரை
அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில்
குரா, சுரபுன்னை, குளிர்ந்த கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள்
சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.
பாடல் எண் : 5
கண்ணில்
கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக்கு
அருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணில்
பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணில்
புயல்காட்டும் வீழி மிழலையே.
பொழிப்புரை :நெற்றி விழியில்
தோன்றிய கனலால் காமனைப் பொடிசெய்து,
இரதிதேவிவேண்ட
அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில்
செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண் ணகத்தே மழைமேகங்களை
உருவாக்கும் திருவீழிமிழலையாகும்.
பாடல் எண் : 6
மால்ஆ
யிரங்கொண்டு மலர்க்கண் இட,
ஆழி
ஏலா
வலயத்தோடு ஈந்தான் உறைகோயில்,
சேல்
ஆகியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலால்
எரிகாட்டும் வீழி மிழலையே.
பொழிப்புரை :திருமால் ஆயிரம்
தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக்கண்டு, தன், மலர் போன்ற கண்ணை இடந்து சாத்திய அளவில்
பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும்
கோயில், சேல்மீன்கள்
பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக்
காணப்படும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 7
மதியால்
வழிபட்டான், வாழ்நாள் கொடுபோவான்,
கொதியா
வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்,
நெதியான்
மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால்
நிற்கின்றார், வீழி மிழலையே.
பொழிப்புரை :மெய்யறிவால் தன்னை
வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப்படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை
அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த
செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழி
மிழலையாகும்.
பாடல்
எண் : 8
எடுத்தான்
தருக்கினை இழித்தான் விரல்ஊன்றி,
கொடுத்தான்
வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார்
மறை,வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிகவாழும் வீழி
மிழலையே.
பொழிப்புரை :கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த
இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின் அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள் முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக்
கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், வேதங்களைப் பயின்றவர்களும், வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள்
மிகுதியாக வாழும், திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 9
கிடந்தான்
இருந்தானும் கீழ்மேல் காணாது
தொடர்ந்துஆங்கு
அவர்ஏத்தச் சுடர் ஆயவன்கோயில்
படந்தாங்கு
அரவுஅல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங்
கியகண்ணார் வீழி மிழலையே.
பொழிப்புரை :பாம்பணையில் துயிலும்
திருமாலும், தாமரை மலரில் உறையும்
நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற
சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய
கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 10
சிக்கார்
துவர்ஆடைச் சிறுதட்டு உடையாரும்
நக்குஆங்கு
அலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார்
மறைவேள்வித் தலையாய் உலகுக்கு
மிக்கார்
அவர்வாழும் வீழி மிழலையே.
பொழிப்புரை :சிக்குப் பிடித்த
காவி உடையையும் சிறிய ஒலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம்
செய்து சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர்
வாழும் வீழிமிழலை ஆகும்.
பாடல்
எண் : 11
மேல்நின்று
இழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத்து
எயிற்றானை எழில்ஆர் பொழிற்காழி
ஞானத்து
உயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத்து
இவைசொல்ல வல்லோர் நல்லோரே.
பொழிப்புரை :விண்ணிலிருந்து
இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல்
சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில்
தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச்
சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
1.124 திருவீழிமிழலை பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அலர்மகள்
மலிதர அவனியில் நிகழ்பவர்,
மலர்மலி
குழல்உமை தனைஇடம் மகிழ்பவர்,
நலமலி
உருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :மலர் நிறைந்த கூந்தலை
உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய
சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினையவல்லவர் திருமகளின்
கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.
பாடல்
எண் : 2
இருநிலம்
இதன்மிசை எழில்பெறும் உருவினர்,
கருமலி
தருமிகு புவிமுதல் உலகினில்
இருள்அறு
மதியினர், இமையவர் தொழுதுஎழு
நிருபமன்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :எண்ணற்ற உயிரினங்கள்
வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும்
தண்ணளியும் செய்பவரும், தேவர்களால்
தொழப்பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள்
பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.
பாடல்
எண் : 3
கலைமகள்
தலைமகன் இவன்என வருபவர்
அலைமலி
தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி
இதழியும் இசைதரு சடையினர்
நிலைமலி
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :அலைகள் நிறைந்த கங்கை
நதி, பாம்பு, தலை யோடு, வில்வஇலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய
சடைமுடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர்
கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க்
கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.
பாடல்
எண் : 4
மாடுஅமர்
சனமகிழ் தருமனம் உடையவர்
காடுஅமர்
கழுதுகள் அவைமுழ வொடும்இசை
பாடலின்
நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடுஅமர்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :இடுகாட்டில் வாழும்
பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான்
இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்டகாலமாக விளங்குவதுமாகிய
திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும்
மனம் உடையவராவர்.
பாடல் எண் : 5
புகழ்மகள்
துணையினர், புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய்
தவன்உடை எழின்மறை வழிவளர்
முகம்அது
சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :சுருண்ட கூந்தலை உடைய
உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேதநெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து
சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திருவீழிமிழலையை நினைய வல்லவர்
புகழ்மகளைப் பொருந்துவர்.
பாடல்
எண் : 6
அன்றினர்
அரிஎன வருபவர் அரிதினில்
ஒன்றிய
திரிபுரம் ஒருநொடி யினில்எரி
சென்று
கொள் வகைசிறு முறுவல்கொடு ஒளிபெற
நின்றவன்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :தவம் செய்து அரிதாகப்
பெற்ற ஒன்றுபட்ட முப்புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி
உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ்பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய
வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.
பாடல்
எண் : 7
கரம்பயில்
கொடையினர், கடிமலர் அயனதொர்
சிரம்பயில்வு
அறஎறி சிவன்உறை செழுநகர்
வரம்பயில்
கலைபல மறைமுறை அறநெறி
நிரம்பினர்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :மணங்கமழும் தாமரை
மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த
சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு
வேதவிதிகளையும், அறநெறிகளையும்
அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர் தம் கைகளால் பலகாலும்
கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.
பாடல்
எண் : 8
ஒருக்கிய
உணர்வினொடு ஒளிநெறி செலும்அவர்
அரக்கன்நல்
மணிமுடி ஒருபதும் இருபது
கரக்கனம்
நெரிதர மலர்அடி விரல்கொடு
நெருக்கினன்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :இராவணனுடைய மணிமுடி
தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும்
நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய
சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய
ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.
பாடல்
எண் : 9
அடியவர்
குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர்
அயன்அரி கருதஅரு வகைதழல்
வடிவுரு
இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :மணம் மிக்க தாமரை
மலர்மேல் விளங்கும் பிரம னும், திருமாலும் நினைதற்கு
அரியவகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது
திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள்,
அடியவர்
பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.
பாடல்
எண் : 10
மன்மதன்
எனஒளி பெறும்அவர், மருதுஅமர்
வன்மலர்
துவர்உடை யவர்களும் மதியிலர்,
துன்மதி
அமணர்கள் தொடர்வுஅரு மிகுபுகழ்
நின்மலன்
மிழலையை நினையவ லவரே.
பொழிப்புரை :மருதத்தினது வலிய
மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும்
துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய
நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப்
பெறுவார்கள்.
பாடல்
எண் : 11
நித்திலன்
மிழலையை நிகர்இலி புகலியுள்
வித்தக
மறைமலி தமிழ்விர கனமொழி,
பத்தியில்
வருவன பத்துவை பயில்வொடு
கற்றுவல்
லவர்,உல கினில்அடி யவரே.
பொழிப்புரை :முத்துப் போன்றவனாகிய
சிவபிரானது திருவீழி மிழலையை ஒப்பற்ற புகலிப்பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு
வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால்
விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த
அடியவராய் விளங்குவர்.
திருச்சிற்றம்பலம்
1.132 திருவீழிமிழலை பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஏர்இசையும்
வடஆலின் கீழ்இருந்துஅங்கு
ஈர்இருவர்க்கு
இரங்கிநின்று
நேரியநான்
மறைப்பொருளை உரைத்து,ஒளிசேர்
நெறிஅளித்தோன் நின்றகோயில்,
பார்இசையும்
பண்டிதர்கள் பல்நாளும்
பயின்றுஓதும்
ஓசைகேட்டு
வேரிமலி
பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள்சொல்லும்
மிழலையாமே.
பொழிப்புரை :அழகிய வடவால
மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய
நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய
சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும்
வேதப்புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம்
பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும்
வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.
பாடல்
எண் : 2
பொறிஅரவம்
அதுசுற்றி, பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
,
மறிகடலைக்
கடைந்திட்ட விடம்உண்ட
கண்டத்தோன்
மன்னுங்கோயில்,
செறிஇதழ்த்தா
மரைத்தவிசில் திகழ்ந்துஓங்கும்
இலைக்குடைக்கீழ்ச்
செய் ஆர்செந்நெல்
வெறிகதிர்ச்சா
மரைஇரட்ட, இளஅன்னம்
வீற்றிருக்கும்
மிழலையாமே.
பொழிப்புரை :தேவர்கள் அனைவரும்
கூடி மந்தரமலையை மத் தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக்
கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த
நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவ னாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய
இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய
குடையின்கீழ் உள்ள இளஅன்னம், வயலில் விளையும்
செந்நெற் கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 3
எழுந்துஉலகை
நலிந்து,உழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும்
எழிற்கணாடி
உழுந்துஉருளும்
அளவையின்ஒள் எரிகொளவெம்
சிலைவளைத்தோன்
உறையும்கோயில்,
கொழுந்தரளம்
நகைகாட்டக் கோகநகம்
முகங்காட்டக்
குதித்துநீர்மேல்
விழுந்தகயல்
விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும்
மிழலையாமே.
பொழிப்புரை :வானத்திற் பறந்து
திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய
கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய
கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய
சிவபிரான் உறையும் கோயில், செழுமையான
முத்துக்கள் மகளிரின் பற்களையும்,
தாமரைகள்
முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும்
காட்டும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 4
உரைசேரும்
எண்பத்து நான்குநூறு
ஆயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப்
படைத்துஅவற்றின் உயிர்க்குஉயிராய்
அங்கங்கே
நின்றான்கோயில்,
வரைசேரும்
முகின்முழவ மயில்கள்பல
நடம்ஆட வண்டுபாட
விரைசேர்பொன்
இதழிதர மென்காந்தள்
கைஏற்கும் மிழலையாமே.
பொழிப்புரை :நூல்களில் உரைக்கப்
பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய்
அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து
முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல
நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம்
பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து
அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 5
காணுமாறு
அரியபெரு மான்ஆகி,
காலம்ஆய், குணங்கண்மூன்றுஆய்,
பேணுமூன்று
உருஆகி, பேருலகம்
படைத்துஅளிக்கும்
பெருமான்கோயில்,
"தாணுவாய் நின்றபர
தத்துவனை
உத்தமனை
இறைஞ்சீர்"என்று
வேணுஆர்
கொடி,விண்ணோர்
தமைவிளிப்பப்
போல்ஓங்கும்
மிழலையாமே.
பொழிப்புரை :காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப்
பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும்
சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய
நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை
அழைப்பன போல, அசைந்து ஓங்கி
விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.
பாடல்
எண் : 6
அகன்அமர்ந்த
அன்பினராய், அறுபகைசெற்று,
ஐம்புலனும் அடக்கி,ஞானம்
புகல்உடையோர்
தம்உள்ளப் புண்டரிகத்து
உள்இருக்கும்
புராணர்கோயில்,
தகவுஉடைநீர்
மணித்தலத்துச் சங்குஉளவர்க்
கம்திகழச்
சலசத்தீயுள்
மிகஉடைய
புன்குமலர்ப் பொரிஅட்ட
மணஞ்செய்யும்
மிழலையாமே.
பொழிப்புரை :உள்ளத்தில் பொருந்திய
அன்புடையவராய், காமம் முதலிய
அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய
ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத்
தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும்
தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த
புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண
நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 7
ஆறுஆடு
சடைமுடியன் அனல்ஆடும்
மலர்க்கையன், இமயப்பாவை
கூறுஆடு
திருவுருவன், கூத்துஆடும்
குணம்உடையோன்
குளிரும்கோயில்,
சேறுஆடு
செங்கழுநீர்த் தாதுஆடி
மதுஉண்டு சிவந்தவண்டு
வேறுஆய
உருஆகிச் செவ்வழிநல்
பண்பாடும் மிழலையாமே.
பொழிப்புரை :கங்கையணிந்த
சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில்
அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய
பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து
எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த
செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம்
உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக்களிக்கும்
திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 8
கருப்பமிகும்
உடல்அடர்த்து, கால்ஊன்றி,
கைமறித்து, கயிலைஎன்னும்
பொருப்புஎடுக்கல்
உறும்அரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரல்
புனிதர்கோயில்,
தருப்பமிகு
சலந்தரன்தன் உடல்தடிந்த
சக்கரத்தை
வேண்டிஈண்டு
விருப்பொடுமால்
வழிபாடு செய்யஇழி
விமானம்சேர்
மிழலையாமே.
பொழிப்புரை :கர்வம் மிகுந்த உடலை
வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப்
பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும்
தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும்
கோயில், செருக்கு மிக்க
சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப்
பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை
உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 9
செந்தளிர்மா
மலரோனும் திருமாலும்
ஏனமோடு அன்னமாகி
அந்தம்அடி
காணாதே, அவர்ஏத்த
வெளிப்பட்டோன்
அமரும்கோயில்,
புந்தியினால்
மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை
கையில்கொண்டு
வெந்தழலின்
வேட்டு,உலகின் மிகஅளிப்போர்
சேரூம்ஊர் மிழலையாமே.
பொழிப்புரை :சிவந்த இதழ்களையுடைய
பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும்
முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய
சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற
அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல்
வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய
திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 10
எண்இறந்த
அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும்
என்றும்தன்னை
நண்அரிய
வகைமயக்கி, தன்அடியார்க்கு
அருள்புரியும் நாதன்கோயில்,
பண்அமரும்
மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள்
வியப்புஎய்தி விமானத்தோ
டும்இழியும்
மிழலையாமே.
பொழிப்புரை :எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு
அவர்கள் அறிவை மயக்கித்தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய
கோயில், பண்ணிசை போலும்
மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை
கேட்டு வியந்து, தேவர்கள்
விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
பாடல்
எண் : 11
மின்இயலும்
மணிமாடம் மிடைவீழி
மிழலையான்
விரையார்பாதம்
சென்னிமிசைக்
கொண்டு ஒழுகும் சிரபுரக்கோன்,
செழுமறைகள்
பயிலுநாவன்,
பன்னியசீர்
மிகுஞான சம்பந்தன்,
பரிந்துரைத்த
பத்தும் ஏத்தி
இன்னிசையால்
பாடவல்லார் இருநிலத்தில்
ஈசன்எனும்
இயல்பினோரே.
பொழிப்புரை :மின்னல் போலும்
ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம்
கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின்
தலைவனும், செழுமறை பயின்ற
நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய
இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாட வல்லவர்கள் பெரிதான
இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.
திருச்சிற்றம்பலம்
3.009
திருவீழிமிழலை பண் - காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கேள்வியர், நாள்தொறும் ஓதுநல்
வேதத்தர், கேடிலா
வேள்விசெய்
அந்தணர், வேதியர், வீழி மிழலையார்,
வாழியர்
தோற்றமும் கேடும்வைப் பார்உயிர் கட்குஎலாம்
ஆழியர்
தம்அடி போற்றிஎன் பார்கட்கு அணியரே.
பொழிப்புரை :கேள்வி ஞானம்
உடையவர்களும் , நாள்தோறும் நல்ல
வேதத்தை ஓதுபவர்களும், கெடுதலில்லாத
யாகத்தைச் செய்கின்ற, எவ்வுயிர்களிடத்தும்
இரக்கமுடையவர்களுமான அந்தணர்கள்,
போற்றுகின்ற
வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந் தருளும் சிவபெருமானேயாவார். அவர்
ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும், இறப்பும் செய்வார். கடலாழம்
கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு அரியது. தம்முடைய
திருவடிகளைப் போற்றி வணங்கும் அன்பர்கட்கு நெருக்கமானவர்.
பாடல்
எண் : 2
கல்லின்நல்
பாவைஓர் பாகத்தர், காதலித்து ஏத்திய
மெல்இனத்
தார்பக்கல் மேவினர், வீழி மிழலையார்,
நல்இனத்
தார்செய்த வேள்வி செகுத்துஎழு ஞாயிற்றின்
பல்அனைத்
தும்தகர்த் தார்அடி யார்பாவ நாசரே.
பொழிப்புரை :இறைவர் மலைமகளாகிய
உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய
அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர் . சிவனை நினையாது
செய்த தக்கனது யாகத்தை அழித்தவர் . அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத்
தகர்த் தவர் . தம்மைத் தொழும் அடியவர்களின் பாவத்தைப் போக்குபவர் .
பாடல்
எண் : 3
நஞ்சினை
உண்டுஇருள் கண்டர்,பண்டு அந்தக
னைச்செற்ற
வெஞ்சின
மூஇலைச் சூலத்தர், வீழி மிழலையார்,
அஞ்சனக்
கண்உமை பங்கினர், கங்கைஅங்கு ஆடிய
மஞ்சனச்
செஞ்சடை யார்என வல்வினை மாயுமே.
பொழிப்புரை :இறைவர் நஞ்சுண்டதால்
இருள் போன்ற கறுத்த கண்டத்தையுடையவர் . கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற
அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர் . திருவீழி மிழலையில்
வீற்றிருந்தருளுபவர் . மைதீட்டிய கண்களையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக்
கொண்டவர் . கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடைமுடியையுடையவர் . அத்தகைய
சிவபெருமானைத் தொழும் அடியவர்களின் கொடு வினை யாவும் அழியும் .
பாடல்
எண் : 4
கலைஇலங்
கும்மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலைஇலங்
கும்மணி மாடத்தர், வீழி மிழலையார்,
தலைஇலங்
கும்பிறை, தாழ்வடம், சூலம், தமருகம்,
அலைஇலங்
கும்புனல் ஏற்றவர்க் கும்அடி யார்க்குமே.
பொழிப்புரை :மான் , மழுப்படை , யோகதண்டம் , உருத்திராக்கம் , குண்டலம் முதலியன கொண்டு , விலைமதிப்புடைய மணிகளால்
அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்தருளுகின்றார்
. தலையிலே பிறைச் சந்திரன் திகழ ,
கழுத்திலே
எலும்புமாலை விளங்க , கையில் சூலம் , உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று
இடபக்கொடி கொண்டு விளங்கு பவர் . யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும்
தம்மைப் போன்ற உருவம் (சாரூப பதவி) பெறச் செய்வார். ( ஒத்த தோழர்கள் ஒன்று போல்
அலங்கரித்துக் கொள்வது போல ).
பாடல்
எண் : 5
பிறைஉறு
செஞ்சடை யார்,விடை யார்,பிச்சை நச்சியே
வெறியுறு
நாள்பலி தேர்ந்துஉழல் வீழி மிழலையார்,
முறைமுறை
யால்இசை பாடுவார் ஆடிமுன் தொண்டர்கள்
இறைஉறை
வாஞ்சியம் அல்லதுஎப் போதும்என் னுள்ளமே.
பொழிப்புரை :திருவீழிமிழலையில்
வீற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடியையுடையவர் .
இடபத்தை வாகனமாக உடையவர் . பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில் பலியேற்றுத்
திரிவார் . தொண்டர்கள் பண்முறைப்படி இசைபாடி அதற்கேற்ப ஆட முற்பட அவர்களின் இதயத்
தாமரையில் வீற்றிருப்பார் . அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும் நினையாது .
பாடல்
எண் : 6
வசைஅறு
மாதவம் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக்கு
அன்றுஅருள் செய்தவர், வீழி மிழலையார்,
இசைவர
விட்டு,இயல் கேட்பித்து, கல்ல வடம்இட்டுத்
திசைதொழுது
ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.
பொழிப்புரை :திருவீழிமிழலையில்
வீற்றிருக்கும் இறைவர் அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி , அழகிய வில்லேந்திய வேட்டுவ வடிவில்
வந்து அவனுக்கு அருள்புரிந்தவர் . தம்மை இசைத்தமிழால் பாடி , தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப்
பிறரைக் கேட்கும்படி செய்து , முரசொலிக்கத்
திசைநோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பர் .
பாடல்
எண் : 7
சேடர்விண்
ணோர்கட்கு, தேவர்நல் மூஇரு
தொல்நூலர்
வீடர்,முத் தீயர்,நால் வேதத்தர், வீழி மிழலையார்,
காடுஅரங்
காஉமை காணஅண் டத்துஇமை யோர்தொழ
நாடகம்
ஆடியை ஏத்தவல் லார்வினை நாசமே.
பொழிப்புரை :திருவீழிமிழலையில்
வீற்றிருக்கும் இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர் . மேன்மை வாய்ந்த வேதாங்க
நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய் , மூவகை
அழலை ஓம்பி , நால் வேதங்களையும்
பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம் நல்குபவர் . சுடுகாட்டை அரங்காகக்
கொண்டு , உமாதேவியார் கண்டு
மகிழ , எல்லா
அண்டங்களிலுமுள்ள தேவர்கள் தொழத் திருநடனம் செய்பவராகிய சிவபெருமானை ஏத்தி
வழிபடுபவர்களின் வினையாவும் அழியும் .
பாடல்
எண் : 8
எடுத்தவன்
மாமலைக் கீழ்அவ் இராவணன் வீழ்தர
விடுத்துஅருள்
செய்துஇசை கேட்டவர் வீழி மிழலையார்,
படுத்துவெங்
காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர்
இன்பம், கொடுப்பர்
தொழக்குறைவு இல்லையே.
பொழிப்புரை :பெரியகயிலை மலையை
அப்புறப்படுத்த எடுத்த இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து , பின் அவன் சாமகானம் பாடிய இசை கேட்டு
அருள்புரிந்தார் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் . அவர் கொடிய காலனை
உதைத்து , தம்மருகில் நின்று
வழிபாடு செய்த பாலனான மார்க்கண்டேயனுக்குப் பேரின்பம் கொடுத்தார் . அச்
சிவபெருமான் தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவு மில்லாமல்
எல்லா நலன்களையும் கொடுப்பார் .
பாடல்
எண் : 9
திக்குஅமர்
நான்முகன் மால்அண்டம் மண்டலந் தேடிட
மிக்குஅமர்
தீத்திரள் ஆயவர், வீழி மிழலையார்,
சொக்கம்
அதுஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
நக்கர்தம்
நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
பொழிப்புரை :நான்கு திக்குகளையும்
நோக்குகின்ற முகங்களை உடைய பிரமனும், திருமாலும்
மேலுள்ள அண்டங்கள் அனைத்திலும்,
கீழுள்ள
அண்டங்களிலும் முடி, அடி தேட, காணமுடியாவண்ணம், மிகுந்து எழும் தீப்பிழம்பாய் நின்றவர்
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் சொக்கு எனப்படும் ஒருவகைத்
திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள்
சூழ விளங்கும் நக்கர். அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள்
சிவபுண்ணியம் செய்தவராவர்.
பாடல்
எண் : 10
துற்றுஅரை
ஆர்துவர் ஆடையர், துப்புரவு ஒன்றுஇலா
வெற்றுஅரை
யார்,அறி யாநெறி வீழி
மிழலையார்,
சொல்தெரி
யாப்பொருள் சோதிக்குஅப் பால்நின்ற சோதிதான்
மற்றுஅறி
யாஅடி யார்கள்தம் சிந்தையுள் மன்னுமே.
பொழிப்புரை :பொருந்திய காவியாடை
அணிந்த புத்தர்களும் , ஆடையணியாத
சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில் விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும்
இறைவர் . சொல்லை யும் , பொருளையும் கடந்து
அருள் ஒளியாக விளங்கும் இறைவர்,
தம்மைத்
தவிர வேறெதையும் அறியாத அடியார்களின் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார் .
பாடல்
எண் : 11
வேதியர்
கைதொழு வீழி மிழலை விரும்பிய
ஆதியை, ஆழ்பொழில் காழியுள்
ஞானசம் பந்தன் ஆய்ந்து
ஓதிய
ஒண்தமிழ் பத்து இவை உற்று உரை செய்பவர்
மாதுஇயல்
பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.
பொழிப்புரை :அந்தணர்கள்
கைகூப்பித் தொழுது போற்றும் திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை, சோலைகள் விளங்கும் சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப்போற்றி
வழிபடுபவர்கள் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர் போன்ற
திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
----- தொடரும்-----
----- தொடரும்-----
No comments:
Post a Comment