அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உருவேறவே ஜெபித்து
(விராலிமலை)
முருகா! சற்குருநாரைப்
பெற்று உய்ய அருள்
தனதான
தான தத்த தனதான தான தத்த
தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற
வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி
உணர்வாசை
யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ
தழலாடி
வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே
குருநாடி
ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர்
குலையாமல்
நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி
மருகா
புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா
மதுரா
புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
உரு
ஏறவே ஜெபித்து, ஒருகோடி ஓம சித்தி
உடன் ஆக, ஆகமத்து ...... உகந்து பேணி,
உணர்வு
ஆசை யார் இடத்தும் மருவாது, ஓர் எழுத்தை
ஒழியாது ஊதை விட்டு ...... இருந்து, நாளும்
தரியாத போதகத்தர் குரு ஆவர், ஓர் ஒருத்தர்
தருவார்கள் ஞான வித்தை, ...... தஞ்சம்ஆமோ?
தழல்
ஆடி வீதி வட்டம், ஒளி போத ஞான சித்தி,
தரும் ஆகில் ஆகும், அத்தை ...... கண்டிலேனே.
குருநாடு
இராசரிக்கர், துரியோதன ஆதி
வர்க்க
குடிமாள மாய விட்டு, ...... குந்திபாலர்
குலையாமல்
நீதி கட்டி, எழுபாரை ஆள விட்ட
குறள் ஆகன், ஊறு இல் நெட்டை ...... கொண்டஆதி
மருகா! புராரி சித்தன் மகனே! விராலி சித்ர
மலைமேல் உலாவு சித்த! ...... அங்கைவேலா!
மதுரா
புர ஈசர் மெய்க்க அரசு ஆளும் மாறன் வெப்பு,
வளை கூனையே நிமிர்த்த ...... தம்பிரானே!
பதவுரை
குருநாடு இராசரிக்கர் --- குருநாட்டை ஆண்டு
வந்த அரசர்களாகிய,
துரியோதன ஆதி வர்க்க குடி மாள --- துரியோதனன்
முதலிய கொடிய குலமும் குடியும் மாண்டொழிய,
மாயம் இட்டு --- மாயைகளைச் செய்தும்,
குந்தி பாலர் --- குந்தி தேவியின்
புதல்வர்களாகிய பாண்டவர்கள்,
குலையாமல் --- குலையாமற்படிக்கு,
நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட ---
சிறந்த நீதிநெறி வழுவாது ஏழுலகங்களையும் அரசாளுமாறு அருள் புரிந்தவரும்,
குறள் ஆகன் --- குறிய வடிவத்தை யுடையவரும்,
ஊறில் நெட்டை கொண்ட ஆதி --- கெடுதலில்லாத
நீண்ட வடிவத்தைக் கொண்ட முதல்வரும் ஆகிய விட்டுணுமூர்த்தியின்,
மருகா --- திருமருகரே!
புர அரி சித்தன் மகனே --- முப்புரங்களை
எரித்த எல்லாம் வல்ல சித்தராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!
விராலி சித்ர மலைமேல் உலாவு சித்த ---
அழகிய விராலிமலை மீது உலாவுகின்ற சித்தரே!
அம் கை வேலா --- அழகிய திருக்கரத்தில்
வேலாயுதத்தைத் தரித்தவரே!
மதுராபுர ஈசர் மெய்க்க --– மதுரையில்
வாழும் சிவபெருமானுடைய திருவருளை மெய்ப்பிக்குமாறு,
அரசு ஆளும் மாறன் --- அரசு புரிகின்ற
கூண்பாண்டியனுடைய,
வெப்ப வளை கூனையே நிமிர்த்த --- வெப்பு நோயை நீக்கியதுடன், வளைந்த கூனையும் நிமிர்த்தி ஆட்கொண்ட,
தம்பிரானே --- தனக்குமேல் தலைவன் இல்லாதவரே!
உருவ ஏறவே ஜெபித்து --- மந்திர உரு
ஏறுமாறு இடையறாது ஜெபஞ் செய்தும்,
ஒரு கோடி ஓம சித்தி உடனாக --- ஓமத்தீயில்
ஒருகோடி ஆகுதி செய்து அதனால் சித்தி பெற்றும்,
ஆகமத்து உகந்து பேணி --- சிவாமங்களை உவந்து
விரும்பியும்,
உணர்வு ஆசை யாரிடத்து மருவாது --- அறிவும்
ஆசையும் யாரிடத்தும் வைக்காமலும்,
ஓர் எழுத்தை ஒழியாது ஊதைவிட்டு இருந்து ---
பிரணவ மந்திரத்தை யுச்சரித்து இறையறாது பிராண வாயுவை யோக முறைப்படி விடுவித்து உள்ளம்
ஒருமைபட்டு இருந்தும்,
நாளும் தரியாத போதகத்தர் --- நாள்தோறும்
மேற்கூறியவற்றை மேற்கொள்ளாது பேரளவில் குரு என்று வெளிப்பட்டு சிவஞான நிலையைப்
பற்றி போதிக்க வந்து,
குரு ஆவர் --- குருவாக உலாவுவார்கள்;
ஓர் ஒருத்தர் ஞான வித்தை தருவார்கள் --- அங்ஙனம்
வருகின்ற அவர்கள் ஞான வித்தையும் உபதேசிப்பார்கள்;
தஞ்சம் ஆமோ --- அவ்வாறு அநுபவமின்றி அவர்கள்
உபதேசிப்பது பற்றுக்கோடாக ஆகுமோ?
தழல் ஆடி வீதி --- புருவ நடுவே
ஜோதியானது ஆடிபோல் விளங்கி வீதிபோல் வழிகாட்ட,
வட்டம் ஒளி ஞான போத சித்தி --- வட்டவடிவமாகி
ஞான ஒளிவீச சிவபோத சித்தியை,
தரும் ஆகில் ஆகும் --- தருவதனால் அது
பெறத்தக்கதாகும்.
அத்தை கண்டிலேன் --- அதனை அடியேன் காணாமல்
தவிக்கின்றேன்.
பொழிப்புரை
குருநாட்டையாண்ட துரியோதனாதியர் குலம்
மாள அநேக மாயைகளைச் செய்து குந்தியின் மைந்தர்களாகிய பாண்டவர்கள் துன்புறாமல் நீதி
நெறியோடு ஏழுலகங்களை யாளச் செய்தவரும், குறளுருவத்தை
எடுத்தவரும், நெடிய உருவத்தைக்
கொண்ட முதல்வருமாகிய நாராயண மூர்த்தியின் திருக்குமாரரே!
அழகிய திரிபுரதனராகிய சிவபெருமானுடைய
திருக்குமாரரே!
அழகிய விராலிமலையின் மீது உலாவுகின்ற
சித்தரே!
அழகிய கரத்தில் வேற்படையை ஏந்தியவரே!
மதுரையில் எழுந்தருளியுள்ள சொக்கலிங்கப்
பெருமானுடைய திருவருளை மெய்ப்பிக்கும் பொருட்டு, அங்கு அரசாண்ட பாண்டியனது வெப்பு
நோயையும் வளைந்த கூனையும் நீக்கிய தலைவரே!
உருவு நிரம்ப இடையறாது ஜெபஞ்செய்தும், ஓமத்தீயில் ஒருகோடி ஆகுதிகளைச் செய்து
சித்திபெற்றும் சிவாகமங்களை உவந்து விரும்பியும், சிவத்தைத் தவிர வேறு ஒருவரையும் அறிந்து
விரும்பாமலும் அடுக்காமலும், ஓம் என்னும்
தனிமந்திரத்தை ஒழியாது சிந்தித்து சிவயோக முறைப்படி பிராணவாயுவை விடுத்தும், நாடோறும் இந்த நலங்களை மேற்கொள்ளாத
சிலர் குருவென்று புறப்பட்டு உபதேசிக்கும் உபதேசம் பற்றுக்கேடாக ஆகுமோ? ஒரு போதும் ஆகாது.
புருவ நடவில் கண்ணாடியைப் போல் ஜோதி
தோன்றி வட்டமான அஜ் ஜோதியில் வழிதோன்றி அதனுள் ஒளி செய்யும் ஞானப் பிரகாசமானது
சித்தித்து அடியேனுக்குச் சிறந்த நலத்தைத் தருமாயின் அது சிறப்புடையதாகும். அத்தகைய
நலத்தை அடியேன் காணாமல் அவமே அலைகின்றேன். (அருள் புரிவீர்).
விரிவுரை
இப்பாடலில்,முதல் நான்கு வரியில்
குருவாவதற்குரியவர் யாவர்? அவர் தன்மை இவை
என்பவற்றை விளக்குகின்றனர்.
உரு
ஏறவே ஜெபித்து
---
இறைவனுடைய
மூல மந்திரத்தை ஒருமையுடன் தனி இடத்து அமர்ந்து விதிப்படி உரு ஏற ஜெபித்தல்
வேண்டும். அவ்வாறு ஜெபிப்பவர்களுடைய சஞ்சித வினைகளாகிய பஞ்சுப் பொறிகள்
ஜெபத்தீயால் எரிந்தொழியும்.
ஒருகோடி
ஓம சித்தி ---
சிவவேள்விக்
குண்டத்தில் விளங்கும் சிவாக்கினியில் ஒரு கோடி ஆகுதி செய்து வழிபடல். அதனால் கலியின்
வெம்மை தணியும்.
பூமென்
கோதை உமையொரு பாகனை
ஓமஞ்
செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்,
காமற்
காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம்
ஏத்தநம் தீவினை நாசமே.
வஞ்சித்து
என் வளை கவர்ந்தான், வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால்
சிறகுஅன்னம் பரந்துஆர்க்கும் பழனத்தான்,
அஞ்சிப்போய்க்
கலிமெலிய அழல்ஓம்பும் அப்பூதி
குஞ்சிப்பூவாய்
நின்ற சேவடியாய் கோடு இயையே. --- அப்பர்
ஆகமத்து
உகந்து பேணி ---
சிவாகமமே
பதிநூல் ஆதலால் அதனை உவந்து விரும்பி ஓதுவர்.
ஆசை
யாரிடத்து மருவாது ---
இறைவனையே
ஏத்தும் திருவுடையார் ஏனையோரை யாது குறித்தும் விரும்பார்.
திருவுமெய்ப்
பொருளும் செல்வமும் எனக்குஉன்
சீர்உடைக் கழல்கள் என்று எண்ணி,
ஒருவரை
மதியாது, உறாமைகள் செய்தும்,
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்,
முருகுஅமர்
சோலைசூழ்திரு முல்லை
வாயிலாய், வாயினால் உன்னைப்
பரவிடுமு
அடியேன் படுதுயர் களையாய்,
பாசுபதா! பரஞ்சுடரே! --- சுந்தரர்.
ஓர்
எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து ---
பிரணவ
மந்திரத்தை உச்சரித்து சிவயோக முறைப்படி பிராணவாயுவை சஞ்சரிக்கச் செய்து
ஓவியம்போல் அசைவற்றிருப்பார்.
ஓமெழுத்தில்
அன்பு மிகஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே. ---
(காமியத்தழுந்தி)
திருப்புகழ்.
தரியாத
போதகத்தர் குரு ஆவரோ?
---
மேற்கூறிய
குருவின் இலக்கணங்கள் இல்லாத வெறும் ஆட்கள் குருவென்ற பேருடன் வெளிவந்து
உபதேசிப்பதனால் அவர்கள் உண்மைக் குருவாகார்.
தருவார்கள்
ஞானவித்தை தஞ்சமாமோ? ---
அவர்கள்
உபதேசிக்கும் பொருளும் உண்மையாகா. குருடனுக்கு மற்றொரு குருடன் வழிகாட்டி இருவரும்
குழியில் வீழ்ந்ததோ டொக்கும்.
குருடருக்குக்
கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும்
பழங்குழி வீழ்வர்கள் முன்பின்
குருடரும்
வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும்
வீழ்வார் குருடரோடு ஆகியே ---
திருமந்திரம்.
அருள்மிகுத்த
ஆகமநூல் படித்து அறியார்!
கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின்
பயன் அறியார்! குருக்கள் என்றே
உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம்மிகுத்த
தண்டலைநீள் நெறியாரே!
அவர்கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக்
குருடன்கோல் கொடுத்துவழி
காட்டிவரும் கொள்கை தானே. --- தண்டலையார் சதகம்.
தழலாடி........................ஞானசித்தி
---
புருவ
மத்தியில் நாட்டத்தை வைத்து தியானஞ் செய்யில் ஆங்கு ஞானஒளி வீசி அதில் வீதி
போன்றதொரு வழியும் உண்டாகி சிவஞானஒளி யுண்டாகும்.
“சோதிமலை ஒன்று
தோன்றிற்று அதில்ஒரு
வீதி உண்டாச்சுதடி அம்மா” --- திருவருட்பா.
“கற்பகந் தெருவில்
வீதிகொண்டு” --- (கட்டிமுண்ட) திருப்புகழ்
குருநாடி
ராசரிக்கர்..............ஆதி ---
சந்திர
வம்சத்தில் சவ்வருணன் என்ற அரசனுக்கு தபதி என்பாளிடம் குருவருளால் பிறந்த புதல்வனுக்கு
குரு என்று பேர். குருவென்ற அம் மன்னன் நனி சிறந்து புகழுடன் பூமியைப் புரந்தனன்.
அதனால் அந்நாட்டிற்குக் குருநாடு என்ற பேருண்டாயிற்று. அவன் மரபும் குருகுலம்
எனப்படும்.
அம்மரபில்
வந்தவர்கள் பாண்டவர்கள்.
நன்னெறியினின்றும்
வழுவாத பாண்டவர்கட்குக் கண்ணபிரான் துணை நின்று, கொடுங் குணங்கள் யாவும் பொருந்திய
துரியோதனாதியரை மாள்வித்தனர். அதன் பொருட்டு பகலை இரவாக்கியது, விதுரர் வில்லை வெட்டச் செய்தது. பீஷ்ம
துரோணர்களை தந்திரத்தால் கொல்வித்தது ஆகிய பல மாயங்களைச் செய்தனர். துரியோதனனிடம்
தூதாகச் சிறிய வடிவினர்போல் சென்று,
அவன்
ஆழ்ந்த குழி வெட்டி அதன்மேல் திடுக்கிட்டு ஆசனம் போட்டு வைக்க, அதன்மீது இருந்து அடி பாதலமும் முடி ககன
கூடமும் செல்ல விசுவரூப மெடுத்தனர். இந்த வரலாறுகளை சுவாமிகள் இனிது எடுத்து
சுருங்கச் சொல்கின்றனர்.
சித்தன்
மகனே ---
சிவபெருமான்
மதுரையில் எல்லாம் வல்ல சித்தராகி வந்து அருள் விளையாடலைச் செய்து கல்லானைக்குக்
கரும்பு கொடுத்தமையால் சித்தன் எனக் குறித்தனர்.
விராலி
சித்ர மலைமேல் உலாவு சித்த ---
சித்தன்
மகன் சித்தன்; சித்தர்களால் வணங்கத்
தக்கவன்; பழநிக்கும் சித்தன்
வாழ்வு என்ற பேருண்டு.
“சித்தர பரத்தமரர்
கத்தா” --- (இத்தாரணிக்குள்)
திருப்புகழ்
வளைகூனையே
நிமிர்த்த ---
சுப்ரமண்ய
சாரூபம் பெற்ற அபர சுப்ரமணியரில் ஒருவர் சுப்ரமணியத்தின் திருவருள் தாங்கி
திருஞானசம்பந்தராக அவதரித்து சைவ சமயத்தையும், சோமசுந்தரர் திருவருளையும்
வெளிப்படுத்தி நிறுவி, பாண்டியன் உள்ளக் கூனையும்
உடல் கூனையும் நிமிர்த்தி அருளினார்.
கருத்துரை
திருமால்
மருக! சிவமைந்த! விராலிமலை மேவு விமல! பாண்டியனையாண்ட பரம! அசற்குருவை விலக்கி
சற்குரு நாதனைப் பெற்று சிவஞானமுற்று உய்ய அருள் புரிவீர்.
No comments:
Post a Comment