ராஜகம்பீர வளநாட்டு மலை - 0402. மாகசஞ்சார

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாகசஞ் சாரமுகில் (ராஜகெம்பீரவளநாட்டு மலை)

முருகா!
உண்மைப் பொருளை உபதேசித்து அருள்தானனந் தானதன தாத்த தனதன
     தானனந் தானதன தாத்த தனதன
          தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான


மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
     போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
          மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ......கண்டுபோல

மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
     சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
          வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ......மன்றுளாடி

சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
     போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
          தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ......வந்துகாசு

தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
     வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
          சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ......வந்துதாராய்

வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
     மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
          வீரனென் பானொருப ராக்ர னெனவர .....அன்றுநோமன்

மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
     ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
          வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன்

ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
     வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
          ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென்

றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
     தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
          ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மாக சஞ்சார முகில் தோற்ற குழல்கொடு,
     போக இந்த்ராதி சிலை தோற்ற நுதல்கொடு,
          மான வண்டு, றுகணை தோற்ற விழிகொடு, ......கண்டுபோல

மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ்கொடு,
     சோலைசென்று ஊதுகுயில் தோற்ற இசைகொடு,
          வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு, ......மன்றுள் ஆடி

சீகரம் பேணு துடி தோற்ற இடைகொடு,
     போக பண்டார பணி தோற்ற அரைகொடு,
          தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடைகொடு ......வந்து, காசு

தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என, உறவு
     ஆடுகின்றேனை, மலம் நீக்கி, ஒளிதரு
          சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை ......வந்துதாராய்.
  
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில்
     மாமகம் கூரும் அது தீர்க்க, வடிவு உடை
          வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர,......அன்றுசோமன்

மேனியும் தேய, கதிர் தோற்ற எயிறு உக,
     ஆன் உகும் தீ கை அற, சேட்ட விதிதலை
          வீழ, நல் பாரதியும் மூக்கு நழுவிட, ...... வந்த மாயன்

ஏக, நின்று ஆகி அமர் தோற்று வதறிட,
     வேக உங்காரமொடு ஆர்க்க, அலகைகள்
          ஏறி வென்று ஆடுகளம் நீக்கி, முநிவரர் ...... வந்து சேய் என்று

ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை
     தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய
          ராசகெம்பீர வளநாட்டு மலைவளர் ...... தம்பிரானே.


பதவுரை

வேகம் உண்டாகி --- கோபம் கொண்டு,

உமை சாற்றும் அளவினில் --- உமாதேவியார் கூறிய உடனே,

மாமகம் கூரும் அது தீர்க்க --- தக்கன் இயற்றும் பெரிய வேள்வியை அழிக்கும் பொருட்டு,

வடிவுடை வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர ---  ஒளியும் அழகும் நிறைந்த, ஒப்பற்றவனாக வீரபத்திரன் என்னும் வலிமையாளன் தோன்றி வர,

         அன்று சோமன் மேனியும் தேய --- அப்போது அந்த வேள்வியிலே கலந்துக் கொண்டிருந்தவர்களுள், சந்திரன் உடல் தேயவும்,

     கதிர் தோற்ற எயிறு உக --- சூரியனின் பற்களை உதிரவும்,

     ஆன் உகும் தீ கை அற --- வேள்வியிலே இட்ட பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கைகள் அற்று விழவும்,

     சேட்ட விதி தலை வீழ --- தக்கன் தலை அற்று விழவும்,

     நல் பாரதியும் மூக்கு நழுவிட --- கலைவாணியின் மூக்கு அறுபடவும்,

     வந்த மாயன் ஏக --- அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்கவும்,

     நின்றாகி அமர் தோற்று வதறிட --- அங்கு வந்திருந்த தேவர்கள் எல்லாம் நாலா திசைகளிலும் தோற்று ஓடவும்,

      வேக உங்காரமோடு ஆர்க்க --- கோப உங்காரத்தோடு ஆரவாரம் செய்ய,

     அலகைகள் ஏறி வென்று ஆடுகளம் நீக்கி ---  பேய்கள் கூடி வென்று ஆடிய வேள்விச் சாலையை விட்டு விலக்க,

      முநிவர் வந்து சேய் என்று --- முனிவர்களும் வந்து சேயே என்றும்,

     ஈச --- ஈசனே என்றும் வணங்கி,

     நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் --- நன்மை தருவதான நால்வகைப் புருஷார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றின் திறத்தை அறிந்துகொள்ள அருள்வாய் என்று வேண்டவும்,

     கேள்வி நெறி கீர்த்தி மருவிய --- அவர்களுக்கு அருளிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட

     ராசகெம்பீர வளநாட்டு மலைவளர் தம்பிரானே --- ராஜகெம்பீர வளநாட்டு மலையில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

         மாகம் சஞ்சாரம் முகில் தோற்ற குழல் கொ(ண்)டு --- ஆகாயத்தில் உலவுகின்ற மேகம் தோல்வி உறும்படி, அமைந்துள்ள கரிய கூந்தலைக் கொண்டும்,

         போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொ(ண்)டு ---. யந்த மேகத்தை வாகனமாக உடையவனும், போகங்களை அனுபவிக்கின்றவனும் ஆன இந்திரனுடைய வானவில் தோல்வி அடையும்படி, அழகுற விளங்கும் நெற்றியைக் கொண்டும்,

         மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொ(ண்)டு --- பெருமை மிக்க வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கணையாகக் கொண்டுள்ள மன்மதனுடைய மலர் அம்புகள் தோல்வி உற விளங்கும் கண்களைக் கொண்டும்,

     கண்டு போல மாலர் கொண்டு ஆடு --- கற்கண்டு போல இனிமை நிறைந்தது என்று காம மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற,

     கனி தோற்ற இதழ் கொ(ண்)டு --- கொவ்வைக் கனியைத் தோல்வியுறச் செய்யும் வாயிதழைக் கொண்டும்,

         சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொ(ண்)டு --- மலர்ச் சோலைகளிலே கூவுகின்ற குயிலின் குரலும் தோற்றுப் போகும்படியான இனிமையான குரல் இசையைக் கொண்டும்,

     வார் பொரும் பாரமலை தோற்ற முலை கொ(ண்)டு --- கச்சுகளை முட்டி நிற்கும் பருத்து விளங்கும், மலையும் தோல்வி அடையும்படிச் செய்த முலைகளைக் கொண்டும்,

         மன்றுள் ஆடி சீகரம் பேணு துடி தோற்ற இடை கொ(ண்)டு --- திருச்சிற்றம்பலத்திலே திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான் திருக்கரத்திலே விளங்கும் துடியானது தோற்கும்படியான நுண்ணிய இடையைக் கொண்டும்,

     போக பண்டார பணி தோற்ற அரை கொ(ண்)டு --- காம போகத்தின் கருவூலமாகிய, பாம்பைத் தோல்வியுறச் செய்யும் பெண்குறியைக் கொண்டும்,

      தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொ(ண்)டு வந்து --- தேன் சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வி யுறச் செய்த தொடையைக் கொண்டும் வந்து,

      காசு தேடுகின்றாரொடு --- பொருளைத் தேடி நிற்கும் பொதுமாதரோடு,

     மெய் தூர்த்தன் என --- காமாந்தகாரனாக

     உறவாடுகின்ற --- அவரோடு உறவாடுகின்ற  

     எனை மல(ம்) நீக்கி --- என்னைப் பற்றி உள்ள இருள் மலங்களை நீக்கி,

     ஒளிதரு சீவன் ஒன்றான --- ஞான ஒளி மிகுந்த சீவன் என்னும்படி ஆக்கி,

     பரமார்த்த தெரிசனை வந்து தாராய் --- மேலான அருள்  விளக்கத்தை அடியேனுக்குத் தந்தருளுக.

        
பொழிப்புரை


உமாதேவியார் கோபம் கொண்டு கூறிய அளவிலேயே, தக்கன் இயற்றும் பெரிய வேள்வியை அழிக்கும் பொருட்டு, ஒளியும் அழகும் நிறைந்த, ஒப்பற்றவனாக வீரபத்திரன் என்னும் வலிமையாளன் தோன்றி வர, அப்போது அந்த வேள்வியிலே கலந்துக் கொண்டிருந்தவர்களுள், சந்திரன் உடல் தேயவும், சூரியனின் பற்களை உதிரவும், வேள்வியிலே இட்ட பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கைகள் அற்று விழவும், தக்கன் தலை அற்று விழவும், கலைவாணியின் மூக்கு அறுபடவும், அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்கவும், தேவர்கள் எல்லாம் நாலா திசைகளிலும் தோற்று ஓடவும், கோப உங்காரத்தோடு ஆரவாரம் செய்ய, பேய்கள் கூடி வென்று ஆடிய வேள்விச் சாலையை விட்டு விலக்க,  முனிவர்களும் வந்து சேயே என்றும், ஈசனே என்றும் வணங்கி நின்று, நன்மை தருவதான நால்வகைப் புருஷார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றின் திறத்தை அறிந்துகொள்ள அருள்வாய் என்று வேண்டவும், அவர்களுக்கு அருளிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட ராஜகெம்பீர வளநாட்டு மலையில் விளங்கும் தனிப்பெரும் தலைவரே!

      ஆகாயத்தில் உலவுகின்ற மேகம் தோல்வி உறும்படி, அமைந்துள்ள கரிய கூந்தலைக் கொண்டும், அந்த மேகத்தை வாகனமாக உடையவனும், போகங்களை அனுபவிக்கின்றவனும் ஆன இந்திரனுடைய வானவில் தோல்வி அடையும்படி, அழகுற விளங்கும் நெற்றியைக் கொண்டும், பெருமை மிக்க வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கணையாகக் கொண்டுள்ள மன்மதனுடைய மலர் அம்புகள் தோல்வி உற விளங்கும் கண்களைக் கொண்டும், கற்கண்டு போல இனிமை நிறைந்தது என்று காம மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற, கொவ்வைக் கனியைத் தோல்வியுறச் செய்யும் வாயிதழைக் கொண்டும், மலர்ச் சோலைகளிலே கூவுகின்ற குயிலின் குரலும் தோற்றுப் போகும்படியான இனிமையான குரல் இசையைக் கொண்டும், கச்சுகளை முட்டி நிற்கும் பருத்து விளங்கும், மலையும் தோல்வி அடையும்படிச் செய்த முலைகளைக் கொண்டும், திருச்சிற்றம்பலத்திலே திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான் திருக்கரத்திலே விளங்கும் துடியானது தோற்கும்படியான நுண்ணிய இடையைக் கொண்டும், காம போகத்தின் கருவூலமாகிய, பாம்பைத் தோல்வியுறச் செய்யும் பெண்குறியைக் கொண்டும், தேன்சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வி உறச் செய்த தொடையைக் கொண்டும் வந்து, பொருளைத் தேடி நிற்கும் பொதுமாதரோடு, காமாந்தகாரனாக உறவாடுகின்ற என்னைப் பற்றி உள்ள இருள் மலங்களை நீக்கி,ஞான ஒளி மிகுந்த சீவன் என்னும்படி ஆக்கி, மேலான அருள்  விளக்கத்தை அடியேனுக்குத் தந்தருளுக.


விரிவுரை

இத் திருப்புகழின் முதல் பகுதியில் பொதுமாதரின் அவயவங்களைச் சுவாமிகள் தெரிவிக்கின்றார்.

பிற்பகுதியில், தக்கனது வேள்வியைச் சிதைத்த வரலாற்றைக் கூறுகின்றார்.

     தக்கன் தவம் செய்து, உமையை மகளாகப் பெற்றுச் சிவபிரானுக்குக் கொடுத்துப் பின்பு செருக்கினால், அப்பெருமானை இகழ்ந்து ஒரு வேள்வி இயற்றினான். அதற்கு அவரைத் தவிரப் பிற தேவர்களை அழைத்தான். தாட்சாயணியாகிய தன் மகளையும் அழைத்தான் இல்லை. எனினும், தந்தை செய்யும் வேள்விக்குப் போக வேண்டும் என்று வந்த தேவியை அலட்சியம் செய்தான். சிவபிரான் வெகுண்டு வீரபத்திரரை ஏவி, சந்திரன் முதலிய தேவர்களை ஒறுத்து, தக்கனது தலையைக் கொய்வித்தான். தக்கன் செய்த பெருவேள்வி தீமையாய் முடிந்தது


சந்திரனைத் தேய்த்து அருளி, தக்கன்தன் வேள்வியினில்,
இந்திரனைத் தோள்நெரித்திட்டு, எச்சன் தலைஅரிந்து,
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.       --- திருவாசகம்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
உருந்திர நாதனுக்கு உந்தீபற.

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு, அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீபற
சதுர்முகன் தாதை என்று உந்தீபற.

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி, உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன் என்றே உந்தீபற.

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பு அற உந்தீபற.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு உந்தீபற
கருக்கெட நாம் எல்லாம் உந்தீபற.

நாமகள் நாசி சிரம் பிரமன்படச்
சோமன் முகம் நெரித்து உந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.

நான்மறை யோனும் மகத்து இயமான் படப்
போம்வழி தேடுமாறு உந்தீபற
புரந்தரன் வேள்வியில் உந்தீபற.

சூரிய னார்தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்தவாறு உந்தீபற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

தக்கனார் அன்றே தலை இழந்தார், தக்கன்
மக்களைச் சூழ நின்று உந்தீபற
மடிந்தது வேள்வி என்று உந்தீபற.          --- திருவாசகம்.

பண்டுஓர் நாள்இகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.       ---  அப்பர்.

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந்
         திரன்எச்சன் அருக்கன் அங்கி
மிக்க விதா தாவினொடும் விதிவழியே
         தண்டித்த விமலர்கோயில்
கொக்குஇனிய கொழும்வருக்கை கதலிகமுகு
         உயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறுஒழுகிச் சேறுஉலரா
         நீள்வயல்சூழ் முதுகுன்றமே. ---  திருஞானசம்பந்தர்.

மலைமகள் தனைஇகழ்வு அதுசெய்த
         மதிஅறு சிறுமன வனதுயர்
தலையினொடு அழல்உரு வனகரம்
         அறமுனி வுசெய்தவன் உறைபதி
கலைநில வியபுல வர்கள்இடர்
         களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய
         திகழ்பொழில் வளர்திரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்வி
செண்டுஆடுதல் புரிந்தான்திருச் சுழியல்பெரு மானைக்
குண்டுஆடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா
மிண்டுஆடிய அதுசெய்தது ஆனால்வரு விதியே. ---  சுந்தரர்.

     இனி, இத் திருப்புகழில், சுவாமிகள் ஓர் உண்மையை உறைக்கின்றார். ஐம்முகச் சிவனும், ஆறுமுகனும் வேறு இல்லை.  அதனால், தக்கனது வேள்வியை அழித்தவர் முருகப் பெருமான் என்கின்றார்.
        
         ராஜகம்பீர வளநாடு என்பது, தற்போது திருக்கற்குடி என்று வழங்கப்படுகிறது என்றும், திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் மலை என்றும் கூறுவர்.

     ராஜகெம்பீர நாடு என்பது வயலூரைச் சூழ்ந்துள்ள நாடு: வயலூரைச் சூழ்ந்துள்ள அந்நாட்டில் சாசனங்கள் எழுதும்போது ராஜகெம்பீர நாடு என எழுதுவதை இக்காலத்திலும் காணலாம் என்று திருமுருக வாரியார் சுவாமிகள், பழநித் திருப்புகழிலே விளக்கம் கண்டுள்ளார்.

No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...