திருத் தெளிச்சேரி




திருத் தெளிச்சேரி
(கோயில்பத்து)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் தருத்தலம்.

         இத்திருத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோயில் உள்ள பகுதி "கோயில்பத்து" என்று வழங்கப்படுகிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் காரைக்கால்.


இறைவர்              : பார்வதீசுவரர்

இறைவியார்           : சத்தியம்மை, பார்வதியம்மை

தல மரம்                : வில்வம், வன்னி

தீர்த்தம்                : சூரிய புஷ்கரணி

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பூவலர்ந்தன கொண்டு. 

         முன்னால் ஒரு நுழைவாயிலும், அதனையடுத்து ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்தில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், அதன் அருகே கொடிமர விநாயகர் காணலாம். கருவறை முக மண்டபத்தில் அம்பாள் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகியர் காணப்படுகின்றனர். இறைவன் பார்வதீஸ்வரர் கருவறையில் லிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர், இறைவனை நோக்கி நந்தியெம் பெருமான் ஆகியோரும் உள்ளனர். கருவறைச் சுற்றில் 63 லமூவர், நர்த்தன கணபதி, சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் உள்ளனர். கருவறை கிழக்குச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளது. கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஆகியோரைக் காணலாம், சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி இங்குள்ளது குறிப்பிடத் தக்கது.

         இத்தலத்தில் சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம் ஆகய மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் சீரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தில் 13-ம் தேதி முதல் 7 நாட்கள் சூரியபூசை நிகழ்கிறது எனபதும் குறிப்பிடத் தக்கதாகும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், நாட்டமு உற்ற வாக்குத் தெளிச்சேரி மாதவர்க்கு இன்ப நலம் ஆக்கும் தெளிச்சேரி அம் கண்ணே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         திருஞானசம்பந்தப் பெருமான் திருநள்ளாற்று இறைவரை வணங்கி,  அத்திருத்தலத்தில் சில நாள் தங்கி இருந்து, பின்னர் திருதெளிச்சேரி சேர்ந்து, போதி மங்கையை நெருங்கினார்.  போதிமங்கை புத்தர்கள் நிறைந்த ஊர். அடியவர்களின் ஆரவாரமும், திருச்சின்ன ஓசையும், திருவைந்தெழுத்து முழக்கமும் புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்தநந்தியைத் தலைவனாகக் கொண்டு, அடியவர்களின் திருக்கூட்டத்தை மறித்தனர்.  அவர்கள், "உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் வென்று அல்லவா அவைகளை முழக்கவேண்டும்?" என்று வெகுண்டு விலக்கினார்கள்.  அவர்கள் செயலைக் கண்ட சிவனடியார்கள் "இத் தலைவனை மாய்த்தல் வேண்டும்.  இல்லையேன் இவன் தீங்கு விளைவிப்பான்" என்று கருதி, நிலைமையைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார்கள்.  பிள்ளையார், "இதென்ன நன்றாய் இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாக, தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர், "புத்தர் சமண் கழுக்கையர்" என்னும் திருப்பாட்டை ஓதி, "அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே" என்று முடித்தார்.  முடித்ததும், புத்த நந்தி மீது இடி விழுந்தது.  புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "இது விதியால் நேர்ந்தது. அரன் நாமத்தை ஓதுங்கள்" என்றார். அடியார்கள் அப்படியே செய்தார்கள்.

         மருண்டு ஓடிய புத்தர்கள், சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள். வந்து, "மந்திர வாதம் வேண்டாம், தருக்க வாதம் செய்யுங்கள், பார்ப்போம்" என்று அடர்த்தார்கள்.   பிள்ளையார் சிவிகையில் இருந்து இறங்கி, ஒரு மண்டபத்தில் எழுந்தருளினார்.  புத்தர்களை அழைத்து வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளை இட்டார்.  புத்தர்களை அழைத்து வந்தார்கள். சாரிபுத்தன் பிள்ளையார் அருகே நின்றான். புத்த நந்தியை இரு கூறு படுத்திய அன்பர், பிள்ளையார் முன்னிலையில் வாதத்தைத் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடுபட்டான். முடிவில் சாரிபுத்தன் தோல்வி அடைந்தான். அவன் பிள்ளையாரை வணங்கினான்.  மற்ற புத்தர்களும் பிள்ளையாரை வணங்கினார்கள். பிள்ளையார் எல்லாருக்கும் திருநீறு அளித்து அருள் செய்தார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 903
"தென்னவர்கோன் முன்அமணர் செய்த வாதில்
         தீயின்கண் இடும்ஏடு பச்சை ஆக்கி
என்உள்ளத் துணை ஆகி ஆலவாயில்
         அமர்ந்துஇருந்த வாறுஎன்கொல் எந்தாய்" என்று
பன்னுதமிழ்த் தொடைசாத்திப் பரவிப் போந்து,
         பண்புஇனிய தொண்டர்உடன் அங்கு வைகி,
மன்னுபுகழ்ப் பதிபிறவும் வணங்க, சண்பை
         வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : பாண்டிய மன்னன் முன்பு, சமணர் செய்த வாதில் தீயில் இட்ட ஏடு பச்சையாக இருச்கச் செய்தும், என் மனத்தின்கண் துணையாகியும், ஆலவாயிலில் வெளிப்பட வீற்றிருந்த தன்மைதான் என்ன அதிசயம்! எந்தையே! என நயம் பெறப்போற்றி, நலம் குலாவிப் பன்முறையும் எடுத்துக் கூறும் தமிழ்த் தொடையான திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, வெளியே வந்து, அடிமைப் பண்பினால் இனிமை தருகின்ற தொண்டர்களுடன் கூடி அத்திருப்பதியில் தங்கியருளி, நிலையான புகழையுடைய திருப்பதிகள் பலவற்றையும் வணங்குதற்காகச் சம்பந்தர் திருநள்ளாற்றினை வணங்கி விடை பெற்றுச் செல்வார்,

 
பெ. பு. பாடல் எண் : 904
சீர்நிலவு திருத்தெளிச்சே ரியினைச் சேர்ந்து,
         சிவபெருமான் தனைப்பரவிச் செல்லும் போது,
சார்வுஅறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
         சார்தலும், மற்று அதுஅறிந்த சைவர் எல்லாம்
ஆர்கலியின் கிளர்ச்சிஎனச் சங்கு தாரை
         அளவுஇறந்த பல்இயங்கள் முழக்கி ஆர்த்து,
பார்குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம்,
         'பரசமய கோளரிவந் தான்' என்று ஊத.

         பொழிப்புரை : சிறப்புக்கள் பொருந்திய `திருத்தெளிச்சேரி'யைச் சேர்ந்து இறைவரைப் போற்றி மேற்செல்லுபோது, நற்சார்பு இல்லாத புத்தர்கள் தங்கும் `போதிமங்கை' என்ற ஊரின் அணித்தாக வருதலும், அச்செய்தியை அறிந்த சைவர் எல்லாரும் கடல் கிளர்ந்து எழுந்தது போல் தாரை சங்கு முதலான அளவற்ற பல இயங்களையும் ஒலித்து, உலகம் விளங்கும்படி எக்காளம் திருச்சின்னம் ஆகிய எல்லாவற்றிலும் பரசமய கோளரி வந்தார் என்று சொல்லி ஊத,

         கோளரி - சிங்கம். பரசமயம் - பிறசமயங்கள்; பிறசமயங்களாகிய யானைகளைச் சிங்கம் என நின்று வெற்றிகொள்பவர். யானை வடிவாற் பெரியதாயினும் ஊக்க மிகுதியிலாதது : ஆதலின் சிங்கம் அதனை வெல்லும் என்பதாம். திருத்தெளிச்சேரியில் அருளிய பதிகம் `பூவலர்ந்தன' (தி.2 ப.3) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.003 திருத்தெளிச்சேரி                         பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பூஅ லர்ந்தன கொண்டுமுப் போதும்உம் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ அரும்தொழி லாளொடு கேழல்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

         பொழிப்புரை :அலர்ந்தனவாய பூக்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து வழிபடும் புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய செயல்களைப்புரியும் உமையம்மையோடு பன்றியின் பின் வேடனாகப் பொய் வேடந்தரித்து நின்றது உம் பெருமைக்கு ஏற்ற செயல்போலும்!


பாடல் எண் : 2
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்குந் தீர்த்தம் அறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேல்ஐந்து பாணமும் தான்எய்து
களிக்குங் காமனை எங்ஙனம் நீர்கண்ணில் காய்ந்ததே.

         பொழிப்புரை :பக்தியை விளைத்தலால் விண்ணவரும் மண்ண வரும் உம்மை வழிபடற்பொருட்டு, திளைத்து முழுகும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! உம்மீது வளைந்த வலிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக எய்து களிப்புற்ற மன்மதனை, நீர் நெற்றிக் கண்ணினால் காய்ந்தது எங்ஙனம்?


பாடல் எண் : 3
வம்புஅ டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்புஅ டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்புஅ டுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோடு
அம்புஅ டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.

         பொழிப்புரை :மணம் பொருந்திய மலர்களை உடைய பொழில்களால் சூழப் பெற்றதும், செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்து விளங்குவதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! கொம்புகளை உடைய அழகிய விடைமீது கூரிய அம்பு போன்ற கண்களை உடைய உமையம்மையோடு மேவி வருவது அழகுதரும் செயலோ?


பாடல் எண் : 4
கார் உலாங்கடல் இப்பிகள் முத்தம் கரைப்பெயும்
தேர் உலாநெடு வீதிஅது ஆர்தெளிச் சேரியீர்
ஏர் உலாம்பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே
வார் உலாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

         பொழிப்புரை :நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலாவும் கடல், முத்துச்சிப்பிகளையும், முத்துக்களையும் அலைகளால் கரையில் கொண்டுவந்து பெய்வதும் தேர் உலாவும் நீண்ட வீதிகளை உடையதுமான திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்ற நீர் கச்சணிந்த தனபாரங்களையுடைய உமையம்மையைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு இடமின்றியோ உமது திருமேனியின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டுள்ளீர்!



பாடல் எண் : 5
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராய்உலகு எங்கும் பலிக்கு நடப்பதே.

         பொழிப்புரை :ஒரு பாகமாக உள்ள பார்வதிதேவி உம்மைத் துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்ற, செம்மதிசேரும், மதில் சூழும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பலியேற்றற்குக் காரணம் மைபூசப் பெற்ற இளம் பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்தற்குத்தானோ? சொல்லீர்.


பாடல் எண் : 6
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போல்கண்ணி துண்என, வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙனம் நீர்கையில் காய்ந்ததே.

         பொழிப்புரை :வெண்மையான பிறைதோயும் தழைகள் தாழ்ந்த பொழில் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒளியினையுடைய மணிகள் இழைக்கப்பட்ட மாடவீடுகள் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமையம்மை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் கொள்ளும் பெரிய யானையை எவ்வாறு நீர் கைகளால் சினந்தழித்தீர்?.


பாடல் எண் : 7
கோடு அடுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேடு  அடுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாடு அடுத்தமலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோடு அடுத்த மலர்ச்சடை என்கொல்நீர் சூடிற்றே.

         பொழிப்புரை :மரக்கோடுகள் நிறைந்த பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து கூவுவதும், பெருமைமிக்க தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்வதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும் மலர்போலும் கண்ணினளும் ஆகிய கங்கை நங்கையை இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சடையின்கண் சூடியது ஏனோ? கூறுவீர்.


பாடல் எண் : 8
கொத்து இரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல அரக்கன் விறல்தலை
பத்துஇ ரட்டிக் கரநெரித் திட்டதுஉம் பாதமே.

         பொழிப்புரை :வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் ஆகிய பார்வதிதேவி குயில் வடிவு கொண்டு வழிபட்டதும், ஓவியம் எழுதப்பட்ட கொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்ததும் ஆகிய திருத்தெளிச்சேரியில் வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாட்போரில் வல்லவனும் வலிய தலைகள் பத்து, கைகள் இருபது ஆகியவற்றைக் கொண்டவனுமாகிய இராவணனைக் கால்விரலால் நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்வீராக.


பாடல் எண் : 9
கால்எ டுத்த திரைக்கை கரைக்குஎறி கானல்சூழ்
சேல்அ டுத்த வயல்பழ னத்தெளிச் சேரியீர்
மால்அ டித்தலம் மாமல ரான்முடி தேடியே
ஓலம் இட்டிட எங்ஙனம் ஓர்உருக் கொண்டதே.

         பொழிப்புரை :காற்றால் எடுத்துக்கொணரப்பெறும் கடலின் திரைகளாகிய கைகள் கரையின்கண் வீசப் பெறுவதும், கடற்கரைச் சோலைகள் சூழ்ந்ததும், சேல் மீன்கள் தவழும் வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியதும் ஆகிய திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேடமுற்பட்டுக் காணாது ஓலம் இட, நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.


பாடல் எண் : 10
மந்தி ரந்தரு மாமறை யோர்கள், தவத்தவர்,
செந்து இலங்கு மொழியவர், சேர்தெளிச் சேரியீர்,
வெந்தல் ஆகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித் தீர்ஓர் சதிரரே.

         பொழிப்புரை :மந்திரங்கள் ஓதும் மறையோர்களும் தவத்தை உடையவர்களும், செந்து என்ற பண் போன்று இனிய மொழிபேசும் மகளிரும், வாழும் திருத்தெளிச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங்கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை எவ்வாறு நீக்கியருளினீர்?.


பாடல் எண் : 11
திக்கு உலாம்பொழில் சூழ்தெளிச் சேரிஎம் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.

         பொழிப்புரை :எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் எம் செல்வன்மீது புகழ்மிக்க காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய தக்க பாடல்கள் பத்தையும் வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...