திருச் சிறுகுடி




திருச் சிறுகுடி

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில் கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி சுமார் 3 கி. மீ. தொலைவில் சிறுகுடி திருத்தலம் இருக்கிறது.

     திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

     பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்திருத்தலத்திறகு வர சாலை வசதி உள்ளது.


இறைவர்         : சூட்சுமபுரீசுவரர், மங்களநாதர், சிறுகுடியீசர்.

இறைவியார்      : மங்களநாயகி, மங்களாம்பிகை.

தல மரம்          : வில்வம்.

தீர்த்தம்           : மங்கள தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - திடமலி மதிலணி


     ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில் பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.

         மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம் நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவக்கிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாக தோற்றமளிக்கிறார்.

         முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத் தான் அபிஷேகம் தடைபெறுகிறது.

         முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் சுயம்புத் திருமேனி. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவேயுள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவையும், வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரையும் காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுற்றில் மங்கள விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

         உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி தரும் அழகு பார்க்க வேண்டியதாகும். இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார்.

         இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது. செவ்வாய் தோஷமுடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்காரகதோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய் வழிபாடு விசேஷமானது. ஆலயத்திற்கு வெளியே நேரே எதிரிலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள் கூட இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்கலாம்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆம் புவனம் துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்து வலம் செய்து உவகை மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே" என்று போற்றி உள்ளார்.

         இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 538
பாம்புரத்து உறை பரமரைப்
         பணிந்து, நல்பதிக இன்னிசை பாடி,
வாம்புனல் சடை முடியினார்
         மகிழ்விடம் மற்றும்உள் ளனபோற்றி,
காம்பி னில்திகழ் கரும்பொடு
         செந்நெலின் கழனியம் பணைநீங்கி,
தேம்பொ ழில்திரு வீழிநன்
         மிழலையின் மருங்குஉறச் செல்கின்றார்.

         பொழிப்புரை : பிள்ளையார் திருப்பாம்புரத்தில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி நல்ல இனிய இசை பொருந்திய திருப்பதிகத்தைப் பாடியருளி, தாவும் அலைகளையுடைய கங்கை ஆற்றைச் சூடிய முடியையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பிற பதிகளையும் போற்றி, மூங்கில் போல் விளங்கும் கரும்பும் செந்நெல்லும் விளைந்த வயல் இடங்களைக் கடந்து, தேனையுடைய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலையின் அருகே செல்கின்றவராகி,

         திருப்பாம்புரத்தில் அருளிய பதிகம் `சீரணி திகழ்\' (தி.1 ப.41) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         பிற பதிகளாவன திருச்சிறுகுடி, திருவன்னியூர் முதலாயினவாகலாம்.

         திருச்சிறுகுடிக்கு உரிய பதிகம் `திடமலி' (தி.3 ப.97) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருவன்னியூர்ப் பதிகம் கிடைத்திலது.


3. 097   திருச்சிறுகுடி        திருமுக்கால்       பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
திடமலி மதிள்அணி சிறுகுடி மேவிய
படமலி அரவுஉடை யீரே,
படமலி அரவுஉடை யீர்,உமைப் பணிபவர்
அடைவதும் அமர்உலகு அதுவே.

         பொழிப்புரை : வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே ! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் .


பாடல் எண் : 2
சிற்றிடை உடன்மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடி யீரே,
சுற்றிய சடைமுடி யீர்,உம தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே.

         பொழிப்புரை : குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே ! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை .


பாடல் எண் : 3
தெள்ளிய புனல்அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான்உடை யீரே,
துள்ளிய மான்உடை யீர்,உம தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.

         பொழிப்புரை : தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் .


பாடல் எண் : 4
செந்நெல வயல்அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம்எரித் தீரே,
ஒன்னலர் புரம்எரித் தீர்,உமை உள்குவார்
சொல்நலம் உடையவர் தொண்டே.

         பொழிப்புரை : செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே ! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர் . ( உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர் ).


பாடல் எண் : 5
செற்றினில் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே,
பெற்றிகொள் பிறைமுடி யீர்,உமைப் பேணிநஞ்சு
அற்றவர் அருவினை இலரே.

         பொழிப்புரை : பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே ! பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குழைந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள் . அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர் .


பாடல் எண் : 6
செங்கயல் புனல்அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம்உடை யீரே,
மங்கையை இடம்உடை யீர்,உமை வாழ்த்துவார்
சங்கைஅது இலர்நலர் தவமே.

         பொழிப்புரை : செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானே ! உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர் . நலமிக்கவரும் , தவப்பேறு உடையவரும் ஆவர் .


பாடல் எண் : 7
செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடி யீரே,
வெறிகமழ் சடைமுடி யீர்,உமை விரும்பிமெய்ந்
நெறிஉணர் வோர்உயர்ந் தோரே.

         பொழிப்புரை : அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி , அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர் .


பாடல் எண் : 8
திசையவர் தொழுதுஎழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம்நெரித் தீரே,
தசமுகன் உரம்நெரித் தீர்,உமைச் சார்பவர்
வசைஅறும் அதுவழி பாடே.

         பொழிப்புரை : எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும் . அது உம்மை வழிபட்டதன் பலனாகும் .


பாடல் எண் : 9
செருவரை வயல்அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய் தீரே,
இருவரை அசைவுசெய் தீர்,உமை ஏத்துவார்
அருவினை யொடுதுயர் இலரே.

         பொழிப்புரை : வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , மாறுபாடு கொண்ட திருமால் , பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே ! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும் , அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர் .


பாடல் எண் : 10
செய்த்தலை புனல்அணி சிறுகுடி மேவிய
புத்தரோடு அமண்புறத் தீரே
புத்தரொடு அமண்புறத் தீர்,உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

         பொழிப்புரை : வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப் , புத்தர் , சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே ! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப் போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர் .


பாடல் எண் : 11
தேன்அமர் பொழில்அணி சிறுகுடி மேவிய
மான்அமர் கரம்உடை யீரே,
மான்அமர் கரம்உடை யீர்,உமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே.

         பொழிப்புரை : வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே ! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றிய ஞானசம்பந்தனின் இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...