அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கரைஅற உருகுதல்
(திருச்செங்கோடு)
முருகா!
பொதுமாதர் சேர்க்கையால்
அறிவிழந்த என்னை
அடியார் திருக்கூட்டத்தில்
சேர்த்து அருள்
தனதன
தனதன தனதன தனதன
தந்தான தந்த ...... தனதான
கரையற
வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல் ...... மடமாதர்
கலவியில்
முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும் ...... வினையேனும்
உரையையு
மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே
உரவொடு
புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று ...... பெறுவேனோ
வரையிரு
துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர ...... புரிவாழ
மதவித
கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க ...... முதுமீன
திரைமலி
சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற ...... கதிர்வேலா
ஜெகதல
மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கரைஅற
உருகுதல் தருகயல் விழியினர்,
கண்டுஆன செஞ்சொல் ...... மடமாதர்,
கலவியில்
முழுகிய நெறியினில் அறிவு
கலங்கா மயங்கும் ...... வினையேனும்,
உரையையும்
அறிவையும் உயிரையும் அணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே,
உரவொடு
புனைதர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று ...... பெறுவேனோ?
வரைஇரு
துணிபட, வளைபடு சுரர்குடி
வந்து ஏற, இந்த்ர ...... புரிவாழ,
மதவித
கஜ ரத துரகத பததியின்
வன்சேனை மங்க, ...... முதுமீன
திரைமலி
சலநிதி முறையிட, நிசிசரர்
திண்டாட வென்ற ...... கதிர்வேலா!
ஜெகதலம்
மிடிகெட, விளைவன வயல்அணி
செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
வரை இரு துணிபட --- கிரவுஞ்சமலை இரு
துண்டாகும்படியும்
வளைபடு சுரர் குடிவந்து ஏற --- விலங்கிடப்பட்டிருந்த தேவர்கள் தமது ஊரில் குடிபுகு மாறும்,
இந்தர புரி வாழ --- தேவேந்திரனுடைய அமராவதி
நகரம் வாழும்படியும்,
மதவித கஜ --- மதம் பொழியும் யானை,
ரத துரகத பததியின் வன்சேனை மங்க --- தேர்
குதிரை காலாள் என்ற வலிய சேனைகள்
மங்குமாறும்,
முது மீன திரைமலி சலநிதி முறை இட --- பழமையான
மீன்கள் வாழும் அலைகள் நிறைந்த கடல்
முறையிடுமாறும்,
நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா --- அசுரர்கள்
துன்பமுறும்படியும் வெற்றி பெற்ற ஒளி
மிகுந்த வேலாயுதரே!
ஜெகதல மிடிகெட --- உலகத்தின் வறுமை
தீரும்படி
விளைவன வயல் அணி --- விளைகின்ற வயல்கள்
அலங்கரிக்கின்ற
செங்கோடு அமர்ந்த பெருமாளே ---
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள
பெருமையில்
மிகுந்தவரே!
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் ---
எல்லை இல்லாமல் உருகும்படிச் செய்யும்
மீன்
போன்ற கண்ணினர்.
கண்டு ஆன செம் சொல் மடமாதர் --- கற்கண்டு
போன்ற செவ்விய சொல்லினராகிய பொதுமாதர்களின்,
கலவியில் முழுகிய நெறியினில் --- சேர்க்கையாகிய
மயல் வெள்ளத்தில் முழுகிய வழியினில்
அறிவு கலங்கா மயங்கும் வினையேனும் --- அறிவு
கலங்கி மயங்கும் வினையையுடைய அடியேன்,
உரையையும், அறிவையும் உயிரையும் உணர்வையும், உன்பாத கஞ்ச மலர் மீது --- சொல்லையும் அறிவையும்
உயிரையும் உணர்வையும் உமது பாத தாமரை மலர் மீது
உரவொடு --- உறுதியுடன்,
புனை தர நினை தரும் அடியரொடு --- அணிவிக்கக் கருதும் அடியார்களுடன்
ஒன்றாக என்று பெறுவேனோ --- ஒன்றுபடும்
பேற்றினை என்று அடியேன் பெறுவேனோ?
பொழிப்புரை
கிரவுஞ்சமலை இருகூறு படவும், சிறைப்பட்டிருந்த தேவர்கள் தம் ஊரில்
குடியேறவும், அமராவதி நகரம்
வாழவும், மும்மதம் பொழியவும், யானை தேர் குதிரை காலாள் என்ற வலிய
சேனைகள் அழியவும், பழைய மீன்கள் வாழும்
அலைமிகுந்த கடல் முறையிடவும், அசுரர்கள் வருந்தவும்
வெற்றி பெற்ற கதிர் வேலவரே!
உலகத்தின் வறுமை நீங்குமாறு விளைகின்ற
வயல்களால் அலங்கரிக்கப்பட்ட திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!
எல்லை கடந்து உருகும்படிச் செய்யும்
மீன்போன்ற கண்ணை உடையவரும், கற்கண்டு போன்ற
செவ்விய மொழிகளை உடையவருமாகிய மடமாதர்களாகிய பொருட் பெண்டிர் சேர்க்கையால் வரும்
மயக்கக் கடலில் முழுகிய வழியில் அறிவு கலங்கி மயங்கும் வினையேனாகிய சிறியேன், மொழிகளையும் அறிவையும் உயிரையும்
உணர்வையும் உமது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் அர்ச்சிக்க நினையும்
அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினை என்று பெறுவேனோ?
விரிவுரை
கரைஅற
உருகுதல் தருகயல் விழியினர் ---
தம்
பார்வையால் ஆடவர் ஓர் எல்லையின்றி உருகுமாறு செய்யும் விழியை உடையவர்கள்
பொருட்பெண்டிர்.
அடியரொடொன்றாக
என்று பெறுவேனோ ---
அடியாருடன்ஒன்றுபடுவதே
பெறுதற்கு அரிய பெரும் பேறாகும்.
அடியார்கள், தம் மொழி உயிர் அறிவு உணர்வு என்ற
அனைத்தையும் முருகன் திருவடியில் மலர்களைப் போல் அர்ச்சித்து விடுவார்கள்.
கண்ணில்லா
பசு பசுமந்தையில் சேர்ந்தவுடன் சுற்றியுள்ள மாடுகளுடன் உரர்ய்ந்து ஊர் புகுமாப்
போல், ஞானக் கண்ணில்லாத
நாம் அடியவர் குழாத்துள் கூடிவிடுவோமாயின், அடியவர் சேர்க்கை நம்மை முக்தி உலகில்
சேர்க்கும் என உணர்க.
சூரில்
கிரியில் கதிர் வேல்எறிந்தவன் தொண்டாகுழாம்
சாரில்
கதியின்றி வேறுஇல்லை காண், தண்டு தாவடிபோய்
தேரில்
கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில்
பொறி எனறுஅறி யாதபாவி நெடுநெஞ்சமே. --- கந்தரலங்காரம்.
“துரும்பனேன்
என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு கூட்டுகண்டாய்” --- தாயுமானார்.
"பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்" ---
அபிராமி பட்டர்.
வரை
இரு துணிபட ---
கிரவுஞ்சமலை
என்பது சஞ்சித வினைத் தொகுதி. கிரவுஞ்ச மலையை வேல் அழித்தது. சஞ்சித வினைதி
தொகுதியை பதிஞானம் அழித்தது.
திரைமலி
சலநிதி முறையிட ---
கடலை
முருகன் முனிந்தான் என்பது பிறவிப் பெருங்கடலை வற்ற வைத்தான் என்பதாகும்.
கருத்துரை
திருச்செங்கோடு அமர்ந்த தேவனே!
அடியாருடன் ஒன்றுபட்டு உய்யும்படி அருள்செய்வீர்.
No comments:
Post a Comment