அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இதமுறு விரைபுனல் (விராலிமலை)
முருகா!
பொதுமாதர் மயல் நீங்க,
அடியேனுக்கு பத்திநெறியை
அறிவித்து, முத்தியைத் தந்து அருள்.
தனதன
தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன
தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன
தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான
இதமுறு
விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென
இசையளி யெனந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய
பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ......
முனைவாளும்
இடர்படு
கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன
முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி
படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய...... எழில்தோளும்
விதரண
மனவித னமதை யருள்வன
சததள மறைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல
ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித
மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள
...... மதியாத
விபரித
முடையிடை யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண
மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத
ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
யின்பமதி
துக்கமென லன்றியவர்
விரகினி
லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ
......தொருநாளே
தததத
தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு
டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி
தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி
......யெனவேதான்
தபலைகு
டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற
அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ
......வெகுகோடி
மதகஜ
துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு
மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி
லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு
....கவிராலி
மலையுறை
குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி
மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத
கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு
......பெருமாளே.
பதம் பிரித்தல்
இதம்
உறு விரை புனல் முழுகிய, அகில் மணம்
உதவிய புகையினில் அளவி,
வகை வகை
கொத்து அலர்களின் தொடையல் வைத்து, வளர் கொண்டல் என,
அறல்
என,
இசை அளி என, நள் இருள் என,
நிறம் அது கருகி, நெடுகி நெறிவு பட,
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்,
இலகிய
பிறை என,
எயினர் சிலை என,
விலகிய திலத நுதலு(ம்),
மதி முகமும்,
உற்பலமும் வண்டு வடு வில்கணை யமன்படரும்....முனை
வாளும்
இடர்
படுகவு நடுவனும் வல் அடல் பொரு
கடுவதும் என, நெடிது அடுவ, கொடியன
இக்கு சிலை கொண்ட மதன்,
மெய்த் தவ நிறைந்த விழி
தளவு
அன முறுவலும், அமுத குமுதமும்,
விளை நறவு இனிய மொழியும்,
இனையது என
ஒப்பு அற நகங்கள், விரல் துப்பு என உறைந்து கமுகு
இடிஒடி
படவினை செயும் வில் மத கலை,
நெடிய கவுடி, இசை முரலும் சுரி முக,
நத்து அனைய கண்டமும், வெண்முத்து விளை விண்டு அனைய ....எழில் தோளும்,
விதரணம்
மன விதனம் அதை அருள்வன,
சத தள மறை முகிழ் அதனை நிகர்வன,
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன,
இமம்
சலம் ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபை மிகு தருண புளகித
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன
விகலித
மிருதுள ம்ருதுள நவ மணி
முக பட விகடின தனமும், உயர்
வட
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி,உள..... மதியாத
விபரிதம்
உடை இடை இளைஞர் களை பட,
அபகடம் அது புரி, அரவ சுடிகைய
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும், புதிய
நுண்ணிய
தளிர் என உலவிய பரிபுரம்
அணி நடன பதமும், உடைய வடிவினர்,
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி, அவர்
விரகினில்
எனது உறு மனம் அது உருகிய
பிரமையும் அற, உனது அருள் கை வர,
உயர்
பத்தி வழியும், பரம முத்தி நெறியும் தெரிவது.... ஒருநாளே
தததத
தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு
டிகுடிகு டகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிதி டிங்குகுகு
தமிதமி
தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி..... எனவேதான்
தபலை
குட முழுவு திமிலை படகம்
அது அபுத சல்லிகை தவில் முரசு கரடிகை
மத்தளி தவண்டை அறவைத் தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகு என அலற, விருதுகள்
திகுதிகு திகு என, அலகை குறளிகள்
விக்கிட, நிணம் பருக பக்கி,
உவணம் கழுகு
சதிர்
பெற அதிர் தர, உததி சுவறிட,
எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட,
அப்புவின் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ,....வெகு கோடி
மத
கஜ துரக ரதமும் உடைய புவி
அதல முதல் முடிய இடிய,
நெடியது ஒர்
மிக்க ஒலி முழங்க, இருள் அக்கணம் விடிந்து விட,
இரவியும்
மதியமும் நிலைமை பெற, அடி
பரவிய அமரர்கள் தலைமை பெற,
இயல்
அத்திறல் அணங்கு செய. சத்தி விடு கந்த!
திருவயலியில்
அடிமைய குடிமை இ(ன்)னல் அற,
மயலொடு மலம் அற, அரிய பெரிய
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம்
எழுந்தருள்....குக! விராலி
மலை
உறை குரவ! நல் இறைவ! வரு கலை
பல தெரி விதரண! முருக! சரவண!
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக! அகண்ட மய!
நிருப!
விமல சுக சொருப! பரசிவ
குருபர! வெளி முகடு உருவ,
உயர் தரு
சக்ர கிரியும் குலைய, விக்ரம நடம் புரியம்,
மரகத
கலபம் எரி விடு மயில் மிசை,
மருவியெ அருமைய! இளமை உருவொடு
சொர்க்க தலமும், புலவர் வர்க்கமும்,
விளங்க வரு.. பெருமாளே.
பதவுரை
தததத தததத தததத திதிதிதி திதிதிதி
திதிதி திதிதிதி தத்தத தந்ததத தித்திதிதி தந்திதிதி டகுடகு டிகுடிகு டிகுகு
டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி
டிங்குகுகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித
தந்திமிததித்திமிதி திந்திமி எனவேதான் --- தததத தததத...........தித்திமித தந்திமிதி
என்னும் ஒலிகளுடன்,
தபலை --- தபலை,
குடமுழவு --- குடமுழவு
திமிலை --- ஒருவகைப் பறையாகிய திமிலை,
படகம் --- படகம் என்ற சிறுபறை;
அது அபுத சல்லிகை --- முன் இல்லாததான
சல்லிகையென்ற அந்த பறை;
தவில் --- தவில்
முரச --- முரசு,
கரடிகை --- கரடிகை,
மத்தளி-- --- மத்தளம்,
தவண்டை --- பேருடுக்கை,
அறவைத்த
குணி --- நிரம்ப இருந்த தகுணிச்சம்,
துந்துமிகள் --- பேரிகைகள், ஆகிய
இந்த வாத்தியங்கள்,
மொகு மொகு மொகு என அலற --- மொகு மொகு மொகு
என்று பேரொலி செய்யவும்,
விருதுகள் --- வெற்றிச் சின்னங்கள்,
திகுதிகுதிகு என --- திகுதிகுதிகு என்று
விளங்கவும்,
அலகை --- பேய்களும்,
குறளிகள் --- மாயவித்தை செய்யும் குறளிப்பிசாசுகளும்,
விக்கிட நிணம் பருக --- விக்கல் வருமளவு
மாமிசக் கொழுப்புக்களை உண்ணவும்,
பக்கி --- பட்சிகளும்,
உவணம் --- கருடனும்,
கழுகு --- கழுகுகளும்,
சதிர் பெற அதிர் தர --- பேறு பெற்றோம் என்று
ஆரவாரஞ் செய்யவும்,
உததி அலறிட --- கடல் வற்றிப் போகவும்,
எதிர்பொரு நிருதர்கள் --- எதிர்த்துப் போர்
புரிந்த அசுரர்களின்,
குருதி பெருகிடு அ அப்புவின் --- உதிரம்
பெருகிவரும் அந்த செந்நீரில்,
மிதந்து எழுது அற்புத கவந்தம் எழ --- மிகுந்து
எழுபது கணக்கான அற்புதமான குறையுடம்புகள் எழவும்.
வெகுகோடி --- பலகோடிக்கணகான,
மதகஜ --- மதத்தைப் பொழியும் யானைகளையும்,
துரக --- குதிரைகளையும்,
ரதமும் உடைய --- தேர்களையுடைய,
புவி --- பூமியும்,
அதல முதல் முடிய --- அதலவுலக முதலான கீழுள்ள
ஏழு உலகங்களும்,
இடிய --- அதிர்ச்சியுற்று கலங்கவும்,
நெடியது ஓர் மிக்க ஒலி முழங்க --- நீண்ட ஒரு
பெரிய ஓசை உண்டாகவும்,
இருள் அக்கணம் விடிந்து விட --- உலகின்
துயரான இருள் அந்தக் கணமே விலகி ஒழியவும்,
இரவியும் மதியமும் நிலைமை பெற --- சூரியனும்
சந்திரனும் நிலை பெற்று விளங்கவும்,
அடி பரவிய --- திருவடியைத் துதிசெய்த,
அமரர்கள் தலைமை பெற --- தேவர்கள் முதன்மை
பெறவும்,
இயல் அ திறல் அணங்கு செய சத்தி விடு --- பொருந்திய
அந்த வீரலட்சுமி விளங்கும் வெற்றிவேலை விடுத்தருளிய,
கந்த --- கந்தவேளே!
திருவயலியில் --- திருவயலூரில்,
அடிமைய --- அடிமையேனுடைய
குடிமை இனல்அற --- குடிப்பிறப்பின்
துன்பங்கள் நீங்கவும்,
மயலொடு மலம் அற --- மயக்கமும், ஆணவம்
கன்மம் மாயையாகிய மும்மலங்களும் நீங்கவும்,
அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன் ---
அரிய பெரிய திருப்புகழைப் பாடிய அடியேன் முன்,
அற்புதம் எழுந்து அருள் குக --- அற்புதமான
திருவுருவுடன் எழுந்தருளிக் காட்சியளித்த குக மூர்த்தியே!
விராலிமலை உறை குரவ --- விராலிமலையில்
வீற்றிருந்தருளும் குருமூர்த்தியே!
நல் இறைவ --- நல்ல தலைவரே!
வரு கலை பல தெரி விதரண --- வழிவழி வந்த
கலைகள் பலவுந் தெரிந்த கருணை வாய்ந்தவரே!
முருக --- முருகப் பெருமானே!
சரவண உற்பவ --- சரவணப் பொய்கையில்
தோன்றியவரே!
கிரவுஞ்ச கிரி நிக்ரக --- கிரவுஞ்ச மலையை
அழித்தவரே!
விமல --- மாசில்லாதவரே!
சுக சொருப --- இன்ப வடிவானவரே!
பரசிவ குருபர --- பரசிவத்துக்கு உபதேசித்தவரே!
வெளி முகடு உருவ உயர்தரு --- அண்டத்தின் புற
எல்லையுங் கடந்து உயர்ந்துள்ள,
சக்ரகிரியும் குலைய --- சக்கிரவாள கிரியும்
நடுக்கமடையுமாறு,
விக்ரம நடம் புரியும் --- ஆற்றல் பொருந்திய
நடனத்தைச் செய்த,
மரகத கலபம் எரி விடு --- பச்சை நிறமுடைய தோகை
ஒளிவீசும்,
மயில் மிசை மருவியெ --- மயிலின் மீது
பொருந்திய,
அருமைய --- அருமை வாய்ந்த,
இளமை உருவொடு --- இளமை வடிவுடன்
சொர்க்க தலமும் --- விண்ணுலகமும்,
புலவர் வர்க்கமும் விளங்க வரு --- புலவர்
கூட்டமும் விளங்க எழுந்தருளிய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
இதம் உறுவிரை புனல் முழுகி --- இன்பத்தைத்
தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி,
அகில் மணம் உதவிய புகையினில் அளவி --- அகிலின்
நறுமணம் வீசும் புகையை ஊட்டி,
வகை வகை --- விதம் விதமான,
கொத்து அலர்களின் தொடையல் வைத்து --- கொத்துக்
கொத்தாக மலர்களின் மாலைகளை வைத்து,
வளர் கொண்டல் என --- வளர்கின்ற மேகம் போலவும்,
அறல் என --- கருமணல் போலவும்,
இசை அளி என --- இசைபாடும் வண்டின் கூட்டம்
போலவும்,
நல் இருள் என --- நடு இருள் போலவும்,
நிறம் அது கருகி --- நிறமானது கருமையுள்ளதாய்,
நெடுகி நெறிவுபட --- நீண்டு சுருள் உள்ளதாய்,
நெய்த்து --- வாசனை தடவிய நெய்ப்பு உள்ளதாய்,
முசுவின் திரிகை ஒத்த --- முசுமுசுக்கை கொடி
போன்ற,
சுருள் குந்தளமும் --- சுருண்ட கூந்தலும்,
இலகிய பிறை என --- விளங்குகின்ற பிறைபோலவும்,
எயினர் சிலை என --- வேடர்களின்
வில்லைப்போலவும்,
விலகிய திலத நுதலும் --- விசாலமான பொட்டணிந்த
நெற்றியும்,
மதி முகமும் --- சந்திரனை ஒத்த முகமும்,
உற்பலமும் --- நீலோற்பல மலரும்,
வண்டு --- வண்டும்,
வடு --- மாவடுவும்,
வில் கணை --- வில் அம்பும்,
யமன் --- யமனுடைய,
படரும் முனை வாளும் --- பாய்ந்து வரும் கூடிய
வாளும் என நின்று,
இடர் படுகவும் --- இடரை உண்டாக்கவும்,
நடுவனும் --- இயமனும்,
வல் அடல் பொரு கடு அதும் என --- மிக்க வலிமை
பொருந்திய நஞ்சைப் போன்று,
நெடிது அடுவ --- நீண்ட நேரம் வருத்துவனவாய்,
கொடியன --- பொல்லாதனவாய்,
இக்கு சிலை கொண்ட மதன் --- கரும்பு வில்லை ஏந்திய
மன்மதனுடைய,
மெய் தவம் நிறைந்த விழி --- உண்மைத்தவம், நிறைந்துள்ளதாய்
விளங்கும் கண்களும்,
தளவு அன முறுவலும் --- முல்லையரும்பு போன்ற
பற்களும்,
அமுத குமுதமும் --- அமுதம்போன்ற குமுத வாயும்,
விளை நறவு இனிய மொழியும் --- அவ்வாயினின்றும்
விளைகின்ற தேன்போன்ற இனிய மொழிகளும்,
இணையது என ஒப்பு அறு --- இன்னத்துக்குத்தான்
நிகராகும் என்று சொல்லுதுற்கு இல்லாததான,
நகங்களில் விரல் துப்பு என உறைந்து --- நகங்களுடன்
கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும்,
கமுகு இடி ஒடிபட --- பாக்கு இதற்கு நிகராகாது
என்று இடிபட்டு ஒடிய,
வினைசெயும் வில் மத --- வினைகளை உண்டாக்கும்
மன்மதனுடைய வில்லின் கொள்கையைக் கூறும்,
கலை நெடிய --- மதன நூலின்படி நீண்டு,
கவுடிஇசை முரலு --- கௌடி என்ற பண்வகையை
ஒலிக்கின்ற,
சுரி முக நத்து அனைய கண்டமும் --- சுரிமுகங்களை
உடைய சங்குக்கு ஒப்பான கழுத்தும்,
வெண்முத்து விளைவிண்டு அனைய எழில்தோளும் --- வெண்மையான
முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற தோளும்,
விதரண மன --- விவேகமுள்ள மனதில்,
விதனம் அதை அருள்வன --- வேதனை தருவனவும்,
சததள மரை முகிழ் அதனை நிகர்வன --- நூறுஇதழ்த்
தாமரையின் மொட்டை நிகரானவையும்,
புது அமுது உகந்த குடம் --- புதிய அமுதம்
நிறைந்த குடம் போன்றவையும்,
வெற்பு என நிரம்புவன --- மலைபோல்
பூரித்தவையும்,
இமசலம் --- பன்னீர்,
ம்ருகமத --- கஸ்தூரி,
களப பரிமள --- சந்தனம் ஆகிய இவற்றின் நறுமணம்
நிறைந்தவையும்,
தமனிய ப்ரபை மிகு --- பொன்னொளி வீசுபவையும்,
தருண புளகித --- இளமையும் பூரிப்பும் உடையவையும்,
சித்ர --- அழகு,
வரம் --- மேன்மை,
மங்கலம் --- மங்கலம்,
விசித்ரம் --- அதிசயம், இவற்றைக்
கொண்டு,
இரு துங்க கன --- இரண்டு தூய்மையான
உயர்ந்தவையும்,
விகலித மிருதுள --- பெருமையுடன் சாய்வு
இல்லாதவையும்,
ம்ருதுஉள --- மென்மையானவையும்,
நவமணி --- நவரத்ன மாலையும்,
முகபட --- மூடுந்துணியை உடையவையும்,
விகடின --- பரப்புள்ளவையும், ஆகிய
தனமும் --- கொங்கைகளும்,
உயர்வட பத்திரம் இருந்த --- உயர்ந்த ஆலிலை போன்ற,
அகடில் ஒத்த சுழி உந்தி --- உண்டு என்று
எண்ணமுடியாதபடி சுழித்துள்ள கொப்பூழும்,
விபரிதம் உடை இடை --- விபரிதமாக உள்ள இடையும்,
இளைஞர் களை பட --- இளைஞர்கள் களைத்துப்போக,
அபகடம் அது புரி --- பொல்லாங்கு செய்கின்ற,
அரவ சுடிகைய --- பாம்பின் உச்சியில் உள்ள,
ரத்ன
பணம் என்ப --- இரத்தின படம் என்று சொல்லும்படி,
அழகு உற்ற அரையும் --- அழகு வாய்ந்த
அல்குலும்,
புதிய நுணிய தளிர் என --- புதிய நுண்ணிய
தளிர் போன்றதும்,
உலவிய பரிபுர --- உலாவிய சிலம்பு அணிந்த,
அணி நடன பதமும் உடைய வடிவினர் --- அழகிய
நடனத்துக்குரிய பாதங்களும் உடைய உருவத்தினராம் பொது மாதருடைய,
பொன் கலவி இன்பம் --- அழகிய சேர்க்கை
இன்பமானது.
அதி துக்கம் எனல் அன்றி --- அதிக துயரத்தைத்
தருவது என்று உணர்வதுடன்,
அவர் விரகில் --- அவர்களின் தந்திரச்
செயல்களில்
எனது உறுமனம் அது உருகிய --- எனக்குள்ள
மனமானது உருகிய,
பிரமையும் அற --- மயக்கம் அகலவும்-
உனது அருள் கைவர --- தேவரீரது திருவருள்
கைகூடி வரவும்,
உயர்பத்தி வழியும்
--- உயர்ந்த அன்பு
நெறியும்,
பரமுத்தி நெறியும் --- மேலான முத்தி
மார்க்கமும்,
தெரிவது ஒருநாளே --- தெரிந்து கொள்வதும் ஆன
ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?
பொழிப்புரை
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி
திதிதிதி தத்ததத தந்தத தித்திதிதி தந்திதிதி டகுடகு டிகுடிகு டிகுகு டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்திமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி
தமிதக தமிதமி திமித திமிதகதிமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித
தித்திமிதி திந்திமிதி என்ற ஒலிகளுடன், தபலை-குடமுழவு,
திமிலை, படகம், புதுவகையான
சல்லிகை, தவில், முரசு, கரடிகை, மத்தளி, தவண்டை, மிகுதியான
தகுணிச்சம், துந்துபிகள், ஆகிய இந்த வாத்தியங்கள் மொகு மொகு மொகு
என்று போரொலி செய்யவும், திகுதிகுதிகு என்று வெற்றிச் சின்னங்கள்
ஒலிக்கவும், பேய்களும், மாயவித்தைகள் செய்யும்
குறளிப்பிசாசுகளும், விக்கல் எடுக்கும் அளவு மாமிசக்
கொழுப்பை யுண்ணவும், பறவைகளான கருடனும், கழுகும்
பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்கவும், கடல் வற்றவும் எதிர்த்துப் போர் புரிந்த
அசுரர்களின் உதிரம் பெருகிவர, அச்செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான
அற்புதமான கவந்தங்கள் எழவும் பல கோடிக்கணக்கான மதயானைகளையும், குதிரைகளையும், தேர்களையும், உடைய
பூமியும் அதலம் முதலிய ஏழு உலகங்கள் முழுமையும் அதிர்ச்சியுற்றுக் கலங்கவும், நீண்ட
பெருத்த ஒலிமுழங்கி எழவும், துன்பமாகிய இருள் அக்கணத்திலேயே விலகி
ஒழியவும், சூரியனும்
சந்திரனும் நிலைபெற்று விளங்கவும், திருவடியைத் துதி செய்த தேவர்கள்
முதன்மை பெறவும் வீரலட்சுமி பொருந்திய வெற்றி வேலை விடுத்தருளிய கந்தவேளே!
திருவயலூரில் அடியேனுடைய
குடிப்பிறப்பின் இன்னல் நீங்கவும், மயக்கவும், மும்மலங்களும் விலகவும், அரிய
பெரிய திருப்புகழைச் சொன்ன என் முன்னே தேவரீர், அற்புதமான திருவுருவுடன் காட்சி
தந்தருளிய குகமூர்த்தியே!
விராலி மலையில் வீற்றிருந்தருளும் குருபரனே!
நல்ல தலைவரே!
வழிவழி வந்த கலைகள் பல தெரிந்த கருணை
வாய்ந்தவரே!
முருகப் பெருமானே!
சரவணப் பொய்கையில் தோன்றியவரே!
கிரவுஞ்ச மலையைப் பிளந்தவரே!
எங்கும் நிறைந்த அரசே!
மாசில்லாதவரே!
இன்ப வடிவினரே!
பரசிவ குருவே!
அண்டத்தின் புறவெளியையும் கடந்து
உயர்ந்துள்ள சக்கிரவாளகிரியும் நடுங்கும்படி பேராற்றலுடன் நடனஞ்செய்யும், பச்சைத்
தோகையில் ஒளிவீசும் மயிலின் மீது பொருந்தியவரே!
அருமையும் இளமையும் பூண்டு, விண்ணுலகமும், தேவர்களின்
குழாங்களும் விளங்க எழுந்தருளும் பெருந்தருளும் பெருமிதமுடையவரே!
இன்பத்தைத் தரும் வாசனை நீரில் முழுகி, அந்த
ஈரம்புலரும்படி, அகிலின் நறுமணப் புகையை ஊட்டி, விதம்விதமான மலர்க்கொத்துக்களால் ஆய
மாலைகளை வைத்துள்ள, வளர்கின்ற மேகம் போலவும் கருமணல்
போலவும், இசைபாடும்
வண்டுகள் போலவும், நடுஇருள் போலவும், கருநிறமுடையதாய், நீண்டு
சுருண்டு முசுமுசக்கைக் கொடிபோல் விளங்கும் கூந்தலும், அழகிய பிறைபோலும், வேடரது
வில்லைப்போலும் விசாலமாகத் தீட்டிய திலகம் அமைந்த நெற்றியும், சந்திரனைப்
போன்ற முகமும், நீலோற்பல மலரும், வண்டும், மாவடுவும், என நின்று இடர்ப்படுத்தவும், இயமனும், மிக்க
வலிமை பொருந்திய நஞ்சும் போல் நெடிது வருத்தம் புரியவும் வல்ல, கரும்பு
வில் லேந்திய மன்மதனுடைய மெய்த்தவம் நிறைந்த கண்களும், முல்லையரும்பையொத்த பற்களும், அமுதம்
போன்ற குமுதவாயும், அவ்வாயினின்று வெளிப்படும் தேன்போல்
தித்திக்கும் இனிய மொழிகளும், ஒப்பற்ற நகங்களுடன் கூடிய பவளம் போன்ற
விரல்களும், பாக்கு இதற்கு நிகராகாது இடிந்து ஒடிய,
வில்லேந்தி
தொழில்புரியும் மதனனுடைய கலைக்குப் பொருந்த, கௌடி என்ற பண் ஒலிக்கும் சுரிமுக சங்கு
போன்ற கழுத்தும், வெண்மையான முத்துக்கள் விளையும் மூங்கிலைப் போன்ற அழகிய தோளும், விவேகமுள்ள
மனதில் வேதனையைத் தருபவையும், நூற்றிதழ்த் தாமரை மொட்டு போன்றவையும், புதிய
அமிர்தம் நிறைந்த குடம் போன்றவையும், மலைபோன்றவையும்,
பனிநீர் கஸ்தூரி
சந்தனம் இவை பூசப் பெற்றவையும், நறுமணத்துடன் பொன்னொளி வீசுபவையும், பூரித்த
இளமையும், அழகும், மேன்மையும், மங்கலமும், அதிசயமும்
கொண்ட பெருமையுடையவையும், மிருதுவுடன் ஆடையுடன் கூடியவையும் ஆன
கொங்கைகளும், ஆலிலைபோன்ற வயிற்றில் சுழித்து உள்ள கொப்பூழும், ஆராய்ந்து
அறியமுடியாத நுட்பமான இடையும், இளைஞர்கள் களைத்துப் போகத் தீங்குகள்
புரிகின்ற பாம்பின் உச்சியில் உள்ள இரத்தின படம்போல், அழகிய அல்குலும், புதிய
நுண்ணிய தளிர் போன்றதும், சிலம்பணிந்து நடனஞ் செய்வதுமாகிய
பாதங்களும், உடைய பொது மாதரின் அழகிய சேர்க்கையின்பம் அதிக துயரத்தைத் தருவது
என்று உணர்ந்து, அம் மாதரது தந்திரச் செயலில் உருகும் மயக்கந் தீரவும், உமது
திருவருள் கைகூடவும், உயர்ந்த பக்தி வழியும், மேலான
முத்தி நெறியும் எனக்குப் புலப்படும்படியான நாள் ஒன்று உண்டாகுமோ?
விரிவுரை
இத்
திருப்புகழின் முதற்பகுதி பெண்களின் கேசாதி பாத வருணனையாக அமைந்தது.
விரிவாக
விலைமகளின் உருவங்களைச் சிறப்பித்துக் கூறி அவற்றின் மீது மயங்காது தெளிய வேண்டும்
என்று இப்பாடலில் உபதேசிக்கின்றார்.
பிரமையும்
அற ---
பிரமை-மயக்கம்; துன்பத்தை
இன்பமாக எண்ணி மக்கள் மயங்குகின்றார்கள்.
பக்தி
வழியும் பரமுத்தி நெறியும் தெரிவது ஒருநாளே ---
பக்தி
வழி-அன்பு நெறி. முக்தி நெறி-பந்தத்தினின்றும விடுபடும் வழி.
“முத்தி நெறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்தி நெறி அறிவித்து” --- மணிவாசகர்
திருவயலியில்
அடிமை குடிமை இனலற மயலொடு மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பும் என்முன் அற்புதம்
எழுந்தருள் குக ---
இது
அடிகளாரது வரலாற்றை யறிவிக்கின்றது.
சுவாமிகள்
வயலூரில் தங்கியிருந்தபோது, “விகடபரிமள” என்று தொடங்கும் ஓர் அரிய
திருப்புகழ்ப் பாடலைப் பாடியருளினார்.
அப்போது
முருகனானவன் அவர் முன் அற்புதமான திருகோலத்துடன் தோன்றி, அவருடைய துயரை ஒழித்து, ஞானோபதேசம்
செய்து “நம் விராலிமலைக்கு வா” என்று அழைத்து அருளினார்.
“.............................................விராலி
மாமலையில்
நிற்ப நீ கருதி உற்று
வாஎன அழைத்து, என் மனதுஆசை
மாசினை அறுத்து, ஞான அமுதளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே” --- (தாமரை) திருப்புகழ்.
கருத்துரை
விராலிமலையுறை
விமலனே! பக்தி நெறியும் முத்தி நெறியுந் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment