பிள்ளையார்பட்டி (விநாயகமலை) - 0369. சரவண ஜாதா





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சரவண ஜாதா (பிள்ளையார்பட்டி)

முருகா! என்னை ஆண்டு அருள்

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
     தனதன தானா தனாதன ...... தனதான


சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
     சததள பாதா நமோநம ...... அபிராம

தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
     சமதள வூரா நமோநம ...... ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
     ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
     ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
     வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
     வனசர ராதார மாகிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சரவண ஜாதா! நமோ நம, கருணை அதீதா! நமோ நம,
     சததள பாதா! நமோ நம, ...... அபிராம!

தருண அக தீரா! நமோ நம, நிருபமர் வீரா! நமோ நம,
     சமதள ஊரா! நமோ நம, ...... ஜகதீச!

பரம சொரூபா! நமோ நம, சுரர்பதி பூபா! நமோ நம,
     பரிமள நீபா! நமோ நம, ...... உமை,காளி

பகவதி பாலா! நமோ நம, இகபர மூலா! நமோ நம,
     பவுருஷ சீலா! நமோ நம, ...... அருள்தாராய்.

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற, வானவர்
     எவர்களும் ஈடேற, ஏழ்கடல் ...... முறையோ என்று

இடர்பட, மாமேரு பூதரம் இடிபடவே தான், நிசாசரர்
     இகல் கெட, மாவேக நீடு அயில் ...... விடுவோனே!

மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
     வசு எனும் ஆகார ஈசனும் ...... அடிபேண,

மயில் உறை வாழ்வே! விநாயக மலை உறை வேலா! மகீதர!
     வனசர்ர் ஆரதாரம் ஆகிய ...... பெருமாளே.


பதவுரை

      இரவும் --- சூரிய மண்டலமும்,

     ஆகாச --- வானுலகமும்,

     பூமியும் --- மண்ணுலகமும்,

     விரவிய துள் ஏற --- மறையுமாறு கலந்த துகள் படியவும்,

     வானவர் எவர்களும் ஈடேற --- தேவர்கள் யாவரும் உய்வுபெற்று உயர்வடையவும்,

     ஏழ்கடல் முறையோ என்று இடர் பட --– ஏழு சமுத்திரங்களும் துன்புற்று ‘முறையோ‘ என்று கதறி வருந்தவும்,

     மாமேரு பூதரம் இடிபடவே தான் --- பெரிய மேருமலை இடிபட்டு துகள் படவும்,

     நிசாசரர் இகல் கெட --- இரவிலே உலாவுகின்ற இராக்கதர்களின் போர்கெட்டு ஒழியவும்,

     மா வேக நீடுஅயில் --- மிக்க வேகத்தையுடைய நீண்ட வேலாயுதத்தை,

     விடுவோனே --- விடுத்தருளியவரே!

      மரகத ஆகார ஆயனும் --- மரகதம் போன்ற பச்சைநிறமுள்ள திருவுருவமுடைய ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும்,

     இரணிய ஆகார வேதனும் --- பொன்னிறம் உள்ள திருவுருவுடைய பிரம்மதேவனும்,

     வசு எனும் ஆகார ஈசனும் --- நெருப்பு வண்ணமுள்ள திருவுருவுடைய உருத்திரமூர்த்தியும்,

     அடி பேண --- திருவடியை விரும்ப,

     மயில் உறை வாழ்வே --- மயில்வாகனத்தில் எழுந்தருளி வருகின்ற இறையவரே!

      விநாயக மலை உறை வேலா --- விநாயகமலை என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற வேலாயுதக் கடவுளே!

      மகீ தர --- மலைகளோடு கூடிய,

     வனசரர் ஆதாரமாகிய பெருமாளே --- காட்டிலே வாழ்கின்றவேடர்களுக்கு ஆதாரமாகிய பெருமையின் மிக்கவரே!

      சரவண ஜாதா --- நாணல்வனஞ் சூழ்ந்த பொய்க்கையில் தோன்றியவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      கருணை அதீதா --- கருணை நிறைந்து கடந்த பொருளே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      சத தள பாதா --- நூறு இதழ்களோடு கூடிய தாமரை போன்ற திருவடியையுடையவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      அபிராம --- மிக்க பேரழகுடையவரே

     தருண அக தீரா --- இளமையுடன் தைரியத்தை யுடையவரே!

     நமோ நம --– போற்றி போற்றி;

      நிருப அமர் வீரா --- தலைமை தங்கிய வீரரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      சம தள ஊரா --- போருக்குரிய சேனைகளுடன் கூடிய ஊராகிய போரூரில் வாழ்பவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      சகதீச --- உலகங்களுக்குத் தலைவரே!

     பரம சொரூப ---- உயர்ந்த ஞானவடிவு உடையவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      சுரர்பதி பூபா --- இமையவர் கோமானாகிய இந்திரனுக்குத் தலைவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      பரிமள நீபா --- வாசனை தங்கிய கடப்பமலர் மாலையை அணிபவனே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      உமை காளி பகவதி பாலா --- உமை என்னும் திருப்பெயரையுடையவரும், கருமை நிறத்தோடு கூடியவரும், ஆறுஅருட்குணங்களை யுடையவருமாகிய அம்பிகையின் அருட்புதல்வரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      இகபர மூலா --- இம்மை மறுமை என்ற இரண்டு சுகமும் அருளுவதற்கு மூலகாரணரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      பவுருஷ சீலா --- ஆண்மையுடன் கூடிய ஒழுக்கமுடையவரே!

     நமோ நம --- போற்றி போற்றி;

      அருள் தாராய் --- தேவரீருடைய திருவளைத் தந்தருள்வீர்.


பொழிப்புரை


         சூரியமண்டலமும், விண்ணுலகும், மண்ணுலகும் புழுதிபடவும், அமரர்கள் அனைவரும் உய்வுபெற்று ஈடேறவும், எழுகடலும் அஞ்சி “முறையோ” என்று கதறித் துன்புறவும், உயர்ந்த மேருகிரி இடிந்து துகள் படவும், அசுரர்களின் கொடிய போர் ஒழியவும், மிகுந்த வேகத்தொடு கூடிய நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவரே;

         மரகத நிறமுடைய திருமாலும் பொன்னிறமுடைய திசைமுகனும் நெருப்பு நிறமுடைய உருத்திரரும் திருவடியை விரும்ப பச்சை மயில் வாகனத்தில் மீது எழுந்தருளுகின்ற இறைவரே!

         விநாயகமலை என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற வேலவரே!

         மலைகளில் உலாவுகின்ற வேடர்களுக்கு ஆதாரமாகிய பெருமையின் மிக்கவரே!

         சரவண தடாகத்தில் தோன்றியவரே! போற்றி போற்றி;

         கருணை மிகுந்து தத்துவங் கடந்த தனிமுதலே! போற்றி போற்றி;

         நூறு இதழ்களுடன் கூடிய தாமரை மலர்போன்ற திருவடியை உடையவரே! போற்றி போற்றி;

         மிக்க அழகுடையவரே! இளமையுடன் கூடிய தீரரே! போற்றி போற்றி;

         முதன்மை பெற்ற வீரரே! போற்றி போற்றி;

         போருக்குரிய தளங்கள் நிறைந்த திருப்போரூரில் வாழ்கின்றவரே! போற்றி போற்றி;

         உலகங்களுக்குத் தலைவரே! பரஞான வடிவினரே! போற்றி போற்றி;

         அமரேசனுக்கு அதிபரே! போற்றி போற்றி;

         பரிமள மிக்க கடப்பமலர் மாலையை அணிபவரே! போற்றி போற்றி;

         கருமை நிறமுடையவரும் ஆறு குணங்களை உடையவருமாகிய உமா தேவியாருடைய திருப்புதல்வரே! போற்றி போற்றி;

         இருமை நலன்களையும் அருள வல்லவரே! போற்றி போற்றி;

         மிகுந்த ஆண்மை உடையவரே! போற்றி போற்றி;

         அடியேனுக்கு அருள் புரிவீராக.


விரிவுரை

சரவண ஜாதா ---

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக அறநெறி வழுவி, அமரரை வருத்தி, அரசு புரிந்த சூரபன்மனுடைய கொடுமையாகிய தீயினால் வெதும்பிய தேவர்கள் “இனிய உய்வு கிடைக்குமோ?” என்று ஏங்கி சிவபெருமானிடம் போய் முறையிட்டனர். சூட்டை சூட்டினால் நீக்கும் மருத்துவ முறை போல் சூராதியவுணரின் கொடுமைத் தீயை அவிக்க சிவபெருமானுடைய நெற்றிக்கண்களினின்றும் ஆறு சுயஞ்ஜோதி அருள் தீப் பொறிகள் தோன்றின. அவற்றை அரனார் ஆணையின்படி வாயுதேவனும் அக்கினி தேவனும் கங்கையிலிட்டனர்; கங்கை சரவணத்திற் சேர்த்தனள். ஆங்கு திருமுருகர் ஆறுமுக வடிவுகொண்டு திருவவதரித்தனர்.

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு, து ஓர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.

மனிதர் விலங்கு முதலிய இடத்தினின்றும் அவதரித்த ஏனைய தேவர்களின் அவதாரம் போலன்றி பிறவா இறவா பெற்றியுடைய பெம்மான் முருகன், பரஞ்சுடர் நெற்றியந் தலத்தினின்றும் வெளிப்பட்டு, சரவணப் பொய்கையில் அருளுருக்கொண்டு உலகங்களை யுய்வித்தனர்.

சரம்-நாணல்; வனம்-காடு. சிறந்த நரம்புகளால் சூழப்பெற்ற இதய கமலத்தின் நடுவினுள் தகராலயத்தில்குகப்பெருமான் வீற்றிருக்கின்றனன் என்ற உள்ளுறையையும், “சரவணஜாதா” என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது.

கருணை அதீதா ---

அதீதம்-கடந்தது; மனவாசகங் கடந்ததும், மறைகளின் முடிவாலும் ஆகமங்களாலும் அளக்கற்கரியதுமாகிய பரம் பொருள் நம்பொருட்டு கருணைகூர் முகங்கள் ஆறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டு எழுந்தருளினன்.

சமதள ஊரா ---

சமதளவூரா என்பது திருப்போரூர், அது செங்கற்பட்டுக்கு அருகே விளங்கும் அருமைத் திருத்தலம்.
  
திருப்போரூர்த் தல வரலாறு

தாரகன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான் (இவன் சூரபன்மன் தம்பியாகிய தாரகனன்று). இவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்று மூன்று புதல்வர் இருந்தனர். இவரே திரிபுரத்தசுரர். தாரகன் தேவவருடம் ஐம்பதினாயிரம் ஆண்டு கடுந்தவம் புரிந்தனன். பிரமதேவர் தோன்றி வேண்டிய வரங்களை நல்கினர். அதனால் தாரகன் தருக்குற்ற மூவுலகங்களையும் வென்று தேவரும் மற்று யாவரும் தனது ஏவல் கேட்ப அரசு புரிவானாயினான். திருமால் முதலிய யாவரையுங் கடந்தவனாதலின் தாரகன் என்று பேர் பெற்றனன். (தாரகம் - கடத்தல்). தாரகன் தன் மக்கள் மூவரையும் நோக்கி, “மைந்தர்காள்! தவத்தினும் சிறந்தது வேறு இல்லை. தவத்தாலேயே எல்லாச் சிறப்புக்களையும் நான் பெற்றேன். நீங்களும் சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிந்து அழியாத வரத்தைப் பெற்று உய்மின்” என்று ஏவினான். இதனையறிந்த இந்திரன், பிரமன், திருமால் முதலிய இமையவர் முதலிய யாவரும் சிந்தாகுலமுற்று வைகுண்டத்தில் கூடி, “‘அந்தோ! இனி நமக்கு உய்வில்லை. தாரகனுக்கு நாம் ஏவல் செய்வோராய் ஒழியாது துன்புற்று உழ்கின்றோம். இனி அவனுடைய புதல்வரும் தவங்கிடந்து வரம்பெறுவரேல் நமது கதி யாதாகும்? என்செய்வோம்” என்று ஏங்கினார்கள். ஏங்கிய அவர்கள் தாரகனைக் கொல்லும்பொருட்டு ஓர் அபிசார கேள்வியைப் புரிவாராயினர். அதனையறிந்த தாரகன் கொதித்த உள்ளமுடையவனாய் “அமரரை அடியுடன் அழிப்பேன்” என்று வைகுண்டம் போனான். அவன் வரவை யறிந்த மாலயனாதி வானவர் “இறந்தோம்” என்று கதறி ஓடி பொன்மேருகிரியிற் சென்று அதில் அனைவரும் ஒளிந்து கொண்டார்கள்.

தாரகன் சீற்றமுற்று ஆலகாலம்போற் சென்று மேரு மலையிடம் அடைந்து “தேவர்களே! நுமது பேடித்தன்மை நன்று நன்று; சற்றும் வீரமில்லாத வெற்றுத் தகர்களே! என்று பரிகசித்து, “உங்கட்கு இடந் தந்த மேரு மலையை வேருடன் பறிப்பேன் என்றுகூறி அம்மாமேரு மலையை வேருடன் குடைந்து தூக்கினான். குடைபோலக் குலுக்கினான். சுழற்றினான், ஆலமரத்தை ஒருவன் அசைத்தால் அதிலுள்ள நன்கு கனிந்த கனிகள் உதிர்வதுபோல் தேவர்களும் முனிவர்களும் கீழே விழுந்து கயிலையை நோக்கி ஓடினர். தாரகன் அது கண்டு, எள்ளி நகையாடி மலையை முன்போல் நிறுவித் தனது ஊர் புகுந்தான்.

அயனாரிடமும் அரனாரிடமும் அளபற்ற வரம்பெற்ற தாரகன் இவ்வண்ணம் உலகங்களையெல்லாம் தன்னகப்படுத்தி ஆட்சி புர்ந்தனன். பிரம விட்டுணு முதலிய தேவர்களும் ஏனைக் கணங்களும் கவலைக் கடலுள் மூழ்கி காடு மலை குகை முதலிய இடங்களில் உருமாறி ஒளிந்திருந்தனர். இந்திரன் சந்று தைரியத்துடன் வந்து தாரகனை எதிர்த்து அமராடி வச்சிராயுதத்தை எறிந்தனன். அது தாரகன்மீது பட்டு துரும்புபோல் ஒடிந்து துகளாயிற்று. அதுகண்டு வெருவிய அமரர்கோமான் தனது மனைவி சசிதேவியுடனும் மகன் சயந்தனுடனும் இருடி வடிவெடுத்து ஒரு வனத்தின் கண் தவம் புரிந்திருந்தனன். திருமால் தாரகனுடன் பொருது தோற்று வைகுண்ட வாழ்க்கையை விட்டு மீன்வடிவெடுத்துக் கடலுள் மறைந்து வாழ்ந்தனர். பிரமதேவர் தமது மனோவதி நகரினின்றும் நீங்கி சீகாழிப் பதியை யடைந்து வாணிதேவியுடன் இருடி வேடந்தரித்து சிவ பெருமானைப் பூசித்துக் கொண்டிருந்தனர். அதனாலே அப்பதி பிரமபுரம் எனப் பெயருற்றது. தாரகனிடம் அக்கினி மடைத்தொழில் புரிந்தான்; வாயு அரண்மனையைக் கூட்டினான்; வருணன் முற்றத்திற்குத் தண்ணீர் தெளித்தான்; இயமன் காலங்காட்டும் மணியை யடித்தான்; இப்படி எல்லாத் தேவர்களும் தத்தமக்கிட்ட ஏவலைப் புரிந்து நொந்து இளைத்தனர். தாரகன் விட்டுணுவின் வைகுண்டத்தில் சித்திரசபையில் வீற்றிருந்து அரசு புரிந்தனன்.

இத்திறத் தமரர் யாவரு மிடைந் தயரவே
முத்திறத் துலகும் வௌவிய முரண்கொளசுரன்
நத்தெடுத்தவ னலங்கொள்பதி நண்ணி யவன்வாழ்
சித்திரச் சபையிருந் தரசுசெய் தனனரோ

இங்ஙனம் வருந்திய தேவர்கள் யாவரும் திருக்கைலாய மலையை யணுகி, சிவபெருமான் சேவடிக் கமலத்தின்மீது வீழ்ந்து வணங்கி, துதித்து தூமலர் தூவித் தொழுது, “கருணை கடலே! கண்ணுதற்கடவுளே! தாரகனால் நாங்கள் செக்கிலிட்ட எள்ளுபோல் அரைபட்டு நொந்தோம்; இடர் தீர்த்து எம்மை யாட்கொள்ளும்” என்று முறையிட்டனர். சிவபெருமான் அவரிடம் தீர்க்குமாறு தமது திருவுளத்து நினைத்த மாத்திரையே, ஆறு திருமுகங்களும், பதினெட்டு திருக்கண்களும், அபயம் வாள் சூலம் சக்கரம் முசலம் வேல் என்பன அமைந்த வலக்கரங்களாறும், வரதம் கொடி கேடகம் அங்குசம் பாசம் குலிசம் என்பனவமைந்த இடக்கரங்களாறும், கொண்டு, கோடிசூரியப்பிரகாச முடையவராய் முருகக் கடவுள் அவருடைய இதயத்தினின்றுந் தோன்றி அருளினார்.

ஆலமுண்ட நீலகண்டர் அவருடைய திருமுகத்தை நோக்கி, “மைந்த! தாரகனை வதைத்து அமரர் அலக்கணை அகற்றுதி” என்று அனுப்பினர். பன்னிருகையுடையப் பரமபதி படையுடன் சென்ற தாரகனுடன் பத்துநாள் போர்புரிந்து வெள்ளிக்கிழமை இரவிலே அவனை வதைத்தருளினார். மாலயனாதி வானவர்களைப் பண்டுபோல் அவரவர் பதத்திலிருத்தி சிவமூர்த்தியிடம் எய்தினர். தாரகன் இருந்த இடம் செங்கற்பட்டிற்கு அருகிலுள்ள “திருக்கூவம்” என்னுந் திருத்தலமாகும். அவனுடன் போர் புரிந்த இடம் “போரூர்” எனப்படும். சமரபுரி என்றும் சொல்லப்படும். இத்தலத்திற்கு சிதம்பர சுவாமிகள் பாடியருளிய மிக்க உயர்ந்த திருவாக்காகிய சந்நிதி முறை ஒன்று உண்டு.

பகவதி ---

ஐஸ்வரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், என்ற ஆறுகுணங் களையும் உடையவராதலால் “பகவதி” எனப்பட்டனர்.

இகபர மூலா ---

இம்மை நலன்களையும், மறுமை நலன்களையும் ஒருங்கே அருளவல்லவர் முருகவேள். ஆறுமுகர் ஆதலின் என்க.

இகபர சௌபாக்யமய் அருள்வாயே”   ---(வசனமிக) திருப்புகழ்

மரகத  ஆகார ஆயனும்...................................ஈசனும் :-

மால் பிரமன் உருத்திரர் என்ற மூவரும் வணங்கும் முழு முதற் கடவுள் முருகப்பெருமான்.. முத்தொழில்களையும் அம்மூவருக்குங் கொடுத்தவரும் அவரே. அவர்களின் பயங்கெடுக்கும் அபயரும் அப்பரமபதியே.

படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே” --- (கனைத்த) திருப்புகழ்.

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
             புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
   பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
             பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா” --- (தடக்கைப்) திருப்புகழ்.

விநாயக மலை ---

இப்போது பிள்ளையார்பட்டி என்று வழங்கப்படுகின்றது.

கருத்துரை

சூராதியவுணரை யொழித்த சுப்ரமண்யரே! மூவரும் வணங்கும் முழுமுதலே! விநாகமலை யுறை வேலாயுதரே! உமது திருவடிகட்கு வணக்கம் பல; அடியேனை ஆண்டருள்வீர்.





No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...