கனகமலை - 0412. அரிவையர்கள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அரிவையர்கள் (கனகமலை)

முருகா!
மனத்துயர் நீங்க, உனது திருவடியை வழிபட அருள்

தனதனன தனன தந்தத்
     தனதனன தனன தந்தத்
          தனதனன தனன தந்தத் ...... தனதான


அரிவையர்கள் தொடரு மின்பத்
     துலகுநெறி மிகம ருண்டிட்
          டசடனென மனது நொந்திட் ...... டயராமல்

அநுதினமு முவகை மிஞ்சிச்
     சுகநெறியை விழைவு கொண்டிட்
          டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ

பரிதிமதி நிறைய நின்றஃ
     தெனவொளிரு முனது துங்கப்
          படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும்

படர்கள்முழு வதும கன்றுட்
     பரிவினொடு துதிபு கன்றெற்
          பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே

செருவிலகு மசுரர் மங்கக்
     குலகிரிகள் நடுந டுங்கச்
          சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான

செயமுதவு மலர்பொ ருங்கைத்
     தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
          தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே

கருணைபொழி கிருபை முந்தப்
     பரிவினொடு கவுரி கொஞ்சக்
          கலகலென வருக டம்பத் ...... திருமார்பா

கரிமுகவர் தமைய னென்றுற்
     றிடுமிளைய குமர பண்பிற்
          கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அரிவையர்கள் தொடரும் இன்பத்து,
     உலகுநெறி மிக மருண்டிட்டு,
          அசடன் என மனது நொந்திட்டு, ......அயராமல்

அநுதினமும் உவகை மிஞ்சி,
     சுகநெறியை விழைவு கொண்டிட்டு,
          அவநெறியின் விழையும் ஒன்றைத் ......தவிர்வேனோ?

பரிதிமதி நிறைய நின்ற அஃது
     என ஒளிரும் உனது துங்கப்
          படிவமுகம் அவைகள் கண்டு உற்று......அகமேவும்

படர்கள் முழுவதும் அகன்று, ள்
     பரிவினொடு துதி புகன்று, ல்
          பதயுகளம் மிசை வணங்கற்கு ...... அருள்வாயே

செரு விலகும் அசுரர் மங்க,
     குலகிரிகள் நடுந டுங்க,
          சிலுசிலு என அலை குலுங்க, ...... திடமான

செயம் உதவு மலர் பொரும் கைத்-
     தலம் இலகும் அயில் கொளும் சத்-
          தியை விடுதல் புரியும் முன்பில் ...... குழகோனே!

கருணைபொழி கிருபை முந்த,
     பரிவினொடு கவுரி கொஞ்ச,
          கலகல என வரு கடம்பத் ...... திருமார்பா!

கரி முகவர் தமையன் என்று உற்-
     றிடும் இளைய குமர! பண்பிற்
          கனககிரி இலகு கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

செரு விலகு அசுரர் மங்க --- போரில் பின்னிட்ட அசுரர்கள் மாளவும்,

குலகிரிகள் நடு நடுங்க --- சிறந்த மலைகள் யாவும் நடு நடுங்கவும்,

சிலுசிலு என அலை குலுங்க --- சிலுசிலு என கடல் கலங்கவும்,

திடம் ஆன --- உறுதியுள்ளதும்,

செயம் உதவும் --- வெற்றியைத் தருவதும்,

மலர் பொரும் கைதலம் இலகும் --- மலர்போன்ற திருக்கரத்தில் விளங்குவதும்,

அயில் கொளும் --- கூர்மை கொண்டதுமான,

சத்தியை விடுதல் புரியும் --- வேலாயுதத்தை விடுத்தருளிய,

 முன்பில் குழகோனே --- பெருமை வாய்ந்த இளையவரே!

கருணை பொழி கிருபை முந்த --- கருணை பொழியும் அருளே முந்துவதால்,

பரிவினொடு --- அன்புடன்,

கவுரி கொஞ்ச --- பார்வதியம்மை கொஞ்சி நிற்க,

கலகல என வரு --- கலகல என்று தண்டை ஒலிக்க வருகின்ற,

கடம்ப திருமார்பா --- கடப்ப மலரையணிந்த திருமார்பை யுடையவரே!

கரிமுகவர் தமையன் என்று உற்றிடும் --- யானைமுகக் கடவுளை அண்ணனாக வாய்க்கப்பெற்று விளங்கும்,

இளைய குமர --- இளையக்குமாரக் கடவுளே!

பண்பின் கனககிரி இலகு --- அழகுடன் கனககிரியில் விளங்கி வாழும்,

கந்த --- கந்தக் கடவுளே!

பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

அரிவையர்கள் தொடரும் இன்பத்து --- மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து,

உலகு நெறி மிக மருண்டிட்டு --- உலக நெறியில் மிகவும் மருட்சி கொண்டு,

அசடன் என மனது நொந்திட்டு --- அசடன் எனப் பிறர் கூற மனம் வேதனைப் பட்டு,

அயராமல் --- சோர்வு அடையாமல்,

அனுதினமும் உவகை மிஞ்சி --- நாள்தோறும் களிப்பு மிகுந்து,

சுக நெறியை விழைவு கொண்டிட்டு --- சுக வழியிலேயே விருப்பங்கொண்டு நடந்து,

அவ நெறியின் விழையும் ஒன்றை --- வீண் மார்க்கத்தில் செல்ல விரும்பும் ஒரு புத்தியை

தவிர்வேனோ --- நீக்க மாட்டேனோ?

பரிதிமதி நிறை நின்ற --- சூரியன் சந்திரன் இரண்டும் பூரண ஒளியுடன் நின்ற,

அஃது என --- அத்தன்மையை ஒப்ப,

ஒளிரும் உனது துங்க --- விளங்குகின்ற உமது பரிசுத்தமான,

படிவ முகம் அவைகள் கண்டு உற்று --- வடிவுள்ள திருமுகங்களைத் தரிசித்து அக்காட்சியில் பொருந்தி,

அகம் மேவும் படர்கள் முழுவதும் அகன்று --- என் மனதில் உள்ள துயர்கள் முழுமையும் நீங்கப் பெற்று,

 உள் பரிவினொடு துதி புகன்று --- உள்ளன்புடன் உம்மைத் துதி செய்து,

 எல் பதயுகள மிசை வணங்கற்கு அருள்வாயே --- ஒளி பொருந்திய இரு திருவடிகளின் மீது வணங்குதற்கு அருள் புரிவீராக.

பொழிப்புரை


     போரில் விலகிப் பின்வாங்கிய அசுரர்கள் மாயவும், சிறந்த மலைகள் நடுநடுங்கவும் சிலுசிலு என்று அலைகடல் கலங்கவும், உறுதியுள்ளதும், வெற்றியைத் தருவதும், மலர் போன்ற திருக்கரத்தில் விளங்குவதும், கூர்மையுடையதுமாகிய சத்திவேலை விடுத்தருளிய பெருமை வாய்ந்த இளம்பூரணரே!

கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்புடன் பார்வதி தேவி கொஞ்சி நிற்க, கலகல என்று தண்டை ஒலிக்க வருகின்ற கடம்பு அணிகின்ற திருமார்பினரே!

யானைமுகக் கடவுளைத் தமையனாராகப் பெற்ற இளைய குமாரரே!

அழகுடன் கனககிரியில் விளங்க வீற்றிருக்கும் கந்தவேளே!

பெருமித முடையவரே!

மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து, உலக நெறியில் மிகவும் மருட்சி கொண்டு, அசடன் எனப்பிறர் கூற என்மனம் வேதனைப்பட்டுச் சோர்வு அடையாமல், தினந்தோறும் களிப்பு மிகுந்து, சுக வழியிலேயே விருப்பங்கொண்டு நடந்து, பாவவழியிற் செல்ல விரும்பும் ஒரு புத்தியை நீக்க மாட்டேனோ? சூரிய சந்திர ஒளிகள் நிறைந்தது போல் விளங்கும், தூய உமது திருமுகங்களைத் தரிசித்து, அக்காட்சியில் ஒன்றுபட்டு, என் மனதில் உள்ள துயர் அனைத்தும் நீங்கப் பெற்று உள்ளன்புடன் தேவரீரைத் துதித்து, ஒளிபொருந்திய உமது இருதிருவடிகளின் மீது வணங்குமாறு அருள்புரிவீராக.


விரிவுரை


அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு ---

இந்த உலகம் பெண்களால் வரும் சிறிய இன்பத்தையே நாடி உழல்கின்றது.

சுகநெறியை விழைவு கொண்டிட்டு ---

அற்ப சுகத்தைப் பெறுகின்ற வழியையே விரும்பி அலைகின்றார்கள் மாந்தர்கள்.

அவநெறியின் விழையும் ஒன்றை ---

பயன் இல்லாத வழியை விழைவது பேதைமை.

பரிதிமதி நிறைய நின்றஃதென ---

சூரியனும் சந்திரனும் ஒன்றாக ஒளி செய்வதுபோல் முருகப் பெருமானுடைய திருமுகம் விளங்குகின்றது. திருமுடி சூரியனுக்கும், திருமுகம் சந்திரனுக்கும் உவமையாயின.

நின்றஃ - இங்கு ஆயுத எழுத்து (ஃ) வல்லோசை சந்தத்தில் நின்றது.

அகமேவு படர்கள் ழுமுவதும் அகன்று ---

முருகவேளின் திருமுகங்களைத் தரிசித்த மாத்திரத்தில் மனத்துயர் யாவும் பறந்தோடிவிடும்.

கனக கிரி ---

போளூருக்கு 9 கல் தொலைவில் உள்ள தேவிகாபுரத்தின் அருகில் உள்ள மலை கனககிரி.

கருத்துரை

கனககிரிக் கந்தவேளே! உமது பதமலரைப் பணிய அருள்புரிவீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...