அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருடன் மிசைவரு
(குருடிமலை)
முருகா!
திருடி நெருடி கவி பாடும்
புலவர்கள் பால் சாராது அருள்
தனன
தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
கருடன்
மிசைவரு கரிய புயலென
கமல மணியென ...... வுலகோரைக்
கதறி
யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி ...... களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியு
மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை ...... யறியேனே
வருடை
யினமது முருடு படுமகில்
மரமு மருதமு ...... மடிசாய
மதுர
மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை ...... குதிபாயுங்
குருடி
மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ ...... மயிலேறுங்
குமர
குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கருடன்
மிசை வரு கரிய புயல் என,
கமல மணி என, ...... உலகோரைக்
கதறி, அவர் பெயர் செருகி, மனம் அது
கருதி, முதுமொழி- ...... களை நாடி
திருடி, ஒரு படி நெருடி, அறிவு இலர்
செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியும்
அவர் சில புலவர் மொழிவது
சிறிதும் உணர் வகை ...... அறியேனே.
வருடை
இனம் அது முருடு படும் அகில்
மரமும் மருதமும் ...... அடிசாய,
மதுரம்
எனு நதி பெருகி, இருகரை
வழிய வகை வகை ...... குதிபாயும்
குருடி
மலை உறை முருக! குலவட
குவடு தவிடு எழ ...... மயில் ஏறும்
குமர!
குருபர! திமிர தினகர!
குறைவு இல் இமையவர் ...... பெருமாளே.
பதவுரை
வருடை இனம் அதும் --- மலை ஆட்டின்
கூட்டமும்,
முருடு படும் அகில் மரமும் ---
கரடுமுரடான அகில் மரமும்,
மருதமும் --- மருத மரமும்
அடிசாய --- வேருடன் சாயும்படி,
மதுரம் எனும் நதி பெருகி --- மதுரம்
என்னும் ஆறுவெள்ளம் பெருகி,
இரு கரை வழிய --- இருகரைகளிலும் வழிய,
வருகை வகை குதிபாயும் --- பலவகையாகக்
குதித்துப் பாய்கின்ற,
குருடி மலை உறை --- குருடிமலையில்
விற்றிருக்கின்ற,
முருக --- முருகப் பெருமானே!
குலவட குவடு தவிடு --- எழ-சிறந்த வடமலையாகிய
கிரவுஞ்சகிரி தவிடு பொடியாகுமாறு,
மயில் ஏறும் --- மயிலில் ஏறிய,
குமர --- குமாரக் கடவுளே!
குருபர --- குருபர!
திமிர தினகர --- அறியாமையாகிய இருளுக்கு
ஞான சூரியனே!
குறைவில் இமையவர் --- குறைவில்லாத
தேவர்கள் போற்றும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கருடன் மிசை வரு கரிய புயல் என --- கருடன்
மேல் வருகின்ற நீலமேக வண்ணராம் திருமால் நீ என்றும்,
கமலமணி என --- பதுமநிதி என்றும்
சிந்தாமணி என்றும்,
உலகோரை --- உலகத்தவரை
கதறி --- சத்தமிட்டுப் பாடி,
அவர் பெயர் செருகி --- அவர்களின் பேரை
அப்பாடலில் நுழைத்து,
மனம் அது கருதி --- மனத்தில் அவர்கள்
தரும் பொருளை நாடி,
முதுமொழிகளை நாடித் திருடி --- முன்னோர்கள்
பாடியுள்ள பழைய மொழிகளைத் தேடி அவற்றைத் திருடி,
ஒரு படி நெருடி --- ஒருபடி அளவு
திரித்துப்பாடி,
அறிவு இலர் செவியில் நுழைவன --- அறிவில்லாத
வருடைய காதில் நுழையும்படி,
கவிபாடி திரியும் அவர் --- கவிதைகளைப்
பாடித் திரிகின்றவர்களாகிய,
சில புலவர் மொழிவது --- சில புலவர்கள்
கூறுவன,
சிறிதும் உணர் வகை அறியேனே ---
சற்றேனும் அடியேன் அறிந்திலேன்.
பொழிப்புரை
மலையாட்டுக் கூட்டமும், கரடுமுரடான அகில் மரமும், மருதமரமும், வேருடன் சாயும்படி மதுரம் என்ற ஆறு
வெள்ளம் பெருகி இரு கரைகளிலும் வழிய பலவகையாகக் குதித்துப் பாய்கின்ற
குருடிமலையில் உறைகின்ற முருகக் கடவுளே!
சிறந்த வடக்கில் நின்ற கிரவுஞ் மலை தவிடு
பொடியாகும்படி மயிலில் ஏறிவந்த குமாரக் கடவுளே!
குருபரரே!
அஞ்ஞான இருளை அகற்றும் ஞானபானுவே!
குறைவில்லாத அமரர்கள் போற்றும்
பெருமிதமுடையவரே!
கருடன் மீது வருகின்ற கரிய மேகவண்ணராம்
திருமால் நீ என்றும், பதுமநிதி என்றும், சிந்தாமணி என்றும் புகழ்ந்து
உலகத்தவரைச் சத்தமிட்டுப் பாடி,
அப்பாடலில்
அவர் பெயர்களை நுழைத்து, மனத்தில் பொருளை நாடி, முன்னுள்ள பழைய நூல்களில் உள்ள
சொற்களைத் திருடி ஒரு படியளவு திரித்து அமைத்து, அறிவில்லாதவர்களின் காதில் நுழையும்படி
கவிகளைப் பாடித் திரிகின்ற சில புலவர்கள் கூறும் நெறியை அடியேன் அறியேன். (அதில்
செல்ல மாட்டேன்).
விரிவுரை
கருடன்
மிசை வரு கரிய புயல் என ---
கருடன்
காசிபருக்கும் விநதைக்கும் பிறந்தவன். பறவையரசன். திருமாலுக்கு வாகனமும் கொடியுமாக
இருப்பவர்கள்.
கருடன்
மீது வந்து அடியார்க்கு அருள்புரியும் நீலமேக வண்ணர் திருமால். இத்தகைய திருமால்
தான் நீ என்று புலவர் மனிதரைப் புகழ்ந்து பாடுவார்கள்.
கமலம்
மணி என ---
கமலம்-பதுமநிதி.
தாமரை வடிவில் இருக்கும் ஒரு நிதி. இது வேண்டுவார்க்கு வேண்டிய அளவு நிதி
சொரியும்.
உலகோரை
கதறி ---
உலகிலுள்ள
தனவந்தர்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து சத்தம் போட்டுப் பாடுவர்.
அவர்
பெயர் செருகி ---
பழைய
பாடல்களில் இவர் பேரைச் செருகிப் பாடுவர்.
முதுமொழிகளை
நாடித் திருடி யொரு படி நெருடி ---
பழைய
நூல்களில் முன்னோர்கள் பாடிய பாடல்களில் உள்ள இனிய அரிய சொற்களைத் திருடி, நிரம்பத் தாங்கள் பாடும் பாடல்களில்
நுழைத்தும் பாடுவர்.
சில
புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே ---
இத்தகைய
சில புலவர்கள் செயலை ஒரு போதும் அடியேன் மேற்கொள்ள மாட்டேன் என்று சுவாமிகள்
முருகனிடம் மொழிகின்றார்.
மதுர
என நதி ---
மதுரம்
என்ற ஆற்றில் வெள்ளம் பெருகி இரு கரைகளிலும் மோதி, மலையாடுகள், அகில் மரங்கள், மருத மரங்கள், முதலியன வேருடம் சாயும்படிக் குதித்து
கொண்டுவரும் வளம் பொருந்தியது.
குருடி
மலை ---
இது
கோவைக்கு அடுத்த துடியலூர் புகைவண்டி நிலையத்துக்கு அருகில் உள்ளது.
கருத்துரை
குருடி
மலை வாழுங் குமர! திருடி நெருடி கவிபாடும் புலவர்களின் நெறியில் என் மனம்
செல்லாது.
No comments:
Post a Comment