தன் உடலினுக்கு





தன் உடலினுக்கு ஒன்று ஈந்தால்
     தக்கது ஓர் பலம் அது ஆகும்,
மின் இயல் வேசிக்கு ஈந்தால்
     மெய்யிலே வியாதி ஆகும்,
மன்னிய உறவுக்கு ஈந்தால்
     வருவது மயக்கம் ஆகும்,
அன்னிய பரத்துக்கு ஈந்தால்
     ஆருயிர்க்கு உதவி ஆமே.                      25.

இதன் பொருள் ---

     ஒருவன் தன்னுடைய உடலுக்குப் பயனாகுமாறு ஒரு பொருளைத் தந்தால் அல்லது ஊட்டினால், உண்டால், தக்க வலிமையை அது கொடுக்கும்.

     மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய சாயலை உடைய பரத்தைக்குக் கொடுத்து, அவளிடம் சேர்க்கை உண்டானால், அதனால் உடம்பிலே நோய்தான் உண்டாகும்.

     தன்னோடு பொருந்திய சுற்றத்தார்க்குக் கொடுத்தால், குறைவாகக் கொடுத்ததாகவோ, போதிய அளவு கொடுக்கவில்லை என்றோ அவர்கள் ஒரு காலத்திலே குறை கூறுவதால், மனக்கலக்கமே உண்டாகும்.

     தனக்கு அன்னியமான ஒருவருக்கு, கொடுத்து உதவினால், அத்தகைய தருமமானது, இந்த உயிருக்கு மறுமைப் பயனை நல்கும்.

     சுற்றத்தார்க்குக் கொடுத்தால் கலக்கம் உண்டாகும் என்பது, "கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் ஆருள் வாக்கால் தெளியப்படும். அதுவே இன்றைய உலகியல் நிலை. சுற்றத்தார்க்கு அவர் கேட்டதும் கொடுக்கவேண்டும். கேட்காமலும் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அவர் என்ன செய்தாலும், சொன்னாலும், இன் முகத்தோடு இருக்கவேண்டும். ஏன் எதற்கு என்று கேட்கக் கூடாது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...