கொல்லிமலை - 0400. கட்டம் மன்னும் அள்ளல்
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கட்ட மன்னும் (கொல்லிமலை)

முருகா!
பொதுமாதர் ஆசையால் அடியேன் நையாமல்,
ஆட்கொண்டு அருள்.


தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான


கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
     கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி

கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
     கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர்

இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
     யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி

எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
     யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான்

முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள,
     முட்ட நன்மை விள்ள ...... வருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
     முத்தி விண்ண வல்லி ...... மணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
     பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கட்டம் மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்-
     கட்கு மன்னும் இல்லம் ...... இது பேணி,

கற்ற விஞ்ஞை சொல்லி, உற்ற வெண்மை உள்
     உகக்க எண்ணி, முல்லை ...... நகை மாதர்

இட்டம் எங்ஙன், ல்ல கொட்டி அங்ஙன் நல்கி
     இட்டு, பொன்னை இல்லை ...... என ஏகி,

எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும், இன்மை உள்ளி
     எற்றும், ங்ஙன் நைவது ...... இயல்போ தான்?

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
     முட்ட நன்மை விள்ள ...... வருவோனே!

முத்து வண்ண வல்லி, சித்ர வண்ண வல்லி,
     முத்தி விண்ண வல்லி ...... மணவாளா!

பட்டம் மன்னு அ வல்லி, மட்டம் அன்ன அ வல்லி,
     பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா!

பச்சை வன்னி, அல்லி செச்சை சென்னி உள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.


 பதவுரை

       முட்ட உண்மை சொல்லு செட்டி --- முழு உண்மையைச் சொன்ன செட்டியாக,

     திண்மை கொள்ள --- சங்கப் புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள,

     முட்ட நன்மை விள்ள --- முழுவதும் நன்மையே பெருக,

     வருவோனே --- வந்தவரே!

       முத்து வண்ண வல்லி --- முத்துபோன்ற நிறமுடைய வல்லியும்,

      சித்ர வண்ண வல்லி --- அழகிய நிறம் படைத்த வல்லியும்,

     முத்தி விண்ண வல்லி --- முத்தி தரவல்ல விண்ணுலக வல்லியும், ஆகிய தேவயானை அம்மையின்,

      மணவாளா --- கணவரே,

       பட்டம் --- வழியில்,

     மன்னு அ வல்லி --- நிலைபெற்ற அந்த வல்லி,

      மட்டம் மன்னு அ வல்லி --- மதுவைப் போல் மயக்கமு தரும் கொல்லிப்பாவை,

     பட்ட --- இருக்கும்,

     துன்னு கொல்லிமலை நாடா -- - நெருங்கிய கொல்லிமலை நாட்டு அரசே!

       பச்சை வன்னி --- பசுமையான வன்னிப் பத்திரமும்,

     அல்லி --- அல்லி மலரும்,

     செச்சை --- வெட்சி மலரும் அணிந்துள்ள,

     சென்னி உள்ள --– தலையை உடைய,

     பச்சை மஞ்ஞை வல்ல --- பச்சை மயிலை நடாத்தவல்ல,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

       கட்டம் மன்னும் அள்ளல் --- கஷ்டங்கள் பொருந்தியுள்ள சேறு போன்றதும்,

     கொட்டி பண்ணும் --- கொடு கொட்டி ஆடல் போலக் கூத்தாட்டி வைக்கும்,

      ஐவர்கட்கும் மன்னும் இல்லம் --- ஐம்புலன் கட்கும் இருப்பிடமான வீடு போன்றதுமாகிய,

     இது பேணி --- இந்த உடலை விரும்பி,

     கற்ற விஞ்ஞை சொல்லி --- அடியேன் கற்ற வித்தைகளைச் சொல்லி,

     உற்ற எண்மை --- உற்ற எளிமையை,

     உள் உகக்க எண்ணி --- உள்ளம் மகிழ நினைத்து,

     முல்லை நகை மாதர் --- முல்லையரும்பு போன்ற பற்களையுடைய பெண்களின்,

     இட்டம் எங்ஙன் --- விருப்பம் எப்படியோ அப்படி,

     நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு --- நல்ல பொருள்களையெல்லாம் ஒன்றாகக் கொட்டி அவர்களுக்குக் கொடுத்து,

     பொன்னை இல்லை என --- பின்னும் கொடுப்பதற்குப் பொன் இல்லையென்று சொல்ல,

     ஏகி எத்து --- வெளிவந்து ஏமாற்றும் பொருட்டு,

     பொய்மை உள்ளல் உற்றும் --- பொய்வழியை யோசித்தும்,

     இன்மை உள்ளி எற்றும் --- பொன் இல்லாமையை நினைந்து இரக்கமுற்றும்,

     இங்ஙன் நைவது இயல்பேதான் --- இவ்வாறு மனம் நைந்து வருந்துதல் தக்கதாமோ? (தகாது.)

பொழிப்புரை

     செட்டிக் குமரனாகி சங்கப் புலவர் உறுதிப் பொருளை அறிந்துகொள்ளும் பொருட்டு முழு உண்மையைச் சொல்லி, முழுவதும் நன்மையே பெருக வந்தருளியவரே!

     முத்து நிறவல்லியும், அழகிய வண்ணம் படைத்த வல்லியும், முத்திதரவல்ல விண்ணுலக மடந்தையுமாகிய தேவசேனையின் கணவரே!

     வழியில் நிலைபெற்று மதுவைப் போல் மயக்கந்தரவல்ல கொல்லிப் பாவையிருக்கும் நெருங்கிய கொல்லிமலை நாட்டிற்குத் தலைவரே!

     பசுமையான வன்னியிலையும், அல்லிமலரும், வெட்சி மலரும், சூடிய சிரத்தினையுடையவரே!

     மரகத மயிலை நடத்தவல்ல பெருமிதம் உடையவரே!

     துன்பங்கள் பொருந்தியுள்ள சேறு போன்றதும், கொடு கொட்டி ஆடல் போல் கூத்தாட்டி வைக்கும் ஐம்புலன்களுக்கும் இருப்பிடமான வீடு போன்றதுமாகிய, இந்த உடலை விரும்பி, அடியேன் கற்ற வித்தைகளைச் சொல்லி, எளிதாக எண்ணங்கள் நிறைவேறும் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்து, முல்லையரும்பு போன்ற பற்களையுடைய பொது மாதர்களுக்குக் கொட்டிக் கொடுத்து, பொன் இல்லையென்று சொல்ல, ஏமாற்றும் பொருட்டு பொய்வழியைச் சிந்தித்தும், வறுமையை நினைத்து வருந்தியும் இவ்வாறு மனம் நைந்து வருந்துதல் தக்கதாமோ? தகாது.

விரிவுரை

கட்டம் மன்னும் அள்ளல் ---

கட்டம் மன்னும் அள்ளல். கஷ்டம் என்ற சொல் கட்டம் என வந்தது. அள்ளல்-சேறு. உதிரச் சேற்றுடன் கூடிய உடம்பு. துன்பம் நிறைந்த உடம்பு.

கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் ---

கொடு கொட்டி என்பது ஒருவகைக் கூத்து. இந்த உடம்பாகிய வீட்டில், ஐம்புலன்களாகிய வேடர்கள் இருந்து அவர்கள் விருப்பப்படி இதனைக் கூத்தாட வைக்கின்றார்கள்.

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய், இருநான்கு வெற்பும்
அப் பாதியாய் விழ, மேரும் குலுங்க, விண்ணாரும் உய்யச்
சப்பாணி கொட்டிய கை ஆறுஇரண்டு உடைச் சண்முகனே. --- கந்தரலங்காரம்

இதுபேணி ---

இன்று இருந்து நாளை அழியும் அசுத்தமான இந்த உடம்பையே பேணி மாந்தர் அவமே உழன்று அழிகின்றார்கள். இறைவனுடைய அடிபேணி உய்தல் வேண்டும்.

ஆன்மா சிவத்துடன் ஒன்றி பிறவித்துயரை ஒழிப்பதற்குச் சாதனைகள் என்ன என்பதனை குருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

(1)  தனது பெருமையை எண்ணாமை.
(2) நான் என்ற தற்போதம் மாய்தல்.
(3)  ஒருவரிடத்தில்ஒரு பொருளை யாசிக்காமை. 
(4)  ஊன உடம்பை பழித்தல்.

இந்த நான்கு சாதனைகளைச் செய்தால் சிவாத்துவிதம் பெற்றுப் பிறப்பை யொழிக்கலாம்.

தன்பெருமை எண்ணாமை, தற்போத மேஇறத்தல்,
மின்பெருமை யாசகத்தை வேண்டாமை, --- தன்பால்
உடலைப் பழித்தல், ஓங்குசிவத்து ஒன்றல்,
நடலைப் பிறப்பு ஒழியும் நாள்             --- சிவபோகசாரம்.

ஆதலால், அருணகிரிநாத சுவாமிகள் பல பாடல்களில் இந்த உடம்பைப் பழித்து ஓதுகின்றார்.

கற்ற விஞ்ஞை சொல்லி ---

விஞ்ஞை-விஞ்சை; வித்தை. நான் கற்ற வித்தைகளை ஆங்காங்கு சென்று சொல்லித் திரிவார்கள் பலர், கற்ற வித்தையால் கதி கிட்டாது.

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனைசா தித்தாலும் இன்புறா-சித்தமே
மெய்யாகத் தோன்றி விடும்உலக வாழ்வுஅனைத்தும்
பொய்யாகத் தோன்றாத போது.             --- சிவபோகசாரம்.

எண்மை உள் உகக்க எண்ணி ---

எண்மை-எளிமை. தான் எண்ணிய எண்ணங்கள் சுலபமாக நிறைவேறும் என்று எண்ணி உள்ளம் மகிழ்வர்.

நகைமாதர் இட்டம் எங்ஙன் வல்ல கொட்டி அங்ஙன் அங்கு இட்டு:-

சிரித்துச் சிரித்துப் பேசும் பொது மாதர்கள் விருப்பம் எப்படி எப்படியோ, அப்படி எல்லாம் பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுத்து ஆடவர் வறியாரவார்.

எத்து பொய்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்றும் ---

எத்துதல்-ஏமாற்றுதல். பிறரை ஏமாற்றி பொய் வழியை ஆலோசித்தும், பொன் பொருள் இல்லாமையை நினைத்து வருந்தியும் சிந்தை வெந்து நொந்து நைவர். ஏற்றுதல்-வருந்துதல்.
  
இங்ஙன் நைவது இயல்போ தான் ---

இவ்வாறு பொருட் பெண்டிருக்கு அள்ளிக் கொடுத்து, வறுமையில் வாடி, பொருள்தேடி, பொய்யைக் கூடி வருந்துவது தகுமோ? தகாது.

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே ---

இந்த அடியில் முருக சொரூபம் பெற்ற அபர சுப்ரமண்யரில் ஒருவர் மதுரையில் செட்டி மகனாகத் தோன்றி, உருத்திர சன்மர் என்ற பேருடன், சங்கப் புவலர்கள் இறையனார் அகப் பொருளுக்குச் செய்த உரையின் தாரதம்மியத்தைக் கூறியருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார்.

முத்துவண்ண வல்லி சித்ரவண்ணவல்லி ---

தெய்வயானையம்மை முத்துபோன்ற ஒளியும் அழகிய நிறமும் உடையவர்.

முத்தி விண்ணவல்லி ---

முத்தி தரவல்லவர் அந்த அம்மை.

செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை
   திருமுத்திமாதின் மணவாளா”           --- (கழைமுத்து) திருப்புகழ்.

பட்டம் மன்னு அ வல்லி ---

பட்டம்-வழி. மன்னு அவள்ளி. வழியில் அமைந்த அந்த வல்லி.

கொல்லி மலையில் தேவரும் முனிவரும் வாழ்ந்து தவம் புரிந்தார்கள். அவர்களை அரக்கரும் அவுணரும் வந்து அடிக்கடித் துன்புறுத்தினார்கள்.

தேவ தச்சன் இமையவர்க்கும் இருடியர்க்கும் நன்மை செய்யக் கருதினான். ஓர் அழகிய பெண் பதுமையைச் செய்து வழியில் வைத்தான். கண்டவர்கள் மனத்தை ஈர்க்கும் கவினுடையது அது. உண்மையில் பெண் போல் காட்சி தரும். அங்கு வரும் அரக்கரின் வாடை பட்டவுடன் அது நகைக்கும். அப்படி நகைக்கும் ஒரு பொறியை அதனுள் தேவதச்சன் அமைத்தான். அதன் அழகில் மயங்கிய அரக்கர் அருகில் சென்றவுடன் மாய்ந்து ஒழிவார்கள். இப்பாவை “கொல்லிப்பாவை” எனப்படும்.

இது காற்றுக்கும் மழைக்கும் இடிக்கும் பூகம்பம் முதலிய இடையூறுகட்கும் அழியாமல், என்றும் தன் இயல்பு கெடாமல் அமைந்தது.

கொல்லித்தெய்வம்................................................
   கால்பொருதிடிப்பினும், கதழுறைகடுகினும்,
   உருமுடனன் றெறியினும், ஊறுபல தோன்றினும்
   பெருநிலங் கிளரினும், திருநலவுருவின்,
   மாயா இயற்கைப் பாவை.                  --- நற்றினை

அதனால் மன்னு-நிலைபெற்ற வல்லி என்று அருளினார்.

மட்டமன்ன வல்லி ---

மட்டம் - கள்.

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி ---

முருகவேள் சிரத்தின் மீது வன்னிப் பத்திரமும், அல்லி மலரும், வெட்சி மலரும் சூடிக்கொண்டிருப்பர்.  கொல்லிமலை சேலம் ஜில்லா நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.

கருத்துரை

            கொல்லி மலைக்குத் தலைவராய குமாரக் கடவுளே! மாதராசையால் பொருளை நாடி வருந்துவது தகாது.

                       


No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...