அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அத்த வேட்கை
(திருச்செங்கோடு)
முருகா!
பொய் வாழ்வில் இருந்து என்னை நீக்கி,
உன்னைப் போற்றுகின்ற வாக்கு
வன்மையை அருள்
தத்த
தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் ...... தனதான
அத்த
வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் ...... தமராயன்
பற்ற
கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் ...... றியவோடும்
சித்த
மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் ...... திணிதாய
சித்ர
வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ
கொத்து
நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் ...... கரசாய
குக்கு
டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் ...... குமரேசா
தத்வ
நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் ...... திடமேவும்
தர்க்க
சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அத்த
வேட்கைப் பற்றி நோக்கு, அத்
தத்தை மார்க்குத் ...... தமர் ஆய், அன்பு
அற்ற
கூட்டத்தில் பராக்கு உற்று,
அச்சு தோள் பற் ...... றிய, ஓடும்
சித்தம்
மீட்டு, பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கி, ...... திணிது ஆய
சித்ர
வாக்குப் பெற்று, வாழ்த்தி,
செச்சை சாத்தப் ...... பெறுவேனோ?
கொத்து
நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக்கு ...... அரசு ஆய
குக்குட
அத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் ...... குமரேசா!
தத்வ
நாற்பத்தெட்டு நாற்பத்
தெட்டும் ஏற்றுத் ...... திடம் மேவும்
தர்க்க
சாத்ர, தக்க மார்க்க,
சத்ய வாக்யப் ...... பெருமாளே.
பதவுரை
கொத்து நூற்று பத்து நாட்ட கொற்ற
வேத்துக்கு அரச ஆய குக்குட அத்த --- கூட்டமாக ஆயிரங்கண்களையுடைய வீரவேந்தனாகிய இந்திரனுக்கு அரசனாக விளங்கும் கோழிக் கொடியை ஏந்திய கரத்தினரே!
சர்ப்ப கோத்திர --- நாகமலையினரே!
பொற்ப --- அழகரே!
வேல் கை குமர ஈசா --- வேலை ஏந்தும்
திருக்கரத்தை உடைய குமாரக் கடவுளே!
தத்வம் நாற்பத்துஎட்டு நாற்பத்து
எட்டும் ஏற்று --- தத்துவங்களான தொண்ணூற்றாறினையும் ஏற்றுக் கொண்டு
திடம் மேவும் --- உறுதியுடன் கூறும்,
தர்க்க சாத்ர தக்க மார்க்க --- தருக்க
நூல்களில் சொல்லப்பட்ட தகுந்த நீதி வழிகளில்
சத்ய வாக்ய பெருமாளே --- சத்தியமான மொழிகளைக்
கூறும் பெருமிதம் உடையவரே!
அத்த வேட்கை பற்றி நோக்கு --- பொருளில் ஆசை வைத்து தனை நோக்குகின்ற,
அத் தத்தை மார்க்கு தமராய் --- அந்த கிளி
போன்ற விலை மாதர்கட்கு வேண்டியவனாய்
அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று ---
அன்பு இல்லாதவர் கூட்டத்தில் எனது
நோக்கத்தை வைத்து,
அச்சு தோள் பற்றி --- உரு அமைந்த அவர்கள்
தோளை அணைக்கும் பொருட்டு
ஓடும் சித்தம் மீட்டு --- ஓடுகின்ற மனத்தை
அவ்வழியினின்று திருப்பி,
பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி --- பொய்யான
உலக வாழ்க்கையின் சிக்கினை அகற்றி
திணிது ஆய --- வன்மை வாய்ந்த
சித்ர வாக்குப் பெற்று --- அழகிய வாக்கை
அடியேன் பெற்று,
வாழ்த்தி --- அவ்வாக்கினால் தேவரீரை வாழ்த்தி,
செச்சை சாத்த பெறுவேனோ --- அதன் பயனாக உமது
வெட்சி மாலையைப் பரிசாக அணியப்பெறும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்குமோ?
பொழிப்புரை
கூட்டமாய ஆயிரம் கண்களையுடைய வீர
வேந்தனாம் இந்திரனுக்கு அதிபரே!
சேவல் கொடியை ஏந்திய கையரே!
நாக மலையில் வாழும் அழகரே!
வேலேந்திய கையை யுடைய குமாரக் கடவுளே!
தொண்ணூற்றாறு தத்துவங்களையும் ஏற்றுக்
கொண்டு வன்மையான தருக்க நூல்களில் சொல்லப்பட்ட தகுந்த நீதி வழிகளில் உள்ள சத்திய
மொழிகளைப் பேசும் பெருமிதம் உடையவரே!
பொருளாசை கொண்ட, கிளிபோன்ற பொது மாதருக்கு உறவு உடையவனாய், அன்பு இல்லாதவர் கூட்டத்தில் என்று
நோக்கத்தை வைத்து, உரு அமைந்த அவர்களின்
தோள்களைத் தழுவும் பொருட்டு, ஓடுகின்ற மனத்தை
அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்கின்ற
சிக்கை அகற்றி, வன்மை வாய்ந்த அழகிய
வாக்கை அடியேன் பெற்று, அவ்வாக்கினால்
தேவரீரை வாழ்த்தி, அதன் பயனாக உமது
வெட்சி மாலையைப் பரிசாகப் பெறும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?
விரிவுரை
அத்த
வேட்கைப் பற்றி நோக்கு அத் தத்தைமார்க்கு ---
பொன்னையே
விரும்பி, அதனைப் பறிக்கும்
நோக்கமே கொண்டவர்கள் விலைமகளிர்,
நோக்கு
அத் தத்தைமார். தத்தை -கிளி, கிளிபோல் கொஞ்சிப்
பேசுவார்கள்.
மாதர்
வசமாய் ஓடும் மனத்தை அதன் போக்கை மாற்றி நல்லவழியில் திருப்ப வேண்டும்.
பொய்த்த
வாழ்க்கைச் சிக்கை நீக்கி ---
பொய்
என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள். இல்லாத ஒன்று
பொய்
எனப்படும். சில காலம் இருந்து பின் மறைந்து அழியக் கூடியது பொய் எனப்படும்.
உலக
வாழ்வு நிலைபேறில்லாதது. அதனால் அது பொய் வாழ்வு. அதில் அகப்படும் சிக்கினை அகற்றுதல்
வேண்டும்.
திணிதாய
சித்ர வாக்குப் பெற்று ---
“வலிமையான அழகிய
வாக்கைப் பெற வேண்டு்ம்” என்று சுவாமிகள் முருகனை இங்கே வேண்டுகின்றார். முருகப்
பெருமான் கொடுக்க அவர் பெற்றார். வேறு ஒருவருக்கும் இல்லாத அருமையான அழகிய இனிய
வாக்கையுடையவர் அருணகிரிநாதர்.
வாக்கிற்கு
அருணைகிரி, வாதவூரார் கனிவில்,
தாக்கில்
திருஞான சம்பந்தர், - நோக்கிற்கு
நற்கீர
தேவர், நயத்துக்குச்
சுந்தரனார்,
சொற்குஉறுதிக்கு
அப்பர்எனச் சொல்.
செச்சை
சாத்தப் பெறுவேனோ ---
வாக்கினால்
இறைவனை வாழ்த்த, வாழ்த்தியதற்குப்
பரிசாக இறைவன் தனது திருமார்பில் உள்ள வெட்சி மாலையை வழங்கி அருள்புரிகின்றான்.
அப்பேற்றினைப் பெற வேண்டும் என்கிறார்.
கொத்து
நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்து ---
ஆயிரங்கண்களை
உடையவன் இந்திரன். சகஸ்ராட்சன் என்ற பேருடையவன்.
“நூற்றுப் பத்தடுக்கிய
நாட்டத்து நூறுபல்
வேள்வி
முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டேந்திய
மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந்
தடக்கை உயர்த்த யானை
எருத்தம்
ஏறிய திருக்கிளர் செல்வன்” ---
திருமுருகாற்றுப்படை.
குக்குடாத்த
---
குக்குட
அத்த.
“சேவலங்கொடியான
பைங்கர” --- (மூலமந்திர) திருப்புகழ்
சர்ப்ப
கோத்ர ---
கோத்திரம்
- மலை. சர்ப்ப கோத்திரம். நாககிரி - திருச்செங்கோடு.
தத்துவ
நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று ---
தொண்ணூற்று
ஆறு தத்துவங்கள்.
தத்துவங்கள்
96
ஆன்ம தத்துவங்கள் -24
உடலின் வாசல்கள் -9
தாதுக்கள் -7
மண்டலங்கள் -3
குணங்கள் -3
மலங்கள் -3
வியாதிகள் -3
விகாரங்கள் -8
ஆதாரங்கள் -6
வாயுக்கள் -10
நாடிகள் -10
அவத்தைகள் -5
ஐவுடம்புகள் -5
ஆன்ம
தத்துவங்கள் 24
ஆன்ம
தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு)
ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)
உடலில்
வாசல்கள் --- கண்கள்-2, செவிகள் -2, முக்குத்துவாரங்கள் -2, வாய் -1, மலவாயில் -1, குறிவாயில் -1
தாதுக்கள்
7 --- சாரம் - (இரசம்), செந்நீர் (இரத்தம்), ஊன் (மாமிசம்)
கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் (விந்து, சுரோணிதம்)
மண்டலங்கள்
3 --- அக்கினி மண்டலம், ஞாயிறு மண்டலம், திங்கள்
மண்டலம்
குணங்கள்
3 --- சத்துவம், இராஜசம், தாமதம்.
மலங்கள்
3 --- ஆணவம் (நான் என்ற மமதை)
மாயை
(பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
வினை
(ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)
பிணிகள்
3 --- வாதம், பித்தம், கபம்.
விகாரங்கள்
8 --- காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்,
மாச்சரியம், துன்பம், அகங்காரம்
வாயுக்கள்
10 --- உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,
ஒலிக்காற்று, நிரவுக்காற்று, விழிக்காற்று,
இமைக்காற்று, தும்மல்காற்று,
கொட்டாவிக்காற்று, வீங்கல்காற்று
நாடிகள்
10 --- சந்திரநாடி அல்லது பெண்நாடி, சூரியநாடி அல்லது ஆண்நாடி, நடுமூச்சு நாடி, உள்நாக்கு நரம்புநாடி, வலக்கண்
நரம்புநாடி, இடக்கண் நரம்புநாடி, வலச்செவி
நரம்புநாடி, இடதுசெவி நரம்புநாடி, கருவாய்
நரம்புநாடி, மலவாய் நரம்பு நாடி
அவத்தைகள்
5 ---
நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
கனவு
உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
உயிர்ப்பு அடக்கம் (ஆழ்மயக்கநிலை)
ஐவுடம்புகள்
5 --- பருஉடல், வளியுடல், அறிவுடல், மனஉடல்,
இன்பஉடல்
இவற்றின்
விளக்கத்தை சித்தாந்த சாத்திரங்களில் காணலாம்.
தர்க்க
சாத்திரம்:-
தருக்க
நூல் ஒரு சிறந்த அறிவுத் திறனுடையது. அது பொருள்களை நிச்சயிப்பது.
வடமொழியில்
நியாய சாத்திரத்தைச் செய்தவர் கௌதமர்.
வேதம்
4; அங்கம் 6; உபாங்கம் 4; ஆகவித்தை 14
உபாங்கம்
; (1) மீமாம்ஸை. (2) நியாயம், (3) புராணம், (4) ஸ்மிருதி (தர்ம சாத்திரம்)
உலகத்துக்குக்
கர்த்தா இறைவன் என்று வேதஞ் சொல்லுகின்றது. வேதத்தின் சொல்லை அர்த்தத்தால்
மீமாம்ஸம் நிர்ணயிக்கின்றது. இதைப் பல யுக்திகளால் தீர்மானிப்பது நியாய சாஸ்திரம்.
கருத்துரை
நாககிரி நாயகா! வாக்கு வன்மையையும்
வெட்சி மாலையையும் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment